பேராசிரியர் ரைஸ் டேவிட்ஸ், பேராசிரியர் வில்லியம் கெய்கர், டர்னர், போடே போன்ற அறிஞர் களால் சரிபார்க்கப்பட்டு, செப்பம் செய்யப்பட்டு, பாலி மொழியில் இருந்து மொழிமாற்றம் செய்யப் பட்ட “மகாவம்ச” என்ற நூலை, 1912ஆம் ஆண்டு பாலி நூற் கழகத்தின் மூலம் ஆங்கிலத்தில் வெளியிட்ட இலங்கை சிங்கள அரசு, அந்நூலை இலங்கையின் அதிகாரப்பூர்வ புனித வர லாற்று நூலாக அறிவித்தது.

கி.பி. 6ஆம் நூற்றாண் டில் இலங்கையை ஆட்சி செய்த தாதுசேனனின் ஆட்சி இறுதியில், மகாநாம என்ற இலங்கைப் பவுத்த துறவியால் இந்நூல் இயற்றப்பட்டது.

உண்மைக்கு மாறான பொய்கள், புரட்டல்கள், ஆரிய மாயாஜாலங்கள், கொலை வெறித் தாண்டவங்கள், காம விரசங்கள் போன்றவைகளை உள்ளடக்கும் புராணங்களின் பவுத்த வடிவமே இம் மகாவம்ச. இவைகளுக்கு ஊடாக தமிழர்களுக்கு எதிரான இனப்பகையை மிக வலிமையாக முன்னெடுத்து இருக்கிறது இந்நூல்.

பண்டைய தமிழர்களின் தொன்மை யான வரலாறுகளைச் சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், அவைகளின் உரையாசிரி யர்கள் மூலம் அறிகிறோம்.

இலங்கையின் தொன்மை வரலாறை அறிய இதுபோன்ற அல்லது வேறு ஆவணங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

ஆரியர்களின் வேதநூலாகக் கருதப் படும் ரிக்வேத நூலின் மூலம் பண்டைய திராவிடர்களின் கட்டிட அமைப்புகள், நகரங்களின் வடிவமைப்புகள், வேளாண்மை, நெல் குவிக்கும் களங்கள், அணை போன்ற பெரிய நீர்த்தேக்கங்கள், திராவிடர்களின் வீரம், வலிமை, ஆரியர்களுக்கு எதிராக அவர்கள் நடத்திய போர்கள் பற்றிய செய்தி களை எப்படி அறிய முடிகின்றதோ, அது போல மகாவம்ச நூலில் இருந்தும் இலங் கைக்குரிய தொன்மை இன மக்களைப் பற்றியும் சில செய்திகள் அறிய முடிகிறது.

இலங்கையின் ஆதிகுடிகளாக மகாவம்ச இரண்டு இனங்களைக் கூறுகிறது. ஒன்று நாகர் இனம். மற்றொன்று இயக்கர் இனம்.

நாகர்கள் தொல்திராவிடர்கள் என்பது வரலாற்று ஆய்வறிஞர்களால் நிறுவப்பட்ட ஒன்று. தொன்மைத் திராவிடர்கள் தமிழர்கள் என்பதை பேரறிஞர் அம்பேத்கர் உள்படப் பல்வேறு ஆய்வாளர்களும் உறுதி செய்திருக்கிறார்கள்.

ஆகவே இலங்கையின் ஆதிகுடிகளுள் முதன்மையானவர்கள் (நாகர்கள்)தமிழர்கள் என்பதை மகாவம்ச நூலாசிரியர் மகாநாம மறைக்க முடியாமல் ஒத்துக் கொள்கிறார்.

சங்க இலக்கியங்களில் ஈழத்து நாகனார், ஈழத்துப் பூதந்ததேவனார் போன்றவர்களின் பாடல்களைப் பார்க்க முடிகின்றது. பட்டினப்பாலையில் “ஈழத்து உணவும்” என்ற வரியைப் பார்க்கிறோம். ஈழத்து உணவு என்பதில் கருத்து வேறுபாடு இருக்கிறது. அது விவாதத்திற்கு உட்படுத்தப் பட வேண்டிய ஒன்று என்பது ஒருபுறம் இருந்தாலும், மேற்கண்ட செய்திகளின் மூலம், கிருத்து தோன்றுவதற்கு முன்பே ஈழத்தமிழர்கள் அறிஞர்களாகவும், கடலோடி வணிகம் செய்யும் நாகரீகவளம் பெற்றவர்களாகவும் இருந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.

