(தி காரவன் பத்திரிக்கையின் 27/06/2019 இதழில் ஆங்கிலத்தில் வெளியான, திரு. சாகர் என்பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை, தமிழில், சுருங்கிய வடிவில் இங்கு தரப்பட்டுள்ளது.)

இந்தி மொழிச் சூழலிலேயே பிறந்து இந்தி மொழிச் சூழலிலேயே வளர்ந்தவன் நான். பத்தாம் வகுப்பு வரை பிஹாரில் இந்திவழிப் பள்ளிக்கூடம் ஒன்றில்தான் படித்தேன். இரண்டு ஆண்டு இன்டெர்மீடியேட் கல்விக்குப் பிறகு, கர்நாடக மாநிலத்தில் ஊடகவியலாளர் கல்லூரி ஒன்றில் சேர்ந்தேன். அங்கே வகுப்புகள் அனைத்தும் ஆங்கில மொழிவழியில் இருந்தன. மாணவர்களும் ஆங்கிலத்திலயே பேசினார்கள். அங்கேதான் நான் என்னுடைய ஆங்கில மொழி ஆற்றலை வளர்க்கக் கடினமாக உழைத்தேன். 

எனக்கு 28 வயது இருக்கும்போது பி ஆர் அம்பேத்கர் அவர்களின் "சாதி ஒழிப்பு" கட்டுரையை ஆங்கிலத்தில் படித்தேன். அதுதான் அவருடைய படைப்புகளுக்கு என்னுடைய முதல் அறிமுகம். மேலும் ஆங்கில மொழி வழியாகத்தான் நான் ஜோதிபா பூலே, பெரியார் மற்றும் மால்கம் எஃஸ் போன்றவர்கள் பற்றியும் அறிந்து கொண்டேன். இவ்வாறான தேடல்களும் படைப்புகளும்தான், என்னை சாதி எதிர்ப்புச் சிந்தனை, முற்போக்கு அரசியல் மற்றும் மனித ஏற்றதாழ்வு குறித்த போராட்டங்களின் வரலாறு போன்றவைகளை நோக்கி என்னுடைய சிந்தனை ஓட்டத்தை வழி நடத்தின. 

தற்போது சில நாள்களுக்கு முன் தேசியக் கல்விக் கொள்கை பற்றி ஒரு சர்ச்சை எழுந்தது. இந்தக் கொள்கையின்படி, அனைவரும் இந்தி, ஆங்கிலம் மற்றும் ஒரு மாநில/பிராந்திய மொழி, கட்டாயமாகப் பயிலவேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் எதிர்ப்பால், மத்திய அரசு இந்தக் குறிப்பிட்ட நிபந்தனையைத் திரும்பப்பெற்றது. ஆனால் இந்தி மொழியிலேயே வாழ்ந்தும் சிந்தித்தும் கொண்டு இருக்கும் மக்களை நினைத்து, என் சொந்த அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது, நான் வருத்தம் கொள்கிறேன். 

ஏனென்றால், என்னுடைய இந்தி மொழியைச் சார்ந்த வளர்ப்பு சூழ்நிலை, சமுதாய விழிப்புணர்ச்சி மற்றும் அம்பேத்கர் பற்றி நான் அறிந்து கொள்ள மட்டும் தாமதம் செய்யவில்லை அதனினும் மேலாகச் சமூகநீதி மற்றும் சமத்துவம் பற்றி அறிந்து கொள்ளவும் தாமதம் செய்தது. இவை தொடர்பான படைப்புகளை இந்தி மொழியில் கண்டு அறிவது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால். இந்நிலை ஏதோ ஒரு விபத்தால் நேர்ந்தது அல்ல. மாறாக, இந்நிலையானது, யார் இந்தி மொழியை உருவாக்கினர், யார் அதை வளர்த்துப்  பரப்பினர், யாருடைய முத்திரை அம்மொழியின் மீது பதிந்து இருக்கிறது என்ற கேள்விகளுடன் இணக்கமான தொடர்புடையது.

