இரவுமழையைப் புசித்துக்கொண்டு
மெல்ல மெல்ல நதியலையில்
அசைந்தபடி நிற்கிறது
ஒற்றைப்படகு.
மழையின் கதறல் முடிந்தபின்
படகிற்கு இரண்டு கைகள்
வளர்கின்றன.
கைகளால் துடுப்பிட்டு வேகமாய்
மிக வேகமாய்
நதியில் பயணிக்கிறது.
நதியின் நடுவில் நின்று
மிகுந்த நிதானத்துடன்
நதியை உறிஞ்சத்துவங்குகிறது.
நதிக்குள்ளிருந்து வெளியேறும்
இலைகளற்ற மரத்தின் மீது
அமர்ந்திருக்கும்
மீன்கொத்தி சாட்சியாக
வற்றுகிறது நதி.
மழையும், நதியும்
உண்ட மயக்கத்தில் துருக்கள் வளர
மரணிக்கிறது படகு.

குடுவை மீன்

வெற்றிடங்களால் நிரம்பியிருக்கும்
அறையை தன் சிறு கண்களால்
பார்க்கிறது கண்ணாடிக்குடுவை மீன்.
நிசப்த அறைக்குள் நீண்டதொரு
கடற்கரையை காண்கிறது.
அக்கரையில் ஈரம் படர
அதன் வாலசைவில் பேரலையொன்றை
உருவாக்குகிறது.
அலை வழியே கரையடைந்து
யாருமற்ற கரையில்
நீந்தியும் நடந்தும் விளையாடுகிறது
கடலை படைத்த குடுவைமீன்.
கடலிருக்கும் அறைக்கதவு
தட்டப்படும் வரை.

- நிலாரசிகன்

Pin It