(பெங்களூரில் ‘சங்கமா’ அமைப்புடன் பல வருடங்களாக அரவானிகளின் உரிமைகள் மற்றும் பாலியல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வருபவர் ரேவதி. அவர்களின் ‘The Truth about my life’ என்ற பென்குயின் நிறுவனம் வெளியிட்டிருக்கும் நூல், வ.கீதா அவர்களால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்நூலை ‘அடையாளம்’ பதிப்பகம் வெளியிட உள்ளது. இந்நூலிலிருந்து ஒரு பகுதியை இங்கு வெளியிட்டுள்ளோம்.)

டெல்லியை விட பாம்பே எனக்கு வித்தியாசமாக இருந்தது. அங்கு வசிக்கும் மக்கள், கலாச்சாரம், சமுத்திரம், மின்சார ரயில் இப்படி எல்லாமே புதுமையாக இருந்தது.என் குருவோட அம்மா வீடு மும்பையில் காட்குப்பர் என்ற பகுதியில் உள்ளது. அவர்களின் பரிவார் மிகப் பெரியது. அங்குள்ள நானிதான் எல்லோருக்கும் பெரியவர். அவர் பரிவாரில் அவர்களுக்கு சேலா, நாத்தி, சடக்நாத்தி (மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி)என 500க்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர். சிலர் தமிழ்நாட்டில், சிலர் டெல்லியில், சிலர் பம்பாயில் வேறு வேறு இடங்களில் ஏன் சிங்கப்பூரில் கூட இருக்கின்றனர். நானி இருக்கும் வீடு டெல்லியில் என் குரு வீடுபோல வறுமையான வாடகை வீடு கிடையாது. இங்கு சொந்த வீடு. வசதியான வீடு கூட.

இங்குள்ள நானிக்குச் சொந்தமாக காமாட்டிபுரத்தில் பாலியல் தொழில் செய்யும் வீடும் உள்ளது. அங்கு அவர் சேலா நடத்திக் கொண்டிருந்தார். வீட்டிலும் நானி சேலாக்கள், சில நாத்தி சேலாக்கள் வீட்டு வேலைகள் செய்துகொண்டும் கடைகேட்கச் செல்லவும் இருந்தனர். இங்க துணி துவைக்கவோ பாத்ரூம் செல்லவோ வெளியில் போக வேண்டியது இல்லை.எல்லா வசதிகளும் வீட்டிலேயே இருக்கின்றன. மூத்தவர் நானியைக் கண்டால் எல்லோருக்கும் பயம், பக்தி, மரியாதை இருக்கும். நானி வெளியில் சென்றுவிட்டால் எல்லோரும் ஃபிரியாகப் பேசுவார்கள். டிவி பார்ப்பார்கள். நானி வருகின்றார் என்றால் எல்லோரும் அமைதியாக இருப்பார்கள். அதற்காக நானி கொடுமைக்காரி என்று நினைக்க வேண்டாம். அவர்களும் டிவி பார்க்கச் சொல்வார். ஆடச் சொல்வார். பாடச் சொல்வார். எப்படி நம்முடைய வீடுகளில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்போமோ அதைப் போலதான் இங்கும்.

காமாட்டிபுரம், பான்டுப், சோனாப்பூர், முல்லன், கோலிவடா, மாதுங்கா, மைகீம், பைகளா இப்படி எல்லா இடங்களிலும் இஜடாக்கள் வசிக்கின்றனர். தொழில் என்று பார்த்தால் டெல்லியைப் போல கடை கேட்பது, பதாய்க்குப் போவது. டெல்லியை விட வித்தியாசமாகப் பாலியல் தொழில் செய்பவர் களும், பாலியல் தொழில் நடக்கும் வீடுகளும் இங்கு உள்ளது. பொதுவா இங்கு பதாய்க்குப் போகின்றவர்கள் பாலியல் தொழில் செய்ய மாட்டார்கள். இஜடாக் களின் உறவுமுறைகள் என்று பார்த்தால் அம்மா, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, பால்மகள் என உறவுமுறைகள் உள்ளன. ஒரு இஜடாவை மற்றொரு இஜடா சேலாவாக ஆக்கிக்கொள்ள மூத்த இஜடாக்களின் முன்னிலையில் ஜமாத்(மீட்டிங்) கூட்டி, அங்கு இவருடைய சேலா இவர் என்று அங்கீகரிக்கப்படுகின்றது. இந்த சேலா முறை எந்த ஒரு சட்டத்தின் முறைப்படியும் கிடையாது. இஜடாக்களின் சட்டம், திட்டம், கலாச்சாரம் எல்லாம் அவர்களுக்குள் மட்டும்தான். ஜமாத் என்பது இதுபோன்ற நல்லது கெட்டது எனப்பேசி முடிவு செய்யும் இடமாகவும் செயல்படுகின்றது.சமுதாயத்தால் புறக்கணிக்கப் பட்டு சட்டத்தில் இடம் இல்லாமல் உரிமைகள் கிடைக்காத இஜடாக் களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகும்போது நான் இருக்கிறேன் என்று சொல்லிக்கொள்வதுதான் இந்த இஜடாக்களின் கலாச்சாரம். இங்கு சாதி மதம் என்ற வேற்றுமை கிடையாது. எந்த ஒரு மதமோ, ஏழையோ, பணக்காரனோ யாராக இருந்தாலும் இஜடாக்கள் இருக்கிறார்கள்.

கீழ்சாதி,மேல்சாதி என்ற வித்தியாசம் இஜடாக்களில் இல்லை. இஜடாங்கனு ஒரே சாதிதான். ஆனால் இஜடாக்களில் ஏழு வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. நான் முன்கூட்டியே கூறியதைப்போல ஏழு வீடுகளும் ஒவ்வொரு வீட்டை யும் சவுக்கன் வீடு என்று கூறுவார்கள். ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்குக் குருவை மாற்றிக் கொள்ளும் பழக்கமும் இஜடாக்களில் உள்ளது. மும்பையில் ஏழு வீட்டிற்கும் ஒவ்வொரு தலைவியைத் தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். அவர்கள் நாயக் என்று கூறப் படுகிறார்கள். நாயக் மற்றும் நாயக் பரிவார்கள் அதிகமாக பதாய்க்குச் செல்வார்கள். ஒரு நாயக்கின் பரிவாரில் அக்கா, தங்கை, மகள்,பேத்தி இப்படி அவரவர்களுக்கும் பரிவார்கள் உள்ளனர். தனித் தனியாகவும் வசிக்கின்றனர்.ஏதாவது விசேஷங்கள், ஜமாத் என்றால் எல்லோரும் ஒன்றாகக் கூடிக்கொள்வார்கள். இப்படி இன்னும் பல விஷயங்களை மும்பைக்கு வந்த பிறகு நான் பார்த்துப் பேசி பழகித் தெரிந்து கொண்டேன்.கட்டுப்பாடு, ஒழுக்கம், உரிமைகள் இவற்றை பேணிக் காக்கத்தான் இப்படிப்பட்ட இஜடா கலாச்சாரம் அமைந்துள்ளது எனப் புரிந்துகொண்டேன்.

வாரம் முழுதும் மும்பையில் கடை கேட்கச் செல்வேன். திங்கள் விடி மற்றும் சர்ச்கேட், செவ்வாய் பாந்திரா, புதன் மான்கூர், வியாழன் சன்டாஸ்ரோட், வெள்ளி மச்சித்பந்தர், சனி சைன்கோலிவடா, ஞாயிறு செம்பூர். இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியில் உள்ள கடைகளில் கடைகேட்கச் செல்வேன். ஆரம்பத்தில் என்னை கடை கேட்க இஜடாக்கள் கூட்டிச் சென்றனர். ஒரு மாதத்திற்குப் பிறகு நான் தனியாகவே சென்று கடைகேட்டு வருவேன். டெல்லியில் உள்ள என் குரு வந்து என்னை அழைத்துச் செல்வார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவரிடமிருந்து ஒரு செய்தியும் வரவில்லை. நான் மும்பைக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகியும் அங்கிருந்து ஒரு கடிதமோ, போன் தொடர்போ வரவில்லை. மும்பை வீட்டில் இருக்கும் என் நானி அவர்களின் சேலா பெயரில் என்னை சேலாவாக விருப்பமா என்று கேட்டார்கள். அத்துடன் எனக்கு சீக்கிரமா ஆப்ரேஷன் செய்து விடுவதாகவும் கூறினார்கள். எனக்குப் பெரியவர்கள் பேச்சுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். மேலும் டெல்லி குருவிடம் இருந்து ஒரு சேதியும் வரவில்லை. என்ன செய்வது எனத் தயங்கினேன். பதிலுக்கு நீ டெல்லி குரு பெயரில் சேலா ஆகியிருந்தாலும் என் சேலா முறையில் சேலா ஆகியிருந்தாலும் நீ இருவருக்கும் சேலாதான். அதுவும் நீ ஊரில் அவள் பெயரில் சேலா ஆகி உள்ளாய். அந்த முறை வேறு. மும்பை முறை வேறு. அதனால் மும்பை முறைப்படி என் சேலா பெயரில் நீ சேலா ஆகலாம். தப்பு இல்லை. இஜடாக்களில் தமிழ் நாட்டுக்கு ஒரு குரு இருக்கலாம். மும்பையில் ஒரு குரு இருக்கலாம் என்று நானி கூறினார். நானும் சரி என்று ஒப்புக் கொண்டேன்.

தமிழ்நாட்டுக் குரு சேலா உறவு முறை தமிழ்நாட்டுக்கு மட்டும் தான் செல்லும். மும்பை குரு சேலா உறவு முறை தமிழ்நாட்டில் செல்லாது. மும்பையில் சேலா ஆனவர்கள் மும்பை சேலாக்கள். டெல்லியில் சேலா ஆனவர்கள் டெல்லி சேலாக்கள். அதுபோல் ஒவ்வொரு ஸ்டேட்டிலும் வட இந்தியாவில் தனித்தனி வீடுகளும் அந்தந்த வீடுகளில் அவரவர் பரிவார்களும் இருக்கின்றனர். கர்நாடகாவில் மும்பையின் ஏழு வீட்டு இஜடாக்களும் வசிக்கின்றனர். இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் தனிச்சிறப்பு. அங்கு ஒரு குரு இருக்கலாம். அதே போல் தமிழ்நாட்டை விட்டு வேறு ஒரு குருவும் இருக்கலாம்.

காமாட்டிபுரத்தில் வசிக்கும் மும்பை குரு பெயரில் சேலா ஆக்குவதற்கு ஏழு வீடுகளில் உள்ள நாயக்குகள் இருக்கும் இடமான பைக்களா கூட்டிச் சென்றனர். நான் சேலா ஆகப்போகும் வீட்டின் நாயக் வீட்டுக்குச் சென்று என் குரு பெயரில் என்னை சேலா செய்வதாகக் கூறினர். அங்கு மற்ற வீட்டு நாயக்குகளும் அழைக் கப்பட்டு சட்டாய் (பாய்) விரித்து அதன்மேல் உட்கார்ந்து ஜமாத் கூட்டி இன்னார் வீட்டில் இன்னார் பரிவாரில் இன்னார் சேலாவுக்கு ரேவதியை சேலா செய்வதாக எல்லோரும் கேட்கும்படிக் கூறினர். அதற்கு எல்லோரும் கைதட்டினர். என்னைப் பெரியவர்களுக்கு பாவ்படுத்திச் சொல்லச் சொன்னார்கள். நானும் எல்லாருக்கும் பாவ்படுத்தி என்று கூறினேன். பிறகு என்னை என் குரு காட்குப்பர் அழைத்து வந்துவிட்டார்.

ஜமாத்தில் சேலா ஆகும்போது என்னை இதற்கு முன் எந்த வீட்டில் சேலா ஆகி இருந்தாய், எத்தனை வீட்டில், இல்லை இதுதான் முதல் தடவையாக சேலா ஆகின்றாயா என்று கேட்டார்கள். தமிழ்நாட்டில் ஒரு ஜமாத்தில் சேலா ஆகியிருக்கேன் என்று கூற, தமிழ்நாட்டு ஜமாத் இங்கு செல்லாது பேட்டா. மும்பை, டெல்லி, ஐதராபாத் இப்படி எங்கியாவது சேலா ஆகியிருக்கியா என்று கேட்டார்கள். இல்லை என்றேன். அப்படி என்றால் கோரி மூரத்தான் என்றனர். முதல் முதல் ஒரு குருவுக்கு சேலா ஆகுபவள் என்று பொருள்.சேலா செய்யும் முறைக்கு ரீத்போடுதல் என்று கூறுகின்றனர். ரீத் போட்ட பிறகு எனக்குத் துணிமணிகளைக் கொடுத்து அதை வைத்துக்கொள்ள பெட்டி படுக்கையைக் கொடுத்து எங்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற இடத்தையும் கொடுத்து சில அறிவுரைகளைக் கூறினார்கள்.

படுதாதி - ஆயாவின் குரு. எனக்கு அம்மாச்சி

தாதா குரு - பாட்டியின் குரு. எனக்கு ஆயா

நானா குரு - குருவின் குரு. எனக்குப் பாட்டி

குரு - அம்மா

காலா குரு - என்னுடைய குருவின் சகோதரிகள்

குருபாய் - என்னுடைய சகோதரிகள்

படா குருபாய் - பெரிய சகோதரி

சோட்டா குருபாய்- சிறிய சகோதரி

சேலா- மகள்

நாத்திசேலா-கொள்ளுப்பேத்தி

சந்திசேலா- கொள்ளுப்பேத்தி

சடக் நாத்தி- கொள்ளுப்பேத்தியின் மகள்

இதுபோன்ற உறவு முறைகளைச் சொல்லிக் கொடுத்து இதில் பெரியவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்ய வேண்டும், மரியாதை கொடுக்க வேண்டும், பெரியவர்கள் எதிரில் வந்தால் பாவ்படுத்திச் சொல்லவேண்டும், அவர்களின் மீது நாம் கட்டி இருக்கும் துணி படக்கூடாது, சொம்பில் தண்ணீர் கொடுத்தாலும் மரியாதையுடன் கொடுக்க வேண்டும், மூக்குத்தி,தோடு, கால் கொலுசு, வளையல் இல்லாமல் இருக்கக் கூடாது.தலைமுடியை வெட்டக் கூடாது, முகத்தில் முடி முளைத்தால் ஷேவிங் செய்யக்கூடாது, அதற்கென்று ஜிமிட்டா(பிளக்கர்) வைத்து பிடுங்கிக் கொள்ளவேண்டும்.மேலும் கடைகேட்டுச் சம்பாதிக்கும் பணத்தில் குருவுக்கும் நானிக்கும் நம் வசதிபோல் பணம் கொடுக்க வேண்டும்.எல்லாம் கொடுத்தாலும் சரி, அவர்களே நமக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்து வைப்பார்கள்.

நான் என்னுடைய குரு இருக்கும் இடத்தில் வசிக்கவில்லை. நானி வீட்டில் இருந்துகொண்டு கடைகேட்டு அதில் வரும் வருமானத்தை என் நானியிடமே கொடுத்தேன்.

