நாகர் கோவில் வருவாய்த் துறை ஊழியர் சங்கக் கட்டிடத்தில் கம்யூனிஸ்ட் ஒற்றுமையை வலியுறுத்தும் கூட்டம் ஒன்று 19.03.2011 அன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது. கூட்டத்தில் சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்)., சி.எம்.பி., சி.டபிள்யு.பி., எஸ்.யு.சி.ஐ., சி.பி.ஐ(எம்.எல்.கே.என்.ஆர்). போன்ற பல கம்யூனிஸ்ட் கட்சிகளின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதுதவிர அனிலி, இலைகள் இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகளிலிருந்தும் தோழர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் முக்கியமான தோழர்கள் பிரசாத், தங்கநாடார், சுலிஸ், மகிழ்ச்சி, ராபின்சன், ஜெபமணி, சுதன், அசன் ஆகியோராவர். தோழர் போஸ் அவர்களின் ஏற்பாட்டில் பல நாள் தயாரிப்புகளுக்குப் பின் ஏற்பாடு செய்யப்பட்ட அக்கூட்டம் அதன் முதல் நடவடிக்கையாக கம்யூனிஸ்ட் அறிக்கை குறித்த விவாதத்தை நடத்தத் தீர்மானித்தது. அந்தச் சிறப்புமிகு பொறுப்பைத் தமிழக முற்போக்கு வாசகர் வட்டாரத்தில் நன்கு அறிமுகமானவரும் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற முற்போக்கு எழுத்தாளருமான தோழர் பொன்னீலனிடம் ஒப்படைத்தது.

 

கம்யூனிஸ்ட் அறிக்கையின் முதல் பகுதி மீதான விவாதத்தைத் தோழர் பொன்னீலன் அனைவருக்கும் புரியும் விதத்தில் எளிமையாக முன்வைத்தார். இதுவரை எழுதப்பட்ட மனித குலத்தின் வரலாறு வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்பதில் தொடங்கி எவ்வாறு முதலாளித்துவ உற்பத்திமுறை உலகளாவிய உற்பத்தி முறையாகத் தேசிய வரையரைகளை உடைத்தெறிந்து வளர்ந்தது என்பதையும் இனிமேல் வாழவும், வளரவும் போகின்ற ஒரே உற்பத்தி முறை அதுதான் என்பதை நிறுவியது என்பதையும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் காணப்படும் மேற்கோள்களுடன் அவர் விளக்கினார். அன்றுதொட்டுச் சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகள் யாவும் வர்க்க முரண்பாட்டின் பிரதிபலிப்புகளாகவே பார்க்கப்பட வேண்டியவையாக எவ்வாறு ஆயிற்று என்பதையும் அவர் விளக்கினார்.

 

சைவ, சமண மதங்களுக்கு இடையேயான போராட்டங்களும் அந்த வெளிச்சத்திலேயே பார்க்கப்பட வேண்டியவை என்பதையும் ராஜ ராஜ சோழன் எவ்வாறு ஆலயங்கள் கட்டி ஆலயங்களில் இருக்கும் கடவுளர்களுக்கு நாட்டின் நிலங்கள் அனைத்தும் சொந்தம் ஆனால் அந்தக் கடவுளே தனக்குச் சொந்தம் என்று கூறி நிலங்களின் மீதான தனது மேலாதிக்காத்தை நிறுவி விவசாயிகளின் நில உரிமையைப் பறித்தான் என்பதையும் அதனை எதிர்த்து சமணர்கள் எவ்வாறு விவசாயிகளை அவனுக்கு எதிராக அணிதிரட்டினர் என்பதையும் எடுத்துரைத்தார்.

கலை, இசை, நாட்டியம் ஆகியவற்றையே தங்களது முழுநேரப் பணியாகக் கொண்டிருந்த தேவ அடியார்கள் பின்னர் எவ்வாறு தேவடியாள் என்ற விலை மாதுகளின் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பதையும் எடுத்துரைத்தார். முதலாளித்துவ வளர்ச்சியின் காரணமாக எவ்வாறு பழைய சமூகத்தின் உறவு முறைகளும் நெறிகளும் தகர்தெறியப்பட்டன என்பதை கம்யூனிஸ்ட் அறிக்கையின் மேற்கோள்களுடன் அவர் விளக்கினார்.

 

அவரது உரைக்குப் பின்பு தோழர்கள் ஜெபமணி, மகிழ்ச்சி, பிரான்சிஸ், சுதன், முருகன், தங்கநாடார் போன்றவர்கள் தங்களது கருத்துக்களையும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மென்மேலும் தொடரவேண்டும் என்ற ஆவலினையும் வெளிப்படுத்தினர். சுதன் மார்க்சிய இலக்கியங்களைப் படிப்பது அவற்றை விவாதிப்பது என்ற முன்பிருந்த போக்கு தற்போது இளைய தலைமுறையினரிடம் இல்லாமல் போயிருக்கிறது. அந்தத் தலைமுறை இடைவெளியை அகற்ற பொன்னீலன் போன்றவர்கள் முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

விஞ்ஞானங்களின் விஞ்ஞானம்

 

அக்கூட்டத்தில் விருந்தினராகக் கலந்து கொண்ட கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ்  பிளாட்பார்ம்ன் அகில இந்தியத் தலைவர்களில் ஒருவரான தோழர் ஆனந்தன் அந்நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்கினார்.

 

அவர் தனது உரையில் கம்யூனிஸ்ட் அறிக்கை கடந்த 2000 ஆண்டுகளின் மனிதகுல வரலாற்றின் ஒரு சாதனையாக வெளிவந்த நூல். 20வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் 2000 ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த நூல்களாகக் கருதப்பட்ட டார்வினின் பரிணாமக் கொள்கையை விளக்கும்  The Origin of species மற்றும் பிராய்டின் சைக்கோ அனாலிசிஸ் ஆகிய நூல்களுடன் சேர்த்து வைத்துப் பார்க்கப்பட்டதொரு நூல் அது என்பதையும் ஒரு வகையில் பார்த்தால் கம்யூனிஸ்ட் அறிக்கை தவிர மற்ற இரண்டு நூல்களும் உயிரியல் மற்றும் உளவியல் போன்ற தனிப்பட்ட விஞ்ஞானங்கள் குறித்தவையாக இருந்த வேளையில் கம்யூனிஸ்ட் அறிக்கை மட்டுமே அனைத்து விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாக சமூகத்தின் கருத்துக்கள் சிந்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையையே மாற்ற வல்லதாக இருந்த நூல் என்பதையும் அந்த வகையில் அது மற்ற இரண்டு நூல்களைக் காட்டிலும் கூடச் சிறந்ததாகக் கருதப்பட வேண்டியதாகும் என்பதையும் எடுத்துரைத்தார்.

 

மாதிரி அமைப்புச் சட்டம்

 

கம்யூனிஸ்ட் அறிக்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மாதிரி அமைப்புச் சட்டம் என்பதையும் இன்றுவரை அதனை விஞ்சிய அமைப்புச் சட்டம் எதுவும் உருவாகாததால் அதுவே அத்தகைய மாதிரியாக இன்றளவும் நீடித்துக் கொண்டுள்ளது என்பதையும் எடுத்துரைத்தார். கம்யூனிஸ்ட் அறிக்கையை முழுமையாகப் புரிந்து படித்தால் அது இயக்கவியல் பொருள் முதல் வாதத்தையும் வரலாற்றியல் பொருள் முதல் வாதத்தையும் ஒருசேரப் படித்ததற்கு சமம் என்று அவர் தனது உரையில் கூறினார்.

 

தள்ளிப் போடலாம் தவிர்க்க முடியாது

 

கம்யூனிஸ்ட் அறிக்கையில் உயர்த்திப் பிடிக்க வேண்டிய அம்சங்கள் சமூக மாற்றம் வரலாற்றின் தவிர்க்க முடியாத விதி என்பதும், நமது சமூகத்தில் நிகழும் அனைத்துப் போராட்டங்களும் வர்க்க அடிப்படையைக் கொண்டவையே என்பதுமாகும். முதலாளித்துவம் ஒழுங்கற்ற உற்பத்தி முறையைக் கொண்டது அதனால் மக்கள் வாங்கும் சக்தியைத் தாண்டியும் அதன் உற்பத்தி செல்லக் கூடியது. அதன் விளைவாக ஆலை மூடல்கள் போன்றவை தோன்ற வழிவகுத்து சமூகத்தில் உழைப்பாளர் எழுச்சியை ஏற்படுத்த வல்லது. அந்நெருக்கடிகளின் தாக்கத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் உழைக்கும் வர்க்கம் நெருக்கடியின் அடிப்படையையும் தன்மையையும் ஆழமாக உணரும் வாய்ப்பினைக் கொண்டிருக்கிறது. பிரச்னைகளுக்கானத் தீர்வு அந்த அமைப்பையே அகற்றி சமூக உற்பத்தியை லாப நோக்கத்திலிருந்து விடுவித்து மக்களின் தேவையை அடிப்படையாகக் கொண்டதாக ஆக்குவதிலேயே உள்ளது என்ற அரசியல் கருத்தைத் தொழிலாளி வர்க்கம் உணரும் நிலைக்கு உந்தப்படும் நிலையும் தவிர்க்க முடியாமல் தோன்றும் வாய்ப்பினைக் கொண்டது. அதன் விளைவாக சமூக மாற்றம் என்பது நடந்தே தீரும். சமூக மாற்றத்தைச் சிறிதளவு ஒத்திப் போடவோ சிலகாலம் தள்ளி வைக்கவோ முடியுமே தவிர அதனைத் தவிர்க்க முடியாது.

