ஒவ்வொரு சமூகத்திலும் உருவாகி வளர்ந்துவரும் புதிய புதிய நிகழ்வுகள் குறித்த புரிதல் தேவை. தமிழ்ச் சமூகத்தில் உருவான அச்சுப்பண்பாட்டைக் குறித்த புரிதல் நோக்கி இவ்வுரையாடல் அமைகிறது. அச்சுப் பண்பாடு தமிழில் உருவான/உருவாகி வரும் வரலாற்றைக் கீழ்க்காணும் வகையில் தொகுத்துக் கொள்ளமுடியும்.
பதினாறாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் அச்சுக்கருவி தமிழ்ச்சூழலில் புழக்கத்திற்கு வந்தது. பதினெட்டாம் நூற்றாண்டு முடிய (சுமார் 150 ஆண்டுகள்) அச்சுக்கருவி முழுமையாகப் புழக்கத்திற்கு வந்துவிட்டதாகக் கூற முடியாது. ஆனால் இக்காலங்களில் தமிழ்த்தொடர்பான அச்சுப்பணிகள் நடந்தன. அவை கிறித்தவச் சமயம் தொடர்பான அச்சுப்பணிகளே ஆகும். இக்காலத்தைத் தமிழ்ச்சூழலில் அச்சுப்பண்பாடு உருவாகி நிலைபேறு கொண்டதாகக் கருதமுடியும். கோவா (1556- - 1669), கொல்லம்_கொச்சி (1578 - -1586), அம்பலக்காடு (1677 - -1680), தரங்கம்பாடி (1712- - 1800), கொழும்பு (1737- - 1800), புதுச்சேரி (1778- - 1795), சென்னை (1761 - -1800), ஆகிய இடங்களில் அச்சுப்பணிகள் நடந்தன. இவ்விடங்களில் 933 அச்சு ஆக்கங்கள் செய்யப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. (பார்க்க: கிரஹாம் ஷா நூல்) இதில் தமிழில் அச்சிடப்பட்டவை 266 ஆக்கங்கள். இதிலிருந்து தமிழ் அச்சுப்பண்பாட்டைக் கட்டமைக்க முடியும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே, கிறித்தவ சமயப் பரப்புச் செயல்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டன. ஜான் மர்டாக் பதிவுகள் (1865, 1870) வழி தமிழில் செயல்பட்ட அச்சுச் செயல்பாடுகளை அறிய முடிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பள்ளிக்கூடங்கள் உருவாயின. எழுத்தறிந்தவர்கள் எண்ணிக்கைக் கூடியது. ‘வாசிப்பாளர்கள்’ எனும் புதிய பிரிவினர் உருவாயினர். இக்காலங்களில் 182 ஐரோப்பிய தொண்டூழிய நிறுவனங்கள் (Missionaries) செயல்பட்டன. கிறித்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு இலட்சம் ஆகியது. (94, 540) ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் 8106 மாணவர்கள் படித்தனர். உள்ளூர் பள்ளிகளில் 28,836 மாணவர்கள் படித்தனர். (ஜான் மர்டாக்:1870) இக்காலங்களில் ஆயிரக்கணக்கில் சமயச் சிறுநூல்கள் மற்றும் அறிக்கைகள் அச்சிடப்பட்டுப் பரப்பப்பட்டன. 1835 இல் மெக்கபே கொண்டுவந்த சட்டத்தின்மூலம், அச்சிடும் உரிமை அனைவருக்கும் வழங்கப்பட்டது. சென்னைக் கல்விச் சங்கம் மூலம் தமிழ் இலக்கண நூல்கள் மற்றும் பாடநூல்கள் அச்சிடப்பட்டன. பாடநூல்கள் மிகுதியாக அச்சாகின. இவ்வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்திற்குள் அச்சுப்பண்பாடு வளர்ச்சியுற்று முழு மையடைந்துவிட்டது. அச்சுச்சூழல்,-எழுத்தறிதல்-வாசிப்புப் பழக்கம் என்ற முறைமையில் அச்சுப்பண்பாடு உருப் பெற்றதாகக் கூறமுடியும். தமிழ் அச்சுப் பண்பாட்டின் இரண்டாம் கட்டமாக (1800 - -1870) இதனைக் கூறலாம்.
பிரித்தானிய அரசு 1867இல் அச்சிடும் ஆக்கங்களை அரசுக்கு வழங்கும் நூல் பதிவுச்சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்மூலம் அச்சிடும் ஆக்கங்கள் ஓரிடத்தில் கிடைக்கும் வாய்ப்பு உருவானது. மெக்கென்சி மற்றும் டெய்லர் தொகுப்புகள் மூலம் பல விவரணங்கள் கிடைத்தன. பிரித்தானிய அருங்காட்சியகம் மூலம் உருவாக்கப்பட்ட முதலிரு நூற்பட்டியல்கள் (1909, 1931) தமிழ் நூல்கள் அச்சிட்ட விவரங்களை அறிய உதவுகின்றன. தமிழ்நாட்டு அரசினரின் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்ற வெளியீடான (1964), தமிழ்நூல் விவர அட்டவணைகள் (முதல்தொகுதி- ஐந்து பகுதிகள்-1867 - -1900) மூலம் விரிவான விவரங்களை அறியமுடிகிறது. இப் பதிவுகள் மூலம், தமிழில் உருவான அச்சுப் பண்பாட்டை அறிய முடிகிறது. முதலிரு கட்டங்களைவிட, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி தொடர்பான விரிவான விவரணங்கள் உள்ளன.