இரவில் நானியின் கால்களைப் பிடித்துவிட்டுதான் தூங்குவேன். என் நானி படுத்திருக்கும் கட்டில் அருகிலேயே பாயை விரித்துத் தூங்குவேன். ஒரு சமயம் அப்படி என் நானிக்குக் கால் பிடித்துக் கொண்டிருக்கையில் ‘ஏ பேட்டா, தமிழ்நாட்ல பந்தி வச்சுகிட்டு இருந்தியா’(பந்தி என்றால் புருஷன், பார்ட்னர்) என்று கேட்டார். ‘இல்லைங்க நானி’ என்று கூறினேன். ‘குடிக்கிற பழக்கம் இருக்கா’ என்று கேட்டார். ‘இல்லைங்க நானி’ என்று சொன்னேன். ‘பேட்டா சில பொட்டைங்களோட சேர்ந்து குடிக்கக் கிடிக்கக் கத்துக்காதே. தப்பு. அதெல்லாம் கத்துகிட்டே, புருஷன் வச்சுகிட்டே நானி உன்னோட மண்டைய ஒடிச்சப்புடுவேன்’ என்று கூறினார். ‘நானி சொல்றமாதிரி கேட்டு நல்ல புள்ளையா நடந்துகிட்டா உனக்கு நிர்வாணம் பண்ணிவிடுவேன்’ என்று கூறினார். (நிர்வாணம் என்றால் ஆப்ரேஷன் மூலம் ஆண் உறுப்பை அகற்றிக் கொள்வது)

‘நிர்வாணம் ஆனபிறகு நீ உன்னோட குருகிட்டஇருந்தாலும் இருக்கலாம். இல்லாட்டி நானிகூடவே இருக்கலாம். ஊருக்குப் போகணும் என்றால் அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். உன்னுடைய வீட்டில் உன்னை இஜடாவாக ஒப்புக்கொள்வார்களா’ என்றும் கேட்டார். நான் என் குடும்பத்தின் விஷயங்களைக் கால் பிடித்துவிட்டுக்கொண்டே சொன்னேன். அதைக்கேட்ட என் நானி ‘இப்ப எல்லாம் ஊருக்குப் போகிறேன் என்ற நினைப்பே வரக்கூடாது. போனால் முடி வெட்டி விடுவார்கள். பொட்டை களுக்கு முடி வெட்டிவிட்டால் கேவலம். அதனால் போக வேண்டாம். அவர்களே தேடி வந்தால் நானி பேசிக் கொள்கிறேன்’ என்று கூறினார். இப்படி என் நானி, என்னுடைய உறவு முறைகள் எல்லோரும் அன்பாகப் பேசுவதும் அறிவுரை சொல்வதும் அவற்றைக்கேட்டுக் கொண்டு என் வேலைகளைச் செய்து கொண்டு ஒரு ஆறுமாதங்கள் ஓடின.

என்னுடைய குருபாய் சேலாங்க ரெண்டுபேரு என்னை மாதிரி கடகேட்டுக்கிட்டு வீட்டு வேலை செஞ்சுகிட்டு எனக்கு முன்னாடியே ஒரு வருஷமா இருக்காங்க. அவுங்கள நிர்வாணத்துக்கு அனுப்ப குல தெய்வமான போத்ராஜி மாத்தா(சேவல் மீது அமர்ந்து காட்சிக் கொடுக்கும் மாத்தா)போட்டோவுக்கு பூஜைபோட்டு அவர்களை அனுப்ப ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன. அன்று காலை 8 மணி இருக்கும். நான் வீட்டுவேலைகளைச் செய்து கொண்டிருக்கும்போது நானி என்னைக் கூப்பிட்டு, ‘பேட்டா நீ இன்னிக்குக் கடகேட்கப் போகவேண்டாம். இரண்டு செட் புடவை, பாவாடைகளை எடுத்து வைத்துக்கொள்’ என்று கூறினார். நானியிடம் எங்கு அனுப்புகிறீர்கள் என்று கேட்க முடியாமல் நான் எடுத்து வைத்துக்கொண்டு யோசித்தேன். ஒருவேளை பொட்டைங்க நிர்வாணத்துக்குப் போகின்றார்களே அவர் களைப் பார்த்துக் கொள்ள நம்மைக் கூட அனுப்புவார்களோ என்னவோ என்று யோசித்தேன். கொஞ்சநேரம் கழித்து மீண்டும் என்னை அழைத்து ‘நீ தாயம்மா நிர்வாணத்துக்குப் போறியா, டாக்டர் நிர்வாணத்துக்குப் போறியா?’ என்று கேட்டார். (தாயம்மா நிர்வாணம் என்றால் இஜடாக் களே இஜடாக்களுக்குச் செய்யும் நிர்வாணம், டாக்டர் நிர்வாணம் என்றால் டாக்டர்கள் மருத்துவமனையில் செய்யும் ஆப்ரேஷன்) எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரே சந்தோஷம். என்னுடைய மனதில் அப்படியே துள்ளிக் குதிக்கவேண்டும்போல் ஒரு ஆர்வம். ஆனால் நானி கேட்கிறார் சடனாகப் பதில் கூறவேண்டும், தாமதித்தால் என்னை அனுப்புவாரோ மாட்டாரோ என்று‘உங்க இஷ்டங்க நானி, நீங்க எங்க போகச் சொல்றீங்களோ அங்கே போகின்றேன்’ என்று கூறினேன். என்னுடைய மனதில் தாயம்மா நிர்வாணத்திற்குப் போக சற்று பயம் தான். இருந்தாலும் தாயம்மா நிர்வாணம் செய்துகொண்டவர்களுக்குத் தனி மரியாதை தான். எது எப்படி ஆனால் என்ன? நான் பெண்ணாக மாறவேண்டும் என்ற ஆவல்தான் அப்போது இருந்தது.என்னுடைய பெண்மைக்கு இந்த ஆண் உறுப்பு போய்விட்டால் போதும், நானும் மற்ற பெண்களைப்போல சுதந்திரமாக இருக்கலாம் என்ற நினைப்பு எனக்கு. ‘உன்னால தாயம்மா நிர்வாணம் செய்து கொண்டால் தாக்குப் பிடிக்க முடியாது. அதனால் நீ டாக்டர் நிர்வாணத்திற்குப் போ’ என்று கூறினார்.

***

நான் ஆம்புள உடையில இருக்கின்றபோது பெண்கள் உடை போட்டுக் கணும்னு தோன்றியது. பெண்ணாக வாழ வேண்டும் என்று பெண்களைப்போல் உடை அணிந்தபிறகு என்னை நான் ஆம்புளையாதான் பார்க்க முடிஞ்சுது. ஆம்புள உடம்புக்குள்ள இருக்கின்ற என்னோட பெண்மைக்கு இன்று விடுதலை கிடைக்கப் போக்கின்றது. அதுவும் இவ்வளவு சீக்கிரமாக என்று நினைக்கையில் சொல்ல முடியாத சந்தோஷம். என்னோட குருபாய் சேலா ஒருத்திக்கு நிர்வாணம் செய்து கொள்ள எங்கள் இரண்டுபேரையும் அனுப்ப ஏற்பாடுகள் செய்தனர். எங்க இரண்டுபேருக்கும் அந்த மருத்துவமனை தெரியாது. எங்களோட துணைக்குக்கூட யாரையும் அனுப்பவில்லை. எங்கள் கையில் இருவருக்கும் ரயில் டிக்கட்டும் பணமும் கூடவே ஏழாயிரம் ரூபாய் ஆப்ரேஷனுக்கும் என்று கூறி தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைத்தனர்.

காலை எட்டு மணி இருக்கும். நாங்க இரண்டு பேரும் மருத்துவ மனைக்கு வந்துசேர்ந்தோம். அப்போது அந்த ஆஸ்பத்திரி சிறிய வீடு போலத்தான் இருந்தது. அங்கு வேறு ஆண்கள் பெண்கள் என்று படுக்கைகளில் சேர்க்கப்பட்டவர்களையும் அவர்களுக்குத் துணையாக இருப்பவர்களையும் பார்த்தோம். இங்க எல்லா விதமான நோய்களுக்கும் வைத்தியம் பார்க்கின்றனர் எனப் புரிந்தது. சிறிய-தொரு ஓட்டு வீடு அந்த ஆஸ்பத்திரியில் ஒரு பக்கம் பூட்டி இருந்தது. அங்குதான் நிர்வாணம் செய்வார்கள் என்று தெரிந்து கொண்டோம்.

மணி காலை பதினொன்றுக்கு டாக்டர் வந்தார். நாங்கள் இருவரும் டாக்டரைப் பார்த்தோம். யாருக்கு நிர்வாணம் என்று கேட்டார். இருவருக்கும் என்று கூறினோம். உங்களுடன் வேறு யாரும் வர வில்லையா என்று கேட்டார். இல்லை என்று கூறினோம். ஒருவருக்கு ஆப்ரேஷன் செய்ய 2500 ரூபாய்; மேலும் ஊசி மாத்திரை நீங்களே வாங்கிக்கொள்ள வேண்டும் என்றார். (1986 ஆம் வருடம் அப்போது) உங்களுக்கு ஊசி மாத்திரை, சாப்பாடு வாங்கிக் கொடுக்க ஒரு ஆயா இருக்கிறார். அவருக்குப் பணம் கொடுத்தால் அவர் உங்களைப் பார்த்துக் கொள்வார். உங்கள் இருவருக்கும் ஐயாயிரம் ரூபாய் கட்டிவிட்டு ஒரு பேப்பரில் கையெழுத்துப் போடுங்கள் என்று கூறினார்.மறுநாள் காலையில் யாருக்கு முதலில் ஆப்ரேஷன் செய்து கொள்வது என யோசிக்கையில் என்னுடைய குருபாய் சேலா, ‘அம்மா அம்மா, நீங்க பெரியவங்க. நான் முன்னாடி ஆப்ரேஷன் செய்து கொண்டால் என்னை நீங்கள் கவனித்துக் கொள்வீர்கள். நீங்கள் முதலில் நிர்வாணம் செய்து கொண்டால் என்னைக் கவனிக்க யாரும் இல்லை. அதனால் நான் முதலில் செய்து கொள்கிறேன்’ என்றாள். மும்பையில் என் நானியோ ‘நீதான் பெரியவள். அதனால் உனக்குதான் முதலில் நிர்வாணம் செய்ய வேண்டும். நீயே முதலில் செய்து கொள்’ என்று கூறியிருந்தாள். இங்கு இவளோ நான் முதலில் செய்து கொள்கிறேன் என்கிறாளே என்ன செய்வது. பாவம் வயதில் இருவரும் ஒரே வயதாக இருந்தாலும் உறவு முறையில் எனக்கு சேலா ஆகிறாள். வாய்விட்டுக் கேட்கிறாள். ஆகவே அவளே முதலில் செய்து கொள்ளட்டும் என்று சொல்லிவிட்டேன்.

இரவு ஏழு மணிக்கு என் குருபாய் சேலாவுக்கு ஆப்ரேஷன் செய்யும் பகுதியில் ஷேவிங் செய்து விட்டனர். அவனுக்கு ஐம்பது ரூபாய் கொடுக்கவேண்டும். பிறகு எனிமா கொடுத்தனர். சிறிதுநேரம் கழித்து அவள் அவ்வப்போது பாத்ரூம் சென்று சென்று வந்தாள்.எனிமா கொடுத்த பிறகு எதுவும் சாப்பிடக்கூடாது எனக் கூறினர்.மும்பையில் இருந்து புறப்படும்முன் எங்களுக்கு எங்கள் குல தெய்வம் போத்ராஜி மாத்தாவுக்கு தேங்காய் உடைத்து, ஊதுபத்தி பற்ற வைத்து, கற்பூரம் காட்டி எங்களை விழுந்து வணங்கச் சொல்லி அத்துடன் ஒரு மஞ்சள் துணியில் ஒண்ணேகால் பணம் வைத்துக் கையில் கட்டிவிட்டனர். கூடவே ஒரு முழு தேங்காய் ஒரு எலுமிச்சம் பழம் கொடுத்து இதை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினர். இந்த நிர்வாணத் திற்குச் செல்பவர்களுக்குக் காத்து கருப்பு அண்டாமல் மாத்தா நம்முடன் இருப்பாள் என்றனர்.

இரவு முழுதும் எங்கள் இருவருக்கும் ஆஸ்பத்திரியில் தூக்கமே வரவில்லை. நாங்கள் எடுத்து வந்த போத்ராஜி போட்டோ ஒன்று சிறியதை ஆஸ்பத்திரி சுவற்றில் மாட்டிவிட்டு அதையே பார்த்துக் கொண்டு ‘மாத்தா நீதான் எங்களுக்குத் துணை’ என மனதால் வேண்டிக்கொண்டு இருந்தோம்.என்னுடன் வந்த என் குருபாய் சேலா ‘அம்மா அம்மா நாளை நடக்க இருக்கும் ஆப்ரேஷனில் எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் நீதான் என்னை எங்கே சேர்க்க வேண்டுமோ அங்கே சேர்க்கவேண்டும். மேலும் ஆப்ரேஷன் செய்யும்போது என்னுடனே இருக்கவும்’ என்று கூறினாள். ‘ஆகட்டும் பேட்டா, நான் கூடவே இருப்பேன். உனக்கு ஒன்றும் ஆகாது. நாம் வணங்கும்அந்த மாத்தா நம்முடன் துணையாக இருப்பாள். நல்லவிதமாக உனக்கு ஆப்ரேஷன் ஆகிவிடும். உன்னை நான் பார்த்துக் கொண்டாலும் மறுநாள் எனக்கு நடக்கும் ஆப்ரேஷன் போது யார் என்னுடன் இருப்பார்கள்? யாரும் இல்லையே’ என்று கூறி சற்று நேரம் மவுனமாக இருந்துவிட்டு யோசித்தேன். ஏன் நம்முடன் நானி யாரையும் அனுப்பவில்லை? இருவரும் ஆப்ரேஷன் செய்து கொள்வதால் யாராவது கூட இருந்தால் எவ்வளவு உதவியாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு என் பெற்றோர்களையும் நினைத்துக்கொண்டு கண்ணீர் விட்டேன்.சிறிய ஆப்ரேஷனா இது? உயிர் நிலையையே எடுத்துவிட்டு நாம் எப்படி உயிரோடு இருக்கப்போகிறோம். உயிர் நிலையைக் கையால் இறுக்கிப் பிடித்தால் உயிர்போகும் அளவில் வலிக்கிறது. அதை எடுத்தால் எப்படி வலிக்கும் என்று நினைத்தபோது பயம் அதிகமாகிவிட்டது. கடவுள் பெண்ணாகப் படைத்து இருந்தால் நமக்கு இதுபோன்ற நிலை வருமா? இந்த ஆப்ரேஷன் மூலம் நான் இறந்துபோய்விட்டால் இனி நான் என் குடும்பத்தாரைப் பார்க்க முடியாது. கடைசியாக ஒரு முறையாவது அம்மா அப்பாவைப் பார்த்து விட்டு வந்திருந்தால் நிம்மதியாக இருந்திருக்கும். இப்போதுகூட தமிழ்நாட்டுக்குதான் வந்திருக்கோம். இப்படியே போய் அம்மா அப்பாவைப் பார்க்கவும் முடியாது. எல்லாம் கடவுள் விட்ட வழி. இறந்தாலும் சரி, உயிரோடு இருந்தாலும் சரி நான் முழு பெண்ணாகவே சாகவும் நினைக்கிறேன். வாழவும் நினைக்கிறேன். இப்படி என்னுள் பல எண்ணங்கள் பல யோசனைகள் மனதுக்குள் இருந்துகொண்டு தூக்கம் வராமல் இருந்தது. இரவும் ஓடியது.