 

அல்தூசர் போன்ற சிந்தனையாளர்கள் சமூக மாற்றம் வரலாற்றின் தவிர்க்க முடியாத விதி என்பதை முதலாளி வர்க்கம் அதனை மென்மேலும் தள்ளிப்போடும் வகையில் கடைப்பிடிக்கும் பல்வேறு நடவடிக்கைகளைக் கொண்டு மறுதலித்தாலும் வரலாற்று ரீதியில் கணிக்கப்படும் காலம் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் பார்த்தால் சமூக மாற்றம் வரலாற்றின் தவிர்க்க முடியாத விதியே என்பது அசலும் நகலும் நிரூபணமான ஒன்றே. முதலாளித்துவம் முடிவேதுமில்லாமல் அதன் கோல் போஸ்ட்டை இடைவிடாது நகர்த்திச் சென்று கொண்டே இருக்க முடியாது.

 

ஜாதியப் போராட்டங்களில் வர்க்க அடிப்படை

 

பின் நவீனத்துவம் என்ற பெயரில் அடிப்படை முரண்பாடு என்ற ஒன்றே இல்லை என்று கூறுவது அபத்தமானதும் எதிர்ப்புரட்சித் தன்மை வாய்ந்ததுமாகும். அது ஜாதி-மதப் போராட்டங்கள் போன்றவை அதனதன் வழிகளில் தனித்தன்மை வாய்ந்தவை. எனவே அவை வேறெந்த அடிப்படையான முரண்பாட்டோடும் பொருத்திப் பார்க்க முடிந்தவை அல்ல என்ற கருத்தை முன் வைக்கிறது. கம்யூனிஸ்ட் அறிக்கையின் வெளிச்சத்தில் ஜாதியம் சார்ந்த போராட்டங்களுக்குள்ளும் வர்க்க அடிப்படை இருப்பதைப் பார்க்க முடியும். அதாவது பின் நவீனத்துவம் முன்வைக்கும் கருத்திற்கு மாறாக முரண்பாடுகள் அனைத்திற்கும் அடிப்படையானதொரு மையமான முரண்பாடு இருப்பதை இவ்வாறு பார்ப்பதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு கம்யூனிஸ்டுகளாகிய நாம் ஒவ்வொன்றையும் பார்க்க முயல வேண்டும்.

 

இன்று இன்னும் பொருத்தமுடையதாக...

 

முதலாளித்துவம் தனது வாழ்நாளை நீட்டிப்பதற்காக தொழிலாளி வர்க்க இயக்கங்களுக்கு அடிபணிந்து வழங்கிய பல சலுகைகளையும் தற்போது திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது. வேலைக்கு நியமி, அயரும் வரை சுரண்டு, சோர்வுற்ற நிலையில் வேலையை விட்டுத் தூக்கியெறி என்ற கொடூரமான நிலையினை உழைக்கும் வர்க்கத்தின் மேல் முதலாளி வர்க்கம் தற்போதைய உலகமயச் சூழ்நிலையில் திணித்துள்ளது. அந்த நிலை கம்யூனிஸ்ட் அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொரு கருத்தையும் மிகச் சரியானதென நிரூபித்து இடைக் காலத்தில் இருந்ததை விட இன்று கம்யூனிஸ்ட் அறிக்கையை இன்னும் பொருத்தமுடையதாக ஆக்கியுள்ளது என்ற கருத்தை முன்வைத்தார். இறுதியாக இந்தப் பொறுப்புமிக்க அமைப்பு மார்க்சிய இலக்கியங்களைப் படிப்பதோடு நின்று விடாமல் தனது சக்திக்கு உகந்த வகைகளில் மக்கள் இயக்கங்களையும் கையிலெடுக்க வேண்டும். ஏனெனில் மார்க்சியக் கருத்துக்கள் நடைமுறையிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாதவை என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

அனைத்துக் கம்யூனிஸ்ட் கட்சிகளிலுமிருக்கும் கம்யூனிஸ்ட்களின் சித்தாந்த ரீதியான ஒற்றுமையின் தேவையை வலியுறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இக்கூட்டம் ஒரு புதுப் போக்கை நிலை நாட்டுவதாக அமைந்தது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த அணுகுமுறை பின்பற்றப் பட்டால் அது ஒரு இயக்க அடிப்படையிலான ஆக்கபூர்வ இடதுசாரி மாற்றை முன் வைக்கவல்லதாக நிச்சயம் அமையும். இந்நிலையில் இவ்வமைப்பின் அடுத்த கூட்டம் கம்யூனிஸ்ட் அறிக்கையின் இரண்டாவது பகுதியை விவாதிப்பதற்காக 24.04.2011 சனிக் கிழமையன்று தக்கலையில் கூடும் என்று முடிவு செய்யப் பட்டுள்ளது.

 