தமிழ் அச்சுப்பண்பாடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வெகுசனத் தன்மையை உள்வாங்கத் தொடங்கியது. இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய காலங்களில் (1900 - -1945) வெகுமக்களின் நுகர்வுப் பண்டமாக அச்சுச் செயல் உருவானது. பலதரப்பிலும் உருவான எழுத்தறிவு வளர்ச்சி, தேசியம், மொழி ஆகியன உள்ளிட்ட ‘நாடு’ என்னும் கருத்தாக்கம் மற்றும் தேசிய இனக் கருத்தாக்கம் ஆகியவை வாசிப்பு மரபை வளர்த்தன. இதழியல் உருவானது. சங்கிலித் தொடராக அச்சு வெளியீட்டு நிறுவனங்கள் உருவாயின. காலனியத்தின் மூலம் கிடைத்த எழுத்தறிவு மற்றும் தொழில்நுட்பம் தன்வயமாயின. வட்டார மொழி கள் எனும் அடையாளம் உருவானது. இதில் அச்சுப் பண்பாட்டின் கூறுகளைக் கண்டறியமுடியும். (இப்பகுதி குறித்து இக்கட்டுரை யில் பின்னர் விரிவாக உரையாடலுக்கு உட்படுத்த உள்ளோம்).
பிரித்தானியர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைமாற்றிச் சென்ற பின்னர் உருவான காலனிய அச்சுச்செயல்பாடுகள் மாற்றமுற்று, முழுவதாக வட்டாரத்தன்மையைப் பெற்றன. ஐரோப்பியர்களால், நமக்குக் கிடைத்தாலும் அது நமது வடிவமாக இக்காலங்களில் உருவானது. பெரிதும் வெகு சனப் பண்பாடாகவே இயங்கிவந்த அச்சுச் சூழல், ‘மாற்று’க்களை அறிமுகப்படுத்துவதாகவும் செயல்பட்டது. பல செல்நெறிகள் அச்சுப்பண்பாட்டில் உருவாயின (1945 - -1990). நூல் வெளியிடுதல், இதழியல், சிறுவெளியீடுகள் ஆகிய பிற அச்சுச் செயல்பாடுகளில் வெகுசனப் பண்பே முதன்மையாக இருந்தாலும் மாற்றுப் பண்பு களும் அங்கீகாரம் பெறும் சூழல் உருவானது. தமிழ்ச் சிற்றிதழ்கள், தமிழ்ப் புனைகதைகள், தமிழ்ப் படக்கதைகள், தமிழ்ச்சிறார் புனைவுகள் எனப் பல பரிமாணங்களில் தமிழ் அச்சுப்பண்பாடு உருவானது. இத்தன்மைகள் குறித்த விரிவான உரையாடல் தேவைப்படுகிறது.
எண்பதுகளின் இறுதி தொடங்கி தமிழில் உருவான கணினி அச்சுப்பண்பாடு, தமிழ் அச்சுப்பண்பாட்டில் ஊடாட்டங்களை நிகழ்த்திவருவதைக் காண்கிறோம். நுகர்வின் பல்வேறு கூறுகள் தொழிற்படுகின்றன. ஒவ்வொரு துறை சார்ந்தும் அச்சுப்பண்பாடு தனித்துச் செயல்படுகின்றது. திரைப்படங்கள் போன்ற துறைகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் சார்ந்து நடைபெறும் அரசியல் அதி காரப் போட்டிகள் ஆகிய பிற நிகழ்வுகளுக்கும் அச்சுப்பண் பாட்டிற்குமான உறவுகள் பல பரிமாணம் மிக்கவை. கணினித் தொழில்நுட்பமே புதிய அச்சுப்பண்பாட்டை உருவாக்கும் வகையில் செயல்படுவதைக் காண்கிறோம். இத்தன்மை இருபத்தோராம் நூற்றாண்டில் நிலைபேறு கொள்ளத் தொடங்கியுள்ளது. பல்வேறு ஊடகங்களின் இணைவாகவே (பல் ஊடகம்) ஊடகப்பண்பாடு உருப்பெற்று வருகிறது. தனித்த ஒரு ஊடகத்தின் பண்பாடாகக் கட்டமைப்பதில் சிக்கல்கள் உள்ளன.