மறுநாள் காலை எட்டு மணி இருக்கும். 50 வயது பெண் ஒருவர் எங்களிடம் வந்து ‘உங்களப் பாத்துக்கொள்ள ஆயா வேண்டும் என்று சொன்னார்கள். யாருக்கு உடம்பு சரியில்ல, யாரைப் பார்த்துக் கொள்ள வேண்டும்?’ என்று கேட்டார். எங்கள் இருவருக்கும்தான் என்றோம். ‘என்ன உடம்புக்கு?’ என்றுகேட்டாள். நாளை எனக்கும் இன்று இவளுக்கும் ஆப்ரேஷன் செய்யப்போகிறார்கள். இருவரும் ஆப்ரேஷன் செய்து கொள்வதால் எங்களுக்குச் சாப்பாடு, மாத்திரைகள் வாங்கிக் கொடுக்க ஆள் தேவைப்பட்டது. அதனால் உங்கள அனுப்பி உள்ளனர் போல என்று கூறினோம். பதிலுக்கு ‘ஓ.. சரி சரி! எனக்குத் தெரிந்து விட்டது என்ன ஆப்ரேஷன் என்று. ஒரு வாரம் முன்பு கூட உங்களைப் போல இரண்டு பேருக்கு நான்தான் சமையல் செய்து கொண்டு வந்து கொடுத்தேன். அதைப்போலவே உங்களுக்கும் மதிய உணவும் இரவு உணவும் கொண்டு வந்து கொடுக்கிறேன். காலையில் வந்து என்ன வேண்டுமோ அதை வாங்கிக் கொடுக்கிறேன். ஏழு நாளைக்கு இருக்கும் உங்களுக்கு நான் இதைச் செய்வதால் 500 ரூபாய் கொடுக்க வேண்டும்’ என்று கூறினார். சரி என்று கூறி முதலிலேயே 500 ரூபாய் அவரிடம் கொடுத்து விட்டோம்.

காலை 11 மணிக்கு என்னுடைய குருபாய் சேலாவை ஆப்ரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றனர். போகும்போது குரு என்னைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி முகம் வாடச் சென்றாள். எனக்கும் பயம் அதிகமானது. ஆப்ரேஷன் நல்லபடியா ஆகணும் அவளுக்கு. அப்படி ஆனாதான் நானும் ஆப்ரேஷன் செய்து கொள்வேன் என்று மனதில் நினைத்துக் கொண்டு அவளுடன் சென்றேன். ஆப்ரேஷன் தியேட்டர் உள்ளே என்னை அனுமதிக்க வில்லை. வெளியிலேயே இருக்கச் சொல்லிவிட்டு அவளை மட்டும் உள்ளே கூட்டிச் சென்று விட்டனர்.

வெளியில் உட்கார்ந்து இருக்கும் எனக்கு நெஞ்சு படபடனு துடிக் கின்றது. உள்ளே என்ன நடந்து கொண்டு இருக்கும், எப்படி நடந்து கொண்டிருக்கும் என்று நினைத்துக் கொள்கிறேன். இரண்டரை மணி நேரம் கழித்து என்னை ஆப்ரேஷன் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றனர். இரண்டு கால்களையும் அகட்டின நிலையில் உயிர் நிலையில் ஒரு நீளமான டியூப் வைத்து ரெத்தம் துடைத்த பஞ்சுகளையும், சுற்றி நின்ற டாக்டர், நர்ஸ், கத்தி, கத்திரிகளையும் பார்ததவுடனே எனக்குத் தலைசுத்தல் வந்து கண்ணு சொருகிப்போய் விழுந்துவிட்டேன். என்னைத் தட்டி எழுப்பி ‘ஒன்னும் இல்லை. இங்க பார் உன்னுடன் வந்தவள் எப்படி இருக்கிறாள்’ என்று டாக்டர் கூறினார். கண்விழித்து சுயநிலை திரும்பி டாக்டரைப் பார்த்தேன். ‘பயப்படவேண்டாம். நாளை உனக்கு இப்படித்தான் செய்யப் போகின்றோம். உன்னால் பார்க்க முடியாது அல்லவா? அதனால் தான் பார்க்கக் கூப்பிட்டேன். பார், உன்னுடன் வந்தவளுக்கு ஆப்ரேஷன் முடிந்துவிட்டது’ என்று கூற, என்னுடைய குருபாய் சேலாவும் ‘அம்மா அம்மா, பயப்பட வேண்டாம். இங்க என்னப் பாருங்க. எனக்கு ஆப்ரேஷன் முடிஞ்சு நான் நல்லா இருக்கேன்’ என்று அவளுடைய குரல் கேட்டு எழுந்து அவளைப் பார்த்தேன். என்னைப் பார்த்து சிரிக்கின்றாள். ‘என்னம்மா இப்புடிப் பயப்படுறீங்க. ஆப்ரேஷன் செய்து கொண்ட நானே சிரிச்சுட்டு நல்லா இருக்கேன். நீங்க ஏன் இப்படி பயப்படுறீங்க? எனக்கு வலி எதுவும் தெரியவில்லை’ என்று நன்றாக என்னுடன் பேசியதைக் கண்டு வியப் படைந்தேன். என்னடா இது, ஆண் உறுப்பை பூராவும் எடுத்து விட்டார்கள். இவள் என்னடான்னா சிரிக்கிறாள், வலி இல்லே என்று கூறுகிறாள் எப்படி என்று நினைத்துக் கொண்டிருக்கையில்,‘சரி சரி, நீங்க வெளியில இருங்க. இவங்களக் கொஞ்ச நேரம் கழிச்சு பெட்ல போடுவோம். அப்ப அவுங்களோட பேசலாம் என்று கூறி என்னை வெளியில் அனுப்பி விட்டுக் கதவைச் சாத்தினாள் நர்ஸ்.

இரும்புக் கட்டில் அதன்மேல் பிளாஸ்டிக் விரிக்கப்பட்டு அதன்மேல் என் குருபாய் சேலாவைக் கொண்டுவந்து போட்டார்கள். ஒரு அரை மணிநேரம் என்னுடன் சிரித்துப் பேசிய அவள் அதன் பிறகு எரிகிறது, வலிக்கிறது என்று கத்த ஆரம்பித்தாள். அவள் கத்துவதைப் பார்த்து எனக்குப் பயம் அதிகரித்துவிட்டது. இவ்வளவு நேரம் நன்றாக இருந்தவள் இப்போது கத்துகின்றாளே என்ன செய்வது எனத் தெரியாமல் அவளுக்கு சமாதானம் கூறினேன். கொஞ்சம் பொறுத்துக்கோ, சரியாப் போயிடும் என்று கூறினேன். ‘அம்மா எனக்கு எரிச்சல் தாங்க முடியல. என் உயிர் போய்விடும் போல இருக்கிறது. வலி தெரியாமல் இருக்க ஏதாவது ஊசி போடச் சொல்லுங்க’னு கதறி அழுதா. நான் டாக்டர் அறைக்குச் சென்றேன். டாக்டர் போய்விட்டதாகக் கூறினர். நான் நர்ஸிடம் சொன்னேன்.‘அது அப்படித்தான் கொஞ்ச நேரத்துக்கு வலிக்கும். பிறகு சரியாகிவிடும். ஊசி எதுவும் இப்போது போடக் கூடாது’ என்று கூறிவிட்டார். திரும்பி அவளிடம் வந்தபோது கதறி அழுதுகொண்டு தான் இருந்தாள். எங்களைப் பார்க்க வந்த ஆயா பால் இல்லாத டீ போட்டு வந்து கொடுத்தார். அதை அவளுக்குக் குடிக்கக் கொடுத்தேன். அவளுடைய வலியையும் எரிச்சலையும் நான் அனுபவிப்பது போலிருந்தது. ஒரு இரண்டு மணி நேரம் கதறி அழுதவள் பிறகு மயக்க நிலையில் தூங்கிவிட்டாள். அன்று இரவெல்லாம் தூங்கிக் கொண்டு தான் இருந்தாள். எனக்கு மதியம் இரண்டு மணி அளவில் சேவிங் செய்து விட்டு எனிமா கொடுத்து நாளை காலை ஒன்பது மணிக்கு ஆப்ரேஷன், எதுவும் சாப்பிட வேண்டாம் என்று கூறினர். மதியம் எனிமா கொடுத்த பிறகு மாலை வரை பாத்ரூம் சென்று வந்தேன். பால் இல்லாத பிளாக் டீ குடித்தவள் வலிக்கிறது எரிகிறது என்று கத்தியவள் தூங்குகிறாள். நாளை நமக்கும் இப்படித்தான் எரியுமோ வலிக்குமோ என்று நினைத்துக்கொண்டு இரவு முழுவதும் இவள் தூங்குகிறாளா, உயிர் இருக்கிறதா இல்லையா என்று அவளையே பார்த்துக் கொண்டு தூங்காமலேயே இரவைக் கழித்தேன்.

மறுநாள் காலை ஒன்பது மணிக்கு என்னை ஆப்ரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றனர். போகும் முன் என் குருபாய் சேலாவிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்றால் அவள் இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். யாரிடமும் நான் சொல்லிக் கொள்ளவோ எனக்கு தைரியம் சொல்லவோ யாரும் இல்லை. ஆப்ரேஷன் தியேட்டரில் டாக்டர், ஒரு நர்ஸ், கம்பவுண்டர் மூன்று பேர் மட்டும்தான் இருந்தனர். முதலில் என் துணிகள் எல்லா வற்றையும் கழட்டச் சொல்லி உள் பாவாடையை மட்டும் மார்பகம் வரை தூக்கிக் கட்டிக் கொள்ளச் சொன்னார்கள். ஆப்ரேஷன் செய்வதற்கு வசதியாக நான் படுத்துக் கொள்ள டேபிள் ஒன்றின் மீது உட்கார வைத்து தலை காலைகளை முட்டும் அளவில் வளையச் சொன்னார்கள். அப்போது டாக்டர் ‘உனக்கு முதுகு எலும்பில் ஒரு ஊசி போடப்போகிறோம். இந்த ஊசி போட்டுக் கொண்டால் ஆப்ரேஷன் செய்வது உனக்குத் தெரியாது’ என்று கூறினார். முதுகுப்புறம் டாக்டருக்கு ஏதோ நரம்போ சதையோ கிடைக்காமல் அதிகநேரம் முதுகில் ஊசிபோட முடியாமல் ஏதோ செய்தார். எனக்குப் பயம் அதிகமாகிவிட்டது. ஒரு வேளை இந்த ஊசி சரியாகப் போடாவிட்டால் ஆப்ரேஷன் செய்யும்போது வலிக்குமே என்று சந்தேகம் வந்துவிட்டது.

ஊசியைப் போட்டுவிட்டு சடனாக என்னை நீட்டி படுக்க வைத்து இரண்டு கால்களையும் அகட்டி வைத்தார் டாக்டர். என்னை ஒன்று இரண்டு என்று எண்ணச் சொன்னார். பத்து வரை எண்ணினேன். ஒரு சுத்தியலை எடுத்து என் காலில் தட்டி வலிக்கிறதா என்றுகேட்டார். இல்லை என்றேன். அதன் பிறகு ‘உனக்கு ஆப்ரேஷன் செய்யப்போகிறோம்; உங்கள் மாத்தாவை நினைத்துக் கொள்’ என்று டாக்டர் கூற, எனக்கு எங்கு கத்தியை வைக்கும்போது வலிக்குமோ என்ற அச்சத்தில் ‘டாக்டர் வலிக்காதே’ என்று கேட்க, ‘வலிக்காதும்மா. உனக்கு வலி தெரியாமல் இருக்கத்தான் ஊசி போட்டுள்ளோம்’ என்றார். ‘ஊசி போட்டபின் எனக்கு மயக்கம் எதுவும் வரவில்லை. சுயநினைவுடன்தான் இருக்கிறேன். எல்லாரையும் பார்க்க முடிகின்றது.எல்லா சத்தமும் கேட்கின்றது’ என்று டாக்டரிடம் சொன்னேன். ‘இது மயக்க ஊசி இல்லை. உன்னுடைய இடுப்புக்குக் கீழே மரத்துப்போய்விடும். இடுப்புக்குமேல் சுயநினைவு இருக்கும்’ என்றார் டாக்டர். ‘பாத்துங்க டாக்டர், எனக்கு பயமா இருக்குது. வலிக்கப்போகுது’ என்றேன்.

‘இப்போது வலிக்குதா’ என்றார். இல்லை என்றேன். ‘நாங்கள் ஆப்ரேஷன் செய்துகொண்டுதான் இருக்கிறோம்’ என்றார். நர்ஸ் என் கண்களில் துணியைப்போட்டு மூடிப் பிடித்தவளாக மாத்தா மாத்தா என்று சொல்லு என்றார். நானும் மாத்தா மாத்தா என்று கூறிக்கொண்டிருந்தேன். ஒரு அரைமணி நேரம் கழித்து டாக்டர் என்னுடன் பேசிக்கொண்டே ஆப்ரேஷன் செய்தார். என்னால் பார்க்க முடியாவிட்டாலும் கத்தி, கத்திரிகளின் சத்தம் கேட்டது. ‘என்னம்மா ரேவதி என்று பெயர் வைத்துக்கொண்டாயே, நீ பிராமின்னா’ என்று கேட்டார். ‘இல்லை டாக்டர். நாங்கள் கவுண்டர்’ என்று கூறினேன். ‘உனக்குப் பெண்களைப்போல கீழே ஒன்னுக்குப்போற மாதிரி வைக்கவா இல்லை மேலே வைக்கவா?’ என்று கேட்டார். ‘நான் பெண்ணாகத்தான் வாழவேண்டும் என்று நினைத்து ஆப்ரேஷனும் செய்துகொள்ள வந்துள்ளேன். எனக்குப் பெண்கள்போலத்தான் வேண்டும். எனக்குப் பெண்கள் எப்படி ஒன்னுக்குப்போவார்கள் என்று தெரியாது. ஆனால் நான் பெண்களைப் போலத்தான் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்றேன். இரண்டு மணிநேரம் ஆனபிறகு என் முதுகைத் தலையுடன் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு ஒரு கிண்ணி யில் கிடந்த துண்டு சதைகளைக் காட்டி ‘இதுதான் உன்னுடைய உறுப்பு; பார் வெட்டி எடுத்து உன்னைப் பெண்ணாக மாற்றிவிட்டோம்’ என்று கூறினார்.

ஒரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு போவதைப்போல் என்னைக் கம்பவுண்டர் தூக்கிச் சென்று என் குருபாய் சேலா பக்கத்தில் உள்ள படுக்கையில் என்னைப் படுக்க வைத்தார். ஆப்ரேஷன் செய்த இடத்தில் டியூப் மூலம் ஒன்னுக்குச் செல்ல கவர் ஒன்றும் ‘பெட்’டில் கட்டி விட்டுச் சென்றுவிட்டனர். என்னுடைய குருபாய் சேலா இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். என் அருகில் யாரும் இல்லை. (ஒரு ஹாலில் ஒதுக்குப்புறமாக இருந்த இரண்டு படுக்கைகளில்தான் நாங்கள் இருந்தோம். மறைப்புக்குப் பலகையாலான தடுப்பு ஒன்று வைக்கப் பட்டிருந்தது. கட்டிலில் படுக்கை ஏதும் இல்லை. அப்போது எங்களைக் கையில்தான் தூக்கிவந்து கட்டிலில் போட்டனர். வசதிகள் எதுவும் இல்லை. இப்போது எப்படியோ தெரியவில்லை.)

