‘நீதிக் கட்சி’ எனப் பரவலாக அறியப்படும் ‘தென்னிந்திய லிபரல் பெடரேஷனின்’ நூறாண்டு நிறைவு விழாத் தொடங்க இன்னும் சில ஆண்டுகளே உள்ளன. நீதிக்கட்சியிலிருந்து தொடங்கி ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்காலமாக தமிழக அரசியல், பண்பாட்டு, பொருளாதாரத் தளங்களில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ள திராவிட இயக்கத்திற்குச் செட்டிநாடு பல்வேறு வகையான பங்களிப்புகளைச் செய்துள்ளது. நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், எம்.ஜி.ஆர்.தலைமையில் இருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றில் மிகச் செல்வாக்குப் பெற்றிருந்த தலைவர்களையும் சிந்தனையாளர்களையும் செட்டிநாடு வழங்கியுள்ளது. நீதிக் கட்சியைச் சேர்ந்த தலைவர் பி. டி. ராஜன் போன்றோரால் தொடங்கிவைக்கப்பட்ட தமிழிசைக் கிளர்ச்சிக்குப் பருண்மையான வடிவம் கொடுத்து, தமிழிசைச் சங்கத்தை நிறுவிய ராஜா அண்ணாமலைச் செட்டியாரைத் தமிழகத்திற்கு வழங்கியதும் செட்டிநாடே.
திராவிட இயக்கம் இன்னும் ‘வரலாறாக’ஆகவில்லை. எனினும் அதில் எத்தனையோ வரலாற்று மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் முதலியனவற்றை அறிந்து கொள்வதற்கும் செட்டிநாட்டைச் சேர்ந்தவர்தான் துணைபுரிகின்றார். கடல் கடந்து வாணிபம் புரிந்த, மலேயா விலும், பர்மாவிலும்,இலங்கையிலும் கொடி கட்டிப் பறந்த, கானாடுகாத்தான் கோட்டையிலோ, செட்டிநாட்டின் வேறு பகுதி யிலோ ஒரு ஏக்கர், ஒன்றரை ஏக்கர் பரப்பளவுக்கு மாளிகைகளைக் கட்டி வாழ்ந்த குடும்பம் எதனையும் சேராத, உயர்நிலைப்பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காத ஒரு பாமரர் தான்,அவர் பிறக்க நேரிட்ட அந்த நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த பல பெரிய மனிதர்களைத் தமிழக வரலாறு மறந்து விடாமல் செய்வதற் கானஆழமான அத்திவாரத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார்.
நகரத்தார் சமூகத்தில் அந்தக் காலத்தில்,ஏன் இப்போதும்கூட, தடுக்கி விழுந்தால் ஒரு ‘முத்தையா’ வைப் பார்க்கலாம். கொங்கு நாட்டில் ‘பழனிசாமி’களைப் போல, ஒரு முத்தையாவை இன்னொரு முத்தையாவிடமிருந்து வேறுபடுத்தி அறிந்து கொள்வது எவ்வாறு?அதிலும் ஒரே பகுதியைச் சார்ந்த இரண்டு ‘முத்தையா’க்கள் புத்தகம், பத்திரிகைத் தொடர்பான விடயங்களில் அக்கறை கொண்டவர்களாக இருக்கும்போது? சென்ற நூற் றாண்டில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு ‘முல்லை முத்தையா’வைத் தெரியும். அவர் புத்தகப் பதிப்பாளர். அருமையான புத்தகங்களை வெளியிட்டவர். எனவே நமது முத்தையா, அவரிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட ‘ரோஜா’ என்னும் அடைமொழியைத் தன் பெயருடன் இணைத்துக்கொண்டார். அது ஒன்றும் பெரிய பட்டமல்ல; விளம்பரப் பலகைகள் எழுதுவதைத் தொழிலாகக் கொண்டிருந்த அவரது சிறுநிறுவனத்தின் பெயர் ‘ரோஜா ஆர்ட்ஸ்’.
2
இன்னும்‘பாடல் பெறாத’அந்த மாமனிதரைப் பற்றிய முழுமையான வரலாறு ஏதும் எழுதப்படவில்லை.கிடைத்தவை எல்லாம் வாய்வழிச் செய்திகளே. அவர் விளம்பரப் பலகை யன்றை எழுதுகையில் ஏதோ ஒரு நூலின் பழம் பதிப்பொன்றைப் பார்த்திருக்க வேண்டும்.; அல்லது ஏதோ ஒரு பத்திரிகை நறுக்கொன்று அவரது கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். இன்னும் சில ஆண்டுகள் சென்றால்,அவை வரலாற்று ஆவணக் களஞ்சியத்தில் சேர்க்கப்படும் தகுதியைக் கொண்டி ருக்கின்றன என்னும் தொலைநோக்குப் பார்வை அவரிடம் தோன்றியிருக்கக்கூடும்.’ விளம்பரப் பலகைகள்’ எழுதுவதை விட்டுவிட்டுப் பழம் புத்தகங்களை,பத்திரிகைகளைத் திரட்டத் தொடங்கினார்.அச்சடிக்கப்பட்ட ஒவ்வொரு காகிதத்திலும் பயனுள்ள விடயம் ஒன்று இருக்கிறது என்னும் அவரது நம்பிக்கை, சென்னை நகரத்திற்குப் பலமுறை பயணம் செய்ய வைத்திருக்கிறது.
சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு அருகிலிருந்த ‘மூர் மார்க்கெட்டிலிருந்த (அது இருந்தபோது உயிர் வாழ்ந்தவர்கள், அதைப் பார்க்கக் கொடுத்துவைத்தவர்கள் பாக்கியவான்கள்) பழைய புத்தக வியாபாரிகளிடமிருந்து அவர் விலை கொடுத்து வாங்கிச் சென்றவை அவரது சேமிப்பு வங்கி (புத்தக வங்கி). அன்று அவரது சேகரிப்பின் அருமையை, மதிப்பை அறிந்திருந்த வர்கள் மிகச் சிலரே. அறுபத்தியாறு ஆண்டுகள்(1926--_1992) வாழ்ந்த அந்த அற்புதமான மனிதர், கோட்டையூரில் நிறுவிய ஆய்வகத்தில் ஆயிரக்கணக்கான நூல்களையும் ஆவணங்களையும் விட்டுச் சென்றார். ‘க்ரியா’ ராமகிருஷ்ணன், சென்னைப் பல்கலைக் கழக நூலகவியல்துறைப் பேராசிரியர் பி.சங்கரலிங்கம், சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த பேரறிஞர் ஏ. கே. ராமானுஜம் போன்றோர் முயற்சி எடுத்து, சிக்காக்கோ பல்கலைக்கழகத்தின் உதவியுடன் ரோஜா முத்தையா விட்டுச் சென்ற அறிவுக் களஞ் சியத்தைச் சென்னைக்குக் கொண்டு வந்தனர்.
தமிழ் மண்ணில் வேர் கொண்டுள்ள இந்த ஆய்வகம் தமிழ் நாட்டிலேயே இருக்கட்டும் எனப் பெருந்தன்மையோடு முடிவு செய்தது சிக்காக்கோ பல்கலைக்கழகம். கோட்டையூரிலிருந்து சென்னையின் வடமேற்குப் பகுதிக்கு மாற்றலாகி வந்த இந்த ஆலயம் இப்போது அதே சென்னையின் தென்கிழக்குப் பகுதிக்குச் சில ஆண்டுகளுக்குமுன் இடம்பெயர்ந்துள்ளது.
பின்னர் வரலாற்றறிஞர் எஸ். முத்தையா (சென்னை மாநகரத் தின் தோற்றம், வளர்ச்சி பற்றிய அருமையான நூல்களை எழுதி யுள்ளவர்), தியடோர் பாஸ்கரன் போன்றோரும் இந்த நூலகத்தின் வளர்ச்சிக்குத் தம் பங்களிப்பைச் செய்துள்ளனர். நூலகத்தின் தற்போதைய இயக்குநர் திரு சுந்தர் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டபின், இன்னும் ஏராளமான அறிவுச் செல்வங்கள் இந்த அறிவாலயத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. உதிர்ந்து பொடிப் பொடியாகிக் கொண்டிருக்கும் புத்தகங்கள், பத்திரிகைகள் எல்லாம் நவீன அறிவியல் தொழில்நுட்பம் வழியாகப் புத்துயிர் பெற்று நுண்படங்களாக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில்,புது டில்லியிலுள்ள நேரு அருங்காப்பக நூலகத்தி லுள்ளவை போல அனைத்துத் தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டுள்ள ஒரே ஆய்வு நூலகம் இது மட்டும்தான்.
3
ஆய்வாளர்கள் படிப்பதற்கும் தங்களுக்குத் தேவையான தரவுகளைத் தேடிக் கண்டறிவதற்கும், தேவையான ஆவணங் களின் புகைப்படப் படிகளையோ,நுண்படங்களையோ பெறுவதற்கும் தனியாக ஒரு அறை ‘ஏ.கே.ராமானுஜம் வாசக அறை’ இங்கு உள்ளது. அண்மையில் தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் சிந்துவெளி நாகரிகம், தமிழ் பிராமி எழுத்து முதலியன தொடர்பாகத் தான் சேர்த்து வைத்திருந்த அனைத்து நூல்களையும் ஆவணங்களையும் ரோஜா முத்தையா நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அதனையட்டி, இந்த நூலகத்தில் ‘சிந்துவெளி ஆராய்ச்சி மையம்’ உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தில் அறிவு பல்வேறு வடிவங்களில் - நூல்களாக, பத்திரிகை நறுக்குகளாக, பழம் சஞ்சிகை களாக, திரைப்பட, நாடக விளம்பர ‘நோட்டீசு’களாக, சினிமா சுவரொட்டிகளாக, திருமண அழைப்பிதழ்களாக, தனிமனிதர்கள் தங்களுக்கிடையே எழுதிய கடிதங்களாக, பழைய கணக்குப் பேரேடுகளாக, கிராமபோன் இசைத்தட்டுகளாகபாதுகாக்கப் படுகிறது. பழைய கணக்குப் பேரேடுகள் எப்படி ‘அறிவின்’ வடிவங்களி லொன்றாக இருக்க முடியும்? முதலில், இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளம் மக்களுக்கு நமது நாட்டு நாணயம் ரூபாய்,அணா, காசு (பைசா) என்று இருந்தது தெரியுமா?
ஒரு ரூபாய்க்கு 16 அணா, ஒரு அணாவுக்கு நான்கு காலணா, ஒரு காலணாவுக்கு 16 காசு. உள்நாட்டு ,வெளிநாட்டு வாணிபத்தில் நீண்ட மரபுடையது நமது தமிழகம் என்பது பொதுவாகப் பலரும் அறிந்த செய்தி. ஆனால், 100 - 120 ஆண்டுகளுக்கு முன் பற்று வரவுக் கணக்குகள் எப்படி எழுதப்பட்டன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நாடக நிகழ்ச்சிக்கான விளம்பர நோட்டீசுகள் எப்படி ‘அறிவின் வடிவமாக’ இருக்க முடியும்? இவற்றிலிருந்து பல தகவல்களைத் திரட்ட முடியும். எத்தகைய நாடகங்கள் முன்பு பிரபலமாக இருந்தன, அவற்றின் புரவலர்கள் யார் என்பன போன்ற தகவல்கள் மட்டுமல்ல, எந்த சாதியைச் சேர்ந்தவர்களுக்கு நாடகம் பார்க்க அனுமதி தரப்படவில்லை என்னும் தகவலும் கிடைக்கும். பழைய புகைப்படங்களும் இங்கு முக்கிய ஆவணங்களாகச் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1860-1864ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேய இராணுவ அதிகாரிகளிலொரு வராக இருந்த கேப்டன் லின்னேனியஸ் ட்ரைப் என்பார் எடுத்த, சென்னை சேத்துப்பட்டிலுள்ள ஸ்பர்டாங்க்குக்கு அருகில் இருந்த ஒரு இந்துக் கோவிலின் புகைப்படமும் அடங்கும்.அந்தக் காலத்தில் அங்கு எத்தனைப் பனைமரங்கள் இருந்தன!
இப்படிப் பல்வேறு வகையான ஆவணங்கள் ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் இந்த நூலகத்தில் உள்ளன.இதில் மிகத் தொன்மையானது 1804இல் அச்சிடப்பட்ட தமிழ் நூலான ‘கந்தரந் தாதி’. அச்சேறிய திருக்குறளின் எண்ணற்ற பதிப்புகள் இங்கே உள்ளன- யாழ்ப்பாணச் சைவ அறிஞர் ஆறுமுக நாவலர் பதிப்பித் தது உட்பட. சங்க இலக்கியமா, கம்ப இராமாயணமா, பெரிய புராணமா, பாரதியார் பாடல்களா, பாரதிதாசன் கவிதைகளா - பல்வேறு பதிப்புகள் ஆகியன இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.
4
அண்மைக் காலமாகத் திரட்டப்பட்டு வரும் பொருட்களில் பழைய இசைத்தட்டுகளும் அடங்கும். கிராமஃபோன் கருவியில் சுழல வைத்து இசைக்கப்பட்ட தட்டுகள், 1920 முதல் 1930 வரையில் வெளிவந்த பல இசைத்தட்டுகள் உள்ளன. எம்.கே.தியாகராஜ பாகவதரின் பாட்டுகள், பபூன் சண்முகத்தின் நகைச்சுவைப் பாடல்கள் முதலியன உள்ள இசைத்தட்டுகள் குறிப்பிடத்தக்கன. திரைப்பட இசை, கர்நாடக இசை ஆகியவற் றின் வளர்ச்சி, அவை பிரபல்யம் அடைந்த விதம் ஆகியனவற்றை ஆய்வு செய்பவர்களுக்கு இவை முக்கியமானவை. தமிழகத்தில் சமய நல்லிணக்கம் எவ்வாறு பேணப்பட்டு வந்தது என்பதற்கு இந்த இசைத்தட்டுகள் சாட்சியமாக விளங்குகின்றன. இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் முஸ்லீம் பாடல்களையும் முஸ்லீம் பாடகர்கள் முருகன் பற்றிய பாடல்கள் போன்ற இந்து சமயப் பாடல்களையும் அந்தக் காலத்தில் பாடியுள்ளனர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு உள் உந்துதலாகவும் முன்னோடியாகவும் இருந்தது பபூன் சண்முகத்தின் ‘காமிக்’ பாட்டுகள்.
இலக்கியம், நாட்டு மருத்துவம், சமயம், தத்துவம், நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் கலை, இதழியல், வெகுமக்கள் கலை, காந்தியம், பெண்ணியம், பெரியாரியம், வரலாற்றியல் எனப் பல் வேறு ஆய்வுத் துறைகளில் நாட்டமுடையோருக்குத் தோண்டத் தோண்ட குறையாத அறிவுக் கனிமங்கள் இங்கே உள்ளன.
திராவிட இயக்கத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள் வோருக்கு இன்றியமையாத அந்த இயக்க ஏடுகள் அரும்பாடு பட்டுச் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன: தந்தை பெரியார் 1925இல் தொடங்கி இடையில் ஏறத்தாழ இரண்டாண்டுக்காலம் நிறுத்தப் பட்டு (அந்தக் காலகட்டத்தில் தான் அண்ணாவின் ‘திராவிட நாடு’ தொடங்கப்பட்டது) 1949ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்டு வந்த ‘குடி அரசு’ இதழ்கள் கிட்டத்தட்ட அனைத்தும் ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ளன. அரசாங்க ஒடுக்குமுறையின் காரணமாக ‘குடிஅரசு’ நிறுத்தப்பட்டபோது, அதன் இடத்தை நிரப்புவதற்காகத் தொடங்கப்பட்ட ‘புரட்சி’,அந்த ஏட்டுக்கும் தொல்லைகள் வந்தவுடன்,அவை இரண்டின் இடத்தையும் எடுத்துக்கொண்ட ‘பகுத்தறிவு’ ஆகிய வார ஏடுகள் அனைத்தும் இங்கு உள்ளன. அதேபோல, அறிவியல், பகுத்தறிவு, பெண் விடுதலை முதலியன தொடர்பான கட்டுரைகள் அடங்கிய அறிவுக் களஞ்சியமான ‘பகுத்தறிவு’மாத இதழ்கள் (ஒன்றே ஒன்றைத் தவிர) அனைத்தும் இந்த நூலகத்தில் கிடைக்கின்றன. நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கக் களப் போராளியும் அற்புதமான சிந்தனை யாளருமான ஜே.எஸ்.கண்ணப்பரை ஆசிரியராகக் கோண்டு தொடங்கப்பட்ட தும் பின்னர் பெரியார் ஆசிரியர் பொறுப்பை மேற்கொண்டு நடத்தி வந்ததுமான நீதிக்கட்சி/சுயமரியாதை இயக்க நாளேடு ‘திராவிடன்’, நீதிக் கட்சியின் வார ஏடான ‘ஜஸ்டிஸ்’, 1940களில் பெரியார் தொடங்கிய ‘நியூ ஜஸ்டிஸ்’ ஆங்கில வார ஏடு, பின்னர் கி. வீரமணியை ஆசிரியராகக் கொண்டு தொடங்கிய ‘உண்மை’ ஏடு ஆகியவையும் இங்குள்ளன.
பிரெஞ்சிந்தியப் பகுதியாக இருந்த புதுச்சேரியில் சுயமரியாதை இயக்கம் காலூன்றி, வளர்ச்சியடைவதற்கு மூலகாரணமாக இருந்ததும் சா. குருசாமியை (குத்தூசி குருசாமியை) ஆசிரியர் களிலொருவராகக் கொண்டிருந்ததுமான ‘புதுவை முரசு’ இதழ்கள் கிட்டத்தட்ட அனைத்தும் இந்த நூலகத்தில் திரட்டி வைக்கப்பட்டுள்ளன. பாரதிதாசனின் புரவலரும் புதுவைப் பகுதி சுயமரியாதை இயக்கத் தூண்களிலொருவருமான தாழ்த்தப்பட்ட வகுப்புத் தலைவர் நோயல் அவர்களின் அரும் முயற்சியால் தொடங்கப்பட்டதுதான் ‘புதுவை முரசு. அந்த ஏட்டின் மூலமாகவே பாரதிதாசனோடு இணைந்து சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைக் கவிதை மூலம் பரப்பிய கவிஞர் புதுவை சிவமும் தமிழக மக்களுக்கு அறிமுகமானார். 1928இல் தந்தை பெரியாரின் துணைவியார் நாகம்மையாரால் தொடங்கப்பட்டதும் பெரியாரை ஆசிரியராகவும் சுயமரியாதை இயக்க முன்னோடிகளான எஸ்.ராமநாதன், சா.குருசாமி ஆகியோரைத் துணை ஆசிரியர் களாகவும் கொண்டு இரண்டாண்டுக் காலம் நடத்தப்பட்ட ஆங்கில வார ஏடான ‘ரிவோல்ட்டின்’ முக்கிய இதழ்கள் நுண்படங்களாக எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த ஏட்டைப் பற்றி எத்தனையோ சொல்லலாம். ரஷியப் புரட்சி தினமான நவம்பர் 7அன்று தொடங்கப்பட்ட அந்த ஏட்டில்தான் மாபெரும் ஜெர்மானியத் தத்துவ அறிஞரான ஹெகல் பற்றிய செறிவான அறிமுகமொன்றும் தமிழகத்திற்கு முதன் முதலாகத் தரப்பட்டுள்ளது.
அண்ணாவின் ‘திராவிட நாடு’, தி.மு.க.வின் முதல் ஆங்கில ஏடாக அண்ணா தொடங்கிய ‘ஹோம்லேண்ட்’,அவர் கடைசியாக நடத்தி வந்த ‘காஞ்சி’வார ஏடு, கலைஞர் மு. கருணா நிதியின் ‘முரசொலி’, நாவலர் இரா. நெடுஞ்செழியனின் ‘மன்றம்’, ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் ‘போர் வாள்’, திமுக ஏடுகளான ‘புது வாழ்வு’, ‘அண்ணா’, ‘தோழன்’ ஆகியன மட்டுமின்றி அக் கழகத்தின் முதல் அதிகாரபூர்வமான நாளேடான ‘நம்நாடு’ இதழ்களும் இந்த நூலகத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டுள்ளன.
சுயமரியாதை இயக்க முன்னோடிகளிலொருவரான சொ. முருகப்பாவின் ‘குமரன்’, சுயமரியாதை இயக்கப் பெண்ணியச் சிந்தனையாளர் மரகதவல்லியாரின் ‘மாதர் மறுமணம்’ ஆகியனவும் இங்கு உள்ளன.நீதிக் கட்சி,சுயமரியாதை இயக்கம் ஆகியனவற்றின் கருத்துகளுக்கும் செயல்பாடுகளுக்கும் உடன் பாட்டு வகையிலோ, எதிர்மறையாகவோ எதிர்வினையாற்றிய ‘செந்தமிழ்ச் செல்வி’, ‘பஞ்சாமிர்தம்’, ‘தாருல் இஸ்லாம்’, ‘சுதந்திரச் சங்கு’ போன்ற ஏடுகளும் இந்த நூலகத்தில் பேணப்படுகின்றன.
6
தமிழகத்தில் பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தின் முன்னோடியும் மூலச்சிறப்பு வாய்ந்த பௌத்தச் சிந்தனையாளருமான அயோத்திதாசப் பண்டிதரின் ‘ஒரு பைசாத் தமிழன்’(தமிழன்) இதழ்களும் இங்குள்ளன.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரியார் உயராய்வு மையத்தின் தலைவராகவும் பேராசிரியராகவும் பணி புரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்த போது, மூன்றாண்டுகளுக்கு முன், அந்த மையத்தின் ஆய்வுப் பணிகளுக்காக ரோஜா முத்தையா நூலகத்திலுள்ள ‘குடி அரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’ வார ஏடுகள் பகுத்தறிவு மாத ஏடு ஆகிய அனைத்தையும் நுண்படங்களாக்கி, குறுந்தகடுகளில் பதிவுசெய்து பெறப்படும் திட்டம் நிறைவேறியது.
சுயமரியாதை இயக்க ஏடுகளை எளிதாகப் படிக்க விரும்புவர் களுக்கு அந்தக் குறுந்தகடுகள் காலாகாலத்திற்குப் பயன்படும். வ.கீதா அவர்களும் நானும் இணை ஆசிரியர்களாக எழுதி,2009இல் வெளிவந்த ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ (திருத்தப்பட்டு விரிவாக்கப்பட்ட பதிப்பு) நூலுக்கு வேண்டிய முக்கியத் தரவுகளை வழங்கியதும் ரோஜா முத்தையா நூலகமே. திராவிட இயக்கம் குறித்து இன்னும் ஆழமான ஆய்வுகளைச் செய்யக் காத்திருப்போருக்கான தகவல் பெட்டகமே இந்த நூலகம்.
இந்த ஆராய்ச்சி நூலகத்தைப் பற்றி இன்னும் எத்தனையோ தகவல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். சிக்காக்கோ பல்கலைக்கழகம், பிபிசி, ஃபோர்ட் நிறுவனம் போன்றவையே இத்தகைய அறிவு மையத்தைப் பேணிப் பாதுகாக்கும் புரவலர்களாக உள்ளன. தமிழக அரசாங்கக் கட்டடமொன்றில் தான் இந்த நூலகம் செயல்பட்டு வருகிறது என்றாலும், மாத வாடகையாக ஏறத்தாழ ரூ.20000- செலுத்தப்படுவதாகச் சொல்லப் படுகிறது. இந்தக் கட்டடத்தை இந்த அரிய நூலகத்திற்கு நன்கொடையாக வழங்குவது தமிழக அரசாங்கத்திற்குப் பெரிய காரியமல்ல. தமிழைச் செம்மொழியாக அறிவிக்கச் செய்தவர் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள். அவர், இந்தச் செம்மொழி, சங்க இலக்கியத்தோடு நிற்காமல், நவீனத்துவப் பரிமாணத்துடன் உயிரோட்டமுள்ள, செழுமையான, உலகில் எட்டுக்கோடி மக்களால் பேசப்படுகிற மொழியாக இருப்பதை அறியாமலா இருப்பார்?அவரது ஆட்சிக் காலத்தில் இந்த நூலகத்திற்குக் கொடையாக இப்போது அது இயங்கி வரும் கட்டடம் வழங்கப்படுமானால், செம்மொழி வளர்ச்சிக்கு அவர் வழங்கிய மிகப் பெரும் பங்களிப்பு என வரலாறு பதிவு செய்யும்.
(பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பெரியார் உயராய்வு மையத்தின் தலைவராகவும் பேராசிரியராகவும் சிலகாலம் பணியாற்றினார். தமிழ் அரசியல் மட்டுமின்றி உலக அரசியலை ஆராய்ந்து தமிழில் எழுதி வருபவர். வ. கீதாவுடன் இணைந்து பல நூல்களை எழுதியுள்ளார். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் அக்கறை கொண்டவர்.)