Comments

30 comments

30
இராமியா
கம்யூனிஸ்ட் அறிக்கையின் வெளிச்சத்தில் ஜாதியம் சார்ந்த போராட்டங்களுக்குள்ளும் வர்க்க அடிப்படை இருப்பதைப் பார்க்க முடியும் என்ற ஆசிரியரின் கருத்து உண்மை தான். ஆனால் முழுமை அல்ல. ஜாதியப் பிரச்சினையைப் பற்றிப் பேசும் பொழுது அதனால் உச்ச பட்ச ஆதாயம் அடைபவர்கள் பார்ப்பனர்கள் தான் என்பதைப் பார்க்க வேண்டும். அதை விடுத்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடையிலான முரண்பாடுகளைக் கூர்மையாக்க முயல்வது ஜாதியத்தின் ஆணி வேருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்ற ஆழ்ந்த முன்னெச்சரிக்கையாகத் தான் இருக்க முடியும். பார்ப்பனர்கள் அதிகாரம் உள்ள, ஊதியம் மிகுந்த, உடலுழைப்பு தேவைப்படாத தொழில்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். அவர்களுள் திறமை இல்லாதவர்களையும் அவ்வட்டத்திற்குளளேயே வைத்து ஆதரித்து வருகின்றனர். இது திறமையுள்ள மக்கள் வாய்ப்பு பெற முடியாத படி செய்கிறது. பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த தொழில்களிலிருந்து தப்பி விடும் விசைக்கு எதிராக, செய்ய வேண்டியவற்றை செய்து முடிக்காத வரையில் ஜாதியக் கொடுமைகளின் ஆணி வேரும் பக்க வேர்களும் சல்லி வேர்களும் சற்றும் பாதிக்கபடப் போவதில்லை. பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த தொழில்களிலிருந்து தப்பிவிட முடியாத படியான செயற் திட்டங்களை ஏற்காத வரையில் ஜாதியப் பிரச்சினைகளை அணுகுவதாகவோ தீர்ப்பதாகவோ நினைப்பதும் கூறுவதும் கொடூரமான கேலியும் அயோக்கியத்தனமுமாகும். அது சரி! பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த தொழில்களிலிருந்து தப்பிவிடக் கூடாது ன்பதை ஏற்க மறுக்கும் பிடிவாதம் ஏன்?
rakesh
தோழரே , நீங்கள் ஏன் ஒரே வட்டத்திற்குள் சுத்தி சுத்தி வருகிறீர்கள் என்பது தான் தெரியவில்லை.நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் ,ஏற்றுக்கொள்ளாவிடாலும் ஒரு உண்மையை நீங்கள் உணர வேண்டும் இந்தியாவே இரண்டு வர்க்கங்களாக பிளவு பட்டுக்கிடக்கிறது. முதாலாளி வர்க்கம் சாதியம் வலுவாக இருப்பது போன்ற மாய தோற்றத்தை உண்டு பண்ணியுள்ளது. அதாவது அப்பட்டமாக பாட்டாளி வர்க்கம் ஒன்றுபட முடியாமல்,அப்படியே ஓன்று பட்டாலும் அது வலுவாக முதலாளிகளை நோக்கி திரும்ப முடியாதவாறு அது பல மறைமுக எதிரிகளை உருவாக்கி வைத்துள்ளது.அதை முதாலாளித்துவ ஊடங்கள் வலுவாக பிரசாரம் செய்கின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் தோழரே.
இராமியா
முதாலாளி வர்க்கம் சாதியம் வலுவாக இருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உண்டு பண்ணியுள்ளது என்று கூறுவது, சாதியக் கொடுமைகளைக் கவனிக்காமல் இருப்பதற்கு ஒரு சாக்கு தேடுவதாகும். வர்க்க வேறுபாட்டை விட சாதி வேறுபாடு தான் வலுவாக உள்ளது. வர்க்கப் புரட்சி ஏற்படும் பொழுது சாதிய அமைப்பு தகர்க்கப்படாது இருந்தால், பாரிஸ் கம்யூனுக்கு ஏற்பட்ட கதி தான் அதற்கும் ஏற்படும். மிஞ்சிப் போனால் பார்ப்பனர்கள் உயர்நிலை வேலைகளில் அமர்ந்து கொண்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கீழ் நிலை வேலைகளை அளித்தும் பழைய வர்ணாசிரம முறையைப் புதிய பாணியில் புகுத்தி விட்டு "வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்து விட்டோம்; இது தான் சோஷலிச ஆட்சி" என்று பிரகடனம் செய்வார்கள். இந்திய ஆளும் வர்க்கம் பார்ப்பன அதிகாரப் பிடிப்பு, முதலளித்துவ லாபச் சக்கரம் இரண்டையும் ப்ற்றி நிற்கிறது. இதில் பார்ப்பன அதிகாரப் பிடிப்பிற்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. தனியுடைமைக் கொடுமைகளைப் பற்றிய செய்திகளை ஊடகங்களும் நீதிமன்றங்களும் அவ்வப்போது வெளியிடுவதைப் பார்க்க முடியும். ஆனால் திறமையில்லாத பார்ப்பனர்கள் உயர்நிலைகளில் இருந்து கொண்டு நிர்வாகத்தைக் கெடுத்துக் கொண்டு இருப்பதைப் பற்றி யாராவது பேசுகிறார்களா? உச்ச நீதிமன்ற நீதிபதி முதல் திண்ணைத் தூங்கி பார்ப்பான் வரையிலும் திறமையின் அடிப்படையில் செயல்பட வேண்டும் திறமையின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று மூச்சுக்கு முந்நூறு முறை கூக்குரலிடுகிறார்களே; பாரப்பனர்கள் அனைவரும் திறமைசாலிகளா? பார்ப்பனர்களிலும் அறிவுத் திறன் குறைந்தவர்கள் உண்டு. அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளில் ஈடு பட்டு இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் அறிவுத் திறனை விடக் குறைந்த அறிவுத் திறன் கொண்ட பார்ப்பனர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் சாதிய அமைப்பின் காரணமாக அவர்கள் சொகுசான வேலைகளைப் பெற முடிகிறது. இக்கொடுமைகளை எப்போது களைவது? புரட்சி முடிந்த பின்னார? சாதியக் கொடுமைகள் நிலைத்து இருக்கும் வரையில் வா்க்கப் புரட்சி சாத்தியம் இல்லை. சாதியக் கொடுமைகளும் தானாய் ஒழியும் என்று எதிர்பார்க்க முடியாது. சாதியக் கொடுமைகள் தான் வர்க்க முரண்பாட்டை மழுங்கடித்துக் கொண்டு இருக்கிறது. அது சரி! பார்ப்பனர்களில் அறிவுத் திறன் குறைந்தவர்கள் கூட அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளில் ஈடுபட்டு விடக் கூடாது; அவர்களுக்கு சொகுசான வேலைகளைத் தான் கொடுக்க வேண்டும் என்று ஏன் இவ்வளவு பிடிவாதம்? அப்பிரச்சினையை விவாதிப்பது கூட பாவமா?
rakesh
மார்க்சியம் அறிவியல் பூர்வமானது , கருத்து ஜாதி அதன் பிடிமானத்தை தளர்த்தி விட்டது, வர்க்க பிரசனை தான் பிரதானமானது, வர்க்கபுரட்சியின் ஊடக சாத்திய கொடுமைகள் களையமுடியும் என்பது என்னுடைய கருத்து, சரி ஜாதியை ஒழிக்க நீங்கள் என்ன வழிமுறைகளை வைத்திருக்கிறீர்கள். ஜாதிக்கு எதிரான போராட்டங்களை எப்படி நடத்துவீர்கள்.
இராமியா
பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவா்களும் கீழ்நிலைப் பணிகள் செய்வதில் இருந்து தப்பி, சொகுசான வேலைகளைப் பெற முடிகிறதே? ஒடுக்கப்பட்ட மக்களில் உள்ள திறமைசாலிகளும் உயர்நிலைக்குச் செல்ல முடியவில்லையே? இதிலிருந்து இன்றைய பொதுப் போட்டி முறை, திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்கச் சற்றும் திறனற்றது என்று புரியவில்லையா? ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதி முதல் திண்ணைத் தூங்கிப் பார்ப்பான் வரையிலும் பொதுப் போட்டி தான் வேண்டும் இட ஒதுக்கீடு கூடாது என்று கூக்குரலிடுகிறார்களே? இது தேசத் துரோகம் என்ற விழிப்புணர்வை முதலில் எற்படுத்த வேண்டும். இட ஒதுக்கீட்டின் மூலம் தான் திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்க முடியும் என்ற உண்மையைப் பொதுக் கருத்தாகவும் வளர்த்தெடுக்க வேண்டும். பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவா்களை அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளில் ஈடுபட வைப்பதற்கு ஒத்துழைக்காத பார்ப்பனர்கள் நாட்டு நிரவாகத்தைச் சீரழிக்கும் தேசத் துரோகிகள்; அப்படிப்பட்ட தேசத் துரோகிகள் உயர்நிலைகளுக்குச் செல்லாமல் தடுக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வையும் உருவாக்க வேண்டும்.
Rajendra Babu
ஜாதியை ஒழிக்க நீங்கள் என்ன வழிமுறைகளை வைத்திருக்கிறீர்கள்? ஜாதிக்கு எதிரான போராட்டங்களை எப்படி நடத்துவீர்கள்? என்று தோழர் ராகேஷ் கேட்டிருப்பதானது ஜாதிக் கொடுமைகளை ஒழிக்க முடியாத படி அனைத்து வழிகளையும் அடைத்து வைத்து இருக்கிறோமே; உங்களுக்கு என்ன வழி இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்பது போல் இருக்கிறது. அப்படி ஏதாவது வழி இருந்தால் தெரிவியுங்கள்; அதையும் அடைத்து விடுகிறோம் என்று கேட்பது போலும் இருக்கிறது. அறிவுத் திறன் குறைந்த பார்ப்பனர்கள் உயர்நிலைகளில் இருக்க முடிகிறது என்றால் இட ஒதுக்கீடு ஒழுங்காக செயல்படுத்தப்படவில்லை என்று தெரியவில்லையா? அதை ஒழுங்காகச் செயல்படுத்த வேண்டும் என்ற முடிவி்ற்கு எளிதாக வர முடியுமே? இராமியா அவர்களே! உங்கள் கட்டுரைகளில் சோஷலிக் கருத்துகளைப் பற்றியும், பார்ப்பன ஆதிக்கத்தைப் பற்றியும் கூர்மையாகவே எழுதிக் கொண்டு இருக்கிறீர்கள். இன்னும் அதிக வீரியமாக எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
rakesh
இன்று பிரதானமான உள்ள தொழிலாளிகள் மீதான ஒடுக்குமுறைக்கு என்ன தீர்வு என்பதை தாங்கள் விளக்க வேண்டும் .
இராமியா
இன்று மட்டுமல்ல; என்றைக்கும் தொழிலாளிகள் மீதான ஒடுக்கு முறைக்கு ஒரே தீர்வு வர்க்கப் புரட்சி தான். இதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் இந்திய சூழ்நிலையைப் பொறுத்த மட்டில் வாக்க முரண்பாடு முன்னணிக்கு வர வேண்டும் என்றால் அதற்கு முன் சாதியக் கொடுமைகள் களையப்பட்டு இருக்க வேண்டும். சாதியக் கொடுமைகளைக் களையாமல் வர்க்கப் புரட்சியை முன்னெடுத்தால் அது தோல்வி அடையும். மீறி வலுக்கட்டாயமாக புரட்சி திணிக்கப்பட்டால் அது வர்ணாசிர சமூக அமைப்பிற்கு இட்டுத்தான் செல்லுமே ஒழிய சோஷலிச சமூகத்தை அமைப்பதற்கு வழி கோலாது.
rakesh
இன்று வருணாசிரமம் முறை நொறுக்கப்பட்டு அப்பட்டமாக முதலாளி தொழிலாளி என்ற வர்க்க முரண்பாடே பிரதானமாக இருக்கிறது நீங்கள் சொல்கின்ற சாதி முரண்பாடு நகர்புரமாதல் , தொழில்மயமாதல் மூலம் காணமல் போய்விட்டது இருக்கும் கொஞ்ச ஜாதி உணர்வும் தேவர் ,வன்னியர் ,கவுண்டர் போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களே வலு குறைந்த நிலையில் காப்பாற்றப்படுகிறது.அப்படி என்றால் சமுகத்தில் தொழிலாளி , முதலாளி வேறுபாடு தானே பிரதானம் . ஒரு தொழிற்சாலையில் அனைவரும் தொழிலாளிகள் என்றே பார்க்கின்றனர். ஜாதி உணர்வு பிரதானமாக இருந்தால் மாயாவதி பிராமணர்களோடு கூட்டணி வைத்து ஜெயித்தாரே எப்படி. நாடு எங்கேயோ பொய் கொண்டிருக்கிறது.அமெரிக்க இஸ்ரேல் , இந்திய இந்த மூன்று நாடுகளும் கூட்டு சேர்ந்து உலகை கொள்ளை அடித்து கொண்டுள்ளன. நீங்கள் இன்னும் ராஜராஜன் காலத்திலையே இருக்கிறீர்கள். கருணாநிதி சொல்வதை வழிமொழியாதீர்கள். நீங்கள் முதலாளிகள் பக்கமா? தொழிலாளிகள் பக்கமா? என்பதே எனது கேள்வி நாங்கள் தொழிலாளிகள் பக்கம் தான் நாங்கள் ஜாதி, மதம், இனம், தேசம் என்பதெல்லாம் பார்ப்பதில்லை உலகில் உள்ள தொழிலாளிகள் அனைவரும் எங்கள் தோழர்களே. உலக தொழிலாளர்களே ஓன்று சேர்வோம் , கலாசார புரட்சி மூலம் அனைத்து வர்க்க பேதங்களையும் முறியடிப்போம்
இராமியா
வருணாசிரமம் நொறுக்கப்பட்டு இருக்கிறது என்பது அப்பட்டமான கலப்படமில்லாத பொய். நகர்மயமாதல் தொழில்மயமாதல் அகியவற்றையும் வருணாசிரமம் பரிபூரணமாக ஜீரணித்து இருக்கிறது. நகர்ப்புறங்களிலும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் தான் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்ய வேண்டி இருக்கிறதே ஒழிய, பார்ப்பனர்கள் செய்வதில்லை. அதாவது வருணாசிரமத்தில் விதிக்கப்பட்ட விதியான பார்ப்பனர்கள் திறமைக் குறைவானவர்களாக இருந்தாலும் அவர்கள் உயர்நிலை வேலைகளையே செய்ய வேண்டும் என்பதில் இன்றளவும் ஒரு சிறு கீறலைக் கூட ஏற்படுத்த முடியவில்லை.