நான் பெண்ணாக மாறிவிட்டேன் என்ற சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும் கொஞ்ச நேரம் கழித்து வலிக்குமோ என்ற பயம் மற்றொரு புறம். இப்படி மனதில் படபடவெனத் துடித்தது இதயம். ஒரு மணி நேரம் கழித்து எரிச்சலும் வலியும் அதிகமாகத் தொடங்கின. ஆரம்பத்தில் எரிச்சலைத் தாக்குப்பிடித்தேன். வலி அதிகம் ஆக ஆக என்னால் தாக்குப் பிடிக்கமுடியவில்லை. ‘ஐயோ என்னால் தாங்க முடியலையே! எரிகிறதே; வலி தெரியாமல் இருக்க ஏதாவது ஊசி போடுங்களேன்’ என்று கத்த ஆரம்பித்தேன். ‘யாரும் இல்லையா? டாக்டர், நர்ஸ் தயவுசெய்து இங்க வாங்க. எனக்கு வலி தாங்க முடியலை. உயிர் போய்விடும்போல இருக்கின்றதே. யாராவது வாங்க’ என்று கதறிக் கதறி அழத் தொடங்கிவிட்டேன். நர்ஸ் நிதானமாக என் அருகில் வந்து, ‘ஏன் இப்படிக் கத்தி கூச்சல் போடுகிறாய்? அக்கம் பக்கத்துல இருக்கிறவங்களுக்குத் தெரியணுமா உனக்கு என்ன ஆப்ரேஷன் என்று? சும்மா வலியைப் பொறுத்துகிட்டு இரு. அது அப்படித்தான் கொஞ்ச நேரம் வலிக்கும்’ என்று என்னைத் திட்ட ஆரம்பித்தாள். பக்கத்து பெட்டில் தடுப்புப் பலகைக்கு மறுபுறம் இருந்து ஒரு வயதான அம்மா ஓடிவந்து இந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு? இப்படிக் கத்திக் கொண்டு இருக்கிறாள்’ என்று நர்சிடம் கேட்டாள். பதிலுக்கு ‘வயிற்று வலி. ஆப்ரேஷன் செய்துள்ளோம். அதுதான் வலிக்கிறது’ என்றாள்.

நான் புரிந்துகொண்டேன். இதுபோல ஆப்ரேஷன் செய்வது யாருக்கும் தெரியாதுபோல என்று நினைத்துக் கொண்டேன். எங்களுக்குச் சாப்பாடு கொண்டுவந்து கொடுக்கும் ஆயா அப்போது வந்து பால் இல்லாத டீ போட்டுக் கொண்டு வந்து கொடுத்தார். இன்னும் இருக்கிறது. அவ்வப் போது குடி. இதோ, பக்கத்தில் வைக்கிறேன்’ என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். இந்த ஆப்ரேஷன் செய்து கொண்ட இஜடாக்கள் நாற்பது நாட்களுக்குப் பால், பழம் எதுவும் சாப்பிடக்கூடாது என்பது ஒரு சாத்திரம். நாற்பதாம் நாளன்று குலதெய்வம் மாத்தாவுக்குப் பூஜை செய்து பால்குடம் ஏந்தி ஆற்றிலோ குளத்திலோ ஊற்றிவந்த பிறகுதான் பால் பழம் வகைகளைச் சாப்பிட வேண்டும் என்று மூத்த இஜடாக்கள் சொல்லி அனுப்பியிருந்தனர். மேலும் பிளாக் டீ அதிகமாகக் குடிக்க வேண்டும். அப்போதுதான் ஒன்னுக்கு ஃபிரீயாக வரும் என்று கூறினார்கள். ஒன்னுக்குப் போகும் டியூப்பை மூன்றாவது நாள்தான் எடுக்க வேண்டும். அதுவரை எதுவும் சாப்பிட வேண்டாம் என்று கூறினர்.

என்னுடைய வலிக்கு ஆதரவாக அந்தப் பக்கத்து பெட்டில் அட்மிட் ஆகியிருந்த பெரியவரின் மனைவி யான அந்த அம்மாதான் ஆறுதல் கூறி அவ்வப்போது டீயை எடுத்து எனக்குக் குடிக்க வைப்பார். புண்ணியவதி யாரோ எனக்குத் தெரியாது. ஆனால் இதுபோன்ற ஆறுதலும் சேவையும் என் குலதெய்வமான மாத்தாவைப் பார்ப்பது போல இருந்தது. ஒரு இரண்டு மணிநேரம் புழுவாகத் துடித்த நான் நெஞ்சு அடைப்பதுபோல உணர்வு. அப்படியே வாந்தி. குடித்த டீ எல்லாம் வெளியில் வந்துவிட்டது. அந்தச் சமயம் என் உயிர் என்னை விட்டுப் பிரிகிறது என்றுதான் நினைத்தேன். அந்த வாந்தி வந்த பிறகுதான் எரிச்சலும் நெஞ்சு படபடப்பும் குறைந்து உயிர் போய் உயிர் வந்தது போல இருந்தது. என்னுடைய வாந்தியை யார் துடைத்தார்கள் என்று தெரியாமல் மயக்கமாகத் தூங்கிவிட்டேன்.

மறுநாள் காலையும் தூங்கி அன்று மாலை ஏழு மணி அளவில்தான் கண்விழித்துப் பார்த்தேன். என்னோட குருபாய் சேலா கட்டிலில் உட்கார்ந்தவாறு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கும் ஆயாவுடன் பேசிக்கொண்ட ரசம் சாப்பாடு சாப்பிட்டுக் கொண் டிருந்தாள்.கண் விழித்துப் பார்க்கையில் என்னைப் பார்த்து ‘எப்படிம்மா இருக்கு?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் என் சேலா.

ஆயாவும் எனக்கு டீ எடுத்துக்கொடுத்து ‘குடிம்மா’ என்றார். என் சேலா ஆயாவைப் பார்த்து ‘எங்களுக்கு பிளாக் டீதான் கொடுக்க வேண்டும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டாள். ‘ஏன் சாமி, எம்புட்டு புள்ளைங்களுக்கு இந்த ஆஸ்பத்திரியில என்னோட கையால சோறு பொங்கிப்போட்டு இருக்கேன். இதுகூட தெரியாதா?’ என்று சொன்னார்.

ஆப்ரேஷன் செய்த மூன்றாவது நாள் ஒன்னுக்குப் போகும் டியூபை எடுத்துவிட்டபிறகு பாத்ரூம்போய்தான் ஒன்னுக்குப் போக வேண்டும். அப்போது ஜாக்கட் புடவை கட்டிக்கொண்டுதான் போக வேண்டும். அப்போது நைட்டி கூட இல்லை. எங்களுக்கு நடக்க முடியாமல் காலை அகட்டி அகட்டிப் புடவை பாவாடை ஆப்ரேஷன் இடத்தில் படாமல் இரண்டு கைகளாலும் தூக்கிப் பிடித்தவாறுதான் போக வேண்டும். ஒன்னுக்கு ஃபிரியாக போகாவிட்டால் முக்கினால் போதும் வலி தாங்க முடியாது. சில சமயம் ரத்தம் கூட வந்துவிடும். அந்த நிலைமையை இப்போது நினைத்தாலும் உடம்பு நடுங்குகிறது. பாத்ரூம்கூட கட்டியாக சரியாக வராமல் கஷ்டப்படுவேன்.முக்கினால் போதும், நரம்புகள் இழுத்துப் பிடித்துக் கொண்டு தையல் பிரிந்துபோகும் அளவில் வலிக்கும். என்னுடைய சேலாவுக்கு தையல் பிரிக்கும்போது ஏழாவது நாள். எனக்கு அன்று ஆறாவது நாளே தையல் பிரித்தனர். காரணம் எங்களிடம் பணம் 500 ரூபாய்தான் இருந்தது. அதனால் மும்பைக்குப் போகலாம் என்று முடிவு செய்து, தையல் பிரித்த அன்றே இருவரும் ஊருக்குப் போகிறோம் என்று டாக்டரிடம் கூறினோம். தையல் பிரிக்கும்போது வலிக்குமா என்று டாக்டரிடம் கேட்டோம். இலேசாக வலிக்கும் என்றார். அதேபோல் முழு தையலும் பிரிக்காமல் கொஞ்சம் மட்டும் பிரித்துவிட்டு மீதி உள்ளது தானே கொட்டிவிடும் என்று டாக்டர் கூறினார். பிரிக்கும்போது கூட சுரீர் என்று வலி இருந்தது. பெண்ணாக மாறவேண்டுமானால் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு மாத்தா மாத்தா என்று கண்ணை இறுக்கி மூடிப் பல்லைக் கடித்துக் கொண்டேன்.

கையில் இருந்தது 500 ரூபாய். நாங்கள் ஊருக்குப் போகிறோம் என்றதும் கம்பவுண்டர், நர்ஸ், ஆஸ்பத்திரியில் வேலை செய்பவர்கள் எல்லாரும் தலை சொரிந்தவாறு வந்து நின்றனர். மற்ற நேரங்களில் கூப்பிட்டாலும் கத்தினாலும் வரமாட்டார்கள். ஆப்ரேஷன் செய்து கொள்ள வரும்போது முதன் முதலாக நடக்கும் கவனிப்பு ஆப்ரேஷன் ஆனபிறகு இல்லை. இப்போது மும்பை போகிறோம் என்றவுடன் நாங்கள் ஏதாவது பணம் தருவோம் என்று வந்து நின்று கொண்டார்கள். இருவரும் தலைக்கு 50 ரூபாய் கொடுத்துவிட்டு மீதியுள்ள 400 ரூபாயுடன் ஆஸ்பத்திரியில் இருந்து ஆட்டோ பிடித்து ரயில்வே ஸ்டேஷன் வந்தோம். திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள ஆட்டோகாரர்கள், அங்குள்ள ஜனங்கள் எங்கள் இருவரையும் பார்த்து ஏதோ சொல்லிச் சிரித்தார்கள். கிண்டல் செய்தார்கள். அவர்களிடம் சண்டை போட எங்களுக்குத் தெம்பு இல்லை. எங்களுடைய வலி, நடக்க முடியாத சூழ்நிலை, சரியான உணவு இல்லாமல் சத்து இல்லாத உடம்பு. என்ன செய்வது? ஒன்றுமட்டும் காதில் கேட்டது. எங்களுக்கு ஆப்ரேஷன் ஆகியுள்ளதை அறிந்துகொண்டு அதைப்பற்றிதான் ஒரு சிலர் கிண்டல் செய்கின்றனர் என்று புரிந்தது. அன்று மாலை வரவேண்டிய ரயில் லேட்டாகத்தான் வந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் எங்களால் ரயிலில் ஏற முடியவில்லை. கொஞ்ச நேரத்தில் ரயில் புறப்பட்டுப் போய்விட்டது. அதனால் திரும்பி அங்கிருந்து ஆட்டோ பிடித்து பஸ் ஸ்டாண்ட் வந்து சென்னை பஸ் ஏறினோம்.

***

சென்னை பஸ்சில் கூட எங்களுக்கு முன்சீட் கிடைக்கவில்லை. பின்னால் கடைசி சீட்டில்தான் அமர்ந்தோம். நாங்கள் இரண்டு உள்பாவாடை கட்டிக்கொண்டு ஆப்ரேஷன் இடத்தில் பஞ்சு வைத்து அது கீழே விழாமல் இருக்க துணியால் கோவணம் கட்டி பத்திரமாகத் தான் சென்றோம். பஸ்சில் பீன்சீட் என்பதால் பஸ் தூக்கிப் போடும்போது ஆப்ரேஷன் செய்த இடத்தில் குத்தலும் கொடச்சலும் அதிகமாக இருந்தது. சில சமயங்களில் முன் சீட்டின் கம்பியைப் பிடித்துக்கொண்டு காலை பஸ் தரையில் ஊன்றிக் கொண்டு சீட்டில் படாமல் எங்களைத் தூக்கியவாறு வரவேண்டிய சூழ்நிலை ஆனது. கால் கைகள் வலித்து உட்கார்ந்தால் போதும், பஸ் தூக்கிப் போடும் போது ஆப்ரேஷன் செய்த இடத்தில் அடிபடும் போது பயங்கரமா வலிக்கும். வாய்க்குள்ளேயே மாத்தா மாத்தா என்று முணகிக்கொண்டு ஒரு வழியாக சென்னை வந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்தோம்.

காலை 9. 30 மணி இருக்கும். அப்போது மும்பை ரயில் மாலை நான்கு மணிக்குதான் என்றனர். அது வரை என்ன செய்வது என்று தெரியாமல் பயணிகள் தங்கும் அறையில் இருக்கலாம் என்றால் ரிசர்வேஷன் டிக்கட் இருப்பவர்கள் மட்டும்தான் அங்கு தங்க முடியும் என்று தெரிந்து கொண்டோம். அதனால் ஜனங்கள் நிறைய உட்கார்ந்து கொண்டிருந்த பொது இடத்தில் சென்று நாங்களும் உட்கார்ந்து கொண்டோம். எங்களால் அதிக நேரம் உட்கார முடியவில்லை. படுக்கலாம் என்றால் அங்கு படுக்க முடியவில்லை. சுவர் ஓரம் கிடைத்தால் கூட கால் நீட்டி உட்காரலாம் என்று பார்த்தால் சுவர் பக்கம் பூராவும் கடைகள் ஆபீசுகள் தான் இருக்கின்றன. பெரிய ஹால். அதில் நடுப்புறம் உட்காந்து இருந்த எங்களைப் போன்றவர்கள் வருகின்றவர்கள் என எல்லோரும் எங்களை வித்தியாசமாகப் பார்த்த வண்ணம் சென்றனர். டீயோ டிபனோ வாங்கிக் கொடுக்கக் கூட யாரும் இல்லை. பஸ்சில் வந்த அலுப்பு எங்களால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலை. பற்றாக்குறைக்கு ஜனங்களின் பார்வை. இவற்றையெல்லாம் நினைக்கும்போது ஏன்தான் ஆப்ரேஷன் செய்துகொண்டோமோ என்று தோன்றியது.

கடவுளே, எங்களுக்கு நீதான் துணை. எங்களை எப்படியாவது மும்பை கொண்டு சேர்த்து விடுனு சாமியை வேண்டிக் கொண்டு பசி தாங்க முடியாமல் என் குருபாய் சேலா மெதுவாக எழுந்து சென்று இட்லி வாங்கி வந்தாள். அதை இருவரும் சாப்பிட்டோம். சற்று நேரத்தில் எனக்கு பாத்ரூம் வந்தது. நானும் மெதுவாக எழுந்து காலை அகட்டி நடந்தால் கேவல மாகப் பார்ப்பார்களே, அதுவும் ஆப்ரேஷன் ஆகியுள்ளது தெரிந்து ரயிலில் போகவிடாவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் வலியைத் தாங்கி கொண்டு மனதை உறுதிப்படுத்திக் கொண்டு பெண்கள் பாத் ரூமுக்குள் சென்றேன். அங்கு இருந்த ஒரு பெண் போலீஸ் என்னைப் பார்த்து, ‘நீ ஆப்ரேஷன் செய்துகொண்டு வந்திருப்பது தெரிகின்றது. ஏன் மத்த ஆம்புளைங்க மாதிரி ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு வேலை வெட்டிப் பார்த்துக்கொண்டு நல்ல ஆம்புளையா லட்சணமா இருக்கக் கூடாதா?’ என்று கேட்டாள். என்னோட கஷ்டம் அவளுக்கு எங்க புரியப்போவுது. ஈசியா சொல்லிட்டாங்க.