1556 - 2000 என்ற கால அச்சுப்பண்பாட்டு வரலாற்றை மேற்குறித்தவாறு உரையாடலுக்கு உட்படுத்தலாம் 1556- - 1800; 1801 - -1867; 1886 - -1900; 1901- - 1945; 1946 - 1990; 1991- - 2010 என்ற கால ஒழுங்கில் தமிழ் அச்சுப்பண்பாட்டு வரலாற்றை நாம் கட்ட மைக்க முயலலாம். தொகுக்கப்பட்டுள்ள தரவுகள் சார்ந்தும் அந்தக் காலத் தொழில்நுட்பம் மற்றும் எழுத்துப்பயிற்சி வழி உருவான வாசிப்புமுறைகள் சார்ந்தும் இதனைக் கட்டமைக்க முடியும். இந்த வரலாற்றில் 1900 - -1945 கால வெகுசன அச்சுப்பண்பாடு குறித்த உரையாடலாக இப்பகுதி அமைகிறது. இவ்வுரையாடல் உருப்பெற்றதற்கான பின்புலம் பின்வரும் வகையில் அமைகிறது:
‘மாற்றுவெளி’ நான்காவது இதழை ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் குறித்தச் சிறப்பிதழாகக் கொண்டுவர முடிவு செய்தோம். இவ்விதழின் அழைப்பாசிரியராக இந்நூலக இயக்குனர் க. சுந்தர் அவர்கள் செயல்பட ஒப்புதல் தந்தார். அவர் என்னை இந்நூலகம் பற்றி எழுதித் தருமாறு என்னைக் கேட்டார். அதன் விளைவாக அந்நூலகத்தில் உள்ள அச்சு ஆக்கங்கள் குறித்துக் கணிப்பொறி யில் உள்ள பட்டியலைத் தட்டிப் பார்க்கத் தொடங்கினேன். அப்பொழுது ஒரு பெயர் அடிக்கடி வருவதைப் பார்த்தேன். அப்பெயரில் எவ்வளவு பதிவுகள் இருக்கும் என்று அங்குள்ள நூலகர் திருமதி மாலா அவர்களிடம் கேட்டேன். சுமார் முந்நூறு தேறும் என்றார். பின்னர், அவர் 216 பதிவுகளின் பட்டியலை எனக்கு எடுத்துக் கொடுத்தார். அப்பதிவுகளுக்கு உரியவர் சிறுமணவூர் முனிசாமி முதலியார் என்பவர். தமிழில் எழுதப்பட்டுள்ள மரபான எந்த இலக்கிய வரலாற்றிலும் இவர் பெயர் இடம்பெறவில்லை. இவர் யார் என்றும் விவரங்கள் அறிவது சிக்கலாக இருக்கிறது. தேடினால் கண்டறியமுடியும். அது இப்போது நமது உடனடித் தேவையாக அமையவில்லை. இவரது பெயரில் உள்ள ஆக்கங்களின் பட்டியலைப் பார்த்தபோது வெகுசனப் பண்பாட்டின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய அச்சு ஆக்கங்களுக்கு “சிறுமணவூர் முனிவரே” சொந்தக்காரராக இருப்பதை அறிய முடிந்தது.
ரோஜா முத்தையா நூலகத்தில் சிறுமணவூரார் பெயரில் உள்ள பதிவுகளுக்கு இணையாக தனிநபர் பெயரில் வேறு பதிவுகள் இடம் பெற்றிருப்பதாகக் கூறமுடியவில்லை. எனவே, இந்நூலகத்தில் வெகுசன நுகர்வு சார்ந்த வாசிப்பு மரபில் உருவான வெகுசன அச்சு ஆக்கங்களை மதிப்பீடு செய்வதற்கு சிறுமணவூர் முனிசாமி முதலியார் (இனி முனிசாமி) ஆக்கங்களே அடிப்படைத் தரவுகளாக அமையக்கூடும் என்று முடிவு செய்தேன். வெகுசன அச்சுப்பண்பாடு சார்ந்த மூலத்தரவுகளின் கொள்கூடமாக இந்நூலகம் அமைவதை இதன்மூலம் உரையாடலுக்குக் கொண்டு வருவது நமது நோக்கம்.
முனிசாமி அவர்களின் ஆக்கங்கள் 1888 தொடங்கி 1952 வரை கிடைக்கின்றன. 1888 முதல் 1939 வரை அவரால் ஆக்கப்பட்ட அச்சு வடிவங்கள் கிடைக்கின்றன. அக்காலத்திலும் பின்னரும் அவரது ஆக்கங்களின் மறு அச்சுகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு ஆக்கமும் ஒவ்வொரு ஆண்டும் மறு அச்சு தொடர்ச்சியாக செய்யப்பட்டிருப்பதை ரோஜா முத்தையா நூலகப்பட்டியல் மூலம் அறிய முடிகிறது. முனிசாமி அவர்களின் ஆக்கங்கள் குறித்துப் பிற நூலகப்பட்டியல்களிலும் விவரங்கள் காணப்படுகின்றன. பிரித்தானிய அருங்காட்சியக நூலகப்பட்டியல்கள் மூன்றிலும் சேர்த்துப் பதினாறு பதிவுகள் உள்ளன. தமிழ்நூல் விவர அட்டவணையில் (தொகுதி I-IV மற்றும் தொகுதி II) பத்துப் பதிவுகள் உள்ளன. (இவரைப் போலவே சூளை முனிசாமி முதலியார் என்பவரும் எழுதியுள்ளதைத் தமிழ்நூல் விவர அட்டவணையில் காணமுடிகிறது.)
