இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று கல்வியுரிமை. ஆனால், இன்றுவரை அடிப்படைக் கல்விகூட அனைத்து மக்களுக்கும் பரவலாக்கப்படாத நிலை உள்ளது ஏன்? இக்கேள்வியை மையமாகக் கொண்டு பள்ளிக்கல்வியின் அரசியல் பின்னணியை விளக்குகின்றார் ச. சீ. இராச கோபாலன். ‘தமிழக பள்ளிக்கல்வி’ என்னும் தன்னுடைய நூலில் அனைவருக்கும் உரிய சமச்சீர் கல்வி குறித்துப் பேசியுள்ளார். வர்த்தக உலகில் ‘கல்வி’ எத்தகைய இடத்தைப் பெற்றுள்ளது என்றும் உலக வர்த்தக நிறுவனங்கள் அவற்றை எவ்வாறு ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன என்பதையும் விவாதித்துள்ளார். இந்நிலையை மாற்றுவதற்கான முயற்சியை அரசு மேற்கொள்ள வில்லை. சமூகமும் மிகப்பெரிய எதிர்வினை ஆற்றியதாகத் தெரிய வில்லை. எனவே, ‘கல்வி முறை’ என்பது வர்த்தகத் தேவைகளுக் கேற்ப தகவமைத்துக்கொள்ளும் அமைப்பாக உள்ளது என்கிறார்.
சமச்சீர் கல்விமுறை
சமச்சீர் கல்விமுறை பொதுப்பள்ளித்திட்டத்தின் மூலமே சாத்தியமாக முடியும். ஆனால் நம்முடைய நாட்டில் நான்குவகைப் பள்ளிகள் (மத்திய வாரியப் பள்ளி, மாநிலவாரியப் பள்ளி, பதின்நிலைப் பள்ளி, ஆங்கிலோ - இந்தியப் பள்ளி) இயங்கி வருகின்றன. சமச்சீர்கல்விக்குரிய முட்டுக்கட்டைகளுள் ஒன்று பதின்நிலைப் பள்ளிகள் (Matriculation Schools). 1976ஆம் ஆண்டு வரை இவை பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்டி ருந்தன. கட்டட வசதி, கட்டண வசதி, ஊதியம் முதலிய பல விதிகளும் கடுமையானவையாக இருந்தன. 1976ஆம் ஆண்டு பதின்நிலைப் பள்ளிகள் பல்கலைக்கழகத்தினின்று விடுபட்ட பின்பு தனக்குத் தனி வாரியம் கேட்டன. அதற்குரிய காரணங் களையும் விளைவுகளையும் ஆசிரியர், விரிவாக விவாதித்துள்ளார். சமச்சீர் கல்விக்கு இவை தடையாக இருக்கும் என்றும் இப்பள்ளி களை மாநில வாரியத்துடன் இணைத்து மானியப் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார் ச. சீ. இராசகோபாலன்.
பள்ளிக்கல்வியில் மொழிப்பாடம்:
பள்ளிக் கல்வியில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களில் ஒன்று மொழிப்பாடம். மனித சிந்தனை முதன் மொழியிலேயே அதிவேகமாகச் செயல்படும் என்பது அறிவியலாளர் கருத்து. இரண்டாம் மொழி, சிந்தனையில் பளுவையே ஏற்படுத்தும். தாய்மொழி/முதன் மொழியில் நன்கு தேர்ச்சி பெற்ற பின்னரே இரண்டாம் மொழியைக் கற்பிக்க வேண்டும் என்பது சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவாகும். மொழிப் பாடத்தின் மீதான சுமையை இம்முறையிலேயே குறைக்க வேண்டியுள்ளது. எனினும், நடைமுறையில் இது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறி.
