திராவிட இயக்கம் தோன்றுதவற்கு முன் தமிழக்தின் சமூகச் சூழல் எவ்வாறு இருந்தது என்பதையும், திராவிட இயக்கத்தின் தொடக்ககால வரலாற்றையும், மிக விரிவாக எடுத்துரைக்கும் நூலே, “தமிழ் மறுமலர்ச்சியும், திராவிடத் தேசியமும்”.

1976ஆம் ஆண்டு, மறைந்த கு. நம்பி ஆருரன் அவர்களால், முனைவர் பட்ட ஆய்வேடாக, இலண்டன் பல்கலைக்கழகத்தில்,  என்னும் தலைப்பின் கீழ், ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வின் தமிழாக்கமே இந்நூல் ஆகும். இந்நூலை 2009ஆம் ஆண்டு, திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு, பி.ஆர்.முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து, அழகிய தமிழில் மொழி பெயர்த்துள்ளனர்.

இந்நூல் பற்றிய அறிமுகத்திற்குள் நுழைவதற்கு முன், ஒரு செய்தியை அழுத்தமாகக் குறிப்பிட்டாக வேண்டும். திராவிட இயக்கத்தில் உள்ள அனைவரும், ஒரு பாடநூல் போலப் படித்துப் பாதுகாக்க வேண்டிய அரிய நூல் இது என்பதே அச்செய்தி.

1905ஆம் ஆண்டு தொடங்கி, 1944ஆம் ஆண்டு வரையிலான திராவிட இயக்கச் செய்திகள் அனைத்தும் இந்நூலுள் சான்றுகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெளிவந்த நூல்கள், பருவ இதழ்கள்  ஆகியனவற்றிலிருந்து மட்டுமின்றி, வெளியிடப்படாத கையயழுத்துப் படிகள்  அரசு ஆவணங்கள் போன்றவைகள் மூலமாகவும் சான்றுகள் பெறப்பட்டுள்ளன. 1905ஆம் ஆண்டு தொடங்கி அன்று வெளிவந்த ‘தி மெட்ராஸ் மெயில்’ என்னும் நாளேட்டிலிருந்து பல செய்திகள் எடுத்துத் தரப்பட்டுள்ளன. இன்றைக்கு நாம் ஆவணக் காப்பகங்களில் கூடப் பார்க்க முடியாத பல முதல் தகவல்கள் நூலுள் இடம் பெற்றுள்ளன.600க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட நூலில், பிற்சேர்க்கையும், மேற்கோள் நூல்களின் பட்டியலும் மட்டுமே ஐம்பது பக்கங்களைத் தாண்டுகின்றன.

நூலின் உள்ளடக்கத்தை ஆசிரியர் மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளார். 1905-20 காலகட்ட வரலாற்றுச் செய்திகள் முதல் பகுதியிலும், 1920-44 காலகட்ட வரலாற்றுச் செய்திகள் இரண்டாம் பகுதியிலும் இடம் பெற்றுள்ளன. மறைமலை அடிகளாரின் வாழ்க்கைக் குறிப்புகள், அவர் நிறுவிய தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம் குறித்த அவருடைய பார்வை ஆகியன மூன்றாம் பகுதியாக அமைக்கப்பட்டுள்ளன.

இன்றைக்குத் ‘திராவிடம்’ குறித்தும், ‘திராவிட இயக்கம்’ குறித்தும், பொருத்தமில்லாத பல விளக்கங்களைப் புதிதாய்ப் புறப்பட்டுள்ள தமிழ்த்தேசியர்கள் பலர் கூறத் தொடங்கியுள்ளனர். திராவிட இயக்க எதிர்ப்பு, இன்றைக்குப் புதிதாகத் தோன்றியிருக்கும் ஒன்றன்று. சிலம்புச் செல்வர் ம.பொ.சி., 1940களின் இறுதியிலேயே அதனைத் தொடக்கினார். அவரைத் தொடர்ந்து மேலும் பலர் அதே முயற்சியில் இறங்கினர். ஆனால் இன்றுவரை அதில் எவரும் வென்றிடவில்லை.

