எத்தனை எத்தனை 'வியாக்கியானங்கள்!'. தந்தி தொலைக்காட்சி பாண்டே உள்பட எத்தனை பொழிப்புரையாளர்கள்! தமிழினத்திற்கு எதிரான தங்கள் போக்கை மறைத்துக் கொள்ள எவ்வளவு நாடகங்கள்! எல்லாம் 24 மணி நேரத்தில் வெட்ட வெளிச்சமாகி விட்டன.

pongal festival 269மத்திய அரசின் ஊழியர் ஒருங்கிணைப்புக் குழுதான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறதாம். கட்டாய விடுமுறைகள் எவை, விருப்ப விடுமுறைகள் எவை என்பதை அவர்கள்தாம் தீர்மானிப்பார்களாம். மத்திய அரசு அதில் தலையிட முடியாதாம். அப்படியானால், இப்போது எப்படித் தலையிட்டு முடிவெடுத்தார்கள்? கிராமங்களில் சொல்லுவார்கள் - 'மெதுவாக வாலை விட்டுப் பார்ப்பது, அடி விழுந்தால் சுருட்டிக் கொள்வது" என்று.

எது கட்டாய விடுமுறை (ஆண்டுக்கு 14 நாள்கள்). எது விருப்ப விடுமுறை (3 நாள்கள்) என்பதை ஒரு அதிகாரிகளின் குழு முடிவு செய்கிறது என்பது சரிதான். ஆனால் அந்தக் குழுவில் யார் இருக்கின்றார்கள்? மத்திய அரசின் முதல் நிலை அதிகாரிகள்தான் (Class I officers) அந்தக் குழு உறுப்பினர்கள். அவர்கள் யாராக இருப்பார்கள் என்று சின்னக் குழந்தைக்குக் கூடத் தெரியுமே! சமூகத்தில் நூற்றுக்கு 3 பேராக இருக்கும் பார்ப்பனர்கள்தானே முதல் நிலை அதிகாரிகளாக 97% இருப்பார்கள். அவர்கள் அப்படித்தானே முடிவெடுப்பார்கள்!

அரசு இதிலெல்லாம் தலையிடுவதில்லை என்பது நம்பமுடியாத நாடகம். ஒருவேளை, தீபாவளியை விருப்ப விடுமுறையாக அவர்கள் முடிவு செய்தால் மத்திய அரசு மௌனமாக இருந்து விடுமா?

மத்திய அரசின் கவனத்திற்கு வரவில்லை என்பதும் உண்மையன்று. பட்டியல் வெளியானவுடனேயே, அனைத்திந்திய மத்திய அரசு ஊழியர்கள் பெருங்கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் 28.12.2016 அன்றே, இது குறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். பிரதமருக்கும், மத்திய அரசின் ஊழியர் நலத் துறை இணையமைச்சர் சர்மாவிற்கும் கடிதங்கள் சென்றுள்ளன. அப்போதெல்லாம் அரசுக்குக் கேளாக் காதாக இருந்தது.

ஜனவரி 9ஆம் தேதி மாலை, தி.மு.க.வின் செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் கண்டன ஆர்ப்பாட்ட அறிவிப்பைக் கொடுத்த பின்னும், தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த பின்னும்தான் மத்திய அரசு அசைந்தது. 24 மணி நேரத்திற்குள்ளாகத் தங்களின் முடிவை மாற்றிக் கொண்டனர்.

தமிழ், தமிழ்ப் பண்பாடு ஆகியனவற்றிற்கு எதிராக வாலை நுழைத்துப் பார்க்கும் வேலையை இனிமேலாவது பா.ஜ.க நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் தமிழ்நாட்டில் அரசியல் நடத்தும் தகுதியை அக்கட்சி இழந்துவிடும்.

Pin It