இலங்கையில் “நாகர் வாழ்ந்த நாடு நாகதீபம் என்றழைக்கப்பட்டது. இது தற்கால வடமாகாணத்தையும், வட மேல் மாகாணத்தின் சில பகுதிகளையும், மேல் மாகாணத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய நாடாகத் திகழ்ந்தது” என்கிறார் எஸ்.பொன்னுதுரை என்ற எஸ்.பொ. இன்றைய தமிழீழத்தில் இப்பகுதி கள் உள்ளடங்கியிருக்கிறது.

இலங்கையின் அடுத்த தொல்குடியினர் இயக்கர்கள். இவர்கள் பற்றிய சரியான செய்திகள் சான்றுகளுடன் இல்லை.

மகாவம்ச ஆங்கில நூலின் மிகச்சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பைத் தந்துள்ள எஸ்.பொ., விபுலானந்த அடிகளை மேற்கோள்காட்டித்தரும் குறிப்புப்படி, இலங்கையின் மத்திய மலைப்பகுதியில் இருக்கும் ஒரு நிலப்பகுதி சப்பிர என்று அழைக்கப்பட்டது-. சப்பிர என்பதும் புலிந்த என்பதும் ஒரே கருத்துடைய சொற்கள். புலிந்தர் என்பது வேடரைக் குறிக்கும் சொல்.

மகாவம்ச நமக்கு அறிமுகப்படுத்தும் முதல் இயக்கர் குலப் பெண்ணான குவெய்னியின் சந்ததியர்கள் இந்தப் புலிந்தர்கள் என்று அந்நூலின் அத்தியாயம் 7இல் ஸ்லோகம் 68 உறுதி செய்கிறது.

எனவே இயக்கர்கள் என்பவர்கள், இலங்கையின் வேட்டுவ இனத்தைச் சேர்ந்த வேடர்கள் என்று தெரிய முடிகிறது. இவர்கள் நாகரிகவளம் பெறாதவர்கள்-.

இவைகளின் மூலம் இலங்கையின் ஆதித் தமிழர்களான நாகர்களும், வேட்டுவ குடியைச் சேர்ந்த இயக்கர்களும் தொல் திராவிடர்கள் என்பது உறுதி பெறுகிறது. இதே காலத்தில் அங்கு சிங்களர் என்ற இனம் இருந்ததாக மகாவம்ச ஒரு குறிப்புகூடத் தரவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய செய்தி.

சிங்களர் யார்?

வங்க நாட்டைச் சேர்ந்த அரசன் ஒருவன், கலிங்க(ஒரிசா) நாட்டைச் சேர்ந்த அரசன் மகளை மணந்தான். அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அவள் பருவம் எய்தியபின் ஒரு காட்டுச் சிங்கத்துடன் உடலுறவுப் புணர்ச்சி செய்து இரண்டு குழந்தைகளைப் பெற்றாள். மூத்த மகன் சிகபாகு. இளைய மகள் சிகசீவலி.

அண்ணன் தங்கையான இவ்விரு வருக்கும் பிறந்த மூத்த மகன் விஜயன். இவன் ஒழுக்கக் கேடுடைய கொடியவன். ஆதலால் நாடு கடத்தப்பட்டான். நாடு கடத்தப் பட்ட இவன் இலங்கையின் புத்தளத்திற்கு அருகில் தம்பபண்ணி என்னும் இடத்திற்கு கடல் வழியாக வந்து சேர்கிறான்.

