தந்தை பெரியார் படிப்பகம், அண்ணல் அம்பேத்கர் நூலகம் ஆகியனவற்றின் சார்பில், 02.11.2011 புதன் கிழமையன்று, சென்னை, மந்தைவெளி செயின்ட்மேரிப் பாலம் அருகே நடைபெற்ற, பெரியார் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டிற்கு முன்பு தொடங்கப்பட்ட திராவிட இயக்கத்தின் நோக்கமே, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றுத்தர வேண்டும் என்பதுதான். 1912ஆம் ஆண்டு சி. நடேசனாரால் தொடங்கப்பட்ட திராவிட சங்கம் எல்லோரும் கல்வி பெறப் போராடியது. இதோ அருகில் இருக்கும் திருவல்லிக்கேணியில் திராவிட மாணவர் விடுதி ஒன்றைத் தொடங்கி, கிராமப்புற மாணவர்களும் இங்கு வந்து தங்கிப் படிக்க ஏற்பாடு செய்தார் அவர்.

அந்தப் பணியை 1916ஆம் ஆண்டிற்குப் பிறகு நீதிக்கட்சி என்று அறியப்பட்ட தென்னிந் திய நல உரிமைச் சங்கம் எடுத்துக் கொண்டது. நடேச னாரும், சர்.பிட்டி. தியாகரா யரும், மருத்துவர் டி.எம். நாயரும் இணைந்து அக்கட் சியை நடத்தினர்.

தந்தை பெரியார் 1926இல் சுயமரியாதை இயக்கம் கண்டார்.  அவருடைய வழியில்  அறிஞர் அண்ணா வும், தலைவர் கலைஞரும் தமிழர்களுக்காக, திராவிடர் களுக்காக உழைக்கும் பணி யைத் தம் தோள்களில் சுமந் தனர்.

ஆனால் இன்று என்ன நடக்கிறது? இன்று மதியம் அ.தி.மு.க. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு, பேரதிர்ச்சியைக் கொண்டு வந்துள்ளது. சென்னை, கோட்டூர்புரத்தில், கலைஞரின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட, எழில்மிகு அண்ணா நூற்றாண்டு நூலகம் இடம் மாற்றப்படும் என்ற அறிவிப்பு வந்துள்ளது.

இழுத்து மூடப்படும் என்பதைத்தான், இடம் மாற்றப்படும் என்னும் சொற்களால் அரசு கூறுகின்றது.

1200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அழகிய கட்டிடமான, புதிய தலைமைச் செயலகம் என்னாயிற்று? அங்கும் மருத்துவமனைதான் வரப்போகிறது என்றார்கள். வந்ததா? அதற்கான பணிகள் எவையேனும் நடக்கின்றனவா?

அப்படித்தான் இப்போதும், நூலகக் கட்டிடத்தைக் குழந்தைகள் மருத்துவமனை ஆக்கப்போவதாகக் கூறுகின்றார்கள்.

மருத்துவமனைகள் வேண்டாம் என்று நாம் கூறவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சியில், மருத்துவமனைகளின் தேவை  கூடுதலாகத்தான் இருக்கும் என்பதை நாம் உணர்கின்றோம். ஆனால் அதற்கு வேறு இடமே அரசுக்குக் கிடைக்கவில்லையா? ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகமாக அமைந்திருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சிதைத்துத்தான் குழந்தைகள் மருத்துவமனை கட்ட வேண்டுமா?

குழந்தைகளுக்கு உடல் நலம் எவ்வளவு தேவையோ, அதே அளவு அல்லது அதைவிடக் கூடுதலாக மனநலமும், அறிவுநலமும் தேவைப்படுகின்றது என்பதை அரசு மறந்துவிட்டது. ஏறத்தாழ எட்டு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில், ஒன்பது தளங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள அந்த நூலகத்தில், முதல் தளம் குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. எத்தனை அழகு, எத்தனை சிறப்பு. குழந்தைகளின் உளவியல் அறிந்து, விளையாடிக் கொண்டே படிப்பதற்கு ஏற்றவகையில் உருவாக்கப்பட்டுள்ள அந்நூலகத்தை மூடிவிட நினைக்கும் அரசுக்குக் குழந்தைகளின் மீது என்ன அக்கறை இருக்க முடியும்?

குழந்தைகளுக்கு மட்டுமின்றி, மக்களின் பல்வேறு பிரிவினருக்கும் ஏற்ற வகையில், எண்ணி எண்ணிப் பார்த்து, எழிலோவியமாக அந்த நூலகம் எழுப்பப்பட்டுள்ளது.

நூலகத்தின் கீழ்த்தளத்தில், ஒரு பெரிய அறை உள்ளது. அங்கே, தம் சொந்த நூல்களைக் கொண்டு வந்து மாணவர்களும், பிறரும் படிக்கலாம். சொந்த நூல்களை வீட்டிலேயே அமர்ந்து படிக்கலாமே, இங்கே எதற்குத் தனி அறை என்று அன்றைக்கு என் போன்றவர்களுக்கே தோன்றியது. அடித்தட்டு மக்களின் வாழ்வை அறிந்தவர்களுக்குத்தான் அதன் நுட்பம் புரியும்.

இந்த நாட்டில் எத்தனை பேருக்கு வீடு இருக்கிறது? அப்படியே இருந்தாலும், கோடிக்கணக்கான குடிசை வீடுகளில், பிள்ளைகள் அமர்ந்து படிக்க நாற்காலியும், மேசையும் எங்கே இருக்கின்றன? அந்த வீட்டுப் பிள்ளைகளும் படிக்க வேண்டாமா? குளிரூட்டப்பட்ட அறையில், வசதியான நாற்காலி யில் அமர்ந்து அவர்களும் படிக்கட்டும் என்ற எண்ணத்திலே தான் அந்த அமைப்பு அங்கே உள்ளது. ஏழை எளிய மக்களின் மீது கவனம் கொண்ட கலைஞ ரால் அந்த ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளன.

அதே கீழ்த்தளத்தில் பார்வையற்ற நம் சகோதரர்களாகிய மாற்றுத்திற னாளிகளுக்காக ஒரு பகுதி உள்ளது. எழுத்துகளைத் தடவித் தடவியே அவர்கள் படிப்பார்கள். இப்போது அங்கே, அந்த நூல்களைத் தொடும்போது, அதிலிருந்து ஒலி வருகிறது. அந்த நூல்கள் அவர்களுக்காகப் பேசுகின்றன. அதற்கான நவீன வடிவமைப்புகள் செய்யப் பட்டுள்ளன.

இத்தனையும் வீணாக வேண்டுமா? ஏறத்தாழ  ஆறு இலட்சம் நூல்கள் அங்கே உள்ளன. புரட்சிக்கவிஞர் செம்மொழி ஆய்வு நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த அரிய ஆய்வு நூல்களெல்லாம், ஒரு மூட்டையில் கட்டி எங்கோ எறியப்பட்டு விட்டனவே, அந்த நிலைதான் இந்த ஆறு லட்சம் நூல்களுக்கும் ஏற்பட வேண்டுமா?

நினைக்கும்போதே நெஞ்சம் எரிகிறது. அறிவை விரிவு செய் என்றார் புரட்சிக்கவிஞர். அறிவை அழிவு செய் என்கிறது இன்றைய அரசு.

சமச்சீர்க்கல்வி என்னும் தேன் கூட்டில் கைவைத்து, அதன் மூலம் பெற்ற அனுபவங்களை அதற்குள்ளாகவே அம்மையார் மறந்துவிட்டார். இப்போது இரண்டாவது தேன்கூட்டைக் கலைக்க முயல்கிறார். கல்வி, அறிவுத் துறைகளில் கை வைப்பவர்களைத் தமிழகம் என்றும் சினம்கொண்டு எதிர்த்துள்ளது. அந்த எதிர்ப்பை ஜெயலலிதாவும் விரைவில் எதிர்கொள்வார்.

1981ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்தில் இருந்த மிகப்பெரிய நூலகத்தைச் சிங்களர்கள் தீவைத்துக் கொளுத்தி மகிழ்ந்தார்கள். 97,000 நூல்களும், அறிஞர் ஆனந்த குமாரசுவாமி தேடி வைத்திருந்த ஓலைச்சுவடிகளும் எரிந்து சாம்பலாயின. இதோ இன்று 6 லட்சம் நூல்களையும், எழிலார்ந்த நூலகக் கட்டிடத்தையும் ஜெயலலிதா சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

இது பொறுப்பதில்லை என்று என் தமிழினம் எழட்டும் ! நூலகத்தில் படித்துப் பயன்பெறும் மாணவர்கள், ஆய்வாளர்கள் ஒன்று திரண்டு தெருவுக்கு வரட்டும் ! தமிழர்களின் சொத்தாய்த் தலைநிமிர்ந்து நிற்கும் நூலகத்தைக் காப்போம் எனத் தமிழ் அறிஞர்களும், தமிழின உணர்வாளர்களும் களம் காணட்டும் !

அது வெறும் கட்டிடமில்லை. அறிவுக் களஞ்சியம், அழகுப் பெட்டகம். ஆயிரம் ஆண்டுகளுக்கு நம் பெருமை பேசப்போகும் பென்னம் பெரிய நூலகம். அதைக் காக்க ஒரு நாளும் தவறிவிடக் கூடாது.

Pin It