அவளுக்குப் புரிய வைக்க எனக்குத் தெம்பு இல்லை. புரிய வைக்கிற நிலைமையிலும் நான் இல்லை என்று நினைத்துக்கொண்டு மறுபேச்சு எதுவும் பேசாமல் பாத்ரூம் உள்ளே சென்று கதவை மூடிக் கொண்டேன். புடவை, பாவாடையைத் தூக்கிச் சுருட்டிக் கொண்டு கட்டி இருந்த பஞ்சை எடுத்துப் பார்த்தால் பஞ்சு பூராவும் ரத்தம் நிறைந்து உள்ளது. ஆப்ரேஷன் செய்த இடத்தில் தையல் போடப் பட்ட இடம் தசை விலகி ரத்த ஈரம் பட்டுக் கொண்டு இருந்தது. என்ன செய்யறது, சுடுதண்ணி இருந்தாலாவது சுத்தம் செய்து வேறு பஞ்சை வைத்துக் கட்டிக் கொள்ளலாம் என்று நினைத்தேன். சுடுதண்ணியும் இல்லை. அதனால் ரத்தம் உள்ள பஞ்சை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு பாத்ரூம் சென்ற பிறகு ஆப்ரேஷன் செய்த இடத்தில் தண்ணீர் படாதவாறு கழுவிக் கொண்டு, நான் கொண்டு வந்திருந்த பஞ்சைக் கொஞ்சம் எடுத்து புண்மேல் துடைத்து போரிங் பவுடரைப் புண்மீது கொட்டி மீண்டும் புதிய பஞ்சை வைத்துப் பழையபடி கோமணமாகக் கட்டிக் கொண்டேன். இவை எல்லாம் செய்து முடிப்பதற்குள் தலை சுற்றலே வந்துவிட்டது.

குருபாய் சேலாவுக்கு என்னைப் போல் ரத்தம் கசியவில்லை என்று கூறினாள். மேலும் தையல் போட்ட சதைகள் கூட விழவில்லை. அவளுக்கு வலி மற்றும் உடல் தளர்ச்சி, மயக்கம் இப்படித்தான் அவள் கூறினாள். ஒருவழியாக இருவரும் காலைக் கடன்களை முடித்துவிட்டு அந்தப் பெரிய ஹாலில் படுக்க முடியாமல் எவ்வளவு நேரம் உட்காந்தே இருப்பது என்று இருவரும் மும்பை ரயில் வரும் பிளாட்பார்ம் சென்று அங்கு பெண்கள் பெட்டி எங்கு வந்து நிற்குமோ அங்கு சென்று ஓர் ஓரமாக எங்களின் கைகளையே தலைக்கு வைத்துக்கொண்டு படுத்துக் கொண்டோம். எங்களிடம் டிக்கட் வாங்க அவ்வளவு பணம் இல்லை. டிக்கட் இல்லாமல்தான் போகவேண்டும். கையில் இருந்த பணம் செலவாகிவிட்டது. யாராவது டிக்கட் கேட்டால் என்ன செய்வது? ஏன் நானி நமக்கு இன்னும் அதிகப் பணம் கொடுத்து அனுப்பி இருக்கக் கூடாது? டிக்கட் இல்லாமல் சீட்டில் கூட அமரமுடியாது. செக் செய்பவர் வந்து கேட்டால் சீட்டை விட்டு இறக்குவது இல்லாமல் ரயிலை விட்டே இறக்கிவிடுவார் என்ற பயம் இருந்தது. நேரம் ஆக ஆக பிளாட்பாரத்தில் கூட்டமும் அதிகம் ஆனது. நாங்கள் உஷாராக ரெடியாக இருந்தோம்.

ரயில் வந்ததும் எப்படியாவது சீட் பிடிக்கணும்னு காத்திருந்தோம். அந்தச் சமயத்துல மும்பைக்குப் போறதுக்காக நான்கு இஜடாக்கள் வந்தனர். அவர்கள் எங்களைப் போல் ஆப்ரேஷன் செய்து கொண்டு வந்தவர்கள் அல்ல. எப்போதோ ஆப்ரேஷன் செய்தவர்கள். அவர்கள் எங்களைப் பார்த்தவுடனே பொட்டைங்கடி என்று சொல்லிக் கொண்டு எங்களிடம் வந்து எங்களைப் பற்றி விசாரித்தனர். ‘எந்த ஊருக்குப் போறீங்கடி, யாரு வீட்டுக்குப் போறிங்க, யாரு சேலா நீங்க?’ என்று கேட்டனர். நிர்வாணம் ஆயிட்டு வந்திருக்கோம். மும்பை போகவேண்டும். அங்கு என் நானி குரு பெயரைச் சொல்லி அவர் வீட்டு சேலா நாத்திங்க நாங்கனு சொன்னோம். டிக்கட் எடுக்கக் கூட பணம் இல்லாததைச் சொன்னோம். எங்களுடைய கஷ்டங்களை அவர்களிடம் பரிமாறிக் கொண்ட பிறகு கொஞ்சம் பயம் போய் மனதிற்கு ஆறுதலாக இருந்தது.எங்கள் இருவருக்கும் டிக்கட் எடுக்காமலேயே அவர்களுடன் ரயில் வந்த பிறகு அந்த நான்கு இஜடாக்களின் உதவியுடன் சீட் பிடித்து உட்கார்ந்து கொண்டோம். அந்த நான்கு பேரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மும்பையில் கடைகேட்டுக் கொண்டு கேவண்டி என்ற இடத்தில் வசிக்கின்றனர். இப்போது அவர்கள் ஊருக்கு வந்து விட்டுத் திரும்பி மும்பை செல்கின்றனர். எங்களுக்குச் சாப்பாடு கொடுத்து, அவர்களின் மடியில் படுக்க வைத்துக்கொண்டு மனதிற்கு ஆறுதலாகப் பேசிக்கொண்டு சென்றோம்.

ரயில் கொஞ்ச தூரம் சென்று கொண்டிருக்கையில் டிக்கட் செக்கிங் செய்பவர் வந்தார். அந்த நான்கு பேருக்கு மட்டும்தான் டிக்கட் இருந்தது. எங்களுக்கு இல்லை. அதனால் அந்த நான்குபேரும் அவரிடம், ‘ஐயா நாங்க பொட்டைங்க. வயித்துப் பொழப்புக்கு மும்பை போகிறோம். கடைகடையாய்ப் பிச்சை எடுத்துதான் பிழைக்க வேண்டும். இவங்க இருவருக்கும் வயிற்றில் கட்டி இருந்து ஆப்ரேஷன் ஆகியுள்ளது. பெருந்தன்மையோடு எங்களுக்கு உதவி செய்யுங்கள்’ என்று கேட்டனர். அதற்கு அவர், ‘நான் உங்களை டிக்கட் இல்லாமல் விட்டாலும் ஆந்திராவில் விடமாட்டார்கள். என்ன செய்யப் போறீங்கனு’ கேட்டு விட்டுச் சென்றுவிட்டார். மவராஜன் புள்ள குட்டியோட நல்லா இருக்கணும்னு எங்கள்ல ஒருத்தி அவரை வாழ்த்தினாள்.

‘பொட்டைங்களுக்கு நிர்வாணம்னா மறு ஜென்மம் மாதிரி. நிர்வாணம் செஞ்சுகிட்டாதான் மரியாதை. நாம் முழு பெண்ணா வாழணுமுனா நிர்வாணம் பண்ணிகிட்ட பிறகுதான் அது நிஜம் ஆகுது. பொம்பளையா ஆகணும்னா அவ்வளவு ஈசியா? கஷ்டப் பட்டுதான் ஆகணும். நீங்க தாயம்மா நிர்வாணம் செய்துகொண் டிருந்தால் என்ன சொல்வீர்களோ? இந்த டாக்டர் நிர்வாணத்துக்கே உங்களுக்கு இவ்வளவு கஷ்டம்னா நான் என்னத்தச் சொல்ல? பயப்படவேண்டாம். எல்லாம் நல்லபடியா புண்ணுங்க ஆறனபிறகு நீங்க சந்தோஷமா இருப்பீங்க. இப்ப நாங்க உங்களோட வந்து சேந்துகிட்டதால உங்கள நாங்க கூட்டிக்கிட்டு உங்க நானி வீட்ல விட்டுட்டுதான் போவோம்’ என்று கூறினார். கடவுள் புண்ணியத்துல எங்கள யாரும் ரயிலை விட்டு இறக்கி விடல. எப்படியோ எவ்வளவு வலி இருந்தாலும் இஜடாக்கள் நாலுபேரு எங்களுடன் இருந்தது வலி தெரியாம இருந்தது. எவ்வளவுதான் இருந்தாலும் யாருன்னுத் தெரியாட்டிகூட இஜடாங்கனு தெரிஞ்சா அவுங்களோட கஷ்ட நஷ்டம், உணர்வுகள், வலி எல்லாம் இஜடாக் களுக்கு மட்டும்தான் தெரியும். அறிமுகம் இல்லாத ஒரு இஜடாவுக்கு இன்னொரு இஜடாதான் உதவி செய்யறாங்க. எல்லா விதத்திலும் ஆறுதல்னு பார்த்தா அது இஜடாக்களுக்கு இஜடாக்கள் மட்டும்தான். ஒரு வகையான காக்கா கூட்டம் மாதிரி.

8

மும்பை தாதர் நிலையம், சென்னை சென்ட்ரல் நிலையம், ரயில் பயணம் இவற்றில் எல்லாம் நான் கண்ட காட்சிகள் என் மனதைப் பெரிதும் வேதனைக்கும் துக்கத்திற்கும் ஆளாக்கின. ஆண் பெண் முதற்கொண்டு என்னையும் என்னுடன் வந்தவர்களையும் பார்த்து சிரிப்பதும், கேலி செய்வதும், பயப்படுவதுமாக இருந்தனர். அன்றாட வாழ்க்கை வாழ்வதே இஜடாக்களுக்குப் பெரும் பாடாகத்தான் இருக்கும் போல தோன்றியது. இந்த உலகத்தில் ஆணாகவோ பெண்ணாகவோ இருப்பவர்கள் குடும்பத்துடன் இருக்கும்போதும் வெளியில் வரும் போதும் அவர்களைப் பார்ப்பவர்கள் இப்படியா கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்? கால் ஊனமான ஒருவரைப் பார்த்தால் கூட, கண் தெரியாத ஒருவரைப் பார்த்தால் கூட ஐயோ பாவம் என்று உதவி செய்கின்றனர்.குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சிறிது உடல் நிலை சரியில்லை என்றால் கூட குடும்பத்தில் உள்ளவர்களும் வெளியில் பார்ப்பவர்களும் எப்படி ஒத்துழைப்புக் கொடுக்கின்றனர். இப்போது எங்கள் நிலை மனிதனைப் பார்ப்பதுபோல் கூட இல்லை. தாதர் ரயில் நிலையத்தில் இறங்கி டாக்சி பிடிக்க பல படிக்கட்டுகள் ஏறி பாலத்தைக் கடந்தபோது எனக்கு ஆப்ரேஷன் செய்த வலியை விட எங்களைப் பொதுமக்கள் பார்க்கும் விதம் பெரும் வலியாக இருந்தது. இந்த வலிகள் நானே தேடிக்கொண்டதா என்ற கேள்வியும் என்னுள் எழுந்தது. நான் நொண்டியோ, முடவனோ, குருடனோ எப்படியிருந்தாலும் ஒரு ஆணாகவோ பெண்ணாகவோ இருந்திருக்கக் கூடாதா? என்னை ஏன் இந்தக் கடவுள் இப்படிப்பட்ட உணர்வுகளைக் கொடுத்து இந்த மக்கள் முன் சித்திரவதை செய்ய வேண்டும்? ஆப்ரேஷன் செய்து கொண்ட நாங்கள் இருவரும் சென்னையில் இஜடாக்களைச் சந்திக்கா விட்டால் எங்களுடன் அவர்கள் வராமல் இருந்திருந்தால் நாங்கள் உயிரோடு வந்துசேர்ந்திருப்போமா என்ற நம்பிக்கை எங்களிடம் இல்லை.

காட்குப்பரில் நானி வீட்டுக்குச் சென்றவுடன் எங்கள் இருவருக்கும் தேங்காயில் சூடம் ஏற்றிச் சுத்தி உடைத்துவிட்டு ஆரத்தி எடுத்து உள்ளே வரச் சொன்னார்கள். ‘வாங்கடி பொம்பளைங்களா’ எனறு கூறியவாறு என் நானி வந்தார். என் காலா குரு எங்களுக்காக குளிக்க சுடு தண்ணீர் போட்டுக்கொண்டிருந்தார். வீட்டில் உள்ள அனைவரும் நலம் விசாரித்தனர். எங்களை வீடு வரை கூட்டிவந்து விட்ட இஜடாக்களுக்கும் நல்ல மரியாதை செய்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். நானியிடமும் காலா குருவிடமும் ஆஸ்பத்திரி முதல் கொண்டு இங்கு வந்து சேர்ந்ததுவரை எல்லாவற்றையும் கூறினோம். ‘சும்மாவா பேட்டா பொம்பளையாகணும்னா’ என்ற பதில் வந்தது. ‘இதுக்கே இப்படினா தாயம்மா நிர்வாணம் போய் இருந்தா இன்னும் என்ன அவதி பட்டிருக்கணும் தெரியுமா?’ என்றும் கூறினார். காலா குரு எங்களை ஒவ்வொருவராக உடம்புடன் குளிக்க வைத்து எங்கள் ஆப்ரேஷன் இடத்தில் சோப்பு போட்டுக் கழுவித் துடைத்து போரிங் பவுடர் போட்டுவிட்டு நன்றாக ஆப்ரேஷன் செய்து இருக்கின்றனர் என்று கூறினார்.

தாயம்மா நிர்வாணம், டாக்டர் நிர்வாணம் எதுவாக இருந்தாலும் சில விஷயங்களைக் கடைப்பிடிக்கவேண்டும். சில உணவுகளைச் சாப்பிடக் கூடாது. நிர்வாணம் செய்துகொண்ட நாள் முதல் நாற்பது நாட்களுக்கு இவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆப்ரேஷன் செய்த இடத்தை இரண்டு கால்களாலும் இடுக்கிக் கொண்டோ, இரண்டு கால்களயும் சேத்து வைத்தோ படுக்கக் கூடாது. காலை அகட்டி வைத்துதான் தூங்கவேண்டும். காரணம் ஒன்னுக்கு வரும் துவாரம் புண்ணாக இருப்பதால் ஒட்டி மூடிக்கொண்டுவிடும். மேலும் துவாரம் புண்ணாக இருப்பதால் நன்றாக ஒன்னுக்குப் போக பால் இல்லாத டீ அடிக்கடி குடிக்க வேண்டும். முகத்தைக் கண்ணாடியில் பார்க்கக் கூடாது. ஆண்களைப் பார்க்கக் கூடாது. தலையில் சீப்பு போட்டு சீவக் கூடாது. பெரிய இஜடாக்களுக்கு பாவ்படுத்திச் சொல்லக் கூடாது. மேலும் உணவு வகையில் எந்த ஒரு பழங்களையும் சாப்பிடக்கூடாது. பால் குடிக்கக் கூடாது. அதிகமாக பாவற்காய், சப்பாத்தி சாப்பிடவேண்டும். ஆட்டுக்கால் சூப், தலைக்கறி இப்படிச் சத்தான உணவைச் சமைத்துக் கொடுப்பார்கள். எங்களால் சப்பாத்தியும் பாகற்காயும் சாப்பிடவே முடியாது. நானி நாங்கள் சாப்பிடும் வரை குச்சியை வைத்துக்கொண்டு மிரட்டி மிரட்டி சாப்பிட வைப்பார்.