அனைத்துப் பட்டியல்களிலும் மிக அதிகமான பதிவுகளைப் பெற்றவராக முனிசாமி இருக்கிறார். முனிசாமி குறித்து ரோஜா முத்தையா நூலகமே மிக அதிகப் பதிவுகளைக் கொண்டதாக அமைகிறது. சூளை முனிசாமி முதலி யாரையும் இவரையும் இணைத்து, தமிழ் வெகுசன அச்சுப்பண்பாடு குறித்து உரையாடல் நிகழ்த்தலாம். ஆனால் சூளை முனிசாமி முதலியார் நூல்கள் ஆவணக் காப்பகத்தில் மட்டுமே கிடைக்க லாம்; பிற நூலகங்களில் இடம்பெறவில்லை. இப்பின்புலத்தில் சிறுமணவூர் முனிசாமி முதலியார் ஆக்கங்களை அதிகமாகப் பெற்றுள்ள ரோஜா முத்தையா நூலகம், தமிழ் அச்சுப் பண்பாட்டின் வெகுசனத் தன்மையைப் பற்றிப் பேசுவதற்குப் பெரிதும் உதவுகிறது.
வெகுசனப் பண்பாடு குறித்த உரையாடல் தமிழில் மிக அருகியே நடத்தப்படுகிறது. ஆங்கில மொழியில் எழுதப்பட்ட அளவிற்குத் தமிழில் இல்லை. தமிழின் தொன்மை என்னும் நீண்ட வரலாறு, வெகுசனத் தன்மைகளை மறுக்கும் காரணியாக அமைகிறது. எழுதப்பட்ட செவ்வியல் ஆக்கங்களை மட்டுமே கவனத்தில் எடுக்கும் கல்விச்சூழல் தமிழில் செயல்படுகிறது. நம்மைச் சுற்றி நாள்தோறும் நிகழும் கூறுகள் குறித்து எவரும் அக்கறை கொள்வதில்லை. அவை ஆய்விற்கோ, நம் கவனத்திற்கோ உரியவைகளாகக் கூட கருதும் மனநிலை இல்லை. செவ்வியல் ஆக்கங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட இவ்வகையான ஆக்கங்கள் குறித்த உரையாடல், நம்மை சமகால மனிதர்களாகக் கட்டமைக்க வழிவகுக்கும். அச்சு ஆக்கங்கள், அருங்காட்சியகப் பொருட்களாக அமைவதில்லை; ஒவ்வொரு கணமும் நம்மோடு உறவாடும் வாசிப்புப் பழக்கத்தின் உடன்விளைவுகள். வாசிப்பு என்பது நிகழ்காலத்தின் மிக முக்கியமான சமூக நிகழ்வு. இதற்குள் செயல்படும் வெகுசனப் பண்பு என்பது சமகால மனிதர்கள் பற்றியப் புரிதலாக அமைகிறது.
வெகுசனப் பண்பாடு என்பது வெகுமக்களின் ஊகங்கள், நம்பிக்கைகள், உணர்வுகள், அவர்களது சிந்தனைப் போக்குகள் ஆகிய பல கூறுகளை உள்வாங்கிச் செயல்படுபவை. இவற்றைக் காட்டுவனவாகவே வெகுசன ஊடகங்கள் செயல்படுகின்றன. இதில் அச்சு ஊடகம் மிக முதன்மையான இடத்தைப் பெறுகிறது. ஏனெனில் எழுத்தறிவு எனும் பயிற்சி வழி இந்த ஊடகம் செயல்படுகிறது. முனிசாமி அவர்களின் அச்சு ஆக்கங்களை மேற்குறித்த பின்புலத்தில் நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவர், வெகுமக்களின் ரசனைகள், நுகர்வுகள், வெகுசன நம்பிக்கைகள், உணர்வுகள் ஆகிய பிற தொடர்பானவற்றை அச்சுவழி ஆக்கங் களாக உருவாக்கியுள்ளார். அவர் உருவாக்கியுள்ள வெகுசனப் பண்பாடு சார்ந்த ஆக்கங்களைப் புரிந்துகொள்ள கீழ்க்காணும் வகையில் நாம் தொகுத்துக் கொள்ளலாம்.
-_வெகுசனத்தளத்தில் மனித சமூகம், மனித உடல் பற்றிய உரையாடலைப் பல தளங்களிலும் நிகழ்த்துவதைக் காண்கிறோம். உடல் நலம் என்பது உணவு முறைகளாகப் புரிந்து கொள்ளப்படு கிறது. உடல் கேடுகளை மருந்துகள் வழி காப்பாற்றலாம் என்று நம்புகின்றனர். இதனால் வெகுசனப் பேச்சில் உடல்நலத்திற்கான மருந்துகள் குறிப்பாக மூலிகைகள் போன்றவை குறித்துப் பேசுகின்றனர். வெகுசன நுகர்வு சார்ந்து அச்சில் இவை மிக அதிகமாக இடம்பெறுகின்றன.
_பெண் உடல் வேறாகவே கட்டமைக்கப்படுகிறது. உயிரின் மறு உற்பத்தி என்பது காமஇச்சை சார்ந்த செயல்பாடாகக் குறுக்கப் பட்டு, அத்தன்மை தொடர்பான அச்சு வெளிப்பாடுகள் மிகுதியாக வெளியாகின்றன. பெண் உடலை இழிவுபடுத்தல், பெண் பிறவியை இழிவுப் பிறவியாகச் சித்திரித்தல், பெண் என்பவள் கலி காலத்தின் மோசமான வடிவம் எனப் பலவகையாக வெகுசன எழுத்துக்கள் பதிவுசெய்துள்ளன. நீலிக்கள், தாசிக்கள், மோசக்காரிகள், சூனியக்காரிகள் எனப் பல நிலைகளில் பெண் வெகுசனப் பண்பாட்டில் பதிவு செய்யப்படுகிறார்.