அங்கே இலங்கையின் ஆதிகுடியான வேட்டுவ இயக்கர் குடியைச் சேர்ந்த குவண்ணாவைப் புணர்ந்து (குவண்ணாவை குவெய்னி என்றும் அழைப்பார்கள்) பிள்ளைகளைப் பெறுகிறார்கள். இவர்களின் சந்ததியினரே பின்னாளில் சிங்களவர் என்று அழைக்கப்பட்டனர்.

“பாணாந்துறையில் இருந்து காலி வரை செறிந்து வாழும் சிங்களர் சலாகம சாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பதினான்காம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்து சேர்ந்த சேரர் தமிழர். சிங்களப் பெண்களை மணந்து சிங்களரானார்கள். அவ்வாறே துறவா என்கிற சாதியாரும் சேரர் வழிவந்தவர்களே. 1815 வரை கண்டியை அரசாண்ட மதுரை நாயக்க அரசாளும் வர்க்கத்தைச் சேர்ந்த பிரபுக்கள் பலரும் மலைநாட்டுச் சிங்களருடன் கரைந்து போனார்கள். சிலாபம் தொடக்கம் வத்தளை வரையிலும் வாழ்ந்த கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த தமிழ் பேசிய மீனவ சமூகத்தினர் கடந்த ஒரு நூற்றாண்டுக்குள், என் கண்முன்னாலும் சிங்கள மயமானவர் கள்” என்று சொல்லும் எஸ்.பொ.வின் செய்தி ஓர் உண்மையைப் புலப்படுத்துகிறது.

வங்கநாடு, கலிங்க நாடு, இலங்கையின் இயக்கர் குடி, கேரள மலையாளிகள், கிருத்துவ மீனவ சிறுபான்மைத் தமிழர் களின் குருதிக் கலப்பினால் உருவான கலப்பு இனமே சிங்களர்கள். மாறாக அவர்கள் இலங்கையின் தொல்குடித் திராவிடத் தமிழர்களைப் போல ஒரு தனி இனம் அல்ல.

சிங்களவர்களின் முதன் குடிமகனாக மகாவம்சவால் காட்டப்படும் விஜயனின் முன்னோர்கள் வங்கம் - ஒரிசாவைச் சேர்ந்த ஆரிய இனச் சத்திரியர்களாக, ஆரிய இனச்சார்புடன், இலங்கைக்கு அகதிகளாக வந்து குடியேறிய வந்தேறிகள் என்ற முடிவே சரியானதாகும்.

சிங்களவர்கள் பவுத்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள். அவர்கள் ஆரிய சார்புடையவர்கள் என்பதனால்,அவர்கள் ஏற்றுக்கொண்ட பவுத்தம் ஆரியவாத மகாயானம். அதாவது திராவிடர்களுக்கு எதிரான பவுத்தம்.

இலங்கைக்கு பவுத்தம் எப்படி வந்தது-?

வின்சன்ட் ஸ்மித் சொல்கிறார், “இலங் கையின் புத்த துறவிகள் தங்கள் நாட்டில் பவுத்த சமயம் நேரடியாக மகதத்திலிருந்து மகேந்திர, சங்க மித்திர போன்றவர்களால் வந்தது என்பதை நிலை நிறுத்தவே விரும்பி னார்கள். தாங்கள் வெறுக்கும் தமிழர் களிடம் இருந்து பவுத்தம் இலங்கைக்கு வந்தது என்பதைக் கூறிக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை”.

தமிழர்கள் மீது சிங்களர்களின் வெறுப்பைத் துல்லியமாக பதிவு செய்கிறார் ஸ்மித். அசோகரின் கல்வெட்டுகள் மூலம் தமிழகத்தின் தென்கோடி வரை அம்மன்னரால் பவுத்தம் கொண்டுவரப் பட்டது என்பதை அறியும் அதே சமயம், இலங்கை பற்றிய எந்த ஒரு குறிப்பையும் அசோகர் தன் கல்வெட்டின் மூலம் தரவில்லை. சீன ஆவணக் குறிப்புகள் இலங்கைக்குத் தமிழ்நாட்டில் இருந்துதான் பவுத்தம் சென்றதாகக் கூறுகிறது.

