கீற்றில் தேட...

முனைவர் ஐராவதம் மகாதேவனைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு தற்செயலாகக் கிடைத்தது. நீண்டகாலமாகவே சிந்துவெளிக் குறியீடுகளைப் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த நான் பெரும் முயற்சிக்குப் பிறகு அவரிடம் அக்டோபர் 2005இல் என்று நினைவு, - தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர், தான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் சொற்பொழிவு நிகழ்த்த இருப்பதாகக் கூறி அதற்கு வரும்படி அழைத்தார். சொற்பொழிவின் முடிவில் மகாதேவனைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிந்துவெளிக் குறியீடுகள் பற்றிய எனது ஆர்வத்தை அவரிடம் கூறினேன். அவர் தனது இல்லத்துக்கு வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்தார். பல்வேறு காரணங்களால் அச்சந்திப்பு உடனே நடக்க வில்லை. ஆனால் பிற்காலத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்று வேன் என்று நான் அப்போது கனவிலும் நினைக்கவில்லை!

நிறுவனம் சார்ந்து ஆராய்ச்சி செய்வதன் மூலம் பல ஆராய்ச்சி யாளர்களை உருவாக்க முடியும் என்று ஐராவதம் மகாதேவன் நம்பினார். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தனித்திறச் செயலாண்மையைக் கண்டு வியந்த அவர் சிந்துவெளி பண்பாட்டு ஆய்வு மையம் என்ற பெயரில் ஜனவரி 2007ல் நூலகத்தின் ஓர் அங்கமாக, செயல்பட ஆலோசனை வழங்கி, அதன் மதிப்புறு ஆலோசகரானார். அவரிடம் உள்ள சிந்துவெளி ஆய்வுகள் தொடர்பான நூல்கள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் என அனைத்தையும் கொடுத்துதவினார். (அது நூலகத்தொகுப்பில் உள்ள முனைவர் கிஃப்ட் சிரோமணியின் தொகுப்போடு இணைக்கப்பட்டது) முனைவர் கிஃப்ட் சிரோமணி ஒரு பன்முக ஆய்வாளர், சென்னை கிறித்துவக்கல்லூரி புள்ளியியல் பேராசிரியராக இருந்த அவர் புள்ளியியல் கோட்பாடுகளைப் பல்வேறு துறைகளிலும் புகுத்தி ஆய்வு செய்துள்ளார்.

இந்தக் கட்டுரை சிந்துவெளி தொடர்பான ஆராய்ச்சியின் போக்கையும் இதுவரை நடந்த ஆய்வு முயற்சிகளையும் பட்டியலிட்டுக் காணும் சிறு முயற்சியாகக் கருதலாம்.

சிந்துவெளி ஆராய்ச்சி வரலாறு

சிந்துவெளி தொடர்பான ஆராய்ச்சி அதன் நாகரிகத்தைப் பற்றியும், அங்கு பேசிய மொழி மற்றும் எழுத்துக்களைப் பற்றியும், அந்நாகரிகத்தின் தொன்மை, அதன் வளர்ச்சி- வீழ்ச்சி, அந்நாகரிகம் பரவியிருந்த பரப்பளவு, மக்களின் இடப்பெயற்சி எனப் பல கோணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிந்துவெளி எழுத்துக்கள் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. இதற்குப் பல காரணங்களுண்டு. முதலில் முத்திரைகளிலுள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஒரு முத்திரையில் 5, 6 எழுத்துக்களே உள்ளன. இவ்வெழுத்துக்களுக் கான வேற்று மொழியின் இணைகள் இதுவரை கண்டெடுக்கப் படவில்லை. மொழியியல் ரீதியாகக் கண்டறிவதற்கு அக்கோட் பாடுகளில் பயிற்சி அவசியம். சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம், ஆரிய நாகரிகம் என இரு வேறு பார்வைகளின் அடிப்படையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிந்துவெளி எழுத்துக்களையும் அதன் மற்ற கூறுகளையும் பல்வேறு மொழிகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்ததில் அது திராவிட மொழி என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த ஆதாரங்களை ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா போன்றோர் உறுதிப்படுத்துகின்றனர்.

