வழக்கம்போல் கல்வித்தரத்தின் மீதான தனது தாக்குதலை தமிழக அரசு மீண்டும் தொடுத்துள்ளது. +2 பாடத் திட்டத்திலிருந்து சில பாடங்களைக் குறைத்தது போல் தற்போது பத்தாவது வகுப்பு விஞ்ஞான பாடத்திட்டங்களில் சில பாடங்களைக் குறைக்கும் ஒரு அறிவிப்பினை தமிழக அரசு செய்துள்ளது. வழக்கம்போல் பெற்றோர், மாணவர் மற்றும் ஆசிரியரின் விருப்பப்படி இதனைச் செய்துள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

மாணவர் - பெற்றோர் விருப்பம் என்ற பொய்யான வாதம்

நமது தமிழக அரசியல்வாதிகளைப் பொருத்தவரையில் சில நிரூபிக்க முடியாதவை என்று தெளிவாகத் தெரிந்த விசயங்களை மீண்டும் மீண்டும் எந்த வகையான மன உறுத்தலும் இன்றி தங்களைப் பற்றியும் தங்கள் தலைவர்களைப் பற்றியும் கூறுவது வழக்கம். ஏழரைக்கோடி தமிழ் மக்களின் தலைவன் என்று தங்கள் தலைவர்களைப்பற்றி கூறுவார்கள் அவ்வாறு கூறுகையில் ஒரு நாட்டின் அனைத்து மக்களுமா தங்கள் தலைவனின் அபிமானிகள், ஆதரவாளர்கள் என்ற உணர்வே அவர்களிடம் சிறிதும் இருக்காது. மக்களும் இவர்களின் இது போன்ற கூற்றுகளுக்கு ஒரு மதிப்பும் தருவதில்லை. அதைப் போன்றுதான் தற்போது 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தைக் குறைப்பதற்கு இவர்கள் முன் வைத்துள்ள சாக்கு ஆசிரியர் மாணவர், பெற்றோரின் விருப்பம் என்பதாகும்.

பெற்றோரைப் பொருத்தவரையில், பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற அமைப்பினை பள்ளிகள் தோறும் ஏற்படுத்த வேண்டும் என்ற விதி முன்வைக்கப்பட்டாலும் அது ஆக்கப்பூர்வமான விதத்தில் எங்கும் அமுல்படுத்தப்படுவதில்லை. அரசு நிதி ஒதுக்காதிருக்கும் சூழ்நிலையில் பள்ளிகளுக்கு புது வசதிகளைச் செய்து தருவதற்கு தேவையான நிதியை திரட்டுவதே அந்த அமைப்பின் பெயரில் அவ்வப்போது நடைபெறுகிறது.

இதைத் தவிர அரசுப் பள்ளிகளில் தங்களதுப் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு இருக்கும் பாடங்களின் கடுமையை உணர்ந்து அதனை குறைக்க வேண்டும் என்று கோரக்கூடிய அளவிற்கு கல்வி உணர்வு பெற்றவர்களாக உள்ளனர் என்பது போன்ற ஒரு சித்திரத்தை அரசு முன்வைக்கிறது. அவர்கள் கோரிக்கையின் அடிப்படையிலேயே பாடங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன என்ற தோற்றத்தையும் உருவாக்குகிறது. இது எவ்வளவு மூடி மறைத்துக் கூறினாலும் நிலவும் எதார்த்த சூழ்நிலையோடு சுத்தமாக ஒத்துப் போகாததாகும்.

அதைப் போன்றதே இந்தப் பாடக் குறைப்பு மாணவர் விருப்பத்தின் அடிப்படையில் நடந்துள்ளது என்ற கூற்றும். அரசுப் பள்ளிக் கூடங்களில் பாடத்திட்டத்தில் உள்ள அனைத்துப் பாடங்களையும் முழுமையாக குறிப்பிட்ட கல்வி ஆண்டுக்குள் நடத்தி முடிப்பது என்பது கூட நடைபெறுவதில்லை. குறிப்பாக எதைஎதைப் படித்தால் மாணவர்கள் தேர்ச்சி பெறும் அளவிற்கு மதிப்பெண்கள் பெற முடியும் என்ற அடிப்படையிலேயே பாடங்கள் அங்கு கற்பிக்கப்படுகின்றன. அதுவும் கூட பல பள்ளிகளில் நடைபெறுவதில்லை.

கற்பித்தலின் நிலை இவ்வாறு இருக்கும் போது மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் விசயங்களில் ஒரு பெரிய ஈடுபாடோ, ஆர்வமோ உருவாவதற்கு ஒரு வாய்ப்பும் இருக்கப்போவதில்லை. எனவே அத்தகைய ஈடுபாடு மற்றும் ஆர்வத்துடன் ஒரு ஆக்கபூர்வமான விதத்தில் சில பாடங்கள் மேற்படிப்பிற்கோ அல்லது வாழ்கைக்கோ உதவக்கூடியவை அல்ல என்று உணர்ந்து அவற்றை நீக்குமாறு கூறும் நிலையில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உள்ளனர் என்பது போன்ற அரசு தீட்டும் சித்திரமும் அப்பட்டமான பொய்யே.

மேலும் கல்லூரிகளிலேயே மாணவர் பேரவைத் தேர்தல்கள் தற்போது நடைபெறுவதும் இல்லை. மாணவர் அமைப்புகள் எதுவும் அங்கு பெருமளவு செயல்படுவதும் இல்லை. இந்நிலையில் மாணவர்களின் கருத்துக்களை தொகுத்து அரசிடம் முன் வைக்கும் அளவிற்கு பள்ளிகளில் மாணவர் அமைப்புகள் இருந்து அவை அரசிடம் வேண்டுகோள் வைத்து, அதன் மூலமாக அரசு பாடத்திட்டத்தைக் குறைத்துள்ளது என்று கருதுவதற்கும் கடுகளவு கூட இடமில்லை.

அப்படியானால் யாருடைய விருப்பத்தின் அடிப்படையில் இந்த பாடக்குறைப்பு நடைபெற்றுள்ளது. ஏனெனில் அரசாங்கமே கல்வி விசயங்களில் அக்கறையுடன் இருந்து அதுவே தேவைப்படும் மாற்றங்களைக் கல்வித் திட்டத்தில் ஆக்கப்பூர்வமாக கொண்டுவந்த கால கட்டம் மலையேறிவிட்டது. தற்போதைய அரசாங்கங்களின் கவனம் எல்லாம் கல்விக்கு அவை செலவிடும் தொகைகளை எவ்வாறு குறைப்பது என்பதில் தான் உள்ளது.

ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அமைப்புகளின் வற்புறுத்தலே

இந்நிலையில் இந்தப் பாடக் குறைப்பு யாருடைய வற்புறுத்தலின் அடிப்படையில் நடைபெற்றுள்ளது என்று பார்த்தால் அது ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அமைப்புகளின் வலியுறுத்தலின் அடிப்படையில்தான் நடைபெற்றுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். ஏனெனில் தேர்ச்சி விகிதங்கள் குறையும் போது ஆசிரியர்கள் சரிவர பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை என்ற விமர்சனம் பெரிதாக எழுகிறது.

அரசுப் பள்ளிக் கூடங்களில் ஒழுங்காக ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை என்ற எதார்த்த நிலையினால் புழுங்கிக் கொண்டிருக்கும் மக்கள் தேர்வு முடிவுகள் வரும்போதும் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் போதும் அவர்களுடைய மனப்புழுக்கத்தின் வேகத்தை அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பால் தவிர்க்க முடியாமல் திருப்புகிறார்கள். அதன் காரணமாக தங்களுடைய கடமையை சரிவர செய்யாத போக்கிலிருந்து தங்களை மாற்றிக் கொள்ள விரும்பாத ஆசிரியர்களும், அவர்களின் கடமையை சரியாக செய்ய வேண்டும் என வற்புறுத்த திராணி இல்லாமல் போய்விட்ட ஆசிரியர் அமைப்புகளும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்காக எந்தெந்தப் பாடங்களை ஆசிரியர்களால் சரிவர நடத்த முடியவில்லையோ அந்தப் பாடங்களை நீக்கிவிடும்படி அரசிடம் தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி கேட்டுக் கொள்கிறார்கள். அதனால் அரசும் பாடங்களைக் குறைக்கிறது.

சமூகத்தின் மற்ற பகுதி மக்களின் கோரிகைகளை எல்லாம் அத்தனை எளிதில் நிறைவேற்ற முன்வராத அரசாங்கம் இந்த ஆசிரியர் அமைப்புகளின் கோரிக்கையை மட்டும் உடனடியாக முன்வந்து அவ்வப்போது நிறைவேற்றி வைப்பதன் காரணமும் ஆசிரியர் அமைப்புகள் அரசிடம் கொண்டுள்ள செல்வாக்கின் பின்னணியும் என்ன?

ஆசிரியர்களினால்அடையும் தேர்தல் ஆதாயம்

மற்ற அரசு ஊழியர்களைப் போல் ஆசிரியர்களை அரசாங்கங்கள் பார்ப்பதில்லை. அதற்கு முக்கிய காரணம் தேர்தல்களில் மிக முக்கிய கீழ்மட்டப் பணிகளை செய்யும் பொறுப்பு ஆசிரியர்கள் வசமே ஒப்படைக்கப்படுகிறது. எனவே அவர்களுடைய கோரிக்கைகளை கணக்கில் எடுப்பது அரசாங்கங்களைப் பொருத்தவரை மிக முக்கியமான ஒன்றாகவேபடுகிறது. மேலும் அவர்களது கோரிக்கைகள் நிதி ஒதுக்கீடு சம்மந்தப்பட்டதாக இருந்தால் அதனை உடனடியாக நிறைவேற்றுவது அரசாங்கங்களுக்குச் சிரமமானதாக இருக்கும். ஆனால் பாடங்களை குறைப்பது என்பது அவ்வாறு அரசாங்கம் நிதி எதுவும் ஒதுக்க தேவையில்லாத விசயமல்லவா. எனவேதான் அவர்களின் இக்கோரிக்கை இத்தனை எளிதில் நிறைவேற்றப்படுகிறது.

தற்போதுள்ள அரசாங்கங்களைப் பொருத்த வரையில் அவற்றிற்கு மக்கள் அறியாமையில் மூழ்கியிருந்தால் அதுதான் நல்லதாக இருக்கும். அறியாமைக்கு எதிராக இருப்பது கல்வியே. ஆனால் அந்தக் கல்வியை அறவே தரமுடியாது என்று அரசாங்கங்கள் கைகழுவமுடியாது. அந்நிலையில் அதன் தரக்குறைவுக்கு வழிவகுக்கும் ஒன்றைச் செய்வது அதுவும் அதற்கான உரிய பிரதிபலனை தேர்தல் சமயங்களில் ஆற்றவல்ல ஒரு சமூகப் பிரிவினருக்கு செய்வது உடன்பாடான விசயமாகத்தானே இருக்கும். அதனால்தான் எவ்வித தயக்கமுமின்றி இந்த அறிவிப்பினை அரசு வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்படும் போட்டியிடும் திறன்

ஆனால் இந்த பாடக்குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் தமிழ்நாட்டு மாணவர்களின் போட்டியிடும் திறன் கடுமையாக பாதிக்கப்படும். ஏற்கனவே அரசுப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.சி, ஐ.சி.எஸ்.சி போன்ற பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவர்களோடு போட்டியிடும் திறன் குன்றியவர்களாகவே உள்ளனர். மேலும் இதிலிருக்கக்கூடிய இன்னொரு விசயம் மாநில அரசுப் பாடத்திட்டத்தில் படிப்பவர்களைத் தவிர பிற பாடத்திட்டங்களின் அடிப்படையில் கல்வி கற்பிப்பவை அனைத்துமே தனியார் பள்ளிகள்தான்.

எனவே அரசின் இந்த நடவடிக்கை அரசு பாடத்திட்டத்தில் படிப்பவர்களை கல்வித்தரம் குன்றியவர்களாக்கி வேலை வாய்ப்பு ஏணியில் ஏறமுடியாதவர்களாக இன்னும் அதிகமாக ஆக்கிவிடும். மேலும் இது படிப்படியாக இரண்டு வகைக் கல்விமுறையை சமூகத்தில் நிலவச் செய்துவிடும். அதாவது ஏழை எளிய மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பெறும் கல்வி அதாவது மாணவர்களை எழுதப் படிக்க மட்டும் தெரிந்தவர்களாக்கும் ஒருவகைக் கல்வி; தனியார் பள்ளிகளில் வேலை வாய்ப்பினைப் பெற்றுத்தர வல்ல இன்றைய விஞ்ஞானத் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தேவைப்படும் அனைத்துப் பாடங்களையும் கற்பிக்கும் மேலே விவரித்த மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.சி, ஐ.சி.எஸ்.சி கல்வி என்ற இன்னொரு வகைக் கல்வி என இரு வகைக் கல்வி முறைகளை கொண்டுவந்து விடும் .

கல்வி மேம்பாட்டைக் கருதாத ஆசிரியர் அமைப்புகளின் போக்கு

ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் அவர்களது அமைப்புகள் பல காலமாகவே கல்வித்தர மேம்பாட்டில் அக்கறை செலுத்துவதில்லை. தங்கள் உறுப்பினர்களை கல்வி வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களாக ஆக்க நினைப்பதுமில்லை. அவர்களுக்கு பொருளாதார ரீதியான பலன்களை பெற்றுத் தருவதிலேதான் அக்கறை உள்ளவைகளாக அவை உள்ளன. அரசின் கல்வியின்பால் அக்கறையில்லாத தன்மையினை இதற்குச் சாதகமாக இவ்வமைப்புகள் பயன்படுத்துகின்றன.

இதன் விளைவாக தங்கள் அறிவைத் தொடர்ச்சியாக விஞ்ஞான வளர்ச்சிக்கு உகந்த விதத்தில் செழுமைப்படுத்த முடியாததால் பல ஆசிரியர்களுக்கு புதிதாக அறிமுகம் செய்யப்படும் பாடங்களை நடத்த முடியாமலும் போய்விடுகிறது. வெறுமனே பாடப்புத்தகத்தை வாசித்துவிட்டுச் செல்வது, கண்டிப்பானவர்கள் போல் தோற்றம் காட்டி புரியாதவற்றை மாணவர்கள் கேட்டுத்தெரிந்து கொள்ளவே முடியாத நிலையை உருவாக்குவது போன்ற விரும்பத்தகாத போக்குகளைத் தவிர்க்க முடியாமல் பல ஆசிரியர்கள் கையாளுகின்றனர்.

இதனால் நாடு விடுதலை பெற்ற காலத்தில் ஆசிரியர்கள் குறித்து மக்களிடம் நிலவிய ஒரு உயர்ந்த கருத்து இன்று இல்லாமல் போய் தங்களின் அப்பட்டமான பொருளாதாரப் பிரச்னைகளுக்காக போராடுபவர்கள் என்ற எண்ணம் அவர்கள் குறித்து ஏற்பட்டுள்ளது.

வேலை செய்பவருக்கு உரிய ஊதியமில்லை - ஊதியம் பெறுபவர் உரிய விதத்தில் கடமையாற்றுவதில்லை

இது ஒரு எதிர்மறையான நிலையை உருவாக்குகிறது. அதாவது தனியார் பள்ளிகளில் மிகக் குறைந்த ஊதியத்தினைப் பெற்றுக் கொண்டு மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்களும், உயர்ந்த தேர்ச்சி விகிதமும் பெற உகந்த விதத்தில் அல்லும் பகலும் தங்களைத் தயார் செய்து கொள்ள நிர்வாகத்தால் நிர்ப்பந்திக்கப்படும் ஆசிரியர்கள் ஒரு புறம்; ஓரளவு நல்ல ஊதியம் பெற்றுக் கொண்டு கல்விப் பணியைச் சரிவரச் செய்யாத அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மறுபுறம் என்ற முரண்பாடான நிலையை உருவாக்கியுள்ளது.

தனியார் பள்ளிகளை நோக்கித் தள்ளப்படும் ஏழை எளிய பெற்றோர்

இதனால் கல்வி மூலம் தான் தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை நிச்சயமானதாக ஆக்கமுடியும் என்ற நிலையிலுள்ள பெற்றோர் அவர்களது வருமானம் எவ்வளவு குறைவானதாக இருந்தாலும் அதில் பெரும்பகுதியைச் செலவழித்து தனியார் பள்ளிகளுக்கு அவர்களை அனுப்ப வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அரசு கல்விக்கென செலவழிக்கும் தொகையின் பலன் அவர்களுக்கு கிட்டுவதில்லை. தற்போதுள்ள ஆசிரியர் அமைப்புகள் தனியார் பள்ளிகளில் மிகக் குறைந்த ஊதியம் கொடுத்துச் சுரண்டப்படும் ஆசிரியர்களின் உரிய ஊதியம் பெறும் உரிமைக்குப் போராடுவதற்குப் பதிலாக, அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சலுகைகளுக்காகப் போராடுபவையாகிவிட்டன.

இந்த சலுகைகளைத் தொடர்ச்சியாகப் பராமரித்து வாங்கித் தந்தால் தான் உறுப்பினர் எண்ணிக்கையைத் தக்க வைத்து அதன் தலைவர்களாக விளங்குபவர்கள் அதிகார மையங்களாக செயல்பட முடியும் என்பதற்காக அரசின் கல்வி விரோத நடவடிக்கைகளுக்கு மறைமுகமாகத் துணை போகக் கூடியவர்களாகவும், போராட்டப் பாதையைக் கைவிட்டு சிலவற்றை விட்டுக் கொடுத்து சிலவற்றைப் பெறுவோம் என்ற அடிப்படையில் செயல்படுபவையாகவும் ஆகிவிட்டன. அவர்களால் விட்டுக் கொடுக்கப்படுவது கல்வி நலன் குறித்த விசயங்களாகவும், பெறப்படுவது பொருளாதாரக் கோரிக்கைகளாகவும் கடமை தவறுதலுக்கு நடவடிக்கை எதுவும் இருக்காது என்ற உத்திரவாதமாகவுமே உள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை குறைத்து வேலை வாய்ப்புச்சந்தையில் அவர்களை போட்டியிடும் திறன் அற்றவர்களாக ஆக்கும் தமிழக அரசின் இந்தப் பாடக் குறைப்பு அறிவிப்பை ஏழை எளிய மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் கல்வியின்பால் அக்கறை கொண்ட அனைவரும் ஒருமித்த குரலில் கண்டிப்பது அவசியமாகும்.

வாசகர் கருத்துக்கள்
Jackulin Saraswathi
2009-02-19 10:43:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Intha katturaiel thangal koooriyullathu oralavu unmai irrunthalum thangal sila adipadai problems patri yoosika vendum.Conventuku pogum manavarkalukkum govt school manavargalaium teacherkalaiyum eppadi ondraka mathipeedu seikireergal endru theriyavillai. ungaludaiya parviyeil sambalam mattumae therikirathu. Nadaimurai valkaiyel govt school students IQ vum convent students IQ ondra? parental care,family sutiation ,economy ,ifrastucture ,family problems,communal,social problems,etc.. Elavasamaka books, food, egg, nutrition uniform. koduthum avargalal padikamudiyathu, karanam elementary education system sariyillai.ippoluthu ABL methodil padikirargal .ithoda villaivu avargal 10 std varumpothu theriyum poruthuirunthu parungal.Ipothu ullathaivida pathalathil poividum.Karanam ovoru schoolilium oru nadaimurai ullathu.3std varai old method of teaching.4std-ABL marupadi 5-std nomal old method .Intha rangeil ponal kalvi tharam eppadi irrukum? melum 1.2. normal scooling 3.4.ABL 5-std old method .ENNA THALAI SUTRUKIRATHA ? inthuthan kadantha 3-4 andukalaga Tamil natil ulla govt school nadaiperum KALVI KULARUPADI ipadi irunthal epadi manavarkal padika mudiyum? teachers oru varudathil 20 natkal kattayamaka traininng poganum. oru schoolil 5 teacher irunthal 5*20=100 nal School ennavathu? ithai illamal rationcard ,census, ellection, votterlist ect.. Intha thollai ethuvumae illamal conventil teaching, mugup, test ,correction .{ Neeril Sendru schoolil aivu siethal innum neraiya thakaval kidaikum.} matrukaruthu matri yosithu matrathai konduvaravum. valthukal !!

மாற்றுக்கருத்து!
2009-03-01 12:56:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஜாக்குலின் சரஸ்வதி அவர்களுக்கு,
இந்தக்கட்டுரையில் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புவது, “ ... அரசின் இந்த நடவடிக்கை அரசு பாடத்திட்டத்தில் படிப்பவர்களை கல்வித்தரம் குன்றியவர்களாக்கி வேலை வாய்ப்பு ஏணியில் ஏறமுடியாதவர்களாக இன்னும் அதிகமாக ஆக்கிவிடும். மேலும் இது படிப்படியாக இரண்டு வகைக் கல்விமுறையை சமூகத்தில் நிலவச் செய்துவிடும். அதாவது ஏழை எளிய மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பெறும் கல்வி அதாவது மாணவர்களை எழுதப் படிக்க மட்டும் தெரிந்தவர்களாக்கும் ஒருவகைக் கல்வி; தனியார் பள்ளிகளில் வேலை வாய்ப்பினைப் பெற்றுத்தர வல்ல இன்றைய விஞ்ஞானத் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தேவைப்படும் அனைத்துப் பாடங்களையும் கற்பிக்கும் மேலே விவரித்த மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.சி, ஐ.சி.எஸ்.சி கல்வி என்ற இன்னொரு வகைக் கல்வி என இரு வகைக் கல்வி முறைகளை கொண்டுவந்து விடும் .” என்பதையே.

தாங்கள் கூறுவதுபோல் ஏ.பி.எல் முறை மூலமும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் இன்னும் மோசமாகப்போவது நிச்சயம். அந்த முறை எவ்வளவுதான் உயர்ந்த கண்ணோட்டங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் இன்று நம்நாட்டில் நிலவும் சமூகச்சூழலை மாற்றாமல், அரசுப்பள்ளி ஆசிரியர்களின் தொழிற்சங்க மனப்பான்மையை மாற்றி சேவை மனப்பான்மையை உருவாக்காமல் அதன் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் உயரப்போவதில்லை.

நீங்கள் கூறுவதுபோல் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கல்வி சாராத பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதும் அதனாலும் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது என்பதும் உண்மையே. ஆனால் அவ்வாறு ஆசிரியர்கள் கல்வி சாராத பணிகளுக்கு அனுப்பப்படும்போது ஆசிரியர் அமைப்புகள் பயணப்படி போதவில்லை; கூடுதல் படி வேண்டும் என்றுதான் இதுநாள்வரை கோரியிருக்கிறார்களே ஒழிய, இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது என்று அவர்கள் குரல் கொடுத்ததில்லை என்பதே வேதனைக்குரிய உண்மை. அங்கொரு ஆசிரியர் இங்கொரு ஆசிரியர் இதற்காக மனவருத்தப்படுபவர்கள் இருக்கலாம். ஆனால் பொதுவான நிலைமை இதுதான். இதையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

த.சிவக்குமார்,
ஆசிரியர்
மாற்றுக்கருத்து!

dr.premkumar
2009-03-10 08:15:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

good jack.but one thing you are putting in wrong direction that is the quality of govt school students.they are not able to cooperate with the matriculation.,etc going students.first of all we should understand no human or no student is not being to any other human being or students.given environment only changing their abilities or wellbeing.here this article is based on to change the environment by perfect functiong of the govt teachers to make these students to competant enough to others.otherwise all the reasons that govt teachers are puttingforth is just escaping from their assighned duties incontrast to their provided facilities.let govt teachers understand their duties and perform for the improvement of students in this given negative capitalist society.thank you.

JackulinSaraswathi
2009-03-13 08:00:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Matriculation -state board ethuvaka irunthalum 100% perfect kidaiyathu.CBSCE ilum fail avathum nadaimurai ill ullathu than anal kutram solvathu govt teacher kalai thanae? convent il poi ketkamudiyuma? govt teachers perfect kidaiyathuthan .Avargal works i divert seiya nan melae kooriya karanagalum ullathu.Students result iku high schoolil punishment enbathai vida elementary levelil itha nadavadikai edukanum. Teachers iku TALENTS TEST, WORK REWIEW, CONFIDENTIAL REPORT pondra nadaimuraikalai pinpattra vendum.Licence koduthu yearly rewiew pondra kadumaiyana nadavadikai vendum .Ithu ellavatraiyum vida SAMACHIR KALVI ONDRU THAN THEERVU.

Pin It