கடந்த 3-12-09 அன்று வேதாரண்யம் அருகே பள்ளி வாகனம் ஒன்று குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒன்பது குழந்தைகள் ஒரு ஆசிரியை ஆகிய பத்து பேர் பலியாகியுள்ளனர். அதேநாளில் ஆத்தூர் அருகே தனியார் பள்ளி பேருந்து ஒன்று சாலை யோர தென்னைமரத்தில் மோதியதில் மாணவர், மாணவிகள் மொத்தம் 28 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கு அடுத்து 10 நாள்களில் வெவ்வேறு இடங்களில் 3 பள்ளி வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.

1995-ஆம் ஆண்டு திண்டிவனம் வட்டம், குடிசைப்பாளையம் கிராமத்தில் சாலையோரம் இருந்த தரைகிணற்றில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வந்த தனியார் பள்ளி வாகனம் நிலைதடுமாறி பாய்ந்தது. இதில், குடிசைப்பாளையம். காட்டுசிவிரி பெரப்பந்தாங்கல் ஆகிய மூன்று ஊர்களைச் சேர்ந்த 16 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இப்படி பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விபத்துக் களாகும் செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணமாகவே உள்ளன.

இந்நிலையில் இப்படிப்பட்ட விபத்துகள் நடப்பதற்கு காரணம் என்ன? இவ்விபத்துகள் ஏன் நடக்கின்றன என்பது ஆழ்ந்த அக்கறைக்குரியது.

குறிப்பாக தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள்தான் இப்படிப்பட்ட விபத்துகளில் அதிகம் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள். உள்ளூர்களில் அல்லது கிராமப் புறங்களில் தரமான கல்வியும், பள்ளியும் கிடைக்கா ததால் பெற்றோர்கள் வேறு வழியின்றி கல்வியைக் கடைச்சரக்காக்கி விற்பனை செய்து கொண்டிருக்கும் தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளில் குழந்தைகளைக் கொண்டு போய் குவிக்கிறார்கள்.

இதற்காக குழந்தைகளுக்கு 10-15கி.மீ தூரத்திலிருக்கும் நகரங்கள் நோக்கி பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்படி அவர்கள் செய்யும் பயணம் எந்த அளவு பாதுகாப்பானதாக இருக்கிறது என்பது பற்றி யாரும் கவலைப் படுவதாக தெரியவில்லை.

பள்ளி நிர்வாகத்தினர் அனுபவ மில்லாத ஓட்டுனர்கள் குறைந்த ஊதியத் திற்கு பணிக்கு அமர்த்துகிறார்கள். அவருக்கு ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா? இல்லையா? என்று கூட பார்ப்பதில்லை. வண்டிகளின் தரம் குறித்தும் அவர்கள் கவலைப்படுவதில்லை. எங்கெங்கோ ஓடி உலுத்துப்போன வண்டிகளை வாங்கி, ஏதோ ஒப்புக்கு பழுது பார்த்து, தரமற்ற உதிரி பாகங்களை வாங்கிப் போட்டு ஓடிய வரை ஓடட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இதில் பயணம் செய்யக் கூடிய குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி அக்கறையில