பனிரெண்டாம் நாள், இருபதாம் நாள் தலைக்குத் தண்ணீர் ஊற்ற அக்கம் பக்கம் உள்ள இஜடாக்களை அழைப்பார்கள். மேலும் வீட்டில் உள்ள பெரியவங்களும் எங்களுக்குச் சமமாக இருப்பவர் களும் கூட உடம்பு முழுக்க மஞ்சள் பூசி, ஆரத்தி எடுத்துச் சர்க்கரையை வாயில் போட்டுக் காசு சுத்திப்போட்டு தண்ணீர் ஊற்றி விடுவார்கள். எங்களைப் பார்க்க வருபவர்களும் கோதுமை, சர்க்கரை, நெய், டீத்தூள் என வாங்கி வருவதும் இஜடாக்களின் வழக்கமாக இருக்கும். பால் இல்லாத டீயில் நெய் போட்டுக் குடித்தால் உடம்பு சத்தாகவும் தெம்பாகவும் இருக்கும். எங்களுக்கு இருபது நாள் கழித்து தண்ணீர் ஊற்றும்போது புண் ஆறி ஒரு சிறிய பொட்டுபோலதான் புண் காயம் இருந்தது.

சுடுதண்ணீரில் கழுவும் முன் நிர்வாணம் செய்துகொண்ட இடத்தில் மருந்து ஊற்றி அந்த மருந்து பொங்கிக் கொண்டு அழுக்குகளை எடுத்துக் கொண்டு வந்தபிறகு பஞ்சால் துடைத்துத் தண்ணீர் ஊற்றி சோப்புப் போட்டுக் கழுவிவிட்டுக் காட்டன் துணியால் அழுத்தி ஈரம் இல்லாமல் துடைத்து போரிங் பவுடர் போட்டுவிடுவார்கள். தினமும் பக்கத்தில் உள்ள டாக்டரிடம் பெனிசிலின் ஊசியும் 15 நாட்களுக்குப் போட்டு விட்டனர். என்னுடைய காலாகுருதான் எங்கள் இருவருக்கும் இது போன்ற சேவைகளைச் செய்வார். அவர் எங்கிருந்தாலும் 100 வருடம் நன்றாக இருக்கவேண்டும். எங்களை சிறியவர் என்று பாராமல் ரத்தக் கறை படிந்த துணிகளையும் துவைத்துப் போடுவார்.

புண் நன்றாக ஆறியபிறகு எங்களையும் வீட்டுக்குள்ளேயே வேலை செய்யச் சொன்னார்கள். நாற்பதாம் நாள் கிட்ட வரவர எங்கள் முகங்களும் கை கால்களும் மெதுவாகப் பெண்களைப் போல் ஆகத் தொடங்கின. நாற்பதாவது நாள் எங்களுக்கு ஹல்திமேந்தி (மருதாணி விழா)வைத்து மாத்தாவுக்குப் பூஜை போட்டு எங்களுக்கு சடங்கு நடத்தப்படும். அதன் பிறகு நாங்கள் எல்லோரையும் போல வெளியில் செல்லலாம். அதுவரை முகத்தைக் கூட கண்ணாடியில் பார்க்க முடியாமல், வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடந்து நாற்பது நாள் எப்போது முடியும் என்று நாட்களை எண்ணிக் கொண்டிருந்தோம். வயசுக்கு வந்த பெண்கள் எப்படி வீடுகளில் இருப்பார்களோ, அவர்களுக்கு எப்படிச் சடங்குகள் நடத்துவார்களோ அதைப்போல இஜடா சமுதயாத்திலும் நிர்வாணம் செய்து கொண்டவர்களுக்கும் தீட்டு கழிக்க நாற்பதாவது நாள் சடங்கு செய்வது வழக்கம்.

நாற்பதாவது நாள். என்னுடைய நானியின் வீடு பாண்டுப்பில் என் குருபாய் இருந்துகொண்டு கவனித்து வந்தாள். அது பெண்களையும் இஜடாக்களையும் கொண்டு பாலியல் தொழில் செய்து வரும் விடுதி. என் நானிக்கு மட்டும் அல்லாமல் இன்னும் எத்தனையோ இஜடாக் களின் பாலியல் தொழில் செய்யும் விடுதி அங்கு உள்ளது. அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டது எனக் கூறப் படுகிறது. இருக்கலாம். இல்லையென்றால் வெளிப்படையாகப் பாலியல் தொழில் செய்ய முடியுமா? ஒரு ஐந்து ஏக்கர் சுற்றளவு கொண்ட இடத்தில் பல பேரால் நடத்தப்பட்டு வந்தது. அங்குதான் எங்கள் இருவருக்கும் சடங்கு செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.

சமையல் தடபுடலாகத் தயாராகிக் கொண்டிருந்தது. வண்ண வண்ண புடவை அணிந்துகொண்டு மூத்தவர் முதல் சிறியவர் வரை இஜடாக்களும் பாலியல் தொழில் செய்யும் பெண்களும் எங்கள் சடங்கில் கலந்து கொள்ள வந்திருந்தனர். எங்களை ஒரு தனி அறையில் உட்கார வைத்து இருந்தனர். வெளியில் என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் நிறைய பேர் ஆடிப்பாடிக் கொண்டு சந்தோஷமாக இருப்பது தெரிந்தது. எங்களைப் பார்க்கவும் சிலபேர் வந்தனர். ‘யாருக்கடி சடங்கு? எங்கடி பொம்பளைங்க?’ என்று நக்கலாகவும் கிண்டல் செய்து கொண்டும் எங்களைப் பார்க்க வந்தனர். வந்தவர்கள் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு எங்களுக்கும் சாப்பாடு கொடுத்துவிட்டனர். இரவு சுமார் இரண்டு மணி இருக்கும். எங்கள் இருவரையும் பாவாடை மட்டும் மார்புக்கு மேல் தூக்கிக் கட்டிக் கொண்டு உட்கார வைத்து வந்தவர்கள் எல்லோரும் மருதாணி, மஞ்சள் பூசி விட்டு ஒருபுறமும், குலத் தெய்வமான மாத்தாவுக்கு அலங்கார வேலைகள் மற்றொரு புறமும் சிறப்பாக நடந்துகொண்டிருந்தன.

நிர்வாணம் செய்துகொண்டவர்களின் குருதான் ஜோக் கொடுக்க வேண்டும். ஜோக் என்பது பச்சைக் கலரில் புடவை, ஜாக்கட், பாவாடை மேலும் மூக்குத்தி, கால் கொலுசு, மெட்டி ஆகியவைதாம் நிர்வாணம் செய்து கொண்டவர்களுக்கு நாற்பதாவது நாளில் குரு கொடுக்கும் ஜோக். இந்த ஜோக் அணிந்து கொண்டு மாத்தா முன் வைத்துள்ள பால் குடத்தைத் தலையில் சுமந்து கொண்டு பக்கத்தில் உள்ள ஆற்றிலோ, குளத்திலோ, கடலிலோ இப்படி தண்ணீர் இருக்கும் இடம் சென்று அந்தப் பாலை ஊற்றிவிட்டு அங்கிருந்து தலையில் தண்ணீருடன் குடத்தைச் சுமந்து வந்து மாத்தா படத்தைப் பார்க்க வேண்டும். அதுவரை முகத்தை மூடிக் கொண்டு கூட்டிச் செல்வார்கள்.

எங்கள் இருவருக்கும் இஜடா தோழிகள் குளித்த பிறகு தலை வாரி பூ வைத்து குரு கொடுத்த ஜோக்கை அணிய வைத்து முந்தானையால் முக்காடு போட்டு மாத்தா போட்டோ முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். சாம்பிராணி வாசம், கற்பூர வாசம் மணந்தது. அதனுடன் மாத்தாவுக்குப் பாட்டு பாடி தேங்காய் உடைத்து பூஜைகள் செய்தனர். ஜெய் ஜெய் சந்தோஷி மாத்தா ஜெய் ஜெய் என்ற பாட்டை இஜடாக்கள் அனைவரும் பாடி பூஜைகள் செய்து எங்கள் இருவருக்கும் கழுத்தில் மாலை அணிவித்து மடியில் தேங்காய் வெற்றிலை பாக்கு வைத்துக் கட்டிவிட்டு மாத்தா எங்கள் மீது இறங்குவதற்கு மாத்தா மாத்தா என்று சொல்லச் சொன்னார்கள். அந்தச் சாம்பிராணி வாசம், இஜடாக்களின் கைதட்டல், மாத்தா மாத்தா என்று அழைக்கும் சத்தம் அதிகாலை நான்கு மணி இருக்கும் என் உடம்பைப் புல்லரிக்க வைத்து, தலை யையும் உடம்பையும் ஆட்ட வைத்தது.

அந்த நேரத்துக்காகக் காத்திருந்த இஜடாக்கள் மாத்தா மாத்தா என்று இன்னும் ஜோராக சத்தம் போட்டுக் கொண்டே என் தலைமீது பால்குடத்தைத் தூக்கி வைத்துப் பின்பக்கமாகத் துணைக்கு இரண்டு-பேர் பால்குடத்தைப் பிடித்துக் கொண்டனர். அதேபோல் என்னுடன் நிர்வாணம் செய்துகொண்ட என் குருபாய் சேலாவுக்கும் பால் குடத்தைத் தூக்கிவைத்து இருவரையும் பக்கத்தில் உள்ள கிணற்றுக்கு அழைத்துச் சென்று கிணற்றைப் பார்க்காமல் தலையில் இருந்த படியே குடத்தைப் பிடித்துக்கொண்டு அந்தப் பாலை கிணற்றில் கொட்டச் செய்தனர். பிறகு கிணற்றில் உள்ள நீரை இறைத்துக் குடத்தில் ஊற்றி இன்னும் இரண்டு முறை தண்ணீரைக் கிணற்றில் ஊற்ற வைத்து பிறகு குடம் நிறைய தண்ணீர் சுமந்தபடி மாத்தா போட்டோ முன் இறக்கி வைத்துவிட்டு எங்கள் முகத்தை மறைத்திருந்த துணியை விலக்கி மாத்தா போட்டோவில் அந்த மாத்தா முகத்தைப் பார்த்து ‘என்னை எடுத்துக்கிட்டு உன்னைக் கொடு’ என்று சொல்லச் சொன்னார்கள். சடங்கு நடந்து முதன் முதலில் மாத்தா போட்டோவைப் பார்த்தபோது ஜெகஜோதியாக இருந்தது. மாத்தாவின் முகம் தகதகவென மின்னியது. பார்க்கும் எனக்கு அம்மா மாத்தா என் உருவத்தை எடுத்துக் கொண்டு உன் உருவத்தைக் கொடு என்று கூறும்போது என கண்களில் கண்ணீர் வடிய அந்த மாத்தாவையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதன் பிறகு தோப்புக்கரணம் போட்டு என் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கச் சொல்லி கண்ணாடியைக் காட்டினர். அந்தக் கண்ணாடியில் என் முகமும் மாத்தா முகமும் சேர்ந்து தெரியும் வகையில் காட்டினார்கள். அந்த ஜோக்கும் மாத்தா அலங்காரத்திற்கும் என் முகத்தை நானே அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. நாற்பது நாள் முகத்தைப் பார்க்காமல் இருந்தது நிர்வாணம் ஆனபிறகு என் முகத்தில் மாற்றம் உள்ளது எனக்குத் தெரிந்தது. இப்போதுதான் பூத்த பூபோல என் முகம் எனக்குத் தெரிந்தது. அந்த ஆண் உருவம் மாறி முழு பெண்ணுக் குண்டான உருவம் எனக்குத் தெரிந்தது. மனதில் பெரும் மகிழ்ச்சி எனக்கு. ‘சரி சரி இஜடாக்களை விருப்பப்பட்டதை எடுத்துச் சாப்பிடச் சொல்லுங்க’ என்று ஒருவர் கூற எங்கள் இருவரையும் விருப்பப்பட்ட பொருள் ஏதாவது முதன் முதலில் எடுத்துச் சாப்பிடுங்கள் என்று கூறினர். மாத்தாவுக்குப் படைக்கப்பட்ட ஒன்பது பழவகைகள், போண்டா, பஜ்ஜி, இனிப்பு, தேங்காய் உடைக்கப்பட்டு பூஜைகள் நடந்து முடிக்கப் பட்ட நிலையில் மாத்தா போட்டோவின் இருபுறமும் ரவையால் செய்யப்பட்ட கேசரி இருந்தது. அதன் மீது ஓம் என்று எழுதப்பட்டு இருந்தது. நாங்கள் முழித்தோம் எதை முதலில் எடுத்துச் சாபிடுவதென்று. நாங்கள் எதை முதலில் எடுப்போம் என்று ஆவலுடன் காத்திருக்கும் இஜடாக்கள். எதை முதலில் எடுப்பது என்று நான் யோசனை செய்து கொண்டு அந்த ரவையில் செய்த கேசரியை சிறிது புட்டு வாயில் போட்டுக்கொண்டேன்.‘நல்லது எடுத்திருக்கா சீசா சீசா’ என்று இஜடாக்கள் ஆரவாரம் செய்தார்கள். என்னுடன் இருந்தவளும் ஆப்பிள் பழம் எடுக்க அவளுக்கும் நல்லது சீசா சீசா என்று ஆரவாரம் செய்துகொண்டு அவரவர் கை வைத்து தேவையானதைத் தேடித் தேடி எடுத்துச் சாப்பிட்டனர்.

நாங்க எதை எடுத்து முதலில் சாப்பிடுகிறோமோ அதற்கேற்ப நம் வாழ்க்கை எப்படி என்று தெரிந்துவிடும் என்பது இஜடாக்களின் நம்பிக்கை. இனிப்பு, பழங்கள் எடுத்தால் இனிப்பான வாழ்க்கை அமையும். ஆனால் முதலில் எதைச் சாப்பிட வேண்டும் என்பதைச் சொல்லித் தரமாட்டார்கள். எனக்கும் தெரியாது. இதற்கு முன் யாருக்காவது சடங்கு இதுபோல் நடந்து இருந்து நான் சென்றிருந்தால் எனக்கும் தெரிந்திருக்கும். எனக்கு அதுபோல வாய்ப்பு கிடைக்கவில்லை. முதன் முதலில் என் சடங்கைதான் எப்படிச் செய்கிறார்கள் என்று பார்க்கிறேன்.

சடங்கு முடிந்து எல்லோருக்கும் பாவ்படுத்திச் சொல்லச் சொன்னார்கள். நாங்களும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினோம். எங்களை ஆசீர்வாதம் செய்தவர்கள் சிலர் கூறும்போது ‘நல்லா இரு பேட்டா. குருவோட பெயர் எடுக்கணும், ஓடிப்போய் வேற வீட்ல சேலா ஆயிடப்போற, குருவோட பேச்சக் கேட்டு கஷ்டமோ நஷ்டமோ அனுசரித்து நல்ல பெயர் எடுக்கணும். புருஷன் கிருஷன் வச்சுகிட்டு வாழ்க்கையை வீண்பண்ணிக்காதே, குருவோட பரிவாரு நாளை உன்னோட பரிவாரு, நல்லா இருக்கணும் அதுபோல நடந்துக்கோ, நிர்வாணம் ஆயிட்டோம், பொம்பளையா ஆயிட்டோம்னு சண்ட சாடி வந்தா துணியைத் தூக்கிக் காட்டாதே பேட்டா, நிர்வாணம் ஆயிட்டே இனி இஜடா சமுதாயக் கலாச்சாரத்தை பயபக்தியோட கடைப்பிடிச்சு நடந்துக்கோ, பொம்பளையா ஆயிட்டே, பொம்பளைக் கணக்கா நடந்துக்கோ, முடிய வெட்டறது, பேண்ட் சர்ட் போடறது, சொல்லிக்காம ஊருக்கு ஓடிப்போறது இதெல்லாம் இருக்கக் கூடாது- இப்படி ஒவ்வொருவரும் புத்திமதிகளைக் கூறினர். மருதாணி விழா முடிஞ்சு அங்கு இருக்கின்ற அனைவருக்கும் பாவ்படுத்தி, நன்றி கூறிவிட்டு நானும் அவளும் என் குருவோடு டாக்சி பிடித்து அந்த மருதாணி விழா ஜோக்கோடு காட்குப்பர் வீட்டுக்கு நானியைப் பார்த்து பாவ்படுத்திச் சொல்ல வந்தோம்.

