அரசுப் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளைப் பொறுப்புள்ள பெற்றோர் சேர்க்கத் தயங்குவதற்கு ஒரு முக்கியக் காரணம் அங்கு ஆங்கிலம் ஒரு மொழி என்ற ரீதியில் முறையாகக் கற்பிக்கப்படுவதில்லை என்பதே. இன்றைய உலகமயப் பின்னணியில் ஆங்கில அறிவு வேலைச் சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது. அதனைப் பூர்த்தி செய்ய முடியாதவர்களாக அப்பள்ளி மாணவர்கள் இருப்பதால் அவர்கள் மேல் படிப்பிலும், வேலை வாய்ப்பிலும் பின்தங்கியவர்களாக ஆகிவிடுகின்றனர்.நமது ஆசிரியர் சமூகம் பொறுப்புள்ளதாக இருந்தால் மாணவரின் இந்தப் போதாமையைக் கருத்திற் கொண்டு அவர்களது ஆங்கில அறிவை மேம்படுத்தக் கூடுதல் சிரத்தை எடுத்துக் கற்பிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஆனால் இங்கோ ஆசிரியர் எனும் குதிரைகள் கீழே தள்ளுவது மட்டுமல்ல: அவை குழியும் பறிக்கின்றன.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது மக்கள் மற்றும் கல்வியின் பால் அக்கறை கொண்ட பலரது முன் முயற்சியினால் ஆங்கில வழியில் கற்பிக்கும் பிரிவொன்று 6‡வது வகுப்பில் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆன நிலையில் இன்று முதன்முதலில் ஆங்கில வழியல் சேர்ந்த மாணவர்கள் +2 வகுப்புவரை வந்துவிட்டனர். எனவே +2 வகுப்பிலும் ஆங்கிலப் பிரிவு ஒன்றைத் தொடங்க வேண்டிய கட்டாயம் பள்ளிக்கு ஏற்பட்டது.

ஆனால் +1, +2 கற்பிக்கும் ஆசிரியர்களுக்கோ இது வீண் சிரமமாகப் பட்டது. +2 -வில் ஆங்கிலப் பிரிவு வரவிடாமல் தடுக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையயல்லாம் சி.இ.ஓ. அலுவலகத்தை அணுகிச் செய்தனர். இப்பிரச்னையை தெரிந்து கொண்ட இடதுசாரி மனநிலையுள்ளஅப்பகுதி இளைஞர்கள் அப்பகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியரான தோழர்.பகத்சிங்கிடம் இதைத் தெரிவித்தனர். அவர் முயற்சி எடுத்து இப்பிரச்னையை மாவட்ட ஆட்சியர் மதிப்பிற்குரிய சகாயம் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். மாவட்ட ஆட்சியரின் தலையீட்டினால் அப்பள்ளியில் தற்போது +2 வகுப்பிலும் ஆங்கில வழியில் கற்பிக்கும் பிரிவு செயல்படத் தொடங்கியுள்ளது.

கல்விக்கு முட்டுக் கட்டையாக ஒரு காலத்தில் நிலவுடைமைக் கலாச்சாரத்தில் ஊறிப்போன ஜாதிய வாதிகள் இருந்தனர். ஆனால் ஒருநாள் ஆசிரியர்கள் இவ்வாறு முட்டுக் கட்டையாக ஆகிவிடுவார்கள் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை. ஆனால் வருந்தத்தகுந்த விதத்தில் ஆசிரியர்களும் முட்டுக்கட்டை ஆக முடியும் என்பது இந்த நிகழ்வால் வெளிப்பட்டுள்ளது.

Pin It