சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான மாயா சர்மா அவர்களுடன் நிகழ்த்திய உரையாடல்

உரையாடியவர்:அனிருத்தன் வாசுதேவன்

(இந்த உரையாடலின் ஆங்கிலப் பிரதி 2010இல் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் வெளியானது.)

மாயா சர்மா அவர்களுக்குக் கதைகள் மிகப் பிடித்தமானவை. எந்த அளவிற்குக் கதை சொல்லப்பிடிக்குமோ அந்த அளவிற்குக் கதை கேட்பதற்கும் பிடிக்கும். ‘என் இளம் பருவம் கதைகளால் நிரம்பியிருந்தது. என்னுடைய பாட்டி, எங்கள் வீட்டில் பணிபுரிந்த வர்கள் அனைவரும் எப்போதும் ஏதாவது கதைகளைச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்,’ என்று சொல்கிறார் அவர்.

2006 ஆம் ஆண்டு இவர் எழுதிய Loving women – Being Lesbian in Unprivileged India என்ற நூல் ஒன்றை யோடா பதிப்பகம் வெளியிட்டது. இந்த நூலில் மாய சர்மா வட இந்தியாவின் கிராமப் புறங்களில் வசிக்கும் லெஸ்பியன் தம்பதிகளின் வாழ்க்கைகளைப் பதிவு செய்துள்ளார். நகர்ப்புறங்களே முற்போக்கு வாழ்க்கைக்கு ஏதுவான இடங்கள் என்ற நமது பொதுவான கருத்துக்களுக்கு மத்தியில், இந்திய கிராமங்களில் இரு பெண்களுக்கு இடையிலான உறவுகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை இப்பெண்களின் வாய்மொழியாகவே மாயா சர்மா இந்த நூலில் பதிவு செய்திருக் கிறார். கதை சொல்லுதல் என்பது ஒருவழிச் செயல்பாடல்ல என்று மாயா சர்மா கூறுகிறார். தொலைபேசியில் நடந்த இந்த நேர்காணலின் பொழுது நான் இடையிடையே "ஹ்ம்ம்..ஹ்ம்ம்" என்று சொல்வதைச் சுட்டிக்காட்டி, ‘இதை ராஜஸ்தானி மொழியில் ஹ§ம்காரம் என்று சொல்கிறோம். நீங்கள் சொல்லும் வெறும் ஹ்ம் என்ற பதிலின் காரணமாக எனக்குள் இருக்கும் கதை வெளியே புறண்டோடிவருகிறது. நான் சொல்லும் கதையின் மறுமுனையை நீங்கள் பிடித்திருக்கிறீர்கள்’ என்று கூறுகிறார்.

தன்னுடைய வாழ்க்கை மற்றும் உறவுகள் குறித்தத் தெளிவான புரிதல் வேண்டியே மற்ற பெண்களின் கதைகளைக் கேட்கத் தொடங்கியதாகவும் மாயா சர்மா சொல்கிறார். "நான் அப்பொழுது ஒரு பெண்ணுடனான உறவில் இருந்தேன். எனவே இது அப்போது பொதுவாகக் கருதப்பட்டது போல நகர்ப்புறப் பெண்களின் புது நாகரிக வெளிப்பாடு அல்ல என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் என்னைப் போலுள்ள மற்ற பெண்களைச் சந்திக்க வேண்டும், பெண்களை நேசிக்கும் பெண்களின் கதைகளைக் கேட்க வேண்டும் என்ற தேவையும் எனக்குள் இருந்தது. கிராமப் புறத்திலுள்ள மற்றும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களும் தங்கள் வாழ்க்கையை மறைத்து வாழவில்லை. என்னிடம் திறந்த மனத்துடன் பேசினார்கள். 'ஆமாம், நாங்கள் ஒருவரையருவர் நேசிக் கிறோம்,' என்றார்கள். என்னிடம் அன்றிருந்த பல குழப்பங்களும் பயங்களும் என்னுடையவை மட்டுமே என்று தோன்றியது.

உழைப்பாளர் சங்கங்களுடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றியிருந்ததால் மாயாவால் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பல பெண்களை சந்திக்க முடிந்தது. எனவே இவர்களுள் சிலரது கதைகளைப் பதிவு செய்யும் பணி தொடங்கியபொழுது முன்பின் அறியாத மற்றவர்களது வாழ்க்கையில் தலையிடுகிறோம் என்ற எண்ணமிருக்கவில்லை. அதிகார சமன்பாடின்மை குறித்து நான் என்றும் கவனமாக இருக்க முயல்கிறேன். வேறு ஒரு வர்க்கத்தைச் சேர்ந்த, வேறு மாதிரியான கல்வித் தகுதி பெற்ற பெண்ணாக நான் இப்பணியில் ஈடுபடுவதை நான் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். வர்க்க வேற்றுமை என்றும் முக்கியமானது, அது உண்டாக்கும் பிளவுகளை கவனித்து அங்கீகரிக்க வேண்டும். வேறு வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் உறவிலிருந்த பொழுது கூட அதில் பல சிக்கல்கள் இருந்தன. வித்தியாசங்களை மறுக்க இயலாது. ஆனால் அதற்கிடையிலும் நம் கதைகளை நாம் பரிமாறிக் கொள்ளலாம். எந்தப் புள்ளிகளில் நம்மால் இணைய முடியும் என்று பார்க்கலாம்" என்கிறார் மாய சர்மா. குஜராத் மாநிலத்தில் பரோடா நகரில் உள்ள ‘விகல்ப் பெண்கள் குழு’வில் மாயா பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். கதைகளின் பரிமாற்றம், நம்மைப் பிளவுபடுத்துவதையும் மீறி ஏதோ சில புள்ளிகளில் இணைய முடியும் என்ற நம்பிக்கையே இந்தப் பணியில் இவருக்குத் துணை நிற்பதாகக் கூறுகிறார். இந்த அமைப்பின் உதவியின்றி இந்த நூல் சாத்தியப்பட்டிருக்காது என்கிறார்.

