இடைத்தேர்தலில் தமிழகக் கட்சிகள் இடைத் தேர்தல்கள் நியாயமாக நடத்தப்படவில்லை, பணம் கொடுத்து வாக்குகளை வாங்குகிறார்கள் என்று கூறி, 5 தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல்களைப் புறக்கணித்த அ.தி.மு.க, இப்போது திருச்செந்தூரிலும், வந்தவாசியிலும் இடைத்தேர்தல்களில் போட்டியிடுகின்றது. எனவே இந்தத் தேர்தல்கள் நியாயமாக நடைபெறுகின்றன  என்றும், யாரும் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கமாட்டார்கள் என்றும் ஜெயலலிதா உறுதியாக நம்புவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இல்லையயனில், இந்த இடைத்தேர்லில் மட்டும் போட்டியிடுவாரா, என்ன?

ஆனால் நம் மருத்துவர் அய்யாவிற்கு இன்னும் அந்த நம்பிக்கை வரவில்லை. யாரும் வாக்குகளைப் பெற, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க மாட்டோம் என்றும், இடைத் தேர்தலில் எவரும் எந்தத் தவறும் செய்ய மாட்டோம் என்றும் தனக்கு எல்லா கட்சிகளும் எழுத்து மூலம் உறுதிமொழி கொடுத்தால் மட்டுமே இடைத் தேர்தல்களில் போட்டியிடுவோம் என்றும், இல்லையானால் பா.ம.க. போட்டியிடாது என்றும் அவர் அறிவித்து விட்டார். இது ஒரு உலக சாதனை. இதுவரை எந்தக் கட்சியும், பிற கட்சிகளைப் பார்த்து இப்படிக் கேட்டதில்லை. ஆனால், அய்யாவின் சாதனையைப் பிற கட்சிகள் எதுவும் மதிக்கவில்லை. ஆகவே பா.ம.க. இத்தேர்தலில் போட்டியிடவில்லை. பா.ம.க. போட்டியிடாததால், தி.மு.க.,  அ.தி.மு.க போன்ற கட்சிகள் மட்டுமின்றி, நாடே கவலையில் மூழ்கியுள்ளது.

பா.ம.க.வைப் பொறுத்தவரை, தேர்தலில் வெற்றி பெற்றால் வீர வரலாறு. தோல்வியுற்றால் இயந்திரக் கோளாறு. இந்த முறையும் அப்படிச் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். அதை விட்டுவிட்டு, ‘49 ஓ’ போடுமாறு மருத்துவர் கூறியுள்ளார். இதில் இன்னொரு பெரிய ஆபத்து உள்ளது. தேர்தலில் பதிவாகும் ‘ 49 ஓ ’ வாக்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு, பா.ம.க.வின் செல்வாக்கை அளந்து விடலாம் என்கிறார், மத்திய அமைச்சர் மு.க.  அழகிரி.  அதை எண்ணிப் பார்த்தால் நிலைமை கவலைக்கிடமாகத்தான் இருக்குமோ, என்னவோ?

நம்  இடதுசாரிக் கட்சியினர் வினோதமான இரட்டையர்கள். சில நேரங்களில், தும்மினா லும் சேர்ந்துதான் தும்முவார்கள். சில நேரங்களிலோ, நாங்கள் வேறு, அவர்கள் வேறு என்று கூறி விடுவார்கள்.

இந்த இடைத்தேர்தலில் இருவரும் அ.தி.மு.கவை ஆதரிக்கின்றனர். ஆனால், தோழர் தா.பா. போயஸ் தோட்டத்தின் கதவைத் தட்டி ( எப்போதாவது திறந்து கொள்ளும் கதவு அது ) ஆதரவைத் தெரிவிக்கின்றார். ஆனால் தோழர் வரதராஜனோ, அ.தி.மு.க. மேடையில்கூட ஏற மாட்டேன் என்கிறார் (ஏற்ற மாட்டார்களோ என்னவோ). கூட்டணிக் கட்சிகளை மதிக்காத அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் சொல்கிறார். ‘   உங்களை மதிக்காத கட்சிக்கு வாக்கு கேட்கின் றீர்களே, அவர்கள் எங்களை எப்படி மதிப் பார்கள் ’ என்று மக்கள் கேட்டால், அதற்குத் தோழர்களிடம் ஏதோ ஒரு விடை இல்லாமலா இருக்கும்? கண்டிப்பாய் வைத்திருப்பார்கள். ஆனாலும் சில ரகசியங்களை அவர்கள் வெளியில்  சொல்வதில்லை.

யார் எந்தப் பக்கம் நின்றாலும், மக்கள் இப்போது தி.மு.க.வின் பக்கம்தான் நிற்கின்றனர் என்பதை, எல்லாக் கட்சிகளும் தெரிந்து வைத்துள்ளன. ஆனாலும் தேர்தல் வரும்போது போட்டியிடத்தானே வேண்டி உள்ளது.

- இளைய சுப்பு