_ஆதிகாலம் முதலே இயற்கை நிகழ்வுகள் குறித்த தர்க்க மனநிலை இழந்தவர்களாகவே வெகுமக்கள் இருக்கிறார்கள். தங்களது தர்க்க அறிவில் புலப்படாதவற்றை அதீக நம்பிக்கை களுக்குள் வைத்துக்கொள்கிறார்கள். இந்த நம்பிக்கைககளை ஜோதிடங்களாக, குறிசொல்லுதலாக, பூச்சி இனங்கள் - பறவைகள் -விலங்குகள் ஆகிய பிற சார்ந்த நம்பிக்கைகளாகக் கட்டமைக்கி றார்கள். இவை அனைத்தும் அச்சு ஆக்கங்களில் வெளிப்படுகின்றன.
_நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட நூற்றுக்கணக் கான சடங்குகளை மக்கள் நிகழ்த்துகிறார்கள். இவற்றை வழிபாடு கள் என்று அழைக்கிறார்கள். அவை அடிமட்ட நிலையிலிருந்து சமூகத்தின் மேல்மட்டம் வரை பல வகைகளில் பல வடிவங்களில் உருவாக்கப்படுகின்றன. இதன் உச்ச வடிவமாகவே பக்தி அமைகிறது. இவை தொடர்பான அச்சு ஆக்கங்களே மிக அதிகமாகும். இவை சமயத்தோடும் சாதிகளோடும் வைதீகத்தோடும் நெருங்கிய உறவுடையவை.
_சமூகத்தில் வெகுமக்களின் நடைமுறை வாழ்க்கையில் உள்ள பல்வேறு செயல்களுக்கும் ஒழுக்க மதிப்பீடுகள் கட்டப்படுகின்றன. இம்மதிப்பீடுகள் சார்ந்து அச்சு ஆக்கங்கள் உருவாக்கப்படு கின்றன. வெகுமக்கள் புழக்கத்தில் பாரதம், இராமாயணம் சார்ந்த கதைகள் பரவலாக உள்ளன. இவற்றிலிருந்து வெகுமக்களுக்கான வாசிப்பு ஆக்கங்களை உருவாக்குகின்றனர். இவை சார்ந்த நிகழ்த்துப் பிரதிகளும் மிகுதியாக உருவாக்கப்படுகின்றன.
_நவீன தொழில்நுட்பம் புதிது புதிதாகக் கருவிகளை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டில் இவ்வகையில் உருவான போக்குவரத்துச் சாதனங்கள் வெகுமக்கள் கவனத்தில் பெரிதும் தாக்கம் செலுத்தப்படுபவற்றைக் காண்கிறோம். இவை குறித்து வெகுசன அச்சு வடிவங்களில் பதிவுகள் உருவாக்கப்படுகின்றன.
_நாள்தோறும் நடைபெறும் நிகழ்வுகளை இன்று பத்திரிக்கைகளில் வாசிக்கிறோம். வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் கேட்கிறோம், பார்க்கிறோம். இந்த வசதிகள் இல்லாத காலத்தில், எதிர்பாராத விதமாக நடைபெறும் நிகழ்வுகளான விபத்துகள், இயற்கைப் பேரிடர்கள், கொலைகள் ஆகியவை குறித்துச் சிந்து, கும்மி வடிவில் ஆன அச்சு ஆக்கங்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சிடப்பட்டன.
_மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத மந்திரங்கள் எனப்படும் தந்திரங்கள்; ஜாலங்கள் எனும் பெயரில் அச்சாகியதை அறியமுடிகிறது. நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் ஆக்கங்கள், அனைத்துக் காலங்களிலும் வெகுசனத்தளத்தில் உருவாக்கப்படுகின்றன. இன்றைய திரைப்படத்துறையின் நகைச்சுவை நடிகர்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. அச்சுச் சார்ந்த நுகர்விலும் இவ்வகை ஆக்கங்கள் மிகுதியாக உருவாக்கப் பட்டிருப்பதைக் காண்கிறோம்.
இவ்வகையில் மனிதர்கள் தங்கள் வாழ்விலும் தங்களைச் சுற்றியுள்ள சூழலில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளையும் அச்சு வடிவத்தில் வாசிக்க முற்பட்ட வரலாறு நம்முன் உள்ளது. இவை வெகுசனப் பண்பாடாக அமைகிறது. செவ்வியல் மரபுக்கு மாறாக அமையும் இவ்வகை அச்சு ஆக்கங்கள் நமது கவனத்தைக் கோரி நிற்கின்றன. மேற்குறித்த பின்புலத்தில் சிறுமணவூர் முனிசாமி முதலியாரின் அச்சு ஆக்கங்களை உரையாடலுக்கு உட்படுத்தலாம்.
