அம்முவுக்கு தற்போது எழுபது
வயதாகி விட்டது.
அவள் தன் ஒற்றை நாயுடன்
தனியே வசிக்கிறாள்.
யாருமற்ற அவளது தெருவில்
கொஞ்சமாய் உதிர்ந்துகிடக்கின்றன
முன்பிருந்த மரத்தின் சருகுகள்.
எப்போதும் வாசற்கதவின் திறப்புச்சத்தத்திற்காக
காத்திருக்கிறாள்.
அவளறியா பொழுதுகளில் உள்நுழைகின்ற
சர்ப்பங்கள் அவளது வீட்டை
நகர்த்திக்கொண்டே இருக்கின்றன.
பெருநகரத்தின் வாசல் வரை நகர்ந்துவிட்ட
வீட்டினுள் நீண்ட மௌனத்தில்
உறைந்திருக்கிறாள்.
அடர்ந்த அந்தியொன்றில் தன்னுடல்
சர்ப்பத்தை போன்றிருப்பதை உணர்கிறாள்.
அப்போது அவளது நாய் இறந்துகிடந்தது.
தவழ்ந்து தவழ்ந்து வெளியேறியவள்
நகரத்தில் சந்திக்கும் முதல் மனிதன்
மீது உமிழ்கிறாள்.
அன்றிரவு அம்மு தன் நாயுடன்
தோளில் வீடொன்றை சுமந்து சென்றதை
வியந்து பார்த்தன
பெருநகர சர்ப்பங்கள்.

- நிலாரசிகன்

Comments

1 comment

1
naanjilpeter
வணக்கம் அண்ணன்மீர். இது ஒரு உருவகக் கவிதை. உருவகத்தின் படிமங்களை வைத்துச் சொல்லும் கவிதை, metaphor.
ஒரு மூதாட்டி தன் வீட்டில் வசிக்கிறாள், தன் இளமைக்கால நினைவு(ஒற்றை நாய்)களோடு. அவள் தன் இளமைக்கால நினைவுகளோடு இருக்க, தன்னைச் சுற்றிலும், நவீனம், அரவங்கள் போலப் படர்கிறது. நவீன அரவங்கள் படரப் படர, இளமைக்கால நினைவுகள் பட்டுப் போகிறது.

ஒரு மாலை நேரத்தில் அம்மூதாட்டியானவள் தானும் நவீன அரவம் போல உணர்கிறாள். கூடவே தன்னுள் இருந்த நினைவு நாயும் இறந்து போனது போல உண்ர்கிறாள். விளைவு, எதிர்ப்படும் நவீன மனிதர்கள் மீது வெறுப்பு ஏற்படுகிறது. அன்று இரவே, பெரு நகரத்தைவிட்டு ஊர்ப்புறமாக இடம் பெயர்கிறாள் தன் இளமைக் கால நினைவுகளோடும், ஊர்ப்புறத்தில் ஒரு வீடு தனக்கு இருக்கும் எனும் நம்பிக்கையோடும்.

பணிவுடன்,

பழமைபேசி.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.