சுரிந்திர சந்தி சர்க்கார் எனும் பாதல் சர்க்கார், கொல்கத்தாவின் பண்பாட்டு நடவடிக்கைகளில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். பின் காலனியச் சூழலில், இந்தியாவில் உருப்பெற்றுவந்த பண்பாட்டு நடவடிக்கைகளில் இவரை எப்படிப் புரிந்துகொள்வது? என்ற உரையாடல் பாதல்சர்க்காருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக அமையும்.
காலனியம் பல்வேறு புதிய பண்பாட்டுச் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தியது. அரங்கம் தொடர்பான காலனியத் தாக்கம் நமக்கு வலுவானது. பாதல், தனது அரங்கச் செயல்பாடுகளைக் காலனியப் 'படச்சட்ட மேடை' எனும் வடிவத்தில்தான் தொடங்கினார். நகைச்சுவை ததும்பும் இன்பவியல் நாடகப்பிரதிகளை (comedies) எழுதி மேடையேற்றுவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார். இந்தச்சூழலில் இலண்டன் நகருக்குச் சென்று படிக்கும் வாய்ப்பு உருவானது (1957-59). அங்கு நடைபெற்ற அரங்க நிகழ்வுகள் இவரிடம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கியது. தான் செயல்படும் அரங்கமுறைகளை விமரிசனக் கண்ணோட்டத்தோடு அணுகத் தொடங்கினார். அரங்கம் தொடர்பான விரிவான வாசிப்பை மேற்கொண்டார். கொல்கத்தா சூழல் என்பது பல்வேறு சோதனையுடன் கூடிய பண்பாட்டு நிகழ்வுகளை மேற்கொள்ளும் தன்மை கொண்டது. 1940கள் தொடங்கி, வலுவான அரங்கச் செயல்பாடுகள் ‘இப்டா’ (IPTA) மூலம் நிகழ்ந்துகொண்டிருந்த இடம் அது. இந்தப்பின்புலத்தில் இடதுசாரி மனநிலையுடன் அரங்கச் செயல்பாடுகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். தாம் பார்த்துக்கொண்டிருந்த பொறியாளர்ப் பணியைத் துறந்து முழுநேர அரங்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டார்.
பாதல், அரங்க மொழியில் மரபாக நடந்து வரும் முறைமைகளைத் தவிர்த்துப் புதிய அரங்க மொழியைக் கண்டறிய முற்பட்டார். 1970களில் இம்முயற்சியில் தீவிரமாக இறங்கத் தொடங்கினார். தமது அரங்க மொழியை ‘மூன்றாம் அரங்கம்’ என்று அறிவித்துக்கொண்டார். பாரம்பரிய மரபு, காலனிய மரபு ஆகியவை முதலிரண்டு மரபுகள். இம்மரபுகளிலிருந்து வேறுபட்டதாகத் தமது அரங்கம் அமையும் என்று கூறினார். நிகழ்த்து முறையில் பார்வையாளர்களுக்கும் அரங்கமேடைக்கும் இடையில் உள்ள இடைவெளியைத் தூக்கியெறிய நினைத்தார். பார்வையாளன் வேறு நடிகன் வேறு என்ற நடைமுறைச் செயல்பாட்டை மறுதலித்து பார்வையாளனும் நடிகனும் ஒரே வெளியில் செயல்படும் அரங்கத்தைக் கட்டமைக்கத் தொடங்கினார். நமது பாரம்பரிய நாட்டார் அரங்குகளில் இத்தன்மையின் அடிப்படைகள் இடம் பெற்றிருந்தாலும் நிகழ்த்தும்போது தவிர்க்க முடியாமல் பார்வையாளன் - நடிகன் எனும் இருநிலை உருப்பெற்றுவிடும். இத்தன்மையைத் தமது அரங்க மொழியில் உருவாகாமல், பார்வையாளன் தான் நடிகன் எனும் புரிதலை இந்திய அரங்க வரலாற்றில் செய்தவர் பாதல். இவ்வகையான அரங்கமொழி, அரங்கை சமூகப் போராட்ட நடைமுறைக்காகப் பயன்படுத்துபவர்களுக்குப் பெரிதும் வாய்ப்பாக அமைந்தது. இதனால் இந்தியா முழுவதும் பாதல் கண்டறிந்த அரங்க மொழி பரவலாக நடைமுறைக்கு வந்தது. இவ்வகையில் இந்திய மண்ணில் ஒரு புதிய அரங்கமொழியை உருவாக்கி நடைமுறைப்படுத்திய கலைஞன் என்றவகையில், பாதல் அவர்களுக்கு வரலாற்றில் தனித்த இடமுண்டு.