வெகுசன அச்சு ஆக்கங்களில் மிகுதியாக இடம்பெறுபவை மருத்துவம் தொடர்பான நூல்கள். ‘சகல ஜெந்துக்களின் விஷநிவர்த்தி’ (1892), ‘அனுபோக வயித்திய பிரம்மரகசியம்’ (1893), ‘ஹிந்து பால வைத்தியபோதினி’ (1895), ‘நாற்பத்தியெண்மர் களீண்டிய ஊர்வசி வயித்திய சிட்கா’ (1895), ‘சிறந்த ஆயுள்வேத பண்டிதர்களால் உபயோகித்துவரும் அனுபோகத்துக்கிசைந்த வயித்திய முறைகள்’ (பதிப்பு:1895), ‘பார்வதி பரணியம் யென்னும் விஷ வயித்திய சிந்தாமணி’ (1899), ‘உயிரெழுத்து மூலிகை மர்மம்’ (1900), ‘பிணியற்ற வாழ்வென்றும், சவுக்கியகாரமென்றும் வழங்க வேண்டிய நோயில்லா வாழ்வு’ (1904), ‘வயித்திய கை முறைகள்’ (பதிப்பு:. 1896) ஆகிய சில முனிசாமி அவர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவம் தொடர்பான நூல்களாகும். இவரை ஆயுர்வேத வைத்தியர் என்று குறித்திருப்பதைக் காணமுடிகிறது. வெகுசனப் பண்பாட்டில் உடல்நலம் குறித்து வெகுமக்கள் கொண்டிருந்த ஈடுபாட்டை இவ்வகை அச்சு ஆக்கங்கள் காட்டுகின்றன. இந் நூல்களின் பெயர்கள், பேச்சுமொழியில் இருப்பதையும் பண்புப் பெயர் அடைகள் சேர்த்து நூல்பெயர் அமைக்கப்பட்டிருப்பதை யும் காணமுடிகிறது. செவ்வியல் நூல்களின் பெயர்கள் இவ்வகையில் அமைவதில்லை. இந்நூல்களின் மறு அச்சு இன்றும் தொடர்வதைக் காண்கிறோம். இவ்வகையில் உடல்சார்ந்த நம்பிக்கைகளுக்கும் வெகுசன அச்சுப்பண்பாட்டிற்குமான உறவை அறிய இயலும்.
வெகுசனப் பண்பாடு சார்ந்து அச்சான வடிவங்களில் மிகவும் இழிவாகப் பதிவு செய்யப்படுவது பெண்உடல். பெண் குறித்து இழிவு மொழியில் ஆக்கப்படும் அச்சு ஆக்கங்களை மிக இயல்பான ஒன்றாகவே கருதி உள்ளனர். முனிசாமியும் இதற்கு விதிவிலக்கல்ல. இவரது ஆக்கங்களில் இடை இடையே இதனைக் காணமுடியும். ‘குடும்ப சனியன் என்னும் அகடவிகட சம்சாரி’ (1906), ‘சித்திரகுளா வென்னும் பெண்ணின் கெடையாட்டாம்’ (1908) ஆகியவை இவ்வகையில் அமைந்தவை.
வெகுசனப்பண்பாட்டில் மிகுதியாக இன்றும் அச்சாகும் நூல்கள் ஜோதிடம் தொடர்பானவை. ‘ஜோதிடச்சுவடிகள்’ இன்று பெரும் தொழிலாக நடைபெறுகிறது. ஜோதிடத்திற்கான பஞ்சாங்கங்கள் உருவாக்கப்பட்டன. கெவர்மெண்டு நட்சத்திர பஞ்சாங்கம், ஆர்க்காடு சர்வமுகூர்த்த பஞ்சாங்கம், கஞ்சனூர் பஞ்சாங்கம், பாக்கெட் பஞ்சாங்கம், சிறுமணவூர் முனிசாமி முதலியார் காலண்டர் பஞ்சாங்கம் என்று பல பஞ்சாங்கங்களைத் தமது நூலில் முனிசாமி குறிப்பிடுகிறார். ‘தருமருக்கு பீஷ்மாச்சாரி உபதேசித்த சகாதேவ சாஸ்திரம் -மரணக்குறிப்பு -சகுனப்படம் -பல்லி சாஸ்திரம்’ (1893), மானிடக் குறியென்னும் திரேசக்குறி புருஷலஷ்ணமென் றும் வழங்கிய அங்கக்குறி சாஸ்திரம் (1893) ஆகிய சில நூல்கள் முனிசாமி இயற்றியவை. எழுத்துக் கூட்டி வாசிக்கத் தெரிந்தவர்கள் இவ்வகையான நூல்களைக் கோயில் தளங்கள், சந்தைகள், தெருவோரக் கடைகள், நாட்டு மருந்துக் கடைகள் ஆகிய இடங்களில் இன்றும் வாங்குகின்றனர். அச்சு வடிவத்தில் வாய்மொழிப் பாரம்பரியம் இடம் மாறுவதை இதன் மூலம் அறியமுடிகிறது. தர்க்கங்களை மறுக்கும் இவ்வகை நம்பிக்கைகள் வெகுசனப் பண்பாட்டின் அடிவேராக இருப்பதைக் காண்கிறோம்.