‘திராவிடர்’ என்னும் சொல், பார்ப்பனரல்லாத, பார்ப்பன எதிர்ப்புத் தமிழர்களையே குறிக்கும் என்பதை இந்நூலைப் படிப்போர் தெளிவுறத் தெரிந்து கொள்ள இயலும். எல்லாச் சொற்களுக்கும் அகராதிகளில் மட்டுமே பொருள்தேடிக் கொண்டிருக்கக் கூடாது. நடைமுறையிலும், வரலாற்றிலும் ஒவ்வொரு சொல்லும் புதிய பொருள்களைப் பெறும் என்பதை அறிஞர்கள் அறிவார்கள்.

சமூகநீதிக் கோரிக்கையே, திராவிட இயக்கத்தின் அடித்தள மாகவும், தொடக்கமாகவும் இருந்துள்ளது. எனினும், அதன் வளர்ச்சிப் போக்கில், தமிழ் மொழி, இலக்கிய மறுமலர்ச்சிக்கும் அதுவே பெரும் தூண்டுகோலாக ஆகியுள்ளது.

தமிழுக்கும், தமிழர்களுக்கும் திராவிடமே எதிரி என்று சிலர் இன்று உண்மைக்கு முற்றிலும் மாறான செய்திகளை வெளியிட்டுக் கொண்டுள்ளனர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் மறுக்கப்பட்ட தமிழ் மொழிப் பாடத்தை மீண்டும் கொண்டு வந்தவர்கள், நீதிக்கட்சி அரசினரே என்னும் செய்தியை நூல் தருகின்றது. 1909 பிப்ரவரியில், பி.ஆர்.சுந்தரம் அய்யர் என்பவர் கொண்டுவந்த தீர்மானப்படி, சென்னைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலிருந்து, தமிழ்மொழிப் பாடம் நீக்கப்பட்டுவிட்டது. மீண்டும் 1925இல், நீதிக்கட்சியே அதனை மாற்றி அமைத்துள்ளது.

ஜி.யு.போப் போன்ற அறிஞர்கள், தமிழ்ப் பேரகராதி  ஒன்று வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளனர். 1913ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகம் அத்தகு முயற்சி ஒன்றைக் கையில் எடுத்தது. ஆனால் அதற்குப் பொருளாதாரம் உள்ளிட்ட பல தடைகள் எழுந்தன. “இது வெள்ளை யானையைக் கட்டித் தீனி போடுவது போன்றதாகும். தமிழ் அகராதிக்குச் செலவிடும் தொகையை நிறுத்தி விடலாம். அந்தத் தொகையைத் தென்னிந்திய மொழிகளின் ஆய்வுக்குப் பயன்படுத் தலாம்” என்றார் எஸ். சத்தியமூர்த்தி அய்யர்.

எனினும், அந்த முயற்சிக்கு ஆதரவு கொடுத்து, 1920களில் அப்பேரகராதி வெளிவர நீதிக்கட்சி ஆட்சியே உதவியது. அச்சிடப்பட்ட 2000 படிகளில், 400 படிகளை அரசே பெற்றுக் கொண்டது.
இந்த வரலாற்றை எல்லாம் மறைத்துவிட்டு, சுந்தரம் அய்யர்களும், சத்தியமூர்த்தி அய்யர்களும், தமிழை வளர்த்ததைப் போலவும், திராவிட இயக்கம் தமிழைக் கெடுத்ததைப் போலவும் பேசுகின்ற போலிகள் இன்று பெருகிவிட்டனர்.

இரண்டாம் பகுதியில், நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகள், சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம், தமிழிசை இயக்க வரலாறு, ஆகியன விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.நீதிக்கட்சி ஆட்சியின் தொடக்கமே, இட ஒதுக்கீட்டுக் கொள்கை சார்ந்ததாக இருந்தது. 1922-23ஆம் கல்வியாண்டில், அரசுக் கல்லூரிகளில் 50% இடம் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. வழக்கம்போல, சத்திய மூர்த்தி அய்யர் அதனைப் பல்கலைக் கழகப் பேரவைக் கூட்டத்தில் எதிர்த்தார். அதற்கு விளக்கம் அளித்த லிட்டில்யஹய்ல்ஸ் என்னும் ஆங்கிலேயர், “சென்ற ஆண்டு, மாநிலக் கல்லூரியில், விண்ணப்பித்திருந்த 167 பார்ப்பன மாணவர்களில் 121 பேர் சேர்க்கப்பட்டனர். மீதமுள்ள 46 பேரும் வேறு கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். இவ்வாறு, ஒரே பிரிவினர் மட்டுமே கல்வியறிவைப் பெற அரசு ஏன் சம்மதிக்க வேண்டும். பிற வகுப்பினருக்கும் இடமளிப்பது நியாயம்தானே?” என்று பேசியுள்ளார்.