இவர் இந்தியா முழுவதும் நடத்திய நாடகப் பயிலரங்குகள் அளவிற்கு வேறு எந்த நாடகக்கலைஞரும் நிகழ்த்தியதாகக் கூற முடியாது. இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் கொண்டிருந்த அரசியல் கண்ணோட்டத்திற்கும் பாதல் கொண்டிருந்த கண்ணோட்டத்திற்கும் உள்ள உறவு யாது? இவர்கள் ஏன் பாதல் பயிலரங்குகளை நடத்த முன்வந்தார்கள்? ஆகிய பிற கேள்விகள் சுவையானவை. பாதல் குறித்துப் பேசும்போது இக்கேள்விகளும் எழுவது தவிர்க்க முடியாத ஒன்று.
1960களின் இறுதியில் இடதுசாரி இந்திய அரசியல் இயக்கத்தின் ஒரு செயல்பாடாக நக்சல்பாரி இயக்கம் உருவானது. 1970களின் தொடக்கத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் நக்சல்பாரி இயக்கம் செயல்படத் தொடங்கியது. இத்தன்மைகளை ஆளும் வர்க்கம் 1975இல் கொண்டு வந்த அவசரநிலைக் காலச்சட்டத்தின் மூலம் முறியடிக்கத்தொடங்கியது. அவசர நிலைச் சட்டம் நீக்கப்பட்டபின், இந்தியாவில் தன்னார்வக் குழுக்கள் என்ற பெயரில் கிறித்துவ நிறுவனங்களால் பல குழுக்கள் உருவாக்கப்பட்டன. இவர்கள் பண்பாட்டு நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடத் தொடங்கினர். இவர்களது மொழி, இடதுசாரிப் பார்வையைக் கொண்டது போல் இருக்கும். இவர்களுக்கு அமைப்பு ரீதியான பண உதவிகளைச் சமய நிறுவனங்கள் செய்யும். எழுச்சிபெற்று வரும் தலித்துக்களைத் தங்கள் அணியில் சேர்ப்பதை இக்கிறித்துவ தன்னார்வக் குழுக்கள் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டன. மக்கள் மத்தியில் உருப்பெற்று வந்த ஆளும் வர்க்கத்திற்கு எதிரான உணர்வுகளை, இடதுசாரிப் போர்வையில் வந்த நவீன சமயவாதிகள் தங்கள் நடவடிக்கை மூலம் அரசியல் தன்மையற்றதாகச் செய்தனர். உலகம் முழுவதும் கிறித்துவம் இவ்வகையான தந்திர நடவடிக்கைளில் ஈடுபட்டதை நாம் அறிவோம். இச் செயல்பாடு 1970களின் இறுதியில் ஓரளவுக்கு ஓய்ந்தது. கிறித்துவ தன்னார்வக் குழுக்களிடம் இடதுசாரிகள் பல இடங்களில் ஏமாந்து போனார்கள். தமிழ்நாட்டில் அது சிறப்பாகவே நடந்தேறியது.
மேற்குறித்தப் பின்புலத்தில் கிறித்துவத் தன்னார்வக் குழுக்கள், நக்சல்பாரி குழுக்கள் என்று சகட்டு மேனிக்குத் தமது அரங்கப் பயிலரங்கங்களை நிகழ்த்தியவர் பாதல். அமைப்பு வழிப்பட்ட, மார்க்சிய கோட்பாட்டு வழிப்பட்ட இயக்கங்களுக்கு எதிராகச் செயல்பட்ட சமய இயக்கங்களுக்கு இவர் அரங்கப் பயிற்சிகளை நிகழ்த்தினார். இதனைச் சர்க்கார் குறித்துப் பேசும் போது நினைவு படுத்திக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.