பட்டியில் உறங்கும் மறிகள்
திடுக்கிட்டு விழிக்கின்றன
கழி ஏந்தி நிற்கும் - கறுத்த
இடையனின் வலுத்த அழைப்பில்!
வெண்கதிர் எழாத - நிழல் விழத்
துவங்காத குளிர்காலையில்
பின்தொடர்ந்து செல்கிறான் அவன்
ரோமம் அடர்ந்திருக்கும் - தன்
செம்மறிகளின் கூட்டத்தை முன் இட்டு!
பசும் புல்வெளிகளில் மேய்ச்சலிட்டு
தெளிநீர் ஓடைகளின் கரையோரம்
கடந்து செல்கிறான் ஒரு கடிய நாளை!
அவன் உலுக்கி உதிர்த்த
கருவேலங் காய்களை புறக்கணித்து
சாயும் பரிதியை பருகத் துவங்குகின்றன
மறிகள் தம் கரும்பளிங்கு கண்களால்!
கழியில் முகம் தாங்கி கண்ணயரும்
பின்மாலையின் மயங்கிய பொழுதில்
திடீரென விழித்து திடுக்கிடுகிறான் இடையன்
தன் நிழல் - ஒரு மறியின்
உருவாய் மாற்றம் கொள்வது கண்டு!

- சம்யுக்தா

Pin It