பான்டுப்பில் உள்ள பாலியல் தொழில் செய்யும் பெண்களில் மூத்தவர்கள் எங்களைப் பிஞ்சு என்று கூப்பிடுவார்கள். பிஞ்சு என்றால் இளையவள், சிறியவள் என்று பொருள். நாங்களும் பதிலுக்கு அவர் களைப் பாவ்படுத்தி என்றுகூறுவோம். சிறிய பெண்கள் சிலர் அம்மா என்று அழைப்பார்கள். இவர்களும் இஜடா கலாச்சார முறையைக் கடைப்பிடித்து நடக்கின்றனர் என்று அப்போதுதான் தெரிந்தது. என் நானி வீட்டிலேயே கடைகேட்கச் செல்வதால் இதுபோன்ற பல விஷயங்கள் எனக்குத் தெரியாம லேயே இருந்தது. மேலும் இஜடாக் களில் பாலியல் தொழில் செய்யும் விடுதிகள் பான்டுப், சோனாப்பூர், பயளப்பள்ளி, காமாட்டிபுரம் இப்படிப் பல இடங்களில் உள்ளன. எல்லா இஜடாக்களுக்கும் பாலியல் விடுதி இல்லை. ஒரு சிலருக்கு மட்டும்தான். என்னுடைய நானி வீட்டில் சடங்கு செய்தால் வசதியாக இருக்காது.மேலும் அங்கு நிறைய பேர் இருக்கின்றனர். வசதியாக இடம் இருக்கின்றது என்பதால் பாடுப்பில் சடங்கு நடத்தினர். என் நானி சடங்கில் கலந்துகொள்ளவில்லை. இந்தச் சடங்கு நாளில் பான்டுப்பில் பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன்.

காட்குப்பர் வீட்டிற்கு வந்தவுடன் வாங்கடி பொம்பளைங்களா என்று என் நானி எங்களைக் கூப்பிட நாங்களும் ஓடிப்போய் நானி காலில் விழுந்து ‘பாவ்படுத்தி நானி’ என்றேன். அவள் பாவ்படுத்தி தாதி என்றாள். ஜிய்யோ பேட்டா, நல்லா இருங்க என்று நானி வாழ்த்தினார். அதன் பிறகு நானி,‘பேட்டா, நீங்க இப்ப முன்னமாதிரி இல்ல. நிர்வாணம் ஆயிட்டீங்க. அதனால நம்மகிட்டதான் குஞ்சு கொட்ட இல்லையேனு பொட்டைங்க சண்டையில, கடைகேட்கும்போது ரோட்டுல, கடக்காரங்க காசு கொடுக்காட்டி துணி தூக்கிக் காட்டக் கூடாது. கர்வம் பிடிக்கக் கூடாது. நாம் பொம்பளையா வாழணும்னுதான் நிர்வாணம் பண்ணிக்கிறோம். அத வெளியில காட்டி அசிங்கப்படுறதுக்கு இல்லே. அதனால பாத்து நடந்துக்குங்க. இந்த குரு கொடுத்த ஜோக்கு பச்சகலர் புடவை பாவாடை ஜாக்கட் இனிமேல போட வேண்டாம். இன்னிக்கு ஒரு நாளைக்கு போட்டிருந்துட்டு இதக் கழற்றி அக்குவா பொட்டைங்களுக்குக் கொடுத்துடுங்க. நானி உங்களுக்கு மறு ஜோக் கொடுக் கிறேன். அத போட்டுக்குங்கனு வேற புடவை கொடுத்தார் நானி. எங்களோட சடங்கு ஜோக் புடவையை வாங்கிக்க ரெடியா அக்குவா பொட்டைங்க புக் பண்ணிட்டாங்க. அந்த அக்குவா இஜடாங்க ஜோக் புடவையைக் கட்டிக்கிட்டா அவுங்களும் சீக்கிரமா மாத்தா உக்காந்து நிர்வாணத்துக்குப் போகலாம்னு நம்பிக்கை வைக்கிறாங்க. அக்குவா இஜடாக்கள் நிர்வாணம் செய்து கொள்ளாதவர்கள். நான் கொடுத்த ஜோக்கை வாங்கிக் கொண்டவள் என்னோட சிறிய குருபாய். அவள் என் குரு நடத்தும் காமாட்டிபுரம் பயளகள்ளியில் உள்ள விடுதியில் இருந்தாள். என்னுடன் நிர்வாணம் செய்து கொண்டவளின் ஜோக் அவளுடைய குருபாய்க்குக் கொடுத்தாள். அவள் அவளோட குரு வீட்டில் பான்டுப்பூரில் இருந்தாள்.

‘காசு பணம் இருந்தாலும் நிர்வாணத்திற்குப் போகலாம் என்று நினைத்தாலும் அதற்கெல்லாம் நேரம் காலம் வந்தால்தான் ஆகும். நேரம் காலம் வராவிட்டால் நாம் நிர்வாணம் செய்துகொள்ள போனாலும் ஏதாவது தடைபட்டுவிடும். அந்த மாத்தா நம்மீது உட்கார வேண்டும். அப்போதுதான் நமக்கு நிர்வாணம் ஆகும். இப்போ பார் உனக்கு இங்க வந்து ஆறுமாதம்தான் ஆகிறது. அதற்குள் நீ பொம்பளையா ஆயிட்ட. நாங்க எல்லாம் மூன்று வருஷம் ஆகியும் கூட நிர்வாணம் போக முடியல. உங்க நானி எங்கள அனுப்பல. உன்னோட நிர்வாணம் செஞ்சுகிட்டவளுக்கு இரண்டு வருஷம் ஆச்சு. அதன் பிறகுதான் இப்போது உன்னோட நிர்வாணம் ஆனாள். அதுபோல எப்ப நமக்கு நிர்வாணம் ஆகணும்னு மாத்தா கையில்தான் உள்ளது. உனக்கு மாத்தா உட்காந்துட்டதால நீ சிக்கிரமா நிர்வாணம் ஆகி பொம்பளயா ஆயிட்ட’ என்று என் காலா குரு கூறும்போது அவரிடம் நம்பிக்கையும் பக்தியும் எவ்வளவு உள்ளது என்று புரிந்துகொண்டேன்.

என்னைப் பொறுத்தவரை அது நம்முடைய நம்பிக்கையாக இருந்தாலும் கூட நான் செய்யும் வேலைகள், என்னுடைய கடமைகள், மரியாதை, இப்படி என்னோட நடவடிக்கை நானிக்குப் பிடித்து இருந்தன. அதனால் ஆறு மாதத்தில் நிர்வாணம் செய்துகொள்ள அவர் விரும்பி இருப்பார் என்றுகூட நினைத்தேன்.

என்னுடன் நிர்வாணம் செய்துகொண்டவளை அவள் குரு இருக்கும் பான்டுப்பூருக்கு நானி போகச் சொல்லிவிட்டார். என்னை நானி வீட்டிலேயே பழையபடி கடைகேட்கவும் வீட்டு வேலை செய்யவும் இருக்க வைத்துக்கொண்டார்.

***

நிர்வாணம் செய்துகொள்வதற்கு முன் ஏதோ ஒரு அச்சம் பயம் இருந்தது. குளிக்கும்போது, வெளியில் செல்லும்போது ஏதோ ஒரு உறுத்தல் இருந்தது. என்னை நான் முழு பெண்ணாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் இப்போது அந்த அச்சம்,பயம், உறுத்தல் என்னிடம் இல்லை. நான் ஒரு முழு பெண் என்ற அங்கீகாரம் எனக்குள் நானே கொடுத்துக் கொண்டது சந்தோஷமாக இருந்தது. கடை கேட்கும் போது கூட கடைக்காரர்கள் என்னைப் பார்த்து ‘க்யா சிக்னி ஹோகயா’(என்ன ரொம்ப அழகாயிட்டே) என்று கூறுவார்கள்.நான் தனியாகக் கடை கேட்கப் போவதால் ஒரு சில கடைகளில் என்னைப் பார்த்து என்னவேண்டும் என்று கேட்பார்கள். நான் கையைத் தட்டி கை நீட்டினால்தான் நான் இஜடா என்று தெரிந்து கொள்வார்கள். தெரிந்த கடைக்காரர்கள் என்னுடைய மாற்றங்களைப் பார்த்து வியப்படைந்து ஆசைப்படுவார்கள். காசு கொடுக்கும்போது கையைப் பிடிப்பார்கள். கடைகளில் தனியாகக் கடைக்காரர் இருந்தால் என்னை அழைத்து உட்கார வைத்து சிறிதுநேரம் பேசிக் கொண்டு ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று கொடுத்து அனுப்புவார்கள். நானும் தைரியமாக இப்போது அவர்களிடம் பேசவோ, பக்கத்தில் உட்காரவோ முடிந்தது. ஆனால் நிர்வாணம் செய்து கொள்ளாத போது பயம் இருந்தது. மழைக்காலம் வந்தாலும் வெயில் அடித்தாலும் தினமும் கடைகேட்கப் போக வேண்டும். மழைக் காலத்தில் தினமும் விடாமல் மாதம் முழுவதும் புயல் அடிக்கத்தான் செய்யும். அப்பொழுதுகூட மழையில் நனைந்து கொண்டு கடைகேட்பேன். அதுவும் ஒரு சந்தோஷம்தான். ரயிலில் பயணம் செய்யும்போது கூட கூட்டமாக இருந்தாலும் பெண்கள் பக்கத்தில் தைரியமாக நிற்க முடிந்தது. இஜடாக்கள் பெரும்பாலும் மின்சார ரயிலில் ஓரமாக உட்கார்ந்து பயணம் செய்வார்கள். சீட்டில் உட்காரமாட்டார்கள். மேலும் மின்சார ரயிலில் பயணம் செய்ய டிக்கட் கூட வாங்கமாட்டோம். எங்களிடம் கேட்கவும் மாட்டார்கள். வேலைக்குச் செல்பவர்கள் ஆண் பெண் எப்படிப் போகின் றார்களோ அதைப்போல நானும் என் வேலைகளைச் செய்ய (கடைகேட்க) போவேன்.

என்னோட நானி என்மீது நல்ல அபிப்ராயமும் நம்பிக்கையும் வைத்திருந்தார். அவரை மீறி நான் எந்தத் தப்பும் செய்ய முடியாது. நல்ல பழக்க வழக்கங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். வீட்டில் உள்ள என்னோட காலா குருக்களுடன் நன்றாக சமைக்கவும் கற்றுக்கொண்டேன். வெள்ளிக்கிழமை நாள்களில் முல்லன் சென்று அங்குள்ள காய்கறி மார்க்கட்டில் காய்கறிகளைக் கடைகேட்டுக் கொண்டு வருவேன். மாலையில்தான் காய்கறி கடைக்குச் செல்ல வேண்டும். சாக்குப் பையைப் பிடித்துக்கொண்டு பிளாட்பார்ம், கடை என வைத்துக்கொண்டு காய்கறி விற்பவர்களிடம் சென்று கைதட்டினால் ஒரு காய், ஒரு தக்காளி என்று அந்தச் சாக்குப் பையில் வாங்கிப் போட்டுக்கொண்டு சாக்குப்பை நிறைந்தால் அதைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு காட்குப்பர் வீட்டிற்கு வருவேன். கொண்டுவந்த காய்கறிகளைத் தனித்தனியாகப் பிரித்துக் கவரில்போட்டு பிரிஜ்ஜில் வைப்பேன். இந்தக் காய்கறி கேட்கும் கடைக்கு வராம் ஒருமுறை வெள்ளிக்கிழமைதான் போவேன்.

காய் கடைகளில் என்னைப்போல் வேறு இஜடாக்களும் காய்கறி கடைகேட்க வருவார்கள். இல்லை என்று சொல்லாமல் அவர்களுக் கும் காய்கறிகளைக் கொடுப்பார்கள். ஒரு சில இஜடாக்கள் வலுக்கட்டாயமாக இன்ன காய்தான் வேண்டும் என்று கேட்பார்கள். அது அதிக விலையாக இருந்தால் கொடுக்க மாட்டார்கள். கை வைத்துக் காயைத் தூக்கிக்கொண்டு சண்டை போடும் இஜடாக்களும் உண்டு. நானோ கடைக்காரர்களின் கஷ்டம் தெரிந்து அவர்கள் கொடுக்கும் காய் கறிகளையே வாங்குவேன். எனக்குத் தேவைப் பட்டால் அவர்களிடம் நைசாகப்பேசி கடைக்கு நல்ல வியாபாரம் ஆகும் என்று அசீர்வாதம் கொடுத்துக் கேட்பேன். கொடுக்க முடியாது, அதிகவிலை, வேண்டு மானால் இந்தா இரண்டு ரூபாய் கொடுக்கிறேன் என்பார்கள். சில காய் கடைக்காரர்கள் கெட்டுப் போனதையும் சொத்தையாக உள்ளதையும் கொடுப் பார்கள். அதையும் வாங்கிக்கொள்வேன். வீட்டில் காய்கறிகளைக் கொட்டிப் பிரிக்கும்போது காலா குருக்கள் சில சமயம் என்னைத் திட்டுவார்கள் நல்ல காய்கறிகளை வாங்கக் கூடாதா என்று. அவர்களுக் கென்ன சொல்லிவிட்டார்கள் சுலபமாக. என்னுடைய கஷ்டமும் கடைக்காரர்களின் கஷ்டமும் எங்கே புரியப் போகின்றது என மனதில் நினைத்துக் கொள்வேன்.

காய்கறிக்காகக் கடைகேட்கும்போதும், காசுக்காக் கடைகேட்கும் போதும் கடைகளிலும் வீதிகளிலும் எனக்குப் பிடித்த சில ஆண்களைப் பார்த்தால் என் மனதில் சபலம் ஏற்படும். அவர்களுடன் அன்பாகப் பேசவும் பழகவும் காதலிக்கவும் ஆசையாக இருக்கும். ஆனால் அது மனதில் மட்டும்தான். வெளியில் சொல்ல முடியாது. காரணம் நான் ஒரு இஜடா. அதுவும் கைநீட்டி கடை கடையாய் பிச்சை எடுப்பவளுக்கு இதுபோல ஆசையா என்று நினைப்பார்கள். காசு கொடுக்கும் மாலிக் (முதலாளி) நமக்குத் தெய்வம் போல. நம்மைக் கூட தெய்வமாகத்தான் மாலிக்குகள் நினைக்கின்றனர். யாரோ ஒரு சில கடைக்காரர்கள் என் அழகைக் கண்டு என் மீது ஆசைப்படுவதுபோல எல்லோரும் ஆசைப்படுவது இல்லை. எனக்கும் கூட என் அம்மாவைப்போல, என் அக்காவைப் போல இந்த ஊர் உலகத்தைப்போல ஒருவனுடன் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. ஆசை இருந்தாலும் இஜடாவாகிய என்னை யார் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவார்கள் என்ற கேள்விகளும் என்னுள்ளேயே இருந்துவரும்.