எனவே, இந்தக் கதைகளைக் கேட்கும் வேளையில் மாயா, தனது கதையையும் இப்பெண்களுடன் பகிர்ந்து கொண்டார். அமைதி நிலவுமிடங்களை வெளிச்சமிட்டுக் காட்டும் திறன், கதை சொல்லல் என்னும் செயல்பாட்டிற்கு உண்டு என்பது மாயாவின் நம்பிக்கை. "சொல்லப்படுவது சொல்லக்கூடாதது என்பவற்றிற்கு இடையே அமைதிகள் பல நிலவுகின்றன" என்று தனது நூலில் குறிப்பிடுகிறார்.

நம்முடைய கதையை நாம் சொல்லும் பொழுது நமக்கு நம்மைப் பிடித்திருக்கிறது; அந்தக் கதை சொல்லலியே நாம் நம்மை மறு உருவாக்கம் செய்துகொள்ள முடியும். "சிலவற்றை வலியுறுத்திச் சொல்வதும் சிலவற்றை மறைப்பதும் சற்று மாற்றங்களை நுழைப்பதும் கதை சொல்லலில் சகஜம். கதைகளில் உள்ள உண்மைகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு அவற்றில் பொய்களும் முக்கியம். ஒவ்வொரு கதையும் ஒரு முழுமையான நீர்த்துளி போல. அதனை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்கிறார்.

பெயர்கள் அடையாளங்கள் மற்றும் அவற்றின் அரசியல்கள் சில நேரங்களில் தனிமனித வாழ்வின் குறிப்பிட்ட அம்சங்களையும் தனித்தன்மையையும் மறைத்துவிடுகின்றன. நிஜ வாழ்வுகளின் பன்முக அம்சங்கள் அடையாளங்களின் குறுகிய வரையறைக்குள் அடங்குவதில்லை. நம் வாழ்வனுபவங்கள் நமது அடையாளக் குறியீடுகளை விரிவடையச் செய்கின்றன. அடையாளம் அரசியலாக இருப்பதுடன் அதில் ஒரு விளையாட்டுத் தன்மையும் இருப்பதாக நினைக்கிறேன். நம் அடையாளங்களுடன் நாம் உறவாடவும் விளையாடவும் செய்கிறோம்," என்று மாயா கூறுகிறார்.இதற்கு உதாரணமாகத் தான் "லெஸ்பியன்" என்ற சொல்லை முதன் முதலில் எதிர்கொண்ட அனுபவத்தை நினைவுகூர்கிறார். "பெண்கள் மீதான என்னுடைய பாலியல் ஈர்ப்பை நான் எனக்குத் தெளிவுபடுத்திக் கொண்டிருந்த அந்த சமயத்தில் எனக்கு "லெஸ்பியன்" என்ற ஒரு சொல் இருப்பது கூடத் தெரியாது. அதைக் கேள்விப்பட்ட பின்னும் அந்தச் சொல்லை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று தெரியவில்லை! இந்தச் சொல் எங்களது நாவில் புரண்டோடிய விதம் எனக்கும் என் இளம் தோழி ஒருத்திக்கும் கிளர்ச்சியூட்டியது நினைவிலிருக்கிறது. நாங்கள் எப்படி உணர்கிறோம் என்பதற்கும் அந்த உணர்வு எங்களுக்குத் தந்த அடையாளத்தையும் குறிக்க ஒரு சொல் இருப்பது ஒரு அற்புதமான நிகழ்வாக எனக்குப் பட்டது. அது வரை அணிந்திராத ஒரு புது ஆடையை அணிந்து கொண்டு அங்குமிங்கும் நடந்து பார்ப்பது போன்ற ஒரு உணர்வாக அது இருந்தது."

அதே நேரத்தில் மொழியின் அரசியல் குறித்தும் மாயா கவனமாக இருக்கிறார். "மொழி எப்பொழுதும் எங்கிருந்தோ வருகிறது. அது யாராலோ எதற்காகவோ உருவாக்கப்பட்டது. நாம் பயன்படுத்தும் மொழி யாரிடமிருந்து வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டி யுள்ளது. ஆனால் அது நிச்சயமாக மாற்றங்களை எதிர்கொள்கிறது. மொழியை நாம் நமதாக்கிக் கொள்கிறோம், நம் தேவைக்கேற்ப அதை மாற்றியமைக்கவும் செய்கிறோம்."