இருந்தாலும் தமிழர் மீது இனப்பகை கொண்ட மகாவம்ச நூல், மகேந்திர, சங்கமித்ர ஆகிய இருவரையும் கற்பனையில் உருவாக்கி, மகேந்திர வானத்தில் பறந்தும், சங்கமித்ர கடல் வழியாகவும் இலங்கைக்குப் பவுத்தத்தைக் கொண்டுவந்தார்கள் என்று துணிந்து கூறும் பொய்மைக்குக் காரணம் (சிங்கள) ஆரியத்திற்கும் (தமிழ்) திராவிடர்க்குமான போரே அன்றி வேறல்ல.

சிங்களர்களே இல்லாத பண்டைய இலங்கையில் நாகர்களும் இயக்கர்களும் வாழ்ந்த போது, மகதத்தில் இருந்து புத்தர், இலங்கைக்கு மூன்று முறை வந்ததாகவும், அந்த மூன்று தடவைகளிலும் புத்தர், நாகர்களையும், இயக்கர்களையும் காட்டுக்கு விரட்டியடித்ததாக மகாவம்ச முதல் அத்தியாயம் கூறுகிறது.

உண்மையில் புத்தர் தான் இறக்கும் வரை, மகத நாட்டைவிட்டு அவர் வேறு எங்கும் சென்றதில்லை என்பது வரலாறு.

இலங்கைப் பவுத்தம் மகாயான ஆர்ய ஸ்தரீர நிகாய பிரிவைச் சேர்ந்தது. ஆகவே ஆரிய சூழ்ச்சியின் அடிப்படையில், திராவிடரான புத்தரே, இலங்கைத் திராவிட தொல்குடிகளான நாகர், இயக்கர்களை காட்டுக்கு விரட்டி அடித்ததாகச் சொல்லும் பொய்மைக்குக் காரணம் ஆரியத் திராவிடப் போரே அன்றி வேறல்ல.

புத்தரின் நினைவாக மகத்தில் இருந்து இலங்கை அனுராதபுரத்திற்குக் கொண்டு சென்ற போதிமரத்தை, போகும் வழியில் திக்கவ என்ற ஆரியனின் கிராமத்திற்குக் கொண்டு சென்-று அவனுக்கு முதல் மரியாதை செய்யப்பட்டது.

பாண்டுகோபய என்ற சிங்கள பவுத்த மன்னன் அவையில் சந்த என்ற ஆரியன் ராஜகுருவாக இருந்திருக்கிறான். அவனால் வர்ணாசிரமம் - சண்டாளர் குடியிருப்பு விரிவடைந்துள்ளது.

பவு-த்த தேவனாம்பிய மன்னனின் ராஜகுரு ஓர் ஆரியன் என்பதை மகாவம்ச வெளிப்படையாக சொல்கிறது-.

புத்தர் ஆரியத்தை, ஆரிய ராஜகுருக் களை முற்றிலும் வெறுத்து ஒதுக்கியவர். ஆனால் இலங்கை பவுத்த சிங்களவர்கள், புத்தர் ஒதுக்கிய ஆரிய ராஜகுருக்களைத் தலைமை பீடத்தில் வைத்துக்கொண்டு, ஆரிய - சிங்களக் கூட்டுத்தலைமையில் திராவிடருக்கு எதிராக நடத்திய போரின் அடையாளம் ஆரிய திராவிடப்போர்.

எஸ்.பொ. சொல்கிறார், “ ‘மகாவம்ச’ வில் பல்வேறு இடங்களிலே பிராமணர் பற்றிய குறிப்புகள் வருகின்றன. அனைத்தி லுமே சிங்களர் மேலாதிக்கத்தை நிலை நாட்ட, சிங்களர் சார்பாக, தமிழர் விரோத மான நடவடிக்கையிலேயே பிராமணர் ஈடுபட்டார்கள் என்பது அழுத்தமாகப் பதிவாகியுள்ளது”.

மகாசம்சவின் தலைநாயகனாக காட்டப் படுபவன் துட்டகாமினி. இவன் திராவிட இனத்தை, தமிழர்களை பூண்டோடு ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவன்.