வழிபாடுகளை நடத்துவதற்கு அச்சிடப்படும் பதிகங்கள், அலங்காரங்கள், கும்மிகள், ஏராளம் “சிறுமணவூர் முனிசாமி முதலியாராலியற்றிய திருவொற்றியூர் தியாகேசர் பதிகம்” (1888), சிதம்பரம் நடராஜர் பஞ்சாட்சரப்பதிகம், நடராஜப் பத்து, சங்கப்புலவர் கண்ட சுத்தி இம்மூன்றும் அடங்கியிருக்கின்றன (1893). ‘மதுரை சொக்கர் அலங்காரம்’ (1894), ‘இஃது நாகூர் ஆண்ட வர் தெரிசனக்கும்மி, நாகூர்«க்ஷத்திர அலங்காரம், ஆநந்தக் களிப்பு இரண்டும் அடங்கியிருக்கின்றன (1897). ‘ஸ்ரீவைகுண்ட ஏகாதசி விரதக்கும்மி என்னும் உருக்கு மாங்காத மகாராஜன் சரித்திரக் கும்மி’ (1896) ஆகியவை முனிசாமி நூல்களாகும். வெகுசனங் களின் இசையோடு கூடிய பாடல்களாகச் சிந்து, கும்மி வடிவங்கள் அமைகின்றன. வெகுசனப் பண்பாட்டில் இவ்விரு வடிவங்களே மிகுந்த செல்வாக்குடன் செயல்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
சமூக நிகழ்வுகள் குறித்த மதிப்பீடுகள் வெகுசனத் தளத்தில் பரவலாகச் செயல்படுவதைக் காண்கிறோம். ‘கலியுகச்சிந்து: கடன் பத்திரம், கலிகாலக் கண்ணாடி இம்மூன்றும் அடங்கியிருக்கின்றன’ (1896), ‘கள்ளுக்கடைச்சிந்து என்றும் குடியர் சிந்து, புகையிலைச் சிந்து, கெஞ்சாவின் மகத்துவம் இம்மூன்றும் அடங்கியிருக்கின்றன (1896)’. ‘திருட்டுப் பிடிக்கும் சாஸ்திரமென்னும் களவுநூல்’ (1897), ‘தடிக்கழுதை பாட்டும் ஆண் பிள்ளை வீண்பிள்ளை சிந்தும் அடங்கியிருக்கின்றன.’ (1900) ஆகிய சில முனிசாமி உருவாக்கியவை. இவைகள், புகையிலை, கஞ்சா, திருட்டு ஆகிய பிற தொடர்பான வெகுசன மதிப்பீடுகளைப் பதிவு செய்திருப்பவை. இவற்றில் இவை நியாயப்படுத்தப்படுவதும் விமரிசனம் செய்யப்படுவதும் பகடி மொழியில் அமைந்திருக்கும்.
கி. பி. பத்தொன்பதாம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழ்ச் சமூகத் தில் பாரதக்கதையின் செல்வாக்கு மிகுதியாகும். கும்மி வடிவங்கள், நிகழ்த்தும் கூத்து வடிவங்கள், கதைப்பாட்டு வடிவங்கள், கதை வடிவங்கள் ஆகிய அனைத்து வடிவங்களிலும் பாரதக்கதை மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுவதை அறிகிறோம். ‘வியாசர் விபரீதம்’ (1908) எனும் நூலை முனிசாமி உருவாக்கியுள்ளார். மகாபாரதம் தொடர்பான பதிவுகளைத் தமது நூல்களில் இவர் ஆங்காங்கே செய்துள்ளார்.
‘பெங்களூரில் உடன் கட்டையேரிய உத்தமிச்சிந்து’ (1893), ‘மதிராஸ் தூக்குப்பாட்டு’ (1893), ‘மூடமதி திறவுகோல்’ (1895), ‘சென்னை பீபில்ஸ்பார்க்கு காலேஜ் பத்திய சிந்து’ (1898), ‘ஈட்டிக் காரனிடத்தில் கடன்பட்டு ஓட்டம் பிடிக்கும் சிந்து’ (1902); ‘துர்முகி வருடத்தின் தொந்திரவு’ (1905), ‘நந்தன வருட சிந்து’(1900), ‘தாரண வருஷத்திய வெள்ளம்’, ‘திருநெல்வேலி கொட்டாய் பத்திய சிந்து’ (1906), ‘1906 அக்டோபர் 20 சனிக்கிழமை மூடப்பட்ட அர்பத் நெட்டவுசின் அனியாயச் சிந்து’(1908) ஆகிய சில நூல்கள் முனிசாமி அவர்களால் உருவாக்கப்பட்டவை. சமகாலச் செய்திகள் எவ்வாறு அச்சு வடிவம் பெற்றன என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. வாய்வழிச் செய்தியாக அறியப்பட்ட வற்றை வெகுசனங்களும் வாசித்து அறியும் வடிவங்களில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. வாய்வழி உருப்பெறும் செய்திகள் எவ்விதம் அச்சு மரபாக வெகுசனப்பண்பாட்டில் இடம் பெறுகிறது என்பதை இதன் மூலம் அறிகிறோம். இப்பண்புகள் இன்னும் கிராமங்களில் உள்ள சாவடிகளில் நடைபெறும் உரையாடல்கள், முடிதிருத்தும் கடைகளில் நடைபெறும் உரையாடல்கள், தேநீர் கடைப் பெஞ்சுகளில் அமர்ந்து செய்யும் உரையாடல்கள் ஆகியவற்றோடு தொடர்புடையவை. ‘தினத்தந்தி’ பத்திரிகையின் செய்திகளும் அதன் மொழிநடையும் இத்தன்மை மிக்கன. இவ்வகையான மொழிக்கு ஆதித்தனார் உருவாக்கியுள்ள ‘பத்திரிகை நடைக் கையேடு’ எனும் நூல் நல்ல தரவு.