நீதிக்கட்சி ஆட்சியில், 1925இல் நிறைவேற்றப்பட்ட ‘இந்து அறநிலையச் சட்டம்’ எத்தனை எதிர்ப்புகளைச் சந்தித்தது என்னும் வரலாற்றை, இந்நூல் படிப்போர் முழுமையாக அறியலாம். பார்ப்பனர்களிடமிருந்தும் இச்சட்ட முன்வடிவிற்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.

“சட்டமன்றத்தில் இச்சட்ட முன்வடிவம் ஏற்கப்பட்டாலும், நாட்டிலுள்ள 300 இலட்சம் மக்கள் இதனை எதிர்ப்பார்கள்” என்று இந்து நாளேடு (10.04.1924) எழுதியிருந்த விமர்சனத்தை நூல் எடுத்துரைக்கின்றது.

ஒரு கட்டத்தில் நீதிக்கட்சிக்குச் சரிவு ஏற்பட்டது. அப்போதுதான், சிறையில் இருந்த தந்தை பெரியார், அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின், அது மீண்டும் வீரியம் கொண்டு எழுந்தது. 1944இல் அறிஞர் அண்ணா அவர்கள் முன்மொழிந்த தீர்மானப்படி, அது ‘திராவிடர் கழகம்’ எனப் பெயர் பெற்றது.

முரசொலி மாறன் அவர்கள் எழுதியுள்ள ‘திராவிட இயக்க வரலாறு’ நூலின் முதல் பகுதி மட்டுமே வெளிவந்துள்ளது. அது நீதிக்கட்சியின் தொடக்கத்தோடு நிறைவடைந்துவிட்டது. இந்நூல், 1944 வரையிலான வரலாற்றை விவரிக்கிறது.

1944இல் திராவிடர் கழகமும், 1949இல் திராவிட முன்னேற்றக் கழகமும் தோன்றின. அதன்பின்பு, 1950 தொடங்கி, தமிழகம் முழுவதும் திராவிட இயக்க எழுச்சியால் ஈர்க்கப்பட்டது. 1950-67 காலகட்டத்தைத் திராவிட இயக்கத்தின் எழுச்சிமிகு பொற்காலம் என்றே குறிப்பிடலாம். அந்த வரலாறும், அதற்குப் பிந்திய இன்று வரையிலான திராவிட இயக்க வரலாறும், மென்மேலும் விரிவாக எழுதப்பட வேண்டியுள்ளது.

திராவிட இயக்கத்தின் வரலாறும், 20ஆம்,21ஆம் நூற்றாண்டுகளின் தமிழக வரலாறும், பிரிக்கப்பட இயலாமல் பின்னிப் பிணைந்து கிடப்பவை அன்றோ!

Comments

8 comments

8
alagarasan
திராவிடர்’ என்னும் சொல், பார்ப்பனரல்லாத, பார்ப்பன எதிர்ப்புத் திராவிடர் குறிக்கும் என்பதை இந்நூலைப் படிப்போர் தெளிவுறத் தெரிந்து கொள்ள இயலும்.
என்ன சொல்ல வருகிரீர் சுபவீ அவர்களே?
அப்ப்டியென்ட்ரால் ஆதீ திராவிடர்’ என்னும் சொல் யாரை குறிக்கும்- திராவிடர்ல்லாத திராவிடரஎதிர்ப்பளர்களை குறிக்குமா?
மனிதன்
அப்ப்டியென்ட்ரால் ஆதீ திராவிடர்’ என்னும் சொல் யாரை குறிக்கும்- திராவிடர்ல்லாத திராவிடரஎதிர்ப்பளர்களை குறிக்குமா?/////////