வரலாற்று ரீதியாகப் பார்க்கும் பொழுது, 1996 ஆம் ஆண்டு தீபா மெஹ்தா என்ற இயக்குநரின் "ஃபயர்" என்ற திரைப்படம் வெளிவந்த பிறகே இந்தியாவில் பொதுவெளியில் லெஸ்பியன் என்ற சொல் பிரபலமானது. சிவ சேனை, பஜ்ரங்க் தளம் போன்ற அடிப்படைவாத அமைப்புகள் இத்திரைப்படம் இரு பெண்களுக் கிடையிலான பாலியல் உறவைச் சித்திரித்ததை எதிர்த்து செய்த வன்முறையான போராட்டங்கள் பலரால் கண்டனம் செய்யப் பட்டன. இந்து மத, பண்பாட்டு அடிப்படைவாதத்தை எதிர்த்து வந்த குரல்கள் இரண்டு நிலைகளில் இருந்தன. ஒன்று; பேச்சு மற்றும் கலைக்கான சுதந்திரம் மறுக்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டி லிருந்து எழுந்த குரல்கள்; மற்றொன்று CALERI (Campaign for Lesbian Rights) போன்ற அமைப்புகள் எழுப்பிய குரல்கள். இந்த இரண்டாவது வகையான குரல்கள் "லெஸ்பியன்" என்ற சொல்லாடலையும் அது குறிக்கும் அடையாளத்தையும் சுயபிரக்ஞையுடன் ஏற்றுக்கொண்டன. அதே நிலைப்பாட்டிலிருந்து அந்தச் சொல்லைப் பயன்படுத்துவது எனது தீர்மானமாகவும் இருந்தது.

கதைகளைப் பற்றி மீண்டும் பேசத்தொடங்கிய மாயா பல நேரங்களில் நாம் கேட்கும் கதைகளுக்குள் ஒளிந்திருக்கும் கதைகளைப் பற்றிக் குறிப்பிட்டார். பல நேரங்களில் நமது கதையை நாமே புரிந்துகொள்வதற்கு நமக்கு மற்றவர்களின் கதைகள் தேவையாக இருக்கின்றன. அவருடைய நூலில் உள்ள ஒரு குறிப்பிட்ட கதையில், ராஜஸ்தான் பகுதியில் பிரபலமாக வழங்கும் ராம்தேவ்ரா என்ற கடவுளைப் பற்றிய ஒரு சிறிய கதை முக்கிய இடம் வகிக்கிறது. களவு போன தனது மாடுகளை மீட்டெடுக்க ராம்தேவ்ரா சென்று கொண்டிருக்கிறார். வழியில் தீ ஒன்றில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பாம்பு ஒன்றினைக் காப்பாற்றுகிறார். தான் முக்தி அடையும் வாய்ப்பிலிருந்து தன்னை விலக்கி விட்டதாக அவர் மீது கோபம் கொண்டு அந்த பாம்பு அவரைக் கொல்ல முடிவு செய்கிறது. தான் செய்ய வேண்டிய பணியை நிறைவேற்றிவிட்டுத் திரும்பும் வழியில் தானே தன்னைப் அந்த பாம்பிற்கு அர்ப்பணிப்பதாக உறுதி கூறிவிட்டு ராம்தேவ்ரா செல்கிறார். ஆனால் வாக்களித்தது போல ராம்தேவ்ரா திரும்பி வரும்பொழுது, அவர் உடல் முழுவதும் போர்க்காயங்களினால் நிரம்பியிருக்கின்றது. அப்பாம்பு தன் விஷத்தை செலுத்த ராம்தேவ்ராவின் நாக்கு ஒன்று மட்டுமே ஏற்ற இடமாக இருந்தது. இதுவே கதை.

இது போன்ற கதைகளில் உள்ள சொல்லப்படாத விஷயங்களும் அது உண்டாக்கும் அமைதியும் மாயாவைக் கவர்கின்றன. மேலும், நமது கதைகளில் உள்ள இடைவெளிகளை, நாம் வெளிப்படையாக சொல்ல விரும்பாதவை சொல்ல முடியாதவை; ஆகியவை உண்டாக்கும் வெளிகளை நிரப்ப நாம் இது போன்ற கதைகளைப் பயன்படுத்துகிறோம் என்று மாயா கூறுகிறார். அவருடைய நூலில் அவர் எழுதியிருப்பது போல் "அமைதி உடைக்கப்பட முடியாத தாகவோ உடைக்கப்படக் கூடாததாகவோ இருக்கும் பொழுது, அந்த அமைதி அங்கு இருப்பதை அங்கீகரிக்கவாவது செய்ய வேண்டும். அதன் வீரியத்தை, முரண்பாடுகளை, தவிர்க்க முடியாத அதன் விளைவுகளைக் குறைந்தபட்சம் அங்கீகரிக்கவாவது செய்யலாம்." 

Pin It