தன் ஊசித் தூறல்களால்
இரவைத் துளைத்துக்கொண்டிருக்கும்
மழையைப் பார்த்துக் குரைக்கிறது
அந்தக் கருநாய்

மோதி உடைகிற மின்னல் தாரையின்
வாயிலாக இரவுக்குள் கடும்வாதையாக
ஊடுறுவுகிறது அதன் குரைப்பொலி
 
காதுகளை அடைத்துக்கொண்டு
யாவற்றையும் விட்டு வெளியேறத்
தொடங்கிவிட்டான் சித்தார்த்தன்
 
அவன் கழற்றிவிட்டுப்போன அங்கவஸ்திரத்தில்
வாய்ப்பொத்தி விம்முகிறாள் யசோதரை
 
அவள் விம்மல்கள்தான் ஊசிஊசியாக
இறங்குகின்றன போலும்

விம்மல்கள் விழுகிற இடங்களிலிருந்து
ஒவ்வொரு கருநாய் எழும்பி ஊளையிடுகிறது
 
ஓடத் தொடங்குகிற சித்தார்த்தனின்
பின்னோடுகின்றன ஊளைகள்
 
ஒரு திருப்பத்தின் முகட்டில்
நாயொன்று தன் நாவால்
சித்தார்த்தனின்
ஊழ்வினையைப் பலிகொள்ள
கொட்டத் தொடங்குகிறது மழை

புத்தன் ஜனிக்கத் தொடங்குகிறான்
 
துளிர்விட ஆரம்பித்திருக்கும்
போதிமரத்தின் வேருக்கு
அந்த மழையின் விம்மல்
போதுமானதாக இருக்கிறது

திலீபன் வைத்த கொலு

தன் முதுகில் வெளிமானைச் சுமந்துகொண்டு
புல் மேயவும் தயாரென்பது போல இருக்கிறது புலி
பசுமாட்டின் நிழலில் சிங்கம் இளைப்பாறிக் கொண்டிருந்தது
கரடியும் குரங்கும் முகத்தோடு முகமுரசிக்
விளையாடும் பாவனையில் இருந்தன
காந்தியின் கையில் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு
புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்
வேட்டைக்காரன் ஒருவன்
காட்டெருமை ஒன்று தாயின் கரிசனத்தோடு
ஓநாய்க்குட்டியை நாவால் தடவிக்கொடுக்கிறது
ஆசிரியர் பொம்மைக்குப் பாராமுகமாய் நிற்பது
யூகேஜி போகும் கபிலனாகத்தான் இருக்க வேண்டும்
தவயோகி ஒருவர் நடனமாதரில் லயித்திருக்க
தலையை ஆட்டி ஆட்டிச் சிரிக்கிறது
தலையாட்டிப் பொம்மை

கிடாய் இடறிய கனவு

தரை துளைக்க எத்தனித்துக்கொண்டிருக்கும்
விழுதுகளின் கீழ் ஆழ்தூக்கத்தில் இருக்கிறான்
ஆட்டிடையன் அந்த ஓவியத்தில்
 
தாயின் மார்பகத்தோடு ஒட்டிக்கொண்டு
உறிஞ்சும் குழந்தையைப் போல
தரையோடு கிடக்கும் புற்களை
நக்கிக் கடிக்கின்றன ஆடுகள்
 
உதடுகளில் ஒட்டிக்கொள்கிற மண்ணை
வெறுப்பில் தும்மி உதறுகின்றன சில
 
கொம்புகளை ஆட்டிக்கொண்டு நோக்குகிற
கிடாயின் கண்களிலிருந்து
நழுவியோடுகிறது பருவ பெட்டை ஒன்று
 
துரத்திப்போகிற கிடாயின் புறங்காலொன்று
இடறிவிட்டுப் போகிறது அவன் தலையை

கனவிலிருந்து பதறிப் பிரிந்து பறக்கின்றனர்
அந்த இடையனும் இடைச்சியும் பட்சிகளாகவும்
நேற்றைய சல்லாபத்திலிருந்தும்..

விதைநெல் பிரிக்கையில் நிகழாதிருந்திருக்கலாம்
 
துளிர்ப்பு திகைந்தாயிற்று
வேம்பின் பொன்னிறத் தளிர்களை
ஆராதிக்கத் துவங்கிவிட்டது கோடை
புளிப்பு சுவைகூட்டிய மாங்காயைக்
கடித்துவிட்டு மிளற்றுகிற கிளிக்காக
இதமிதமாய் பெய்யும் புன்செய் வெயில்
ஊருக்குள் புகுந்து மாயமோகினியென
எழுந்து சுழலும் சூரைக்காற்றைத் துரத்தியோடி
களிப்பார்கள் சிறார்கள்
வாதநாராயணன் தன் சக்கரவடிவ பூக்களை
காற்றின் போக்கில் உதிர்த்து விளையாடும்
மகசூலை களஞ்சியத்தில் சேர்த்துவிட்டு
சோம்பித் திரிகிற குடியானவனை மீது
கொட்டிக் குளிர்விக்கும் பெருமழை
சோபிதம் கொண்டொளிரும் அந்தியிலிருந்து
அசைபோட்டபடி மந்தைக்குத் திரும்பும்
பசுவின் முதுகில் கொண்டலாத்தி குகுகுகுக்கும்
நல்லேர் பூட்டி தானியங்களைத் தூவிவிட்டு வந்து
அடுத்த விளைச்சலுக்கு விதைநெல் பிரிக்கும்
நல்சகுணங்கள் நிரம்பிய இக்கோடையில்
நிகழாதிருந்திருக்கலாம் உன் பிரிவு

அலறி ஓடும் மௌனம்

இருபது நிமிடங்கள் நகர்வதற்கு முன்பு
தூக்கிலிட்டுக் கொண்டவளின் பொருட்டு
அறையை அறைந்தறைந்து கலங்குகிறது
அலறும் செல்பேசி

நேற்றைய ஊடலை நேர் செய்வதற்கான
காதலன் முத்தம் தேங்கி நிற்கிற
அந்த செல்பேசிக்குள் சாபமென நுழைகிறது
அவனனுப்பிய அந்தரங்கக் குறுஞ்செய்தி

இனிப்பு பண்டங்களின்மீது ஊறுகிற எறும்புகள்
தற்கொலையின் கசப்பை சுமந்து தள்ளாடுகின்றன

திரும்ப இயலாத அகாலத்துக்குள்
சிக்கிக்கொண்டு திணறுகிறது அந்த அறை

காற்று திறக்க அலறிக்கொண்டு ஓடுகிறது
விக்கித்து நின்ற மௌனம்

Pin It