20.03.2011 ஆச்சி வந்தாச்சு இதழில்... பழ.கருப்பையா

நகரத்தாருக்குரிய அடையாளங்கள் எனச் சிலவற்றை ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். அவை: நேர்மை, ஆழமான பக்தி, சிக்கனம், அறக்கொடை, திட்டமிடுதல் ஆகும். இந்த அடையாளங்கள் இன்றளவும் தொடர்கின்றன. இவை என்றும் தொடர வேண்டுமென்றால், நாம் கலப்புத் திருமணத்தை முற்றிலுமாக எதிர்க்க வேண்டும். சமூகத்தை மீறிக் கலப்புத் திருமணம் செய்து கொள்வோரை நம் சமூகத்திலிருந்து தள்ளி வைத்துவிட வேண்டும்.

ஓவியா - தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ்...

மேற்கூறப்பட்டுள்ள வார்த்தைகள் ஏதோ இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஏடுகளில் இடம்பெற்றவை அல்ல. இந்த வார்த்தைகள் நமது சமகாலத்தின் மூச்சுக் காற்றின் வெப்பத்தைச் சுமந்து கொண்டிருக்கின்றன. இந்த வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும் ஏடு மனு தர்ம சாஸ்திரம் அன்று. நமது தமிழ்ச் சமூகமாகிய நகரத்தார் நடத்தும் ‘ ஆச்சி வந்தாச்சு ’ இதழில்தான் இந்த உரை இடம் பெற்றிருக்கிறது. இதனைப் பேசியிருப்பவர் யார் தெரியுமா? காஞ்சி சங்கராச்சாரியார் கிடையாது. மாறாக இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுச், சட்டமன்றத்திற்கு அனுப்பப்பட்டிருக்கும் திரு பழ.கருப்பையா அவர்கள்தான் இவ்வாறு திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

இதற்குப் பதில் எழுத வேண்டும் என்று நினைக்கையில் வேதனையாகவும், அருவறுப்பாகவும் இருக்கிறது. ஒரு பதினைந்து ஆண்டுகள் இருக்கும் என நினைக்கிறேன். பேருந்தில் என் பக்கத்து இருக்கையில், இங்கிலாந்துப் பெண்மணி ஒருவர் பயணித்தார். அவருடன் உரையாடுகையில் நம் சாதி அமைப்பின் இயக்கம் குறித்துப் புரிந்து கொள்ளவே அவர் மிகுந்த சிரமப்பட்டார். வயது வந்த ஓர் ஆணும் பெண்ணும் யாருடன் இணைய வேண்டும் என்பதை அவர்தம் பெற்றோர் எப்படித் தீர்மானிக்க முடியும்? அதிலும் குறிப்பிட்ட நபர்களுக்குள் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்பதை எப்படி உங்கள் இளைஞர்கள் இன்னும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் சொல்ல நான் வெட்கிப் போனேன்.

நம் பழ.கருப்பையாவிடம் நாம் என்ன சொல்ல முடியும்? மீண்டும் அனைவர் இரத்தத்தின் நிறமும் சிவப்பு...ஆம்புலன்சில் வைத்து எடுத்துச் செல்லும் போது, பிறரின் இரத்தம் கேட்டு தவிக்கும் போது கேட்பதில்லை யாரும் சாதி.... என்றெல்லாம் சொல்லித் தொடங்குவதா? இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே என்ற புரட்சிக் கவிஞரின் கவிதையை எடுத்து அவரிடம் தருவதா...? இந்த நிலையில் ஒருவர் இருக்கிறார் என்பதை உணர்வது கூட நமக்கு அவமானமாக இருக்கிறது. ஆனால் அப்படி இருப்பது அவருக்கு அவமானமாக இல்லை.

ஒரு சமூகம் சார்பாக நடத்தப்படுகின்ற மாநாட்டில் அந்தச் சமூகத்தாரை உயர்வு படுத்திக் கூறுவதில் நமக்கு எந்த மாற்று நிலைப்பாடும் இல்லை. ஆனால் கலப்புத் திருமணத்தை தடை செய்யுங்கள், அவ்வாறு மீறி கலப்புத் திருமணம் செய்வோரை சமூகத்தை விட்டுத் தள்ளி வையுங்கள் என்று கூறுகிற எல்லைக்கு ஒருவர் போவதை எந்தக் காரணம் கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