அதுக்கு ஏதாவது ஒரு பித்தலாட்ட பேச்சை, திரைக்கதை வசனமெழுதுவார் சுப.வி. மிக பெரிய சினிமா டைரக்டரின் தம்பிக்கு இது கூட தெரியாதா?
RRaj
/////////‘திராவிடர்’ என்னும் சொல், பார்ப்பனரல்லாத, பார்ப்பன எதிர்ப்புத் தமிழர்களையே குறிக்கும் என்பதை இந்நூலைப் படிப்போர் தெளிவுறத் தெரிந்து கொள்ள இயலும்////////////////..............//////தமிழுக்கும், தமிழர்களுக்கும் திராவிடமே எதிரி என்று சிலர் இன்று உண்மைக்கு முற்றிலும் மாறான செய்திகளை வெளியிட்டுக் கொண்டுள்ளனர்/////......இது என்ன மொக்கை விளக்கம்... இரண்டு கருத்தும் முரண் படுகிறது... இரண்டாவது கருத்தின் படி திராவிடர்களும், தமிழர்களும் வேறு வேறு என்று பதிவு உள்ளது....
Sudalaimanian
சுந்தரம் அய்யரும், சத்தியமூர்த்தி அய்யரும் அகண்ட பாரதத்தை "ஆரிய தேசம்" என எண்ணி வாழ்ந்த்துள்ளனர். ஆரிய தேசத்தின் மொழி சமஸ்கிருதம். ஒரு மொழி பேசும் பூமியைத்தான் தேசம் என அழைக்க முடியும். நம் திராவிட தேசத்தின் மொழி எது. திராவிட மொழிகள் எல்லாமே தான் எனக் கூறலாமா? ஆனால் திராவிட மொழிகளின் பெருமிதம் எனக் கருதப்படும் பழமையான தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கொடுப்பதை தெழுங்கராலும், கன்னடியராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே. திராவிடம் என்றாலே தமிழ் என்ற சொல்லின் திரிபுதான் என்பது இங்கு ஏற்புடையது அல்ல.திராவிடம் என்ற சொல்லிற்கு ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பொருள் உண்டு. இன்றைய சூழலில் திராவிடர் என்றால் திராவிட மொழி பேசும் அனைவரையுமே குறிக்கும். தமிழ்ர் கழகம் எனக் கூறினால் தமிழ் நாட்டில் வாழும் பிற திராவிட மொழி பேசும் மக்களை தனிமைப் படுத்துவதுபோல் ஆகிவிடும் என்று கூறினால் ஏற்புடையதுதான். இதை விளக்கமாக மக்களிடம் கூறிவிடலாமே. அதைவிடுத்து திராவிடம் என்றாலே தமிழ்தான் என்று கூறுவதும் தமிழ்தான் திராவிட மொழிகளுக்கு தாய் என்று கூறுவதும் பிற சகோதரர்களை அவமதிக்கும் செயலாகும்.
Sudalaimanian
மேலும் சு.ப.வீரபண்டியன் அவர்கள், திராவிட இயக்க வரலாறும் 20, 21 ம் நூற்றாண்டுகளின் தமிழக வரலாறும் பிரிக்கப்பட இயலாமல் பின்னிப் பிணைந்து கிடப்பவை என்று முத்தாய்ப்பாக குறிப்பிடுகின்றார். இதை மறுக்க முடியாதுதான். ஆனால் திராவிட இயக்கங்களின் வரலாற்றில் இன்னும் பல பிரிக்க முடியாத, நாம் இதுவரை கவனிக்காத விடயங்கள் உண்டு. பெரியார் நீதிக் கட்சிக்குத் த்லைமை ஏற்றபின் அக்கட்சி திராவிட கழகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டதை இங்கு குறிப்பிட்டுள்ளார். நீதிக்கட்சியின் உள்ளடக்கம் என்ன என்று நம்மில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழர் பெருமிதம் என்ற போதைக்கு நம்மை அடிமையாக்கி, இது போன்ற உள்ளடக்கங்கள் பற்றியெல்லாம் சிந்திக்க முடியாமல் செய்துவிட்டனர். ஆனால் திரு. ஏ.சி. சண்முகம் அவர்கள் புதிய நீதிக்கட்சி என்ற ஒன்றை தோற்றுவித்து இவர்களின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிவிட்டார். புதிய நீதிக்கட்சியை ஆரம்பிப்பதின் நோக்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அண்ணாவின் ஆட்சியில் இருந்த 15 அமைச்சர்களில் 10 பேர் முதலியாரும் ( அகம்படியார் ) வெள்ளாளரும் இருந்தனர். இன்று இச்சாதிகளுக்கு இவ்வளவு விகிதாச்சாரத்தில் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. மீண்டும் இந்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே திரு. ஏ.சி. சண்முகம் அவர்களின் விருப்பம்.இதில் என்ன தவறுள்ளது.அண்ணாவின் அமைச்சரவையில் தற்செயலாக அகமுடையார்களும், வேளாளர்களும் இடம் பெற்றுவிட்டனர் என நீங்கள் நினைப்பது சரிதான். ஆனால் இவருடைய புலம்பலுக்குப்பின் திராவிட இயக்கங்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால்,மிகப் பெரிய ஆச்சரியங்களை சந்திக்க நேர்கின்றது. தந்தை பெரியாரைப் பிரிந்து தனி இயக்கம் கண்டபின் கழகத்தின் முன்னனித் தலைவர்களாக ஐவரைக் குறிப்பிடுவர். இவர்கள் ஐம்பெரும் தலைவர் என்றும் அழைக்கப்பட்டனர்.அறிஞர். அண்ணா, ஈ.வி.கே. சம்பத், நாவலர்.நெடுஞ்செழியன், மதியழகன், என்.வி. என். நடராஜன், அகியோரே ஐம்பெரும் தலைவராவர். இவர்கள் அனைவருமே அகம்படியார் சாதிகள் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மையாகும். நுணுகி ஆய்ந்தால் திராவிட இயக்கங்களும், சைவர்கள் தலைமையில் அமைந்த அகம்படி, வேளாளர், சாதியாரும் பிரிக்க இயலாதவாறு பின்னிப் பிணைந்து கிடக்கின்றனர் என்ற உண்மை பட்டவர்த்தனமாக தெரிகின்றது.
ராகவ ராஜ்
"திராவிட இயக்கம்" தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்தை எந்த அளவுக்கு, எந்த வகையில் வளர்த்தது ?.....கொஞ்சம் விரிவாகவும் விளக்கமாகவும் யாராவது " திராவிடர்கள் கூறுவார்களா ? காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே- 1965 அல்லது 1966ல்-திரு.சி.சுப்ரமணியன் கல்வியமைச்சராக இருந்த போது பொறியியல் கல்விக்கான பாடநூல்கள் தமிழாக்கம் செய்யப்பட்டு, பொறியியல் கல்வி தமிழ்வழியில் பயிற்றுவிக்கப்பட செய்யப்பட்ட ஏற்பாடு 1967க்குப் பிறகு சி.என்.அண்ணாதுரை,மு.கருணாநிதி காலத்தில் என்னவாயிற்று ?....ஏன்?...எப்படி?... இவை பற்றிய எல்லா உண்மைகளும் அனைவருக்கும் தெரியவரும்போது "திராவிட இயக்கம்" பற்றி உருவாக்கப்பட்ட பிரமைகள் மறைந்து "திராவிட இயக்க"த்தின் உண்மை முகம் வெளிப்படும்.அது தமிழ்ச்சமூகம் அரசியல்,சமூக வளர்ச்சி பெற அவசியம் தேவைப்படுகிறது !
sudalaimanian
பாட்டாளி மக்கள் கட்சி என்று கூறிக்கொண்டு வன்னியருக்கும் புதிய தமிழகம் என்று மள்ளராகிய பள்ளருக்கும் இயக்கம் கண்டுள்ளது போல் இவர்களுக்கு முன்னோடியாக நீதிக் கட்சி என்ற பெயரில் சைவர் தலைமையில் வேளாள சாதிகள் கண்ட இயக்கம்தான் திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனரிடம் போட்டிப் போடும் தகுதியில் இருந்த சாதியாரால் தோற்றுவிக்கப் பட்டதே நீதிக் கட்சியாகும். சோழர் காலத்திலிருந்தே பார்ப்பனரின் நேரடிப் போட்டியாளராக அகம்படி சாதியார் உள்ளிட்ட வேளாளர் சாதியார் இருந்தனர். சோழர் காலத்தில் பார்ப்பனருக்கு அடுத்த நிலையிலிருந்த வேளாளர் நாயக்கர் காலத்தில் அரசு பதவிகளில் முதல் இடத்தைப் பிடித்து விட்டனர். தளவாய்களாகவும், அமைச்சர்களாகவும் பெரும்பாலும் வேளாளரே நியமிக்கப் பட்டனர். ஆங்கிலேயர் ஆட்சியில் பார்ப்பனர் மீண்டும் அதிகளவில் அரசு பதவிகளைப் பிடிக்கத் தொடங்கினர். இது வேளாளருக்கும் பார்ப்பனருக்குமிடையில் ஒரு போட்டியைத் தோற்றுவித்து விட்டது. பார்ப்பனரில் பலர் தாங்களும் ஆங்கிலேயரைப் போல் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றுக் காட்டிக் கொண்டு ஆங்கிலேயரிடம் நெருங்க முற்பட்டனர். இப்போக்கு பார்ப்பனரை தமிழரிலிருந்து தனிமைப் படுத்த வேளாளருக்கு உதவிகரமாக அமைந்தது. ஆஙிலேயர் ஆட்சிக்காலத்தில் பார்ப்பனர் தாங்களும் வெள்ளயினம் என்பது போல் நடந்து கொண்ட விதம் நகரத்தார் போன்ற பிற மேல் சாதியாரையும் வேளாளருடன் அணி சேர வைத்துவிட்டது. பார்ப்பனரின் ஆரிய இன பெருமிதத்திற்கு எதிராக வேளாளர் தமிழர் பெருமிதத்தை முடிந்த அளவு புணையத் தொடங்கினர். இது பிற தமிழ் சாதியாருக்கும் போதையாகிவிட்டதால் வேளாளர் தலைமையை கேள்வியின்றி ஏற்றுக் கொண்டனர். இன்று இப்போதை தெளிந்து தாங்கள் ஒரு சிறு கூட்டத்தாரிடம் அரசியல் அதிகாரத்தை இழந்து நிற்பதை உணர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி என்றும், புதிய தமிழகம் என்றும், விடுதலைச் சிறுத்தைகள் என்றும் சாதிக்கொரு இயக்கம் கண்டு அரசியல் அதிகாரத்தில் சரியான விகிதாச்சார பங்கைப் பெற முயற்சி செய்கின்றனர். எனவே சு.ப.வீ அவர்களே தமிழன், திராவிடன் என்பதெல்லாம் மக்களை ஒரு போதையில் ஆழ்த்துவதற்குத்தான் என்பதை நாங்களும் புரிந்து கொண்டோம். அதனால்தான் உங்களைவிட வேகமாக பாட்டாளி மக்கள் கட்சியினரும், விடுதலைச் சிறுத்தைகளும், புதிய தமிழகத்தினரும், பெரியாரையும், அம்பேத்காரையும், மட்டுமல்லாமல் காரல் மார்க்ஸையும் முன்னிருத்தி தமிழர் பெருமிதத்தை புரட்சிகரமாக பேசுகின்றனர்.
ராகவ ராஜ்
ஐயா சுடலைமணியன் அவர்கள் சுமார் 1000 ஆண்டுக்கால வரலாற்றை சுருக்கமாகக் குறிப்பிடுகிறார். இவ்வாறு சுருக்கமாக இருப்பதனால் பலராலும் புரிந்துகொள்ள முடியாமல் போய்விடும் வாய்ப்பு உண்டு.அதனால் இந்த விஷயத்தை விளக்கமாக,விரிவாக எழுதவேண்டிய தேவை இருக்கிறது.இப்போதைய சமூக,அரசியல் நிகழ்வுகள் பார்ப்பன அரசியலை வீழ்த்திவிட்டு வந்த (சைவ)வெள்ளாள-அகம்படிய அரசியலும் வீழ்ந்து கொண்டிருப்பதைத் தான் காட்டுகிறது ! பார்ப்பனக் கும்பலாலும் வேளாளர் கும்பலாலும் வஞ்சிக்கப்பட்ட,வீழ்த்தப்பட்ட சாதிசமூகங்கள் எழுச்சிபெற்று வருவதாகத் தோன்றுகிறது.இந்த எழுச்சி வெற்றிபெறட்டும்; சமூகநீதி வெல்லட்டும் !

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.