சாதிய உணர்வு ஒடுக்கப்பட்ட மக்களிடம் தான் இருக்கிறது என்பது ஒரு மாய உணர்வு. பார்ப்பனர்களால், திறமையில்லாவிட்டாலும் உயர்நிலைகளைத் தக்க வைத்துக் கொள்ள முடிவதும், ஒடுக்கப்பட்ட மக்கள் இதைப் புரிந்து கொள்ள முடியாமலும் வலுவாக எதிர்க்காமல் இருப்பதிலும் தான் சாதியக் கொடுமைகளின் வேர்கள் உள்ளன. இச்சூழ்நிலை பார்ப்பனர்களுக்குத் தான் சாதகமாக இருக்கிறது. ஆகவே இது அப்படியே தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்; இதைப் பற்றி (திறமையில்லாத பார்ப்பனர்களை அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்ப விடக்கூடாது என்பதைப் பற்றி) விவாதம் செய்வதையும் எப்பாடு பட்டேனும் தவிர்க்கிறார்கள். தொழிலாளி முதலாளி வேறுபாடு மட்டும் தான் பிரதானமாக இருந்தால்; சாதியக் கொடுமைகளுக்கு முக்கித்துவம் இல்லை என்றால் திறமையில்லாத பார்ப்பனர்களை அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்ப வைக்க முடியாது. தொழிலாளி முதலாளி வேறுபாட்டையும் மீறி பார்ப்பன ஆதிக்கப் பிடிப்பு முதன்மையாகவும் வலுவாகவும் இருப்பதால் தான் உயர் சாதிக் கும்பல் உயர்நிலைகளிலும், ஒடுக்கப்பட்ட மக்கள் கீழ் நிலைகளிலும் இருக்க வேண்டிய சூழ்நிலை இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

மாயாவதி அம்மையார் சாதிய விடுதலையை விட அதிகாரத்தைக் கைப்பற்றுதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். அப்படி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்றால் பார்ப்பனர்களை மீறிப் போக முடியவில்லை என்பதில் இருந்தே பார்ப்பன அதிகாரப் பிடிப்பு எவ்வளவு வலுவாக இருக்கிறது என்று புரிந்து கொள்ள முடியவில்லையா? இதை எதிர்த்து விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் உருவாக்குவது மிக மிக அவசியம் என்று தோன்றவில்லையா?

கருணாநிதி பார்ப்பனர்களிடம் சோரம் போனவர். அவருடைய சொற்களை வழி மொழிந்தால் அது பார்ப்பனர்களுக்குத் தான் சாதகமாக இருக்கும்.

உண்மையில் தொழிவாளர்கள் பக்கம் இருப்பவர்கள் பார்பபன ஆதிக்கத்தை எதிர்க்காமல் இருக்க முடியாது. பூனை கண்ணை மூடிக் கொள்வதால் பூலோகம் இருண்டு போய் விடாது; நீங்கள் சாதி, இனம், மதம் பார்க்க மாட்டேன் என்று கூறுவதால் சாதியக் கொடுமைகள் இல்லை என்று ஆகி விடாது.

பார்ப்பனர்களில் திறமை இல்லாதவர்கள் கூட அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்யக் கூடாது; அவர்களை உயர்நிலைகளில் வைத்துப் போற்றித் தான் ஆக வேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் தொழிலாளி முதலாளி வேறுபாட்டை மட்டும் எதிர்ப்பார்கள் என்று நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. சாதியக் கொடுமைகள் ஒழிந்து விட்டால் வர்க்க முரண்பாடு முன்னணிக்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் தொழிலாளர் இயக்கத்தில் முதலாளிகள் சார்பாகப் புகுந்துள்ள புல்லுருவிகள் தான் சாதியக் கொடுமைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளுவதை எதிர்ப்பார்கள்.
rakesh
தோழரே, ஜாதி வேறுபாட்டை முதலாளிவர்க்கம் ஊட்டி வளர்க்கவே செய்யும் தொழிலாளர்கள் தான் அதை கலாசாரப்புரட்சியின் மூலம் அதை முறியடிக்க வேண்டும்.ஏனெனில் தொழிலாளிகள் ஜாதி பார்த்து சுரண்டப்படுவதில்லை, ஸ்ரீபெரும்புத்தூரில் வேலை பார்க்கும் இரண்டு லட்சம் தொழிலாளிகளின் பொது எதிரி முதலாளி தானே.மற்றொன்று உத்தமபுரம் ,பொள்ளாச்சி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் உள்ள பிரச்னைகளுக்கு காரணம் பிள்ளைமார், தேவர், கவுண்டர் சாதியினரே என்பதை மறுக்க முடியாது மிகப்பெரிய எண்ணிக்கையில் இந்த ஜாதியினர் தான் பிரதானமாக அனைத்து பதவிகளையும் ஆக்கிரமித்து உள்ளனர். பார்ப்பனர்கள் செத்தபாம்பு ஆகிவிட்டனர்.பெரியாரே அவர்களை ஒழித்து கட்டி விட்டார் .
mathan
தோழர்களே நீங்கள் இருவருமே சமூகம் சார்ந்த அக்கறையுள்ளவர்கள் என்பது தெளிவாகிறது. நீங்கள் இருவரும் ஏன் திருப்பூர் தொழிற்சாலைகளுக்கு வரக்கூடாது என்று கேட்கிறேன். அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் குறைவான ஊதியத்திற்கு , அதிகமான நேரம் வேலை பார்க்கிறார்கள். முதலில் இந்த சுரண்டல் முதலாளிகளை எதிர்ப்போம்
Ramea
ஜாதி வேறுபாட்டை முதலாளிவர்க்கம் ஊட்டி வளர்க்கவே செய்கிறது. சாதியக் கொடுமைகள் களையப்பட்டு விட்டால் வர்க்க முரண்பாடுகள் முன்னணிக்கு வந்து விடும். அதனால் தான் சாதியக் கொடுமைகளைக் களையும் கருத்துகள் வலுப்பெறுவதை முதலாளிகள் விரும்புவதில்லை. அவர்களுக்குத் துணை போக வேண்டாம் என்று தான் கூறுகிறோம்.

கலாச்சாரப் புரட்சி மூலம் சாதியக் கொடுமைகளை முறியடிப்பது என்றால் அது எப்பொழுது? வரக்கப் புரட்சிக்கு முன்னாலா அல்லது அது முடிந்த பிறகா?

வரக்கப் புரட்சிக்கு முன்னால் என்றால் அதற்கான செயல் திட்டங்கள் யாவை? வரக்கப் புரட்சிக்குப் பின்னால் என்றால் அது பெறும் தவறு. சாதியைச் சந்திக்காமல் புரட்சியைச் சந்திக்க முடியாது. மீறித் திணிக்கப்பட்டால் அது சோஷலிசத்திற்கு இட்டுச் செல்லாது; இந்திய சமூக அமைப்புச் சூழ்நிலையில் அது வர்ணாசிரம அமைப்புக்குத் தான் இட்டுச் செல்லும். பார்ப்பனர்களுக்கு அது மகிழ்ச்சி தரக் கூடியதாக இருக்கலாம். ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்விதத்திலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தொழிலாளர்கள் சாதி பார்த்து சுரண்டப்படுவதில்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் பார்ப்பனர்களில் திறமை இல்லாதவர்கள் கூட அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்யக் கூடாது; அவர்களை உயர்நிலைகளில் வைத்துப் போற்றித் தான் ஆக வேண்டும் என்று உள்ள நிலையை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஏன் வன்முறையான மெளனம் சாதிக்கிறீர்களே; ஏன்? சுரண்டப்படும் தொழிலளர்களில் பார்ப்பனர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

உத்தமபுரம் ,பொள்ளாச்சி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் உள்ள பிரச்னைகளுக்கு காரணம் பிள்ளைமார், தேவர், கவுண்டர் சாதியினரே என்பதை மறுக்க முடியாது மிகப்பெரிய எண்ணிக்கையில் இந்த ஜாதியினர் தான் பிரதானமாக அனைத்து பதவிகளையும் ஆக்கிரமித்து உள்ளனர் என்று கூறுகிறீர்கள். இவர்களால் ஏன் மைய அரசுப் பணிகளுக்குப் போக முடியவில்லை? பார்ப்பனர்கள் வகி்க்கும் பெரும் பதவிகளை எல்லாம் அவர்களிடம் இருந்து பறித்து தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் கொடுத்துப் பாருங்கள். அப்படிச் செய்தால் இரு வகுப்பாரின் வாழ்க்கை நிலையும் உயர்ந்து அவர்களிடையேயான முரண்பாடுகள் குறையவும் காலப் போக்கில் மறையவும் செய்யுமே? அதைச் செய்யாமல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடையேயான முரண்பாட்டை ஏன் கூர்மைப்படுத்துகிறீர்கள்?