இந்தி மொழியின் பண்டைக்கால இலக்கியங்கள் அனைத்தும் ப்ரஜ், புண்டேலி, அவதி, கண்னுஜ்ஜி, கரிபோலி, மார்வாரி, மகாஹி இன்னும் பிற பேச்சுவழக்குகளில் எழுதப்பட்டவகையாகும். ஆனால்  இந்தப் பேச்சுவழக்குகள் அனைத்தும் இந்தி மொழிக்குள்   உள்வாங்கப்பட்டுவிட்டன. இப்போது தேவநாகரி எழுத்துகளில் தோன்றும் இந்தி மொழியானது, மிக அண்மையில் தோன்றிய மொழியே ஆகும். 

இந்தி மொழியானது தொடக்கத்திலிருந்து பார்ப்பனியம் மற்றும் மதவாதத் தூண்டுதல்கள் ஆகிவற்றைச் சார்ந்திருந்தது. பிறகு, பார்ப்பனியம் சார்ந்த சுதந்திர தேசியவாத இயக்கத்தின் முன்னோடி மொழியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால் அந்த இயக்கத்தின் நிர்வாகத்திற்கும் ஏற்புடையதாக மாறியது.  அப்போது இருந்த ஆதிக்கச் சாதிகள், சமஸ்கிருதம் மயமாக்கப்பட்ட இந்தி வழியாக சமுதாயத்தின் மேல் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தலாம் என்று கருதினார்கள். இவ்வாறாக இந்தி மொழி என்பது ஆதிக்கத்தின் நீரோடை என்றே கருதலாம். இன்று இந்தி மொழியைக் கட்டுப்படுத்துபவர்கள்தான், நம் சமூகத்தின் நடைமுறைகளையும் கூற்றுகளையும் கட்டுப் படுத்துபவர்கள் ஆவர்.

சொல்லப்போனால், இந்தி ஒரு அழுக்கடைந்த மரபைக் கொண்ட மொழியாகும். உண்மையில், வேறு பல மொழிகளும் அவ்வாறான மரபைக் கொண்டுள்ளன. ஆங்கிலம்கூட, தனக்குப் பின்னால் காலனித்துவத்தின் சிக்கலான வரலாற்றைக் கொண்டுள்ளது, மேலும் ஆங்கிலம் என்பது உயரடுக்கு மற்றும் சாதிச் சிறப்புரிமை கொள்வோரின் ஒரு கருவியாக இருந்து வருகிறது. இருப்பினும் இந்தி மறைத்து வைத்திருக்கும் பல கூற்றுகளை ஆங்கிலம் எனக்கு வெளிச்சமிட்டுக் காட்டக்கூடும், ஏனென்றால் இந்தி மீது ஆளுமை கொண்டவர்கள், அதன் வரலாறு, சொல்லகராதி, இலக்கியம், அமைப்பு ஆகியவற்றை நிர்ணயிக்கக்கூடியவர்கள், ஆனால் ஆங்கிலத்தின் மீது அதே அளவிலான செல்வாக்கு அவர்களுக்குக் கிடையாது. ஆங்கிலம், இந்திக்குப் பதில் இடங்கொள்ள நான் விரும்பவில்லை. அதே போல் இந்தி, வேறு மொழிகளுக்குப் பதில் இடங்கொள்ளவும் நான் விரும்பவில்லை. 

எந்த மொழியும் முதல்நிலைக்கு முன்னேறுவது எப்போது என்றால், அது  மக்களின் மனங்களைத் திறக்கும் கருவியாக ஆகும் போதுதான், மூடி அடைக்கும் கருவியாக இருக்கும் போது அல்ல. இந்தி மொழி தன்னைச் சார்ந்து இருக்கும் மக்களின் மனங்களை, எதிர்காலத்தில் ஒரு நாள் திறக்கும். அப்படி ஒரு நிலை வந்தால், இந்தி மொழியின் கடந்த மற்றும் நிகழ் காலத்தின் நிலைப்பாட்டைச் சீராக நாம் ஆராயலாம். அம்மொழியிடமிருந்து எதிர் காலத்தில் நாம் என்ன கையகப்படுத்தலாம் என்பதையும் நாம் தீர்மானிக்கலாம்.

Pin It