இயந்திர மூளை உற்பத்தித் தொழில்:
கல்வி கற்பித்தல் என்பது நம்முடைய கல்வி முறையில் மதிப்பெண்களை நோக்கிய ஒரு பயிற்சியாகவே உள்ளது. நமது கல்வி முறையில் மதிப்பெண்களே மாணவர்களின் முழு முகவரியாகவும் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கான (உயர்கல்வி, வேலைவாய்ப்பு...) நுழைவாயிலாகவும் கருதப்படுகின்றது. எனவே கல்வியின் உண்மையான நோக்கம் சிதைக்கப்பட்டு அது ஒரு இயந்திரத்தனமான பயிற்சியாகக் கடைபிடிக்கப்படுகின்றது. நம்முடைய பள்ளிக்கல்வி முறை குழந்தைகளுக்கு ஏற்றதாக இல்லை. டேஞ்சர்: ஸ்கூல் - சமகால கல்வி குறித்த உரையாடல் என்னும் நூல் IDAC குழு உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டது. ஜெனிவாவில் வெளியிடப்பட்ட இந்நூலின் இந்தியப் பிரதி (சில திருத்தங்களுடன்) அப்பணசாமி என்பவரால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. கல்விக்கூடங்கள் வெறும் இயந்திர சாலைகளாக இயங்கி வருகின்றன என்பதை விளக்கியுள்ளார். கல்வியிலும் உடல் உழைப்புக்கு உரிய கல்வி, மூளை உழைப்புக்கு உரிய கல்வி என்று இரண்டு நிலைகள் உள்ளன. இதனை முதலாளி, தொழி லாளி வர்க்கத்திற்குரிய கல்விமுறையாகக் குறிப்பிட்டுள்ளனர் எனவே கல்விமுறை தனிமனித மேம்பாட்டிற்குரிய ஒன்றாக இல்லை. அது முதலாளி வர்க்கத்தின் - மேல்சாதியினரின் தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொடுப்பதற்கான பயிற்சிமுறையாக உள்ளது. எனவே ஒட்டு மொத்த சமூகத்திற் கான கல்வி எது? இயந்தியரக் கல்வியா? இயற்கைக் கல்வியா? என்று பல கோணங்களில் விவாதிக்கும் இந்நூலில் கல்விக்கூடங் கள், கற்பிப்பவர்கள், கற்பிக்கும் முறை ஆகியவற்றின் மீதான குற்றச்சாட்டுகளே பதிவாகியுள்ளன. பள்ளிக்கல்வி எவ்வாறு சமூகத்தை வடிவமைக்கின்றது என்பதை மார்க்ஸிய நோக்கில் இந்நூல் விளக்குகின்றது. சாதியப் பாகுபாட்டில் காலங்காலமாக மறுக்கப்பட்டுவந்த கல்வி ஆங்கிலேயர் வருகைக்குப் பின்பு ஓரளவு பொதுமைப்படுத்தப்பட்டது. சட்டரீதியாகக் கல்வி பொதுமைப்படுத்தப்பட்டாலும் சாதிய ஒடுக்குமுறை கல்வி நிறுவனங்களுக்குள் நிகழ்ந்தேறிக் கொண்டே யிருக்கின்றன. பள்ளிக் கல்வியில் சாதிய-பாலியல் ஒடுக்குமுறை பற்றிய சிறுகதை களின் தொகுப்பாக ‘ஓய்ந்திருக்கலாகாது’ அமைந்துள்ளது.
பள்ளிக்கல்வியில் புதிய அணுகுமுறை:
கற்பித்தல் முறையில் புதிய அணுகுமுறைகள் குறித்துப் பல கல்வியாளர்களும் சிந்தித்து வருகின்றனர். ‘கல்வியில் நாடகம்’ என்பது ஒரு அணுகுமுறை. பாடங்கள், தேர்வுகள், மதிப்பெண் கள் மட்டும் கல்வியல்ல. கலைகள் மற்றும் பிற ஈடுபாடுகளும் கல்விக்குள் அடங்கும். ஒரு கருத்தை மாணவன் எவ்வாறு உள்வாங்குகின்றான்? அதற்கு எத்தகைய வடிவம் பொருத்தமாக உள்ளது? பாடநூல் வடிவத்தைவிட நிகழ்த்து வடிவம் / காட்சி வடிவம் அதிகம் துணைபுரியுமாயின் அதன்மூலம் கற்பித்தல் சிறப்பானது. நாடகக் கல்வி மாணவர்களைப் பல கோணங்களில் சிந்திக்க வைக்கின்றது. சமூக அக்கறை உள்ளவர்களாக மாணவர்களை மாற்றுகின்றது என்பதை ‘கல்வியில் நாடகம்’ என்னும் தன்னுடைய நூலில், தான் பெற்ற நாடக அனுபவங்கள் மூலம் விளக்குகின்றார் பிரளயன்.
கல்வி, மாணவர்களின் உளவியலோடு நேரடித் தொடர்பு டையது. எனவே ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ற கல்வி அவசியம். உடற்கூற்றுக் கல்வி மற்றும் பாலியல்கல்வி பற்றிய அறிவு மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும். இதைப் பற்றிய அறிமுகமாக ‘மலர்ந்து மலராத’ என்னும் நூல் அமைந்துள்ளது. கல்வி என்பது ஆசிரியர் மாணவர்களுக்கிடையில் நடக்கும் பகிர்வேயன்றி அது ஒருகோட்டுத் தன்மையானதல்ல. சில சமயம் மாணவன் கற்றுக் கொடுக்கும் ஆசிரியனாகவும் விளங்குகின்றான். மாணவர்களின் ஊக்கம் ஆசிரியர்களை இன்னும் கூர்மையாகவும் தெளிவாகவும் செயல்பட வைத்துள்ளது. இரா. நடராஜனின் ‘ஆயிஷா’ என்னும் படைப்பு இதனை விளக்குகின்றது.
- மு.நஜ்மா