பாரப்பனர்கள் செத்த பாம்புகள் போல் ஆகிவிட்டார்கள் என்பைதப் போன்ற பொய்யைச் சொல்வதற்கு பாவம் கேயாபல்ஸ் கூட வெட்கப்பட்டு விடுவான். ஒரு வேளை பழைய வர்ணாசிரம அமைப்புக்கு இச்சமூகத்தை இட்டுச் செல்ல முடியவில்லையே என்ற கடும் ஏக்கத்தில் அப்படிக் கூறுகிறீர்களா?

தோழர் மதன் அவர்களே குறைந்த ஊதியத்திற்கு அதிக அளவிலும் அதிக நேரமும் வேலை பார்க்கும் நிலை திருப்பூரில் மட்டுமல்ல; உலகின் பெரும்பாலான பகுதிகளில் இந்நிலை தான் உள்ளது.
Guest
சமூகத்தில் பிரதான முரண்பாடு எதுவோ அது தான் அரசியலை தீர்மானிக்கிறது. நிலப்பிரபுத்துவத்தின் எச்ச மிச்சங்கள் இந்த முதலாளித்துவ சமூக அமைப்பிலும் தொடர்வது என்பது வேறு. அது வலுவோடு இருபது என்பது வேறு என்பதை நாம் உணர வேண்டும்.அத்தோடு கம்யூனிசம் தான் ஒரே தீர்வு என்பதை நம்புவராக நீங்கள் இருந்தால் இந்த உரையாடல் தொடர்வதில் பிடிப்பு இருக்கும். ஜாதி வலுவோடு இல்லை என்பதை நான் சொல்வதால் நான் பிராமணர்களுக்கு ஆதரவானவன் என்று சித்தரிப்பது சரியான வாதம் அல்ல. அத்தோடு பிரச்னைகளை சமூகத்தில் உள்ள உற்பத்தி உறவுகள் தான் தீர்மானிக்கிறது. மூலதன திரட்சி தான் இங்கு விவாதப்பொருளாக இருக்க வேண்டும்.யார் பொருளாதரத்தை கட்டுபடுத்துகிரார்களோ அவர்கள் கைகளில் ஆட்சி இருக்கிறது என்பதை தாங்கள் உணரவேண்டும். நமது பொருளாதாரத்தை தீர்மானிப்பது டாட்டா ,பிரேம்ஜி , அம்பானி தானே தவிர பிள்ளையார் கோவில் பூசாரி அல்ல.
இாரமியா
சாதி வலுவோடு இல்லை என்றால் திறமைக் குறைவான பார்ப்பனர்களும் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து விடச் செய்யும் சக்தி எது? இச்சக்தியை முறியடித்து திறமைக் குறைவான பார்ப்பனர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்தே தீர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டாமா? அப்படி ஏற்படுத்துவதன் மூலம் காலியாகும் உயர்நிலை வேலைகளில் திறமை மிகுந்த ஒடுக்கப்பட்ட மக்களை அமர்த்த வேண்டாமா? இந்திய சமூகத்தின் பிரத்யேக அம்சங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும் எனக் கூறினால் கம்யூனிசம் தான் தீர்வு என்ற நம்பிக்கை இல்லாதவர் என்று கூறி விடுவீர்களா? இந்திய சமூகத்தில் உற்பத்தி உறவுகளைத் தீர்மானிப்பதில் சாதி அமைப்பிற்குப் பங்கே இல்லையா? நமது பொருளாதாரத்தை தீர்மானிக்கும் டாட்டா, பிரேம்ஜி, அம்பானி ஆகியோர் உயர்நிலை வேலைகளில் திறமை மிகுந்த ஒடுக்கப்பட்ட மக்களையும் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளில் திறமைக் குறைவான பார்ப்பனர்களையும் அமர்த்தத் துணிவார்களா?

அது சரி! திறமைக் குறைவான பார்ப்பனர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்தே தீர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினால் ஏன் இவ்வளவு கோபம் வருகிறது?
rakesh
தோழரே எனக்கு யாரையும் காப்பாற்ற வேண்டும் என்ற மன நிலை இல்லை நீங்கள் ஒரு வலையை பின்னி விட்டு அந்த வலையை விட்டு வெளியே வராமல் அதற்குள்ளே சுற்றுகிறீர்கள் என்பது தான் வருத்தமானது . விலைவாசி உயர்வு , தொழிலாளர்களை காட்டுத்தனமாக ஒடுக்கப்படுவது, உழைக்கும் மக்கள் படும் துன்பங்களே என் கண் முன் நிற்கிறது. உங்களை போல நான் ஜாதி பார்த்து தொழிலாளர்களை அணுக வில்லை .ஓன்று பணம் படைத்த முதலாளிவர்க்கம் மற்றொன்று உழைக்கும் தொழிலாளி வர்க்கம் அதில் நான் தொழிலாளி வர்க்கத்தின் பக்கம். நீங்கள் ?
த.சிவக்குமார்
ராமியா // பார்ப்பனர்கள் அதிகாரம் உள்ள, ஊதியம் மிகுந்த, உடலுழைப்பு தேவைப்படாத தொழில்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். அவர்களுள் திறமை இல்லாதவர்களையும் அவ்வட்டத்திற்குளளேயே வைத்து ஆதரித்து வருகின்றனர்.// என்று முதலில் கூறினீர்கள். இப்போது // திறமைக் குறைவான பார்ப்பனர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்தே தீர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டாமா? அப்படி ஏற்படுத்துவதன் மூலம் காலியாகும் உயர்நிலை வேலைகளில் திறமை மிகுந்த ஒடுக்கப்பட்ட மக்களை அமர்த்த வேண்டாமா?// என்று கூறுகிறீர்கள். நீங்கள் கூறவருவது, பார்ப்பனர்களின் தொழில் பற்றியா, வேலை பற்றியா, அல்லது இரண்டும் பற்றியா? வேலை என்று கூறும்போது அரசு வேலை பற்றியா த‌னியார் வேலை பற்றியா?
இராமியா
ராக்கேஷ் அவர்களே இந்தியாவின் பிரத்யேகப் பிரச்சினையான ஜாதிக் கொடுமைகளைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்றால் வலையில் மாட்டிக் கொண்டதாக அர்த்தமா? ஜாதிக் கொடுமைகளைக் களைய வேண்டும் என்று கூறினால் அது விலைவாசி, சுரண்டல் கொடுமைகளுக்கு ஆதரவானது என்று அர்த்தமா? வர்க்க முரண்பாட்டை மட்டும் தான் பார்ப்பேன் என்று கூறுவது உடம்பில் புண்களும் சர்க்கரை வியாதியும் இருக்கிறது என்றால் சர்க்கரை வியாதி கண்ணுக்குத் தெரியவில்லை என்று கூறி, புண்களுக்கு மருந்து தடவினால் போதும் என்பது போல் இருக்கிறது. நான் உழைக்கும் வர்க்கத்தின் பக்கம் இருப்பதால் தான் ஜாதியக் கொடுமைகளைக் களைய வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளிக்கிறேன்.

