lic 580ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.அய்.சி யின் 5% பங்குகளைத் தனியாருக்கு விற்க ஒன்றிய அரசு முனைந்திருக்கிறது. நாட்டின் சொத்துகளையெல்லாம்  விற்றுவரும் ஒன்றிய அரசின் தொடர் நடவடிக்கைகளுள் ஒன்றாகவே எல் ஐ சியின் பங்கு விற்பனை இருக்கிறது.

என்றாலும் வேறு எந்தப் பொதுத்துறை நிறுவனத்தைக் காட்டிலும் சாமானிய மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை இந்தப் பங்கு விற்பனை ஏற்படுத்தும். இதனால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளாக எல்.அய்.சி. ஊழியர் சங்கங்கள் முதன்மையாகக் கீழ்க்காணும் சிலவற்றைக் குறிப்பிடுகின்றனர்.

இதனால் நாட்டின் பொருளாதாரத்தின் மீது பெரும்பாதிப்பு ஏற்படும்.  ஒன்றிய அரசின் பத்திரங்களில் எல்.அய்.சியின் முதலீடு 12 லட்சம் கோடிக்கு அதிகமாக இருக்கிறது. மாநில அரசின் பத்திரங்களில் 9 லட்சம் கோடிக்கு எல்அய்சியின் முதலீடு இருக்கிறது. ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு எல்அய்சி முதலீடு செய்திருக்கிறது. எல்அய்சி அரசு நிறுவனம் என்பதால் உரிமைகளோடு எல்அய்சியின் பங்களிப்பை அரசு பெற்றிருக்கிறது. தனியார் வசம் எல்அய்சியின் பங்குகள் செல்லும்போது, இலாப நோக்குடன் மட்டுமே எல்.அய்.சியின் செயல்பாடு  அமையும். இதனால் நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு எல்அய்சி ஆற்றிவரும் பங்களிப்பு கேள்விக்குள்ளாகும்.

கிராமப்புறங்களில் சாமானிய மக்களுக்கான காப்பீட்டை எல்அய்சிதான் வழங்கி வருகிறது. எல்.அய்.சியினுடைய சராசரிப் பிரீமியம் 16 ஆயிரம் ரூபாய்தான். ஆனால் தனியார் நிறுவனங்களின் சராசரிப் பிரீமியம் 89 ஆயிரம் ரூபாய் ஆகும். சாமானிய மக்களுக்கு எல்அய்சிதான் சமூகப் பாதுகாப்பைத் தருகிறது.

 20 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட ஊர்களில் எல்அய்சியின் அலுவலகங்கள் 1472 இருக்கின்றன. ஆனால் தனியார் அலுவலகங்கள் 170தான் இருக்கின்றன. தனியார் அலுவலகங்கள் 75% மெட்ரோ நகரங்களில்தான் இருக்கின்றன. எனவே சாதாரண அடித்தட்டு  நடுத்தர வர்க்க மக்களுக்கு எல்.அய்.சிதான் காப்பீட்டை வழங்குகிறது.

பெண்களுக்கான திட்டங்களை எடுத்துக்கொண்டாலும், எல்.அய்.சிதான் அதிகமாகத் தருகிறது. 35% பாலிசிகளைப் பெண்களுக்காக எல்அய்சி வழங்குகிறது. ஆனால் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் 27%தான் தருகின்றன.

எனவே எல்.அய்.சியின் இந்தப் பங்கு விற்பனை எந்த வகையிலும் மக்கள் நலனுக்கு உதவப்போவதில்லை. இதுவரை மக்கள் அடைந்து வந்தப் பலன்களை, பாதுகாப்பைச் சிதைக்கப்போகிறது. “எல்அய்சி நிறுவனம் பல்லாண்டுகளாகப் பலகோடி இந்தியர்களின் தேவைகளை நிறைவு செய்து, தனது திறம்பட்ட செயல்பட்டால் அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கி உள்ளது. அத்தகைய நிறுவனத்தின் பங்குகளில் 5 சதவீதத்தை விற்க ஒன்றிய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்திருப்பது, தனியார்மயத்தை நோக்கிய முற்றிலும் விரும்பத்தகாத செயலாகும். இம்முடிவு மக்களின் நலனையோ எல்அய்சி நலனையோ கருதி மேற்கொள்ளப்பட்டது இல்லை. முறையான யோசனை இன்றி எடுக்கப்பட்ட முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற்று எல்அய்சியைக் காக்க வேண்டும்.”  என்று எல்அய்சி பங்கு விற்கும் முடிவைத் திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதத்தை மட்டுமே வைத்து அரசியல் செய்பவர்களுக்கு எப்படி மதியுள்ள வகையில் திட்டமிடத் தெரியும்?  கார்ப்பரேட் வரியை உயர்த்தவோ, வாரிசுரிமை வரியை உயர்த்தவோ அரசியல் உறுதி இல்லாமல், ஏழைகளுக்குச் சமூகப் பாதுகாப்பு அளிக்கும் எல்.அய்.சியின் பங்குகளை விற்று பட்ஜெட் போடுகிறார்கள். இது பட்ஜெட்டிற்கான நிதி திரட்டுவதில் ஒன்றிய அரசு அடைந்திருக்கும் தோல்வி. சென்ற ஆண்டு 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் பங்கு விற்பனைக்கான இலக்கை நிர்ணயித்து அதில் 12 ஆயிரம் கோடி ரூபாய்தான் திரட்டப்பட்டது. அதனால் எப்படியாவது 70 ஆயிரம் கோடி அளவில் எல்.அய்.சியிலிருந்து திரட்ட முடியுமா என்பதற்காக இந்தப் பங்கு விற்பனைச் செய்யப்படுகிறது.

எனவே எந்த வகையில் பார்த்தாலும், எல்அய்சி என்கிற ஒரு நிறுவனத்தோடு நின்றுவிடாமல், ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும், இந்தப் பங்கு விற்பனையானது கேட்டைத்தான் தரும்.

- மா.உதயகுமார்

Pin It