இந்தத் தமிழ்ச் சமுதாயத்தை சாதி இருளிலிருந்து மீட்ட வரலாறு சுயமரியாதை இயக்கத்திற்குச் சொந்தம் என்றால், அந்தச் சுயமரியாதை இயக்கத்திற்கு முதுகெலும்பைத் தந்த வரலாறு சுயமரியாதைத் திருமணங்களின் வரலாறு. சட்ட அங்கீகாரத்தைப் பற்றியயல்லாம் எந்தக் கவலையுமின்றி சமூகப் புரட்சி மலர்களாய் மலர்ந்த சுயமரியாதைத் திருமணங்களுக்கு, தான் ஆட்சிக் கட்டிலேறியதும் முதல் ஆணையாய்ச் சட்டம் ஆக்கினார் அறிஞர் அண்ணா. இன்று அவர் பெயரால் ஒரு கட்சி. அந்தக் கட்சியில் இப்படி ஒருவர். நூறு ஆண்டுகளுக்கு முன்பு சாதிகளின் தோற்றம், வரலாறு, அவை ஏன் ஒழிய வேண்டும் என்பது குறித்தெல்லாம் மக்களிடம் விவாதித்து எடுத்துரைக்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால் இன்று கிட்டத்தட்ட அய்ந்தாறு தலைமுறைகள் விடுதலைக் காற்றைச் சுவாசித்த பிறகு, பத்து வயது குழந்தைகூட, ஏன் நம் நாட்டில் மட்டும் சாதி இருக்கிறது என்று நம்மைப் பார்த்துக் கேட்கும் வளர்ச்சியை நாம் பெற்றுத்தான் இருக்கிறோம்.

இனிமேற் கொண்டு பழ.கருப்பையாவிற்கு பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் புத்தகங்களை எல்லாம் வைத்துக் கொண்டு வகுப்பு எடுத்தாலும் அவருக்குப் புரிய வைக்க முடியும் என்ற நம்பிக்கை நமக்கில்லை. சொல்லாமல் புரிய வேண்டியதைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. ஏன் என்றால் இவர்களுக்கு ஓட்டு கேட்கும் போது மட்டும் நகரத்தார் ஒட்டு மட்டும் போதும் என்று சொல்லத் தோணலியே! ... அப்ப மட்டும் ஒன்றுபட்ட தமிழ்ச் சமூகம் இவர்களுக்குத் தேவைப்படுகிறது. என்ன செய்வது? இவருடைய ‘துக்ளக் சோ இராமசாமி’ சட்டம் எழுதியிருந்தால், வர்ணாசிரம தர்மப்படி வேறுபடுத்தித் தரப்படுத்தப் பட்ட ஓட்டுரிமை கொடுத்திருக்கலாம். உதாரணமாக ஒரு பார்ப்பனர் ஓட்டு, ஒரு இலட்சம் பறையர் ஓட்டுக்கும், பத்து இலட்சம் அருந்ததியர் ஓட்டுக்கும் சமம். காந்தியாருக்கும், நேருவுக்கும் அந்த நேரத்தில் அம்பேத்கர் பெயர் நினைவில் வந்துவிட்டது. அவரும் எல்லோருக்கும் ஓட்டுரிமை கொடுத்துவிட்டார். நேர்மையான ஆழ்ந்த இறைபக்தி கொண்ட சமூகத்தவருக்கும், அழுக்கான நேர்மையற்ற பிற சமூகத்தவருக்கும் ஒரே சமமான ஓட்டுரிமை. தப்புதான். ஆனால் ஆழ்ந்த தர்க்கவியல் நேர்மை இருந்தால் இந்தப் பிற மக்களின் ஓட்டுகளை நீங்கள் கேட்கலாமா?

எனவேதான் நண்பர்களே, இவர்களுக்குப் புரிய வைப்பது என்ற வெட்டி வேலை நமக்குத் தேவையில்லை. சாதி ஒழிப்புப்போராட்டங்களில் வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற்றும் இடம் பெறாமலும் இன்னுயிர் நீத்த நமது தோழர்களை நினைவு கூர்ந்து, அவர்கள் போராடிப் பெற்றிட்ட, அம்பேத்கர் ஊனுறக்கம் இழந்து படைத்திட்ட சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

அரசியல் சட்டத்தின் பிரிவு 17, எந்த வடிவத்திலும் தீண்டாமை கடைப்பிடிக் கப்படுவது தடைசெய்யப்படுகிறது. தீண்டாமையைக் கடைப்பிடிப்பதன் மூலமாக எந்தவொரு தடையையும் ஏற்படுத்துவது சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். (Untouchability is abolished and its practice in any form is forbidden. The enforcement of any disability arising out of Untouchability shall be an offence punishable in accordance with law) என்று கூறுகிறது.

மேலும் பி.சி.ஆர். சட்டத்தின் 7வது பிரிவு இப்படிச் சொல்கிறது, அரசியல் சட்டத்தின் 17வது பிரிவாகிய தீண்டாமை ஒழிப்பின் மூலமாக ஒருவர் பெற்றிருக் கும் உரிமைகளைத் தடை செய்வது தண்டனைக் குரிய குற்றமாகும்.