ஒரு சில இஜடாக்கள் தங்களுக்குக் கணவன் இருக்கிறான் என்று கூறுவதும் உண்டு. எப்படி என்று பார்த்தால் திருமணம் இல்லை. உனக்குப் பிடித்து இருக்கு எனக்குப் பிடித்து இருக்கு என்று இருவரும் ஒரு வீட்டில் தனியாக இருக்கவும் செய்வார்கள். அப்படி எனக்குக் கணவன் கிடைத்தாலும் நான் தனி வீடு எடுத்துச் செல்ல என் நானியோ குருவோ அனுமதிக்க மாட்டார்கள். எனக்கு நல்லது கெட்டது எல்லாம் பார்த்துக்கொள்ளும் நானியை விட்டுச் செல்லவும் முடியாது. ஒரு சிலர் நானியையும் குருவையும் பிரிந்தோ, அல்லது தனியாக இருந்து கொண்டோ தங்கள் இஷ்டப்படி இருக்கின்றனர். ஆனால் நான் அப்படி இல்லை. கூட்டுக் குடும்பத்தோடு இருக்கிறேன். ஆம்புளை வாடையே பார்க்க முடியாத சம்சாரி வீட்டில் இருக்கிறேன். பாலியல் தொழில் செய்யும் வீடுகளுக்கு என்னை அனுப்ப நானிக்கு மனம் இல்லை. மேலும் பாலியல் தொழில் செய்வது எனக்கும் அப்போது பிடிக்க வில்லை. எனக்கு நிர்வாணம் செய்யும்வரை நான் செக்ஸ்க்கு இடம் கொடுக்காமல் இருந்தேன். கடைகேட்கும்போதும் வெளியில் செல்லும் போதும் மனதில் ஆசை இருந்தாலும் முதலில் நான் பெண்ணாக மாறவேண்டும் என்ற ஆசையைத்தான் கொண் டிருந்தேன்.

கடைகேட்கும்போது வேறு வேறு வீடுகளின் இஜடாக்களைச் சந்திப்பேன். அவர்களில் சிலர் கணவனால் அனுபவித்த கொடுமை களைக் கதைகளைக் கேட்டும் இருக்கிறேன். முகத்தில் பிளேடு போட்டவர்களும், மருந்து குடித்து உயிருக்காகப் போராடிய வர்களும் தீக்குளித்து வெந்து இன்றும் உயிருடன் இருப்பவர் களையும் நேரில் பார்த்துப் பேசி இருக்கிறேன். இஜடாக்களுக்குக் கணவனால் இது போன்ற கொடுமைகளா என்று நினைப்பேன். சிலர் கணவனோடு நன்றாக இருப்பதையும் கேட்டு இருக்கிறேன். இதனால் காதல் திருமணம் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காமல் இருந்தேன். நாம் திருமணம் செய்துகொண்டால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. இந்த உலகமும் ஒத்துக்காது. எத்தனையோ பேர் திருமணத்தால் இன்று அடிவாங்கி உதை வாங்கிப் பொருள்களை இழந்து பணத்தை இழந்து கஷ்டமான நிலையில் கூட இருக்கின்றனர்.

சகுந்தலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)என்னுடைய தோழி. வெள்ளிக்கிழமை மஸ்ஜித்பந்தர் கடைகேட்கும்போது பழக்கம் ஆனவள். மஸ்ஜித்பந்தர் கடைகேட்கும்முன் முதல் முதலில் எல்லோரும் ஒரு டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்துவிட்டு அவன் கடையிலேயே போனி பண்ணிவிட்டுதான் அடுத்த கடைகளுக்கு கடைகேட்கப் போவார்கள். அப்போது சகுந்தலாவும் என்னைப் போல தனியாகத்தான் கடைகேட்க வருவாள். அவள் என்னோட பரிவாரைச் சேர்ந்தவள் இல்லை. எனக்கு குருபாய் முறை ஆனாலும் சகுந்தலா சவுக்கன் வீட்டு இஜடா. நாங்கள் இருவரும் நல்ல தோழிகளாகப் பழகினோம். சகுந்தலா மும்பை வந்து ஐந்து வருடங்கள் அப்போது. அவளுடைய குருவுக்கு நான்கு வருடங்கள் கடைகேட்டு கடைகேட்டுப் பணம் கொடுத்தும் கூட அவளுக்கு நிர்வாணம் செய்யவில்லை. இன்று அனுப்புகிறேன் நாளை அனுப்புகிறேன் என்று காலத்தைக் கடத்தி வந்ததனால் சகுந்தலா குருவிடம் சண்டைபோட்டுக் கொண்டு தனியாக வீடு பிடித்துக் கடைகேட்ட பணத்தைச் சேர்த்து வைத்து நிர்வாணம் செய்து கொண்டாள்.

நிர்வாணம் செய்துகொண்டபின் சகுந்தலாவின் குரு மருதாணி விழா நடத்தியுள்ளார். அது ஒரு குருவோட கடமையும் ஆகும். அவளோட குரு, ‘நீ தனியாகப் போய் இருந்தாலும் எனக்கு மாதம் ஒரு முறை கேட்கும் பணத்தைக் கொடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். ஆனால் சகுந்தலா அதை மறுத்துள்ளாள். ‘குரு கேட்கும் பணத்தைக் கொடுக்க முடியாது. என்னால் முடிந்ததை சேலா என்ற முறைக்குக் கொடுக்கிறேன். இதற்கு முன் நான்கு வருடங்கள் உங்களுக்கு எல்லாப் பணமும் கொடுத்தேன். இனி அதுபோல இருக்க முடியாது. நானும் என் அம்மா அப்பா வீட்டுக்குப் போகணும். அவர்களையும் பார்க்கணும். என்னையும் நான் பார்த்துக் கொள்ள வேண்டும். நாலு பணம் சேத்து எனக்காகவும் என் செலவுக்காகவும் வைத்துக்கொள்ள வேண்டும். இஜடாக்களின் நல்லது கெட்டதில் கலந்து கொள்ளும் போது கையிலோ கழுத்திலோ என் வசதிக்கு நகை செய்யணும். அதனால் நான் நீங்கள் கேட்கும் பணத்தைக் கொடுக்க முடியாது. குரு என்று நான் உங்களைத் தேடி வரும்போது என் கையில் உள்ளதைக் கொடுப்பேன்’ என்று கூறிவிட்டாள்.

அவளோட குரு, ‘என்ன பேட்டா, நீ என்கிட்ட வரும்போது எப்படி இருந்தேனு கொஞ்சம் நினைத்துப் பார். கிராப்புத் தலையோட புடவை கட்ட தெரியாம பைருப்பியா வந்தியே இப்போ மாசோக்கா பொம்பளையா ஆயிட்ட திமிரா உனக்கு? (பைருப்பி- ஆண்களைப் போல; மாசோக்- நல்ல நிலைமை, பெண்போல)உனக்குக் காது குத்தி இருக்கேன், மூக்கு குத்தி இருக்கேன், இஜடாக்களுக்குள்ளே நல்லது எது, கெட்டது எது என்று கத்துக் கொடுத்திருக்கேன். ஒன்னுமே தெரியம வந்த நீ இன்னிக்கு இவ்வளவு தூரம் வந்து எனக்கு சரிக்குச் சரியா பதில் கொடுக்கிறாயே என்று கூறி முடியைச் சுழற்றி உதைத்து அடித்துள்ளார். குருவோட ஆத்திரம் தீர்ந்தபிறகு சகுந்தலா அவளோட வீட்டுக்குப் போய் விட்டாள். குரு சொல்லிக் கொண்டிருக்கிறாராம் அவள் எங்கயோ இருக்கட்டும். எனக்குத் தேவை பணம் என்று. சகுந்தலாவும் மாதம் ஒரு முறை குரு இருக்கும் இடம் சென்று குரு கேட்ட பணத்தைக் கொடுக்க முடியாவிட்டாலும் அவளுக்குத் தகுந்த வசதியில் பணம் கொடுத்துவிட்டு குரு திட்டின திட்டை வாங்கிக் கொண்டு வருவது வாடிக்கையாக இருந்தது.

சகுந்தலா குடி இருக்கும் பகுதியில் அந்த ஏரியா ரவுடி ஒருவன் சகுந்தலா போகும்போதும் வரும்போதும் ஆசை வார்த்தைகளைக் கூறுவதும் காதலிப்பதாகவும் சொல்லியிருக்கிறான். சகுந்தலாவுக்கு அவன் ரவுடி என்பது தெரியாது. ஒரு நாள் சகுந்தலாவைச் சந்தித்து உன்னை நான் காதலிக்கிறேன் என்று கூறி அவன் கையில் சிகரட்டால் சூடுபோட்டுக் கொண்டான். சகுந்தலாவும் அவனை விரும்பி உள்ளாள். இருவரின் காதல் அந்த ஏரியாவுக்கே தெரிய வந்தது. சகுந்தலாவை ஏமாற்றி ஏமாற்றிப் பணத்தை வாங்கிக் கொண்டு கிளப்பில் சூதாடுவதும் அடிதடி என்று செல்வதும் வாடிக்கையாக இருந்தது. சகுந்தலாவும் வேறு வழி இல்லாமல் அவன் கேட்கும்போதெல்லாம் பணத்தைக் கொடுத்துக் கொண்டே யிருந்தாள்.சில சமயத்தில் இவனுக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும்? இவன் உழைத்து வந்து நமக்குக் கொடுத்தால் என்ன என்று நினைத்து ஒரு வாரம் கடைகேட்கப் போகாமல் உடல்நிலை சரியில்லை என்று படுத்துக்கொண்டாள். ஏன் கடை கேட்கப் போகவில்லை சகுந்தலாவை அடித்திருக்கிறான். இனி என்னுடன் இருக்கவேண்டாம். நாம் இருவரும் பிரிந்துவிடலாம் என்று சகுந்தலா கூறியிருக்கிறாள். அவனோ,‘என்னடி பிரிந்து போவதா? என்னை விட்டுட்டு வேற ஒருத்தன வச்சுக்கிலாமுனு நினைக்கின்-றாயா? உன் அழகுதான்டி உன்னை இப்படிப் பேச வைக்குது. இந்த மும்பையில் எந்த மூலையில் இருந்தாலும் உன்னை விடமாட்டேன். உன் முகத்தில் ஆசிட் ஊற்றிவிடுவேன்’ என்று மிரட்டுகிறானாம்.

சகுந்தலா இப்போது குருவுக்கும் பணம் கொடுக்க வேண்டும். இவனுக்கும் பணம் கொடுக்க வேண்டும். நம்ம உழைப்பு, நம்ம இஷ்டம். ஏன் இவுங்க இப்படி என்னை உபயோகப்படுத்து கின்றனர். இவனை விட்டுச் சென்றுவிடலாம் என்றாலும் பயம். இவனைப் பற்றி குருவிடம் சொல்லி அங்கேயே தங்கிவிடலாம் என்றாலும் பயம். ஏன்தான் இஜடாவாக ஆனோம்னு நினைக்கிறேன் என்றாள். சகுந்தலா பார்ப்பதற்குப் பெண்களைப் போலவே இருப்பாள். அவள் கருப்பாக இருந்தாலும் அவளுடைய கண்கள் முட்டை முட்டையாக பார்க்கும் பார்வையே அவள் என்ன நினைக்கிறாள் என்று சொல்லிவிட முடியும். அழகு இருந்தாலும் ஆபத்துதான் போல. சகுந்தலா கடைகேட்கும் போது கடைக்காரர் களைக் கண்களால், புருவத்தால் மயக்கி அவளுடைய பாவனைகள் மூலம் சிரித்தே கடைகேட்பாள். அவள் முகத்தைப் பார்த்தபோது எனக்கே பொறாமையாக இருக்கும். அப்படி ஒரு புன்னகை. அந்தப் புன்னகை முகத்தில்;ஆனால் மனதில் எவ்வளவு வேதனைகள்! இப்படித்தானே ஒவ்வொரு இஜடாவும் மனதில் ஒவ்வொரு வேதனையையும் கஷ்டங்களையும் சுமந்துகொண்டு வாழ்கின்றனர் என்று நினைத்துக் கொள்வேன்.

சகுந்தலாவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவள் மும்பையை விட்டு அவளுடைய சொந்த ஊருக்கே அம்மா அப்பா ஒப்புக்கொண்டால் போவதாகக் கூறினாள். அவளுடைய அம்மா அப்பா கதையை மற்றொரு நாள் கூறுவதாகச் சொன்னாள்.மீண்டும் நான் அவளைச் சந்திக்க முடியவில்லை. என்ன ஆயிற்று, ஊருக்கே போய்விட்டாளா என்று தெரியவில்லை. நான் சகுந்தலாவோடு பேசுவது கூட என் வீட்டு இஜடாக்களுக்குப் பிடிக்காது. என் நானியிடம் கூறிவிடுவார்கள். என் நானியும் என்னைக் கண்டிப்பாள். ‘நீ கடைகேட்கப் போனோமா வந்தோமானு இருக்கணும். உனக்குப் பேச வேண்டும் பழக வேண்டும் என்றால் நம் வீட்டு இஜடாக்க ளுடன் பேசு. பழகு. சவுக்கன் வீட்டு இஜடாக்களோடு உனக்கு என்ன பேச்சு? அவளே குருவை மதிக்கத் தெரியாதவள். தனியாக ஒரு வீடு எடுத்துக்கொண்டு ரவுடியைச் சேர்த்துக் கொண்டு வாழ்பவள். அவளிடம் உனக்கு என்ன பேச்சு? அவள் வீட்டில் சேலா ஆகப்போறியா என்ன?’ என்றுஎன்னைத் திட்டினார்.

சவுகன் வீட்டு இஜடாக்களுடன் பேசினால் அவர்கள் என் புத்தியைக் கெடுத்து அவர்கள் வீட்டில் வேறு ஒரு குரு பெயரில் சேலா செய்து விடுவார்கள் என்று நினைப்பார்கள். ஒரு குரு பிடிக்கவில்லை என்றால் தனியாக இருக்க குருவின் ஒப்புதல் வேண்டும். தனியாக இருந்தாலும் சகுந்தலாவுக்கு வந்ததுபோல வேறுவேறு தொந்தரவுகள் வரும்.எந்த வீட்டில் வேண்டுமானாலும் ஓடிப்போய் சேலா ஆகலாம். ஆனால் நானி அல்லது குருவின் வீடுகளில்தான் இருக்கவேண்டும். அவர்கள் சொல்படிதான் கேட்கவேண்டும்.இது இஜடாக்களின் சட்ட திட்டங் களுக்கு உட்பட்டது. இதை மீறினால் கஷ்டம் நமக்குத்தான். ஒரு சில விஷயங்களில் இஜடாக்களின் சட்ட திட்டங்கள் நல்லதாகவே ஆகின்றன. குரு, நானி, மூத்தவர் ஆகியோருக்குள்ள சுதந்திரம் இளையவர்களுக்கும் இருக்க வேண்டும் என்கிறார்கள். அதே குருவும் நானியும் இளையவர் களாய் இருக்கும்போது அவர்களும் சட்ட திட்டங் களுக்கும், அவர்களின் குரு, நானிகளுக்கு மதிப்பு‘ மரியாதை கொடுத்தும், அவர்களின் பேச்சைக் கேட்டும்தான் நடந்துகொண்டனர். என்னைப் போன்றவர்களும் குரு நானி ஆகும்போது முழு சுதந்திரம் கிடைக்கும் என்று புரிந்து கொண்டேன். 

Pin It