சிவக்குமார் அவர்களே ஜாதி காரணமாக ஏற்றத் தாழ்வு மறைவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எந்தெந்தத் துறைகளில் (அரசு, தனியார், உரிமங்கள் உட்பட) எடுக்கப்பட வேண்டுமோ அந்தந்த நடவடிக்கைளை தயவு தாடசண்யமின்றி எடுக்க வேண்டும் என்று கூறுகிறேன்.
த.சிவக்குமார்
ராமியா அவர்களே, அரசு வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, உயர் அதிகாரப்பதவிகள் முதல் கடைநிலை ஊழியர்பதவி வரை மத்திய அரசுப்பணித் தேர்வாணையம் மற்றும் மாநில அரசுப்பணித் தேர்வாணையங்கள் மூலம் பொதிஅறிவிப்புக் கொடுத்து, பொதுவான வினாத்தாள்கள், பொதுவான மதிப்பீடு மற்றும் பொதுவான தேர்வுகளின் மூலம் அவரவர் பெற்ற மதிப்பெண் தரவரிசையில் SC/ST, OBC ( மாநில அரசுப்பணிஎனில் MBC, BC ) இடஒதுக்கீட்டு வகுப்பினருக்குரிய குறைந்தபட்ச தகுதி (கட்-ஆஃப்) மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு, அதைக்காட்டிலும் கூடுதல் மதிப்பெண் பெற்ற பிராமணர் உள்ளிட்ட முன்னேறிய வகுப்பினர்(FC) மட்டுமே அரசு வேலைக்குப் போகமுடியும் என்பதே இன்றைய நிலை. எனவே நீங்கள் சொல்வதுபோல் திறமைக் குறைவான பார்ப்பனர்கள் அரசுவேலையில் அமரமுடியாது. பொதுப் போட்டித்தேர்வுகளில் SC/ST, OBC ( மாநில அரசுப்பணிஎனில் MBC, BC ) வகுப்பினரைவிட கூடுதல் மதிப்பெண் பெற்றால்தான் மத்திய, மாநில அரசு வேலைக்குப் போகமுடியும்.
அடுத்தது தனியார்துறையில் திறமைக் குறைவானவ‌ர்களை வேலையில் வைத்திருந்தால் அந்த நிறுவனம் கூடியசீக்கிரம் நஷ்டமடைந்து திவாலாகிவிடும் என்பது உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ தனியார் முதலாளிகளுக்கு நன்றாகத் தெரியும். திறமைக் குறைவான பார்ப்பனர்கள் தனியார் நிறுவனங்களிலும் வண்டி ஓட்டமுடியாது. அதிலும் குறைந்த சம்பளத்திற்கு திறமையும் இளமைத்துடிப்பும் மிக்கவர்களே வேலைக்கு வேண்டும் என்று 35-40 வயதிற்கு மேற்பட்டவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தொடர்ந்து புதிதாக ஆள் எடுத்துக் கொண்டே இருக்கும் தனியார் நிறுவனங்களில் திறமைக் குறைவான பார்ப்பனர்கள் உயர்பதவிகளில் என்ன கீழான பதவிகளில் கூட இருக்க முடியாது.
அடுத்து தொழில்- உரிமம். இவற்றைப் பொறுத்தவரை பணம் அதாவது மூலதனம் இருந்தால் எவரும் தொழில் தொடங்கலாம். உங்களிடம் இருக்கும் மூலதன வலுவைப் பொறுத்து உரிமம் வழங்கப் படுவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்படும். நீங்கள் சாதாரண குப்பனும் சுப்பனும் என்றால் இல்லாத விதிமுறைகளையெல்லாம் சொல்லி உங்களை இழுத்தடிப்பார்கள். நீங்கள் டாடாவாகவோ அம்பானியாகவோ இருந்தால் இருக்கும் சட்டம் எல்லாவற்றையும் பயன்படுத்தி ஏழைவிவசாயிகளிடமிருந்து அரசு செலவில் நிலத்தைப் பிடுங்கி உங்களுக்கு இலவசமாகக் கொடுப்பார்கள். இங்கு தீர்மானிப்பது ஜாதியல்ல உங்களிடமிருக்கும் பணம் அதாவது உங்களது வர்க்கம். இங்கும் திறமைக் குறைவான பார்ப்பனர்களின் பாச்சா பலிக்காது. உண்மை நிலவரம் இவ்வாறிருக்க, அரசு மற்றும் தனியார் துறைகளில் திறமைக் குறைவான பார்ப்பனர்கள் எங்கே, எப்படி இருக்கிறார்கள் என்று தங்களால் கூறமுடியுமா?
இராமியா
சிவக்குமார் அவர்களே! நீங்கள் இந்த சமூகத்தைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள், பல்வேறு நிலையில் அறிவுத் திறன் கொண்டவர்கள் அனைத்து வகுப்பு மக்களிலும் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள சராசரி அறிவுக்கும் குறைவான அறிவே போதுமானது. அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த தொழில்கள் இச்சமூகத்தில் உண்டு என்பதும் அவற்றை எல்லாம் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே செய்கிறார்கள் என்பதும் ஒன்றும் பிரம்ம ரகசியம் அல்ல. அப்படி இருக்கையில் பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களும் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த தொழில்களைச் செய்வதில் இருந்து தப்பி விடுவதற்கான விசை இச்சமூகத்தில் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் சராசரி அறிவுக்கும் குறைவான அறிவே போதுமானது. நீங்கள் சொல்லும் தேர்வு வழிமுறைகளில் இந்த விசை இருப்பதால் தான் திறமைசாலிகளான ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உயர்நிலைகளுக்குச் செல்லாமல் தடுக்கப்படவும் திறமையற்ற பார்ப்பனர்கள் உயர்நிலைகளுக்குச் செல்லவும் முடிகிறது.

எனக்குத் தெரிந்த பார்ப்பனர் ஒருவருக்குப் படிப்பு சரியாக வரவில்லை. எட்டாம் வகுப்பு கூட தேறவில்லை. வயது 23ஐத் தாண்டிய பின் அவரை என்ன வேலை செய்ய வைத்து வாழ வைப்பது என்று பெற்றோர்கள் மிகவும் கவலைப்பட்டனர். அப்பொழுது ஒரு தனியார் நிறுவனம் அந்தப் பையன் எப்படியாவது எஸ்.எஸ்.எல்.சி. தேறிவிட்டால் அவருக்கு வேலை கொடுப்பதாக் கூறியது. ஆயிரக் கணக்கான பட்டதாரிகள், இலட்சக் கணக்கான எஸ்.எஸ்.எல்.சிக்கள் வேலையின்றி இருக்கும் பொழுது இருக்கும் பொழுது படிப்பு வராத அந்தப் பார்ப்பனப் பையனுக்கு மட்டும் வேலை தயாராக இருந்தது. பெற்றோர்களும் அவரை எஸ்.எஸ்.எல்.சி. தேற வைக்க படாத பாடு பட்டுக் கொண்டு இருந்தனர்.

வேறு சம்பவங்களில் தனியார் நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்ட பிறகும் அவர்கள் பார்ப்னர்கள் அல்ல தெரிந்த பின் அவர்களுடைய வேலை உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. இது போன்று பலவற்றைக் கேள்விப்பட்டு இருக்கிறேன். எனக்கு நேரடித் தொடர்பு உடைய இருவருக்கு இப்படி நடந்துள்ளது.

இவை தனித் தனி சம்பவங்கள் தான். ஆனால் பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களும் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த தொழில்களைச் செய்வதில் இருந்து தப்பி விடுகிறார்கள் என்பதில் இருந்தும் இறுதி முடிவின் படி உயர்நிலைகளுக்குத் திறமைசாலிகள் தேர்ந்தெடுக்கப்படாமல் அது பார்ப்பனர்களுக்குச் சாதகமாக இருப்பதில் இருந்தும் ஏதோ ஒரு கொடூரமான தேச விரோத சக்தி செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? தடயம் இல்லாமல் குற்றம் புரிவதால் அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று கூறி விட முடியுமா?

எப்பாடு பட்டாவது அச்சக்தியை முறியடிக்க வேண்டாமா? அதற்கான விழிப்புணர்வையும் அப்படிப்பட்ட தேச விரோத சக்திக்கு எதிரான பொதுக் கருத்தையும் உருவாக்க வேண்டாமா?
த.சிவக்குமார்
ராமியா அவர்களே, //நீங்கள் சொல்லும் தேர்வு வழிமுறைகளில் இந்த விசை இருப்பதால் தான் திறமைசாலிகளான ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உயர்நிலைகளுக்குச் செல்லாமல் தடுக்கப்படவும் திறமையற்ற பார்ப்பனர்கள் உயர்நிலைகளுக்குச் செல்லவும் முடிகிறது// என்று எப்படிச் சொல்கிறீர்கள். பொதுப்போட்டித்தேர்வுமுறையில் பிராமணராக இருந்தாலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினராக இருந்தாலும் அவரவர் பிரிவினுள் அதிகபட்ச மதிப்பெண் பெற்ற திறமைசாலிகளே அரசு வேலைக்குப் போகமுடியும் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் சராசரி அறிவுக்கும் குறைவான அறிவே போதுமானது. அதிலும் பிராமணராக இருப்பவர் இடஒதுக்கீடு இல்லாத பொதுப்பிரிவில் ஆகக்கூடுதல் மதிப்பெண் பெற்றால் ம‌ட்டுமே அரசு வேலைக்குப் போகமுடியும் என்பதைப் புரியாதவர்போல் நடிக்கக்கூட எவராலும் முடியாது. அப்படியிருக்க, இத்தேர்வு வழிமுறைகளில் திறமைசாலிகளான ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உயர்நிலைகளுக்குச் செல்லாமல் எப்படித் தடுக்கப்படுகிறார்கள், திறமையற்ற பார்ப்பனர்கள் உயர்நிலைகளுக்கு செல்ல இத்தேர்வு வழிமுறையில் எப்படி முடிகிறது? என்பதை அதற்கு வழிவகுக்கும் தேர்வு விதிமுறைகளைச் சொல்லி தாங்கள் விளக்கினால் அதைப் புரிந்துகொள்ளும் அளவு சராசரி அறிவு எனக்கு உள்ளது என்றே நினைக்கிறேன்.
இராமியா
நன்றி சிவக்குமார் அவர்களே! மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே திறமைக்கு அடையாளம் அல்ல. அனைத்து நிலை அறிவுத் திறன் கொண்டவர்களும் அனைத்து வகுப்பு மக்களிலும் இருக்கும் பொழுது தேர்ந்தெடுக்கப் படுபவர்களும் அனைத்து வகுப்பில் இருந்து சம விகிதத்தில் இருந்தால் தேர்ந்தெடுக்கும் முறை சரியாக இருப்பதாகக் கொள்ளலாம். அப்படி இல்லாத போது அம்முறையில் தவறு இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்; மாற்று வழிகளைத் தேடியாக வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

இட ஒதுக்கீடு எங்கும் முறையாகச் செயல்படுத்தப் படவில்லை எனினும் தமிழ்நாட்டில் ஓரளவு செயல் படுத்தப்பட்டு இருக்கிறது. இட ஒதுக்கீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்கள் நிறைந்து உள்ள தமிழ்நாடு இன்று மருத்துவச் சிகிச்சையில் இந்தியாவிலேயே முதலாவதாகத் திகழ்கிறது. இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படாத டெல்லி முதலிய இந்தியாவின் பிற இடங்கள் அப்படி ஒரு இடத்தைப் பிடிக்க முடியவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது தான் அவர்கள் உயர்சாதிக் கும்பலினரை விடத் திறமைசாலிகள் என்று நிரூபிக்க முடிகிறது. இப்போதைய பொதுப் போட்டி முறை திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்கச் சற்றும் திறனின்றி இருக்கிறது. ஆகவே திறமைசாலிகள் வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி ஒட ஒதுக்கீடு என்பதாகத் தான் இருக்கிறது. திறமைசாலிகள் வந்து விட்டால் தங்களுடைய திறமையின்மை வெளிச்சத்திற்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் அதை எதிர்ப்பதில் கண்மண் தெரியாமல் முழு மூச்சுடன் ஈடுபடுகிறார்கள்.

உண்மையில் திறமைசாலிகளுக்கு உரிய இடம் கிடைக்க வேண்டும் என்றால் நாட்டின் அனத்து நடவடிக்கைகளிலும் அனைத்து நிலைகளிலும் உயர்சாதிக் கும்பலினர், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், மத சிறுபான்மையினர் ஆகியோருக்கு மக்கட் தொகையில் அவரவர்களின் விகிதப்படி இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். (ஒடுக்கப்பட்ட மக்களில் உள்ள திறமைசாலிகளை உயர்நிலைகளை மறுப்பதன் மூலம்) மனித வளத்தைப் பாழடிப்பதாலும் (திறமையற்ற உயர்சாதிக் கும்பலினரை உயர்நிலைக்குக் கொண்டு செல்வதன் மூலம்) நாட்டு நிர்வாத்தைப் பாழடிப்பதாலும் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் மட்டுமல்ல; ஆதரிக்காதவர்களும் தேசத் துரோகிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் திறமைசாலிகளுக்கு உரிய இடம் கிடைப்பது மட்டுமல்லாமல் சாதிய முரண்பாட்டின் கூர்மை மழுங்கி வர்க்க முரண்பாடு முன்னணிக்கு வரும். ஆகவே சீர்திருத்தத்தை விரும்புகிறவர்களும் சரி; புரட்சியை விரும்புகிறவர்களும் சரி முதலில் சாதிய முரண்பாட்டின் கூர்மையை மழுங்கடிக்கும் செயலை மேற்கொள்ள வேண்டும்
rakesh
ராமையா இப்போது தான் வழக்கமான பல்லவியை பாடாமல் புதிதாக கொஞ்சம் பேசியிருக்கிறார்.
த.சிவக்குமார்
ராமியா அவர்களே, இப்போது திறமையற்ற பார்ப்பனர்கள் அரசு உயர்பதவிகளில் இருக்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அதனால்தான் திறமையற்ற பார்ப்பனர்கள் உயர்நிலைகளுக்கு செல்ல இத்தேர்வு வழிமுறையில் எப்படி முடிகிறது? என்பதை அதற்கு வழிவகுக்கும் தேர்வு விதிமுறைகளைச் சொல்லி தாங்கள் விளக்குமாறு நான் கேட்டேன். ஆனால் அதற்கு ஒன்றும் பதில் சொல்லவில்லையே.
இராமியா
சிவக்குமார் அவர்களே! திறமைக் குறைவான பார்ப்பனர்கள் உயர்நிலைகளில் இருக்கறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள சராசரி அறிவுக்கும் குறைவான அறிவே போதும். திறமைசாலிகள் அனைத்து வகுப்பு மக்களிடமும் இருக்கிறார்கள். அதே போல் திறமைக் குறைவானவர்களும் அனைத்து வகுப்பு மக்களிடமும் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் அனைத்து நிலைகளிலும் அனைத்து வகுப்பு மக்களும் தேர்ந்தெடுக்கப்படும் முறை தான் சரியான முறையாக இருக்கும். உண்மை அப்படி இல்லாமல் உயர் நிலைகளில் பார்ப்பனர்களும் கீழ் நிலைகளில் ஒடுக்கப்பட்ட மக்களும் இருக்கிறார்கள் என்பதில் இருந்தே திறமையில்லாவிட்டாலும் பார்ப்பனர்கள் உயர் நிலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றும் திறமை இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் உயர் நிலைப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்றும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

வீடு கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது, அந்நிலையில் திருடன் எப்படித் திருடினான் என்று தெரிந்து கொள்ளலாம் தான். ஆனால் அதைவிட முக்கியம் அத்திருடன் மீண்டும் திருடாமல் பார்து்துக் கொள்வது தான். எப்படித் திருடினான் என்று தெரிந்து கொள்ள முடியவில்லை என்பதற்காக வீடு கொள்ளை அடிக்கப்படவே இல்லை என்று சாதிப்பது எவ்விதத்தில் சரி?
rakesh
ராமியா சிவகுமார் கேட்டதற்கு பதிலே இன்னும் சொல்லவில்லை.தெரியவில்லை என்றால் உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள்
இராமியா
ராகேஷ் அவர்களே! சிவக்குமர் மட்டுமல்ல அனைவரது வினாக்களுக்கும் விடை அளிக்கப்பட்டுத் தான் இருக்கிறது, பார்ப்பன ஆதிக்கமும் பார்ப்பன நலன்களும் மட்டும் தான் உலக மகா நியாயம் என்றும் பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்களும் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி விட வேண்டும் என்ற எண்ணத்தை விடாப் பிடியாகப் பிடித்துக் கொண்டும் இருப்பவர்களின் கண்களுக்கு அவை தெரியவில்லை. அவ்வளவு தான். பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்களை அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி விடாமல் செய்வது எப்படி என்றும், ஒடுக்கப்பட்ட மக்களில் உள்ள திறமைசாலிகளை உயர் நிலை வேலைகளுக்குக் கொண்டு செல்வது எப்படி என்றும் சிந்தனை செய்ய ஆரம்பியுங்கள். அதாவது இந்திய சமுதாயத்தில் நிகழும் தேசத் துரோகச் செயல்களுக்கு, எதிராகச் சிந்தனை செய்யுங்கள். சிவக்குமார் மட்டும் என்ன அனைவரது வினாக்களுக்கும் விடைகள் பளிச்சென்று தெரியும்.
த.சிவக்குமார்
1.ஆத்திகவாதி: கடவுள் இருக்கிறார்.
2.நாத்திகவாதி: கடவுள் எங்கே இருக்கிறார்? என்ன வடிவத்தில் இருக்கிறார்?
3.ஆத்திகவாதி:சுற்றும் பூமியிலும் நம் உயிருக்குள்ளும் அவனது விசை இருப்பதால்தான் பூமியால் சுற்ற முடிகிறது; நம்மால் உயிர் வாழ முடிகிறது. அவர் உருவம் இல்லாமல் இருக்கிறார் என்பதற்காக அவர் இல்லவே இல்லை என்று என்று கூறி விட முடியுமா?
4.நாத்திகவாதி: வெற்றிடம் என்று இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை என்று விஞ்ஞானிகள் நிரூபித்துவிட்டனர். உங்கள் கடவுள் எங்கே இருக்கிறார்? என்ன வடிவத்தில் இருக்கிறார்? என்று நிரூபிக்க முடியுமா?
5.ஆத்திகவாதி: கடவுள் எங்கும் இருப்பார். தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார்
6.நாத்திகவாதி: அதுதான் கடவுள் எங்கு எப்படி இருக்கிறார் என்று எனக்குக் காட்ட முடியுமா என்று கேட்டேன்
7.ஆத்திகவாதி: கடவுள் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள ஞானக் கண் வேண்டும்; ஊணக் கண்ணுக்குத் தெரியவில்லை என்பதால் கடவுளே இல்லை என்று சாதிப்பது எவ்விதத்தில் சரி?
8.நாத்திகவாதி: ஆனால் கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்கவே இல்லையே. முடியாவிட்டால் கடவுள் இல்லை என்று உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள்.
9ஆத்திகவாதி: கடவுள் இல்லை என்ற எண்ணத்தை விடாப் பிடியாகப் பிடித்துக் கொண்டு இருப்பவர்களின் கண்களுக்கு அவர் தெரிவதில்லை. அவ்வளவு தான். கடவுளைக் காண்பது எப்படி என்று சிந்தனை செய்ய ஆரம்பியுங்கள். உங்களுக்கு மட்டும் அல்ல, அனைவரது கண்களுக்கும் கடவுள் பளிச்சென்று தெரிவார்.
10.நாத்திகவாதி: ???!!!!????!!!!????!!!!"""!!!!!????!!!!!!!

ஆத்திகவாதியுடனான நாத்திகவாதியின் இந்த விவாதத்தை ராமியாவுடனான பின்வரும் எனது விவாதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும். (வரிசை எண் 1-க்கு நேரானது பின்வரும் விவாதத்தில் A ஆகும்.அடைப்பிற்குள் இடுகையின் தேதியும் நேரமும் கொடுக்கப்பட்டுள்ளது)

A.ராமியா: திறமையற்ற பார்ப்பனர்கள் அதிகாரம் உள்ள, ஊதியம் மிகுந்த, உடலுழைப்பு தேவைப்படாத தொழில்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.(2011-04-25 23:20:26)
B.த.சிவக்குமார்: அரசு மற்றும் தனியார் துறைகளில் திறமைக் குறைவான பார்ப்பனர்கள் எங்கே, எப்படி இருக்கிறார்கள் என்று தங்களால் கூறமுடியுமா? (2011-06-15 15:28:37)
C.ராமியா: தேர்வு வழிமுறைகளில் இந்த விசை இருப்பதால் தான் திறமைசாலிகளான ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உயர்நிலைகளுக்குச் செல்லாமல் தடுக்கப்படவும் திறமையற்ற பார்ப்பனர்கள் உயர்நிலைகளுக்குச் செல்லவும் முடிகிறது. தடயம் இல்லாமல் குற்றம் புரிவதால் அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று கூறி விட முடியுமா?(2011-06-15 16:04:24)
D.த.சிவக்குமார்: இத்தேர்வு வழிமுறைகளில் திறமைசாலிகளான ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உயர்நிலைகளுக்குச் செல்லாமல் எப்படித் தடுக்கப்படுகிறார்கள், திறமையற்ற பார்ப்பனர்கள் உயர்நிலைகளுக்கு செல்ல இத்தேர்வு வழிமுறையில் எப்படி முடிகிறது? என்பதை அதற்கு வழிவகுக்கும் தேர்வு விதிமுறைகளைச் சொல்லி விளக்குங்களேன். (2011-06-16 01:54:19)
E.ராமியா: ஒடுக்கப்பட்ட மக்களில் உள்ள திறமைசாலிகளை உயர்நிலைகளை மறுப்பதன் மூலம் மனித வளத்தைப் பாழடிப்பதாலும் திறமையற்ற உயர்சாதிக் கும்பலினரை உயர்நிலைக்குக் கொண்டு செல்வதன் மூலம் நாட்டு நிர்வாத்தைப் பாழடிப்பதாலும்.....................(2011-06-17 01:08:08)
F.த.சிவக்குமார்: அதனால்தான் திறமையற்ற பார்ப்பனர்கள் உயர்நிலைகளுக்கு செல்ல இத்தேர்வு வழிமுறையில் எப்படி முடிகிறது? என்பதை அதற்கு வழிவகுக்கும் தேர்வு விதிமுறைகளைச் சொல்லி தாங்கள் விளக்குமாறு நான் கேட்டேன். ஆனால் அதற்கு ஒன்றும் பதில் சொல்லவில்லையே.(2011-06-20 14:50:18)
G.ராமியா: திறமைக் குறைவான பார்ப்பனர்கள் உயர்நிலைகளில் இருக்கறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள சராசரி அறிவுக்கும் குறைவான அறிவே போதும். எப்படித் திருடினான் என்று தெரிந்து கொள்ள முடியவில்லை என்பதற்காக வீடு கொள்ளை அடிக்கப்படவே இல்லை என்று சாதிப்பது எவ்விதத்தில் சரி? (2011-06-22 15:00:55)
H.ராகேஷ்: ராமியா சிவகுமார் கேட்டதற்கு பதிலே இன்னும் சொல்லவில்லை.தெரியவில்லை என்றால் உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள்(நன்றி ராகேஷ்) (2011-06-28 15:23:58)
I.ராமியா: பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்களும் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி விட வேண்டும் என்ற எண்ணத்தை விடாப் பிடியாகப் பிடித்துக் கொண்டு இருப்பவர்களின் கண்களுக்கு அவை தெரியவில்லை. அவ்வளவு தான். பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்களை அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி விடாமல் செய்வது எப்படி என்று சிந்தனை செய்ய ஆரம்பியுங்கள். சிவக்குமார் மட்டும் என்ன அனைவரது வினாக்களுக்கும் விடைகள் பளிச்சென்று தெரியும். (2011-06-29 15:08:36)
J.த.சிவக்குமார்: ???!!!!????!!!!????!!!!"""!!!!!????!!!!!!!

முதல் விவாதத்தில் வரும் ஆத்திகனுக்கும் நம் விவாதத்தில் இருக்கும் ராமியாவுக்கும் இடையே ஒரு ஒற்றுமை இழையோடுவது இப்போது நமக்குத் தெளிவாகத் தெரிகிறதா? நாத்திகனை வாயடைத்துப் போகவைத்த ஆத்திகனின் குருட்டு நம்பிக்கையைப் போல் ராமியாவும் சில நம்பிக்கைகள் வைத்துள்ளார். கடவுளை நம்புவது போல் அதை நம்மையும் ஆதாரமின்றி நம்பச் சொல்கிறார். மார்க்சிய இயக்கவியல்வாதிகளான நாம் குருட்டுத்தனமாக எதையும் நம்பமாட்டோம்-கடவுளை மட்டுமல்ல; கம்யூனிசத்தையும்கூடத்தான்.
Ramea
Dear Sivakumar,
Unavoidably I am on leave for two months. All your points will be replied after I return.
இராமியா
இரண்டு மாதங்கள் பொறுத்திருந்ததற்கு நன்றி.

அன்று அந்த வீடே பரபரப்பாக இருந்ததாம். திண்ணையில் அமர்ந்திருந்த கண் பார்வையற்ற கிழவருக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லையாம். வருவோர் போவோரிடம் விஷயம் என்னவென்று விசாரித்துக் கொண்டு இருந்தாராம். ஒருவன் குழந்தைக்குப் புரையேறி செத்து விட்டது என்று கூறிவிட்டுப் போய்விட்டானாம். இன்னொருவன் குழந்தைக்கு மருந்தை அளிக்கும் போது புரையேறியது என்று கூறினானாம். அடுத்தவன் மருந்து வெண்மையாக இருந்தது என்றானாம். வெண்மை எப்படி இருக்கும் என்று விசாரித்த போது அது கொக்கு மாதிரி இருக்கும் என்று அக்கிழவர் தெரிந்து கொண்டாராம். கொக்கு எப்படி இருக்கும் என்று விசாரித்த போது அது கோணல் மாணலாக இருக்கும் என்று சொல்லப்பட்டதாம். உடனே அக்கிழவர் இப்படிக் கோணல் மாணலான மருந்தைக் குழந்தைக்குக் கொடுத்தால், குழந்தை சாகாமல் என்ன செய்யும் என்று கேட்டாராம்.

திரு.சிவக்குமார் அவர்களின் ஆத்திக நாத்திக உரையாடல் உவமானம் அப்படித் தான் இருக்கிறது.

பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்கள் இருக்கும் போது, அவர்களில் யாருமே அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளில் இல்லாமல் இருப்பது, திறமையற்ற பார்ப்பனர்கள் உயர் நிலைகளுக்குச் செல்கிறார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்படுகிறது. அவர்கள் எந்த விதிமுறையின் கீழ் அப்படி உயர் நிலைகளுக்குச் செல்கிறார்கள் என்று முதலில் சொல்ல வேண்டும் என்று கேட்பதானது வீட்டில் திருடு போயிருக்கறது என்று தெரிய வரும் போது திருடன் எப்படித் திருடினான் என்று தெரிந்த பிறகு தான் தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்று வாதிடுவது போல் உள்ளது. இதை நான் தெளிவாகவே கூறியுள்ளேன்.

சமூக நீதிக்கு எதிரான உணர்வு உள்ளவர்களால் இதைப் புரிந்து கொள்ள முடியாது என்றும் சமூக நீதி உணர்வு உள்ளவர்களுக்கு இது புரியும் என்றும் கூறியதற்கு ஆத்திக நாத்திக வாதத்தை உவமானமாக் கூறி குழப்புகிறார்.

பெருந்தலைவர் காமராஜர் கிராம மக்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் கல்வி அளிக்கும் திட்டத்தை வகுத்துக் கொடுக்கும் படி அதிகாரிகளைக் கேட்ட போது, அரசின் மொத்த வருமானத்தை விடப் பல மடங்கு செலவு பிடிக்கும் என்று பார்ப்பன ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திட்ட மதிப்பு (எஸ்டிமேட்) காட்டினர். சோர்ந்து போயிருந்த பெருந்தலைவரிடம் பார்ப்பன அதிகாரிகளின் திட்ட மதிப்பில் வலுவான கட்டிடங்கள்
மிகுந்த செலவு பிடிக்கும் சோதனைச் சாலைகள், அதன் தொடர்பான உபகரணங்கள், மேஜைகள், நாற்காலிகள், பெஞ்சுகள், டெஸ்க்குகள் இன்னும் இது போன்ற பல இடம் பெற்று இருப்பதைச் சுட்டிக் காட்டி இவை எல்லாம் தேவையில்லை என்றும் அரசின் செலவாக ஆசிரியைரை நியமிப்பதும், கரும்பலகை மற்றும் சாக்பீஸ் கொடுத்தால் போதுமானது என்றும் பள்ளியை மரத்தடியிலோ, கீற்றுக் கொட்டகையிலோ, அல்லது அவ்வூர் மக்களின் வசதிப்படி எங்கு வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளட்டும் என்றும் கல்வித் தந்தை நெ.து.சுந்தரவடிவேலு கூறினார். புத்தொளி பெற்ற பெருந்தலைவரும் சுறுசுறுப்பாக செயலில் இறங்கினார்.

அதிமேதாவிகளான பார்ப்பன ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்குத் தோன்றாத இந்த யோசனை சாதாரண மனிதராக இருந்த நெ.து.சு. அவர்களுக்கு எப்படித் தோன்றியது?

அது போல் தான் திறமைக் குறைவான பார்ப்பனர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பிவிடக் கூடாது என்றும் இதற்கு ஒத்துழைப்பு தர மறுக்கும் பார்ப்பனர்கள் அந்த தேசத் துரோகச் செயலுக்காகக் கொடூரமாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மனதில் தேசபக்தியை நிலைநிறுத்திச் சிந்தியுங்கள். நெ.து.சு. அவர்களுக்குத் தோன்றியது போல் சமூக நீதிக்குச் சார்பான அனைத்து விஷயங்களும் தெளிவாக விளங்கும். சமூக நீதிக்கு எதிரான சிந்தனைகளையே மனதில் நிலை நிறுத்திக் கொண்டு இருந்தால் பார்ப்பன ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குத் தோன்றாமல் போனது போல் உங்களுக்கும் தோன்றாமலேயே போகும். இதை ஆத்திக நாத்திக வாதங்களுடன் ஒப்பி்ட்டுக் குழம்ப வேணடாம்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.