வெகுசனப் பண்பாட்டில் மிகவும் அதிகமாக இடம்பெறுவது நகைச்சுவைப் பண்பு. முனிசாமியவர்கள் இவ்வகையில் பல நூல்களை எழுதியுள்ளார். ‘செல்வப் பிள்ளை அகட விகட கல்யாணச் சிந்து’ (1892), ‘குடும்ப சனியன் என்னும் அகடவிகட சம்சாரி’ (1906), ‘நாரதர் கலகம்’ (1910) ஆகிய சில நூல்கள் வெகுசனப் பண்பாட்டில் நகைச்சுவை குறித்து அறிய உதவும். ‘கொழுத்த சிறிப்பு என்னும் அகசிய நாடகம்’ (1908) ஒன்றை முனிசாமி எழுதியுள்ளார். துஷ்டத்தூதன், சமயசாம்பிராணி, தனியாய மகாராஜன், கொலை பாதக மந்திரி, கிரககார பஞ்சாங்க புரோகிதன் ஆகியோர் நாடகப் பாத்திரங்கள் ஆகும். இந்நூலில் ஆத்திசூடியை ‘கீத்துச்சுவடி’ என்று எழுதுகிறார். அந்நூல் கீழ்வரும் வகையில் அமைந்துள்ளது. (பார்க்க: பக்115)
இவ்வளவும் என் சொந்த புத்தகமாகையால் விற்பனைக்குத் தயாராய் வைத்திருக்கின்றேன் இதுவுமன்றியில் சிறுவர்களுக்கு இன்பமான சில்லரைப் புத்தகங்கள் எத்தனையோ தினுசுகளிருக்கிறது இவை தேவையானவர்கள் சென்னை சூளை போஸ்டு, சட்டண்ணநாய்க்கன் தெருவு, 12-வது நெம்பர்வீடு சிறுமணவூர்-முனிசாமியென்பவரிடத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி, இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த காலம் வரையில் செயல்பட்ட அச்சுச்செயல்பாடுகளை முனிசாமி அவர்களின் ஆக்கங்களை அடிப்படையாகக் கொண்டு புரிந்துகொள்ள முடிகிறது. சமயப் பரப்பல் சார்ந்தும் செவ்விலக்கிய மரபு சார்ந்தும் செயல்பட்ட தமிழ் அச்சுப் பண்பாடு எவ்வகையில் வெகுசன நுகர்வுப் பண்பாடாக வடிவம் பெற்றது என்ற உரையாடலே மேலே நாம் மேற்கொண்டதாகும். இவ்வுரையாடல் தமிழ் அச்சுப்பண்பாடு உருவாக்க வரலாற்றில் மூன்றாம் கட்டமாக அமைந்த பகுதியை மட்டும் கவனத்தில்கொண்டு செய்யப்பட்டுள்ளது. இக்காலச் சூழலில் தமிழில் புதிதான அச்சுப்பண்பாடு உருவானது. இதனை முனிசாமி அவர்களின் ஆக்கங்களை எடுகோளாகக் கொண்டு நாம் புரிந்துகொள்ள முடியும். இக்காலத்தில் அச்சுப்பண்பாட்டைப் புரிந்துகொள்ள முனிசாமி அவர்களின் ஆக்கங்களை அடிப்படை யாகக் கொண்ட குறுநூல் (னீஷீஸீஷீரீக்ஷீணீஜீலீ) ஒன்றை உருவாக்கலாம். இதற்கான தரவுகளை ரோஜா முத்தையா நூலகம் கொண்டி ருக்கிறது.
சான்றாதாரங்கள்:
· ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள சிறுமணவூர் முனிசாமி முதலியார் ஆக்கங்கள்.
· A catalogue of the Tamil books in the library of the British Museum (3 vols.)
· தமிழ்நூல் விவர அட்டவணைகள். (மூன்று தொகுதிகள், 11 பகுதிகள்)
· Classified catalogue of Tamil printed books with introduction notices, compiled by John Murdoch (1865).
· Catalogue of the Christian vernacular literature of India, compiled bu John Murdoch (1870)
· The South Asia and Burma retrospective bibliography, stage 1:1556-1800, compiled by Graham Shaw.
குறிப்பு
இயக்குநர் க. சுந்தர், நண்பர் பிரகாஷ், திருமதி. மாலா மற்றும் கணேஷ் (ரோஜா முத்தையா நூலக ஊழியர்கள்) ஆகியோர் உதவி இல்லாவிடில் இக்கட்டுரையை உருவாக்கியிருக்க முடியாது. அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி.
(பேரா. அரசு சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையின் தலைவராகப் பணியாற்றுகிறார். பல நூல்களும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். தமிழ்ப் பதிப்புத்துறையிலும் தமிழியல் ஆராய்ச்சியிலும் ஒரு முக்கிய அங்கம் வகிப்பவர். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் வளர்ச்சியில் அக்கறையும் ஈடுபாடும் உள்ளவர்.)