ஒரு தடவை காமினி கூனிக்குறுகிப் படுத்திருந்தான். ஏன் இப்படிப் படுத்திருக் கிறாய் என்று கேட்டதற்கு அவன், “வடக்கில் தமிழர்கள் இருக்கிறார்கள். தெற்கில் கடல் இருக்கிறது. எப்படி நான் நிமிர்ந்து சுதந்திர மாகத் தூங்குவேன்” என்று சொல்கிறான்.

இதன் பொருள், தெற்கே உள்ள கடலை அழிக்க முடியாது. ஆனால் வடக்கில் வாழும் தமிழர்களை அழித்து ஒழித்தால் தான் சிங்களவர்கள் சுதந்திரமாக இருப்பார்கள் என்பதுதான்.

ஈழத்தின் இணையற்ற மாவீரர், தமிழ் மன்னர் எல்லாலர் சிங்கள அதிகார மட்டத்திற்குச் சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.

அம்மாவீரரின் முதல் படைவீரனைக் கொன்ற கத்தியின் இரத்தத்தை, அதே வீரனின் தலைமேல் ஏறி நின்று கொண்டு பச்சையாகக் குடிக்க வேண்டும் என்று துட்டகாமினியின் தாய் சொல்வதாக மகா வம்ச சொல்கிறது. இவள்தான் இன்றும் இலங்கையின் ராஜமாதா(!).

மேலே சுட்டிக் காட்டப்பட்ட துட்டகாமினி, அவனின் தாய் இருவரின் கொலைவெறி, இனவெறிப் பேச்சுகளை கி.பி.6ஆம் நூற்றாண்டில் பதிவு செய்து வளர்த்த ஆரிய மகாவம்ச வின் மனிதநேய எதிர்ப்பின் விழைவை இன்றும் ஈழமண் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறது-.

திராவிடர்கள் வாழ்ந்த பண்டைய இந்தியாவில் நுழைந்த ஆரியர்கள், கடவுள், யாகம், பூசைகள், சாத்திரங்கள் என்று திராவிட இனத்தை மயங்கச் செய்து அதிகாரத்திற்குள் நுழைந்தார்கள்.

ஆரியம் ஏற்றத்தாழ்வை உருவாக்கியது. சதுர்வருணக் (நால்வருணம்) கோட் பாட்டை உருவாக்கி, அதன் வழியாக சாதி யத்தைப் பிறப்பின் அடிப்படையாக ஆக்கியது.

ஆரியர்கள் பூசாரியானர்கள், ராஜகுருவாக மாறினார்கள். திராவிடர்கள் ஆரியத்தின் சூழ்ச்சியினால், ஆரியத்தால் வீழ்ந்தார்கள்.

புத்தரின் தோற்றம் ஆரியத்தை அதிரவைத்தது. பவுத்த “சங்கம்” என்ற புத்தர் தோற்றுவித்த பகுத்தறிவு இயக்கம் திராவிட மக்களை விழிப்படையச் செய்தது.

மவுரியப் பேரரசு ஆரியத்தை ஆடவிடாமல் அடக்கிவைத்தது. காரணம் பவுத்தம்.

ஆகவே பவுத்தத்தை அழிக்க முயன்ற ஆரியம் தோல்வியடைந்ததால், பவுத்தத்தை ஆரிய மயமாக்க முனைந்து, அதை நாகார்ச்சுனரின் மூலம் நிறைவேற்றியது. அதனால் தோன்றிய ஆரிய மகாயானம் பவுத்தத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது-.

சமூக நீதி, சமூக விடுதலை, மனித சமத்துவத் தலைவரான புத்தரை வெறும் அகிம்சாவாதியாக ஆக்கியது ஆரியம். கடவுளாகக் காட்டியது. விஷ்ணுவின் அவதாரம் என்றும் திரித்துக் கூறியது.

பகுத்தறிவுத் தேரவாத பவுத்தம், மகாயான பவுத்த மதமாக காட்சியளிக்கச் செய்தார்கள் ஆரியர்கள்.

பவுத்த திரிபிடகங்களிலும் கூட திரித்தல் வேலைகள் செய்து அதையும் மதநூலாக மாற்றும் முயற்சியில் ஆரியம் முனைந்தது.