இந்த இரண்டு சட்டப் பிரிவுகளையும் ஆழ்ந்து நோக்குகையில், நமது நாட்டில் சாதி அமைப்பால் தடை செய்யப்பட்டிருந்த காதல் உரிமை அல்லது சாதி கடந்து மணம் செய்து கொள்ளும் உரிமை அரசியல் சட்டத்தின் 17ஆவது பிரிவால் மீட்டெடுக்கப்பட் டிருப்பது புரியும். அது உண்மையயனில், திருமிகு பழ.கருப்பையா தன் மேற்காணும் கூற்றினால் இரண்டு தவறுகளுக்கு உரியவராகிறார்.

ஒன்று, தீண்டாமை ஒழிப்புச் சட்டம் வழங்கிய மண உரிமையை இவர் மறுத்ததன் மூலம் தீண்டாமையைக் கடைப்பிடித்த குற்றம். இரண்டாவது, கட்டப்பஞ்சாயத்துகள் தடைசெய்யப்பட்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், அவ்வாறு கலப்பு மணம் செய்து கொண்டோரைத் தள்ளி வைத்துவிட வேண்டும் என்று பேசியிருப்பதன் மூலம், மீண்டும் தீண்டாமையைக் கடைப்பிடித்த குற்றம் மற்றும் ஒரு சமூக, சட்ட விரோத கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பை வழங்கிய குற்றம்.

இவரெல்லாம் சட்டமன்றத்திற்கு வேறு போயிருக்கிறார்! நாம் மேலே கூற ஒன்றுமில்லை.

கருப்பையாக்களின் சாதி வெறி
வெ.அமிர்தராஜ், சேலம் மாவட்டச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை

அ.தி.மு.க.வின் இலக்கிய அணிப் பொறுப்பாளராகவும், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள பழ. கருப்பையா, ஒரு குறிப்பிட்ட சாதிச் சங்கத்தின் தலைவரைப் போலப் பேசியிருக்கின்றார். அவருடைய சாதி வெறியைத் தவிர வேறு எதனையும் அவருடைய சொற்கள் வெளிப்படுத்தவில்லை.

இத்தனை சாதி வெறி கொண்ட ஒரு மனிதர், கடந்த தேர்தலில் போட்டியிட்ட போது, எனக்கு என் சாதிக்காரர்கள் வாக்குகள் மட்டுமே போதும். வேறு எந்த சாதிக்காரரும் எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அறிவித்திருந்தால், அவருடைய ‘நேர்மையை ’ நாம் பாராட்டி இருக்கலாம். நாட்டுக்கோட்டை நகரத்தார் வாக்குகள் துறைமுகம் தொகுதியில் எவ்வளவு உள்ளன என்னும் உண்மையை நாமும் தெரிந்துகொண்டிருக்கலாம். எல்லாச் சாதிக்காரனும் எனக்கு வாக்களிக்க வேண்டும், ஆனால் திருமணத்திற்கு மட்டும் வேறு சாதி கூடாது என்று கூறும் கருப்பையாக்களை என்ன செய்யலாம்?

சாதி மறுப்புத் திருமணம் என்பது சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். அது மட்டுமல்லாமல், சாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்கு ஊக்கப்பரிசுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இவ்வாறிருக்க, அதனை இத்தனை கடுமையாக எதிர்க்கும் பழ.கருப்பையா, அண்ணாவின் பெயரால் இயங்கும் ஒரு கட்சியின் உறுப்பினராக இருப்பதற்கும், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கும் எந்த வகையிலும் தகுதியற்றவர்.

இன்னொரு சாதியில் திருமணம் செய்வதன் மூலம், நகரத்தாரினுடைய நேர்மை, சிக்கனம் போன்ற பண்பாடுகள் கெட்டுவிடும் என்கிறார் கருப்பையா. அப்படியானால் மற்ற சமூகத்தினரெல்லாம் நேர்மையற்றவர்கள், ஊதாரிகள் என்று அவர் சொல்வதாகவே பொருள். குறைந்தபட்சம் அ.தி.மு.க.வில் உள்ள பிற சாதியினராவது இக்கூற்றை ஏற்பார்களா என்று தெரியவேண்டும்.

வேறு சாதியில் திருமணம் செய்பவர்களைச் சமூகத்தை விட்டே ஒதுக்கி வைக்க வேண்டும் என்கிறார் அவர். எவ்வளவு மோசமான கட்டப்பஞ்சாயத்துக்காரர் அவர் என்பதை இவ்வரிகள் நமக்குக் காட்டுகின்றன. சக மனிதனை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று சொல்கிற, மனித நேயமற்ற ஒருவரின் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சரியானது. அந்தச் சரியான காரியத்தை முதலமைச்சர் ஜெயலலிதா செய்தால் அவரை நாம் உறுதியாகப் பாராட்டலாம்.

Pin It