மொகஞ்சதாரோ, ஹரப்பா முதலிய இடங்களில் அகழ் வாராய்ச்சிகள் 1920களில் நடைபெற்றது. முதல் சில ஆண்டுகளில் அகழ்வராய்ச்சிப் பணிகள் துரிதகதியில் நடந்து பல கண்டுபிடிப்புகள் அறிவிக்கப்பட்டன. 1921இல் தயாராம் சாஹ்னி தலைமையில் ஹரப்பாவிலும், 1922இல் ராக்கல் தாஸ் பானர்ஜி தலைமையில் மொகஞ்சதாரோவிலும் அகழ்வாராய்ச்சிகள் தொடங்கின. ராக்கல் தாஸ் பானர்ஜிக்குப் பிறகு இந்தியத் தொல்லியல் துறை இயக்குநர் ஜான் மார்ஷல் இவ்வகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டார். மேலும், அவர் சிந்துவெளிப் பண்பாடு, இந்தோ ஆரியர்கள் வருவ தற்கு முன்னரே இந்தியாவில் இருந்தது என்று முதன்முதலில் உணர்த்தினார்.

சிந்துவெளி குறித்த ஆராய்ச்சியில் பல நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும், ஆர்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் எர்னஸ்ட் மெக்கே, சர் வீலர், அகமது ஹாசன் தானி, பி. பி. லால், நானி மஜும்தார், மாதவ் ஸ்வரூப் வத்ஸ் மற்றும் சர் மார்க்ஸ்டைன் ஆவார்கள். முப்பதுகளில் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு, இரண்டாம் உலகப்போர் இவையிரண்டும் சிந்துவெளி ஆராய்ச்சி களைப் பெருமளவு முடக்கிவிட்டன.

1947இல் இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற போது பாகிஸ்தானும் தனி நாடாக மாறியதால், அதுவரை கண்டு பிடிக்கப்பட்ட பல சிந்துவெளிப் பகுதிகள் பாகிஸ்தான் எல்லைக் குள் சென்றுவிட்டன. 1947க்குப் பிறகு இந்தியாவில் ராஜஸ்தான், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரம் முதலிய மாநிலங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டு, அவ்வப்போது அவற்றைப் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டு வந்தன. சிந்துவெளி அகழ் வாய்வுத் தகவல்கள் மற்றும் களப்பணி அறிக்கைகள் வெளியிடப்படாமல் இருப்பது சிந்துவெளி ஆராய்ச்சி யாளர்களின் மனக்குறை. எடுத்துக்காட்டாக, சமீபத்தில் இந்து நாளிதழ், தோலவிரா அகழ்வாய்வில் சிந்துவெளிக் குறியீடுகள் பொறிக்கப்பட்ட கல்லை, 1999இல் கண்டெடுக்கப்பட்டதாக எழுதியிருந்தது. இதற்கு முன் கல்லில் சிந்துவெளிக் குறியீடுகள் கிடைக்கப்பெறாத நிலையில், இக்கல்லை அகழ்ந்து எடுத்தவர்கள் உடனுக்குடன் இச்செய்தியை வெளியிட்டிருந்தால் இது பற்றிய ஆராய்ச்சிப் பணிகளும், விவாதங்களும் உடனுக்குடன் தொடங்கி யிருக்கும், ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. இக்குறையைத் தீர்க்க, அகழ்வாராய்ச்சி களப்பணி அறிக்கைகளையும் அகழ் வாராய்ச்சி ஆய்வுத்தகவல்களையும் உடனுக்குடன் வெளியிட் டால், அது சிந்துவெளி ஆராய்ச்சிக்குப் பேருதவியாக இருக்கும்.

 இதே போல் மேல்நாட்டு அறிஞர்களும் தம் ஆராய்ச்சிகளின் முடிவுகளை உடனுக்குடன் வெளியிடுவதில்லை. மேலும் இவ் வாராய்ச்சிக் குறிப்புகளும் புகைப்படங்களும் சில அறிஞர்களுக் கிடையே மட்டும் சுற்றிக் கொண்டு இருக்கின்றன.