பவுத்தத்தின் போர்வையில் மகாவம்ச போன்ற இனவெறி, கொலைவெறியைத் தூண்டும் நூல்கள் உருவாக்கப்பட்டன.

நாடற்ற ஆரியம், இந்திய மண்ணில் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி, சதுர்வருணம் அடிப்படையில் அவர்களுக்கான ஆரிய இலட்சியக் கோட்பாட்டை நிலைநிறுத்த முனைந்தது.

ஆரியம் ஆத்திகம். திராவிடம் நாத்திகம். சமூக களத்தில் ஆத்திகமும் நாத்திகமும் எதிர்எதிர் அணிகள்.

ஆத்திகத்தின் மவுடீகத்தை வீழ்த்தி, நாத்திகத்தின் சமநீதிக்காக முதல் குரல் கொடுத்தவர் புத்தர். அவர் உருவாக்கிய இயக்கம் பவுத்தம்.

புத்தரின், பவுத்தத்தின் வீறுகொண்ட எழுச்சியை சுருக்கமாக இப்படிச் சொல்லி முடிக்கிறேன்...

பவுத்தம் ; ஆரிய - திராவிடப்போரின் தொடக்கம்!

 - நிறைவு பெறுகிறது. 

பயன்பட்ட நூல்கள் :

1. புத்தரும் அவர் தம்மமும் - டாக்டர் அம்பேத்கர்

2. அம்பேத்கர் நூல் தொகுதிகள் - 7,13,14

3. இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும்  அழிந்தனவும் - தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா

4. உலகாயுதம் - தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா

5. இந்தியத் தத்துவ இயல் - தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா

6. பவுத்த தத்துவ இயல் - ராகுல சாங்கிருத்தியாயன்

7. ரிக்வேத கால ஆரியர்கள் - ராகுல சாங்கிருத்தியாயன்

8. அசோகர், இந்தியாவின் பவுத்தப் பேரரசர் - வின்சென்ட்    ஏ.ஸ்மித்

9. அசோகரின் கல்வெட்டுகள் - தினேஷ் சந்திர சர்க்கார்

10. உலக வரலாறு (முதல் தொகுதி) - ஜவகர்லால்நேரு

11. காலந்தோறும் பிராமணியம் (முதல்பாகம்) - அருணன்

12. தமிழரின் தத்துவ மரபு (பகுதி ஒன்று) - அருணன்

13. புத்தர், தர்மமும் சங்கமும் - அருணன்

14. குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் - பிரட்ரிக் ஏங்கெல்ஸ்

15. பவுத்தம் மிகச்சுருக்கமான அறிமுகம் - தாமியென் கோவன்

16. புத்தர் மிகச் சுருக்கமான அறிமுகம் - மைக்கேல் கேரிதர்ஸ்

17. இந்தியாவின் வரலாறு - பொன்காரத் லேவின்     (அன்தோனவா - கத்தோவ்ஸ்கி)

18. பண்டைய வேதத் தத்துவங்களும்

 வேதமறுப்புப் பவுத்தமும் - நா. வானமாமலை

19. மகாவம்ச (சிங்களர் கதை) - எஸ்.பொ.,

20. பவுத்தத்தின் சமூக தத்துவமும் சமத்துவமின்மைப் பிரச்சனையும் - உமா சக்கரவர்த்தி

21. அபிதான சிந்தாமணி - ஆ. சிங்காரவேலு முதலியார்

22. புத்தரின் போதனைகள் - ப.ராமஸ்வாமி

23. பவுத்த தருமம் - ப.ராமஸ்வாமி

24. கோதம புத்தர் - ஆனந்தகுமாரசாமி - ஐ.பி.ஹார்னர்

25. யுவான் சுவாங் - (தமிழில்) எஸ்.வீ.இராகவன்

26. பாகியான் - (தமிழில்) எஸ்.வீ.இராகவன்

27. புத்த சரித்திரம், பவுத்த தருமம் - உ.வே.சாமிநாதர்

28. பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள் - வீரசாவர்க்கர்

Pin It