சிந்துவெளி ஆராய்ச்சியின் போக்கு

ஹரப்பாவும் மொகஞ்சதாரோவும் அகழ்ந்தெடுக்கப்படாத நிலையில் இந்தியத் தொல்லியல் துறைத்தலைவர் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம், முதலில் கிடைத்த முத்திரைகளை வைத்து அதில் எழுதப்பட்டுள்ள மொழி சுமேரிய மொழியெனக் கருத்து தெரி வித்தார். எனினும் சிந்துவெளி மொழியைப்பற்றிய ஆராய்ச்சிகள் 1920களுக்குப் பிறகே தொடங்கியதென்று கூறவேண்டும். சர் ஜான் மார்ஷல் சிந்துவெளி மொழி திராவிட மொழி எனக் கூறினார். இப்போது பெரும்பாலான அறிஞர்கள் சிந்துவெளி மொழி பண்டைய திராவிட மொழியென்று கருதுகிறார்கள். ஆயினும், இக்கருத்துக்கு இன்றளவும் எதிர்ப்பு இருந்து வருகிறது. சமீப காலங்களில் குதிரை வடிவங்கள், குதிரை எலும்புகள், ஆரக்கால் உடைய ரதங்கள் கிடைத்திருப்பதாகச் செய்திகள் வந்தாலும் இச்செய்திகள் யாவும் உண்மையென நிரூபிக்கப்படவில்லை. குதிரையும், ஆரக்கால் உள்ள தேரும் இந்தோ ஆரியர்கள் கொண்டுவந்ததெனக் கருதப்படுகிறது.

சிந்துவெளி மொழியை முறையாக ஆய்வு செய்தவர் ஜி. ஆர். ஹன்டர் என்பவர். இவரே சிந்துவெளிக் குறியீடுகளின் தொகுப்பை முதன் முதலில் (1934) உருவாக்கி, சிந்துவெளிக் குறியீடுகளை அட்டவணைப்படுத்தியவர்.

ஒரு முழுமையான சிந்துவெளிக் குறியீடுகளின் தொகுப்பினை 1977-இல் வெளிக்கொணர்ந்த பெருமை முனைவர் ஐராவதம் மகாதேவனைச் சேரும். சுமார் 3,000 சிந்துவெளி எழுத்துச் சின்னங்களை (முத்திரைகள், முத்திரைப் பதிவுகள், பானை ஓடுகள், செப்புத்தகடுகள் முதலியன) பட்டியலிட்டு, சிந்துவெளிக் குறியீடு களைத் தொகுத்ததுடன், புள்ளியியல் மற்றும் கணினி உதவியுடன் பல்வேறு பகுப்பாய்வு முடிவுகளையும் அளித்திருக்கிறார். இன்றும் இத்தொகுப்பு சிந்துவெளி மொழியில் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு ஓர் இன்றியமையாத கருவி நூலாக இருந்து வருகிறது.

முனைவர் மகாதேவனின் முயற்சியைத் தொடர்ந்து அஸ்கோ பர்போலா மற்றும் சமீபத்தில் ப்ரையன் வெல்ஸ் போன்றவர்களும் சிந்துவெளிக் குறியீடுகளின் தொகுப்புகளை வெளியிட்டிருக் கிறார்கள். சிந்துவெளி எழுத்துக்களில் லேசான மாறுபாடுகளுடன் காணப்படும் குறியீடுகளைப் ப்ரையன் வெல்ஸ் வெவ்வேறு குறியீடுகளாகக் காண்கின்றார். மகாதேவன் அம் மாறுபாடுகளை ஒரு குறியீட்டிற்கான மாற்றுவடிவங்களாகக் குறிப்பிடுகின்றார். இந்த அடிப்படை வேறுபாடுகளுடன் சிந்துவெளிக் குறியீடுகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதே போல் அஸ்கோ பர்போலாவும் தொகுத்துள்ளார்.

சிந்துவெளிக் குறியீடுகள் திராவிட மொழிகளுடன் தொடர்பு டையவை என்ற கூற்றை முதலில் ஆதாரங்களுடன் முன் வைத்த பெருமை ஹீராஸ் பாதிரியாரைச் சேரும். இவர்தாம் மீன் வடிவக் குறியீட்டைத் திராவிட மொழிகள் பலவற்றிலும் உள்ள மீன் என்ற சொல்லாக இணைத்துக் காட்டினார்.

சிந்துவெளி மொழி ஆராய்ச்சியிலும் அஸ்கோ பர்போலா, வால்டர் பேர்ஸர்விஸ், யூரி நோரோஸாவ் (மாயன் மொழி ஆராய்ச்சியாளர்) தலைமையில் செயல்பட்ட ரஷ்ய ஆராய்ச்சி யாளர்கள் மற்றும் பல இந்திய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர், செய்தும் வருகின்றனர். யூரி நோரோஸாவ் இவ் வெழுத்துக்களைத் திராவிட மொழிக் கூறுகளுடையன என்றும் அவை சித்திர-எழுத்துக்களாக இருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சிந்துவெளி ஆய்வு குறித்தும் தமிழகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில், ஐராவதம் மகாதேவன், மதிவாணன், கல்யாணராமன், பூரண சந்திர ஜீவா போன்ற வெகு சில அறிஞர்களே தொடர்ந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள். இவர்களில் சிலர் பண்பாடு குறித்தும், சிலர் மொழி குறித்தும் ஆராய்ச்சி செய்துள்ளனர். உதாரணமாக மதிவாணன் சிந்துவெளி எழுத்துக்களுக்கு இணையாகத் தமிழ் பிராமி எழுத்துக்களை அடையாளம் காண்கிறார். சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் இதை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் அது ஒரு பெரும் முயற்சி. அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்து உடையவர்கள் அல்லர், இருப்பினும், இவ்வாறு எழுப்பப்படும் மாறுபட்ட கருத்துக்கள் தாம் சிந்துவெளி மொழி ஆராய்ச்சியை வலுவூட்டும். கவலையான ஒரு செய்தியை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டும். என்னவென் றால் இதுவரை தமிழில் சிந்துவெளி குறித்து (மொழிபெயர்ப்பு நூல்களையும் சேர்த்து) 50க்கும் குறைவான நூல்களே வெளியிடப் பட்டுள்ளன. இது சிந்துவெளி ஆராய்ச்சிக்குத் தேவையான ஊக்கத்தையும் பொருளுதவியின் தேவையையும் வலியுறுத்துகிறது.

ஐராவதம் மகாதேவனின் ஆராய்ச்சி

முனைவர் மகாதேவன் தொடக்க காலத்திலிருந்தே தம் சிந்துவெளி மொழி ஆய்வுகளுக்குக் கணினியைப் பயன்படுத்தி வருகிறார். நேரடியாக அருங்காட்சியகங்களுக்குச் சென்று சிந்துவெளிக் குறியீடுகளைப் பார்வையிட்டு, அவற்றைப் படி எடுத்து பட்டியலிட்டார். 1977இல் வெளியிட்ட சிந்துவெளிக் குறியீடுகளின் தொகுப்பு அப்போது மும்பை டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிமிதிஸி) இருந்த கணினியின் உதவியுடன் செய்யப்பட்டவையாகும்.

சிந்துவெளி மொழி குறித்த பகுப்பாய்வுக்கு சிந்துவெளி குறியீடுகளின் தொகுப்பு மிக இன்றியமையாதது. தொகுப்பின் முதல்கட்டமாக குறியீடுகளை வகைப்படுத்தி பட்டியலிட வேண்டும். முனைவர் மகாதேவனின் 1977 தொகுப்பு 417 குறியீடுகளைக்கொண்டிருந்தது. குறியீடுகளில் இருந்த சிறு வேறுபாடுகள் தனியாகப் பட்டியலிடப்பட்டிருந்தன. இதுதவிர, தொகுப்புக்குப் பயன்படுத்தப்பட்ட அத்தனை எழுத்துக் கோர்வை களும் (tமீஜ்ts) இருவிதமாகப் பட்டியலிடப்பட்டிருந்தன. முதலாவ தாக முனைவர் மகாதேவன் இவற்றுக்குக் கொடுத்திருந்த வரிசை எண் படியும், இரண்டாவதாக ஒவ்வோர் குறியீட்டுக்கும் அதை மையமாகக் கொண்டு அதற்கு முன்னும் பின்னும் என்ன குறியீடு கள் வருகின்றன என்பதை எளிதில் கண்டறியுமாறு சித்திர வடிவத்தில் தரப்பட்டிருந்தன. இதையும் தவிர புள்ளி விவரப் பட்டியல்கள் மிக அதிகமாக வரும் குறியீடு, இரட்டைக் குறியீடுகள் முதலியன எவ்விடத்தில், எத்தகைய சின்னங்களில் கிடைத்துள்ளன போன்ற விவரங்களையும் தெரிவிக்கின்றன. இவை மொழி ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

1977இல் வெளியான மகாதேவனின் சிந்துவெளிக் குறியீடுகளின் தொகுப்பினால் ஈர்க்கப்பட்ட கிஃப்ட் சிரோமணி கணினி உதவியுடன் புள்ளியியல் கோட்டுபாடுகளைப் பயன்படுத்தி சிந்துவெளிக் குறியீடுகள் பற்றிப் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். சிந்துவெளி மொழி ஆய்வுக்குக் கணினி மற்றும் புள்ளியியலைப் பெருமளவு பயன்படுத்திய இந்திய ஆராய்ச்சி யாளர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர். இவர் 1989 இல் அகால மரணம் அடைந்தது சிந்துவெளி மொழி ஆய்வுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றே கூற வேண்டும்.

தற்போது சிந்து வெளியிலுள்ள தமிழ்க் கூறுகளையும் பழந்தமிழிலுள்ள சிந்துவெளிக் கூறுகளின் நீட்சியையும் மகாதேவன் தம் ஆய்வில் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளில் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், சிந்துவெளிக் குறியீடுகள் போன்ற குறியீடுகள் கொண்ட பானையோடுகளும் கற்கோடரியும் கிடைத்துள்ளன. முனைவர் மகாதேவன் சிந்துவெளிப் பண்பாட்டின் எச்சங்கள் நம்மிடையே இன்றளவும் இருந்து வருவதாகவும் கருதுகிறார். சமீபத்தில் அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் அகத்தியர் வேளிர் குலத்தினருடன் தென்னாட்டிற்குப் புலம் பெயர்ந்ததைப் புறநானூற்றை மேற்கோள் காட்டி விளக்கியுள்ளார். இத்தகைய ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்யவும், அவ்வாறு ஆராய்ச்சி செய்யும் அறிஞர்கள் கருத்துப் பரிமாற்றத்துக்கு ஒரு இடமாகவும் சிந்துவெளிப் பண்பாட்டு ஆய்வு மையம் பணியாற்றி வருகிறது.

அண்மையில் மயங்க் வாஹியா, நிஷா யாதவ், ராஜேஷ் ராவ், ரொணொஜய் அதிகாரி ஆகியோர் மேற்கொண்ட கணினி மற்றும் மொழியியல் ஆய்வில் சிந்துவெளி எழுத்துக்கள் நிச்சயமாக ஒரு மொழி தான் என்ற முடிவிற்கு வந்து அதற்கான அறிக்கையினை ஷிநீவீமீஸீநீமீ என்ற ஆராய்ச்சி இதழில் வெளியிட்டுள்ளனர். இது மகாதேவன் முதலான ஆய்வாளர்களின் கருதுகோளை உறுதி செய்வதாக உள்ளது. இது விஞ்ஞானிகளின் (இங்கே - கணிதவியல், மொழி யியல், கணிப்பொறியியல், வானவியல்) முதல் கட்ட ஒப்புதலாகும். இவர்கள் தொடர்ந்து மகாதேவனின் ஆலோசனையைப் பெற்று இந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிந்துவெளி மொழி ஆய்வுகளைப்பற்றி மூன்று கருத்துக்களை மனதில் கொள்ள வேண்டும்.

1.     நாம் செய்யும் ஆராய்ச்சிப் பணிகள் பன்னாட்டு அளவில் சென்று அடைய வேண்டுமென்றால் அவை செம்மையான ஆய்வு நெறிமுறைகளைக் கடைபிடித்து செய்யப்பட்டிருக்க வேண்டும்; ஆராய்ச்சிக் கட்டுரைகளும் பன்னாட்டுத் தரத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இவ்வகைக்கு முனைவர் மகாதேவனின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எடுத்துக் காட்டுகளாகக் கூறலாம்.

2.     இத்துறையில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் இத்துறையைச் சார்ந்த ஆராய்ச்சி ஏடுகளில் வரும் கட்டுரைகளைப் படித்து வர வேண்டும். உலகில் சிந்துவெளி மொழி தவிர படிக்கப்படாத இதர மொழிகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றியும் ஆராய்ச் சிகள் நடந்து வருகின்றன; இம்மொழி ஆராய்ச்சியாளர்களது அணுகுமுறை என்னவென்று அறிந்து கொள்வது சிந்துவெளி ஆராய்ச்சியாளர்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும்.

3.     தமிழ் மட்டுமல்லாது பிராமி, கரோஷ்டி, பழைய சீனம், சுமேரிய மற்றும் எகிப்திய எழுத்துக்கள், பிற திராவிட மொழிக்கூறுகளை அறிந்திருக்க வேண்டும் அல்லது அவற்றோடு சிந்து வெளி எழுத்துக்களை ஒப்பிட்டுப் பார்க்கப் பயிற்சி பெற்றிருக்கவேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாகவே வரலாற்றியலிலும், குறிப்பாகப் பண்டைய வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுத் துறைகளி லும், முனைவர் பட்டத்திற்கான ஆயவு மாணவர்களின் எண் ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இது இத்துறைகளின் மீது மாணவர்களுக்கு ஆர்வமில்லாததையே காட்டுகிறது. தகவல் தொழில் நுட்பத் துறையின் தாக்கத்தால் ஏற்பட்ட விளைவு என்று சிலர் கூறினாலும், இம்மையத்தினை தனிப்பட்ட முறையில், தன்னார்வம் கொண்டு அணுகுபவர்கள் பலரும் தகவல் தொழில் நுட்பத் துறையைச் சேர்ந்தவர்களே என எண்ணும்போது இக்கூற்றை அப்படியே ஏற்க மனம் ஒப்பவில்லை. நமது பண்பாடு குறித்து ஆழ்ந்து படிக்கும் ஆர்வம் குறைந்துவிட்டதே காரணமாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.

தொல்பொருள் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் இந்திய அரசு தொல்பொருள் துறை மற்றும் தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறை தவிர சென்னைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் ஓரிரு தனியார் துறை நிறுவனங்களும் செயல்பட்டுவருகின்றன, எனினும் நானறிந்தவரை சிந்துவெளி அகழ்வாராய்ச்சிகளில் தமிழ் நாட்டைச் சேர்ந்த எந்த ஒரு கல்வி/ ஆராய்ச்சி நிறுவனமும் இது வரை ஈடுபட்டதாகத் தெரியவில்லை. இங்குதான் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் செயல் பாடுகளில் ஒன்றான சிந்துவெளிப் பண்பாட்டு ஆய்வு மையம் இத்துறையில் செய்து வரும் அரிய பணிகளைக் காணலாம்.

சிந்துவெளி அகழ்வாராய்ச்சி மட்டுமல்லாது தமிழகத்திலேயே இன்னமும் செய்ய வேண்டிய அகழ்வாராய்ச்சிப் பணிகள் நிறைய இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கொடுமணல் நமக்குப் பல பண்டைய வரலாற்றுச் சான்றுகளை அள்ளித்தந்திருக்கிறது. ஆயினும் இது வரையில் கொடுமணலின் பத்தில் ஒரு பங்கே அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்றெண்ணும் போது, அவ்விடத் தில் இன்னும் என்ன ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதுவரை நடந்த அகழ்வு ஆய்வின் அறிக்கை கூட இதுவரை முழுமையாக வெளியிடப்படவில்லை.

சிந்துவெளிப் பண்பாட்டு ஆய்வு மையத்தின் செயல்பாடுகள்:

சிந்துவெளி தொடர்பான ஆராய்ச்சி நூல்கள் மற்றும் கட்டுரைகளின் பட்டியல் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதை வைத்து நூலகத்தில் இல்லாத நூல்களையும் கட்டுரைகளையும் தருவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை நூற்றுக் கணக்கான ஆதாரங்களைத் திரட்டி இவ்வாய்வுக்குத் தேவையான வசதிகளையும் செய்து வருகிறது இம்மையம். மேலும் ஆர்க்கியாலஜி, ஆன்ட்டிக்விட்டி, புராதத்வ மற்றும் JSTOR போன்ற கணினி வழி இதழ்களைத் தருவிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு செய்வதால் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரே இடத்தில் இத்துறை சார்ந்த தரவுகள் கிடைக்கும். ஆராய்ச்சி மேற்கொள்வ தற்கு ஏதுவாக ஒரு சூழலை உருவாக்குகிறது.

பல கருத்தரங்குகளும், பயிலரங்கம் நடத்துவதும், கட்டுரை களைப் படிக்க ஆய்வாளர்கள் அழைக்கப்படுவதும் தொடர்ந்து நடக்கிறது. அஸ்கோ பர்போலா, ரொமிலா தாபர் உள்ளிட்ட அறிஞர்கள் இங்கு வருகை தந்துள்ளனர்.

1977க்கு பின் பல இடங்களில் சிந்துவெளி அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடந்துள்ளன. குறிப்பாக ஹரப்பா, தோலவிரா, பர்மானா, பிரானா போன்ற இடங்களில் ஏராளமான சிந்துவெளி முத்திரை கள் கிடைத்துள்ளன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஏற்கனவே உள்ள சிந்துவெளிக் குறியீடுகளின் தொகுப்பைச் செம்மை செய்து, விரிவாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சிந்துவெளி பண்பாட்டு ஆய்வு மையத்தின் வளர்ச்சியில் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் பெரும்பங்கு வகித்து வருகிறது. இம்மையம் தொடங்கப்பட்டபோது மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தக்க சமயத்தில் பொருளுதவி அளித்து மையத்தின் வளர்ச்சிக்கு அடிகோலியது. இப்பொருளுதவி யுடன் இம்மையம் சிந்துவெளி குறியீடுகளின் 1977 தொகுப்பை சீரமைத்தல், சிந்துவெளி மற்றும் சிந்துவெளிக் குறியீடுகள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சேகரித்தல் போன்ற பணிகளைச் செய்து முடித்தது. நடைபெறும் ஆண்டில் சிந்துவெளிக் குறியீடு களைப் பற்றி ஒரு கருத்தரங்கம் நடத்தவும், ஒரு பயிலரங்கம் நடத்தவும் இம்மையத்திற்கு மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் பொருளுதவி அளித்துள்ளது. பொருளுதவி தருவது மட்டுமின்றி, செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் இம்மையத்துக்கு ஒரு பக்க பலமாக இருந்து வருகிறது. இம்மையத்தின் எதிர் காலத் திட்டங்களுக்கும் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் எல்லா உதவிகளையும் அளிக்கும் என்பது இம்மையத்தின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஆகும்.

இம்மையத்தின் மூலம் மொழியியல், பண்பாடு, புள்ளியியல் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இம்மையம் TIFR மற்றும் சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களுடன் தொடர்பு கொண்டு சிந்துவெளிக் குறியீடுகள் பற்றி கருத்துப் பரிமாற்றம் செய்து வருகிறது.

சிந்துவெளி ஆய்வுகளைச் சீரான முறையில் பன்னாட்டு அறிஞர்களும் ஏற்கும் வகையில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் சிந்துவெளி பண்பாட்டு ஆய்வு மையம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் அங்கமாக இருப்பது ஆய்வாளர்களுக்குக் கிடைத்த மற்றொரு அறிவுத் தளம். மேலும் தமிழியல் ஆய்வாளர்களுக்கான ஆவணக்காப்பகமாக விளங்கும் ரோஜா முத்தையா நூலகம், ஆய்விற்கான மற்றொரு முகாந்திரமாக சிந்துவெளி பண்பாட்டு ஆய்வு மையத்தை உருவாக்கியுள்ளது இத்துறையின் ஆராய்ச்சிப் பணிகளைப் பன்னாட்டுத் தரத்திற்கு உயர்த்தும் என்பது உறுதி.

(திரு. சுப்ரமணியன் கணினிப் பொறியாளர். அமெரிக்காவில் பல ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு சிந்துவெளி ஆராய்ச்சியினால் ஈர்க்கப்பட்டு தற்பொழுது சிந்துவெளி பண்பாட்டு ஆய்வு மையத்தில் முனைவர் பட்டத்திற்கு ஆராய்ச்சியினை மேற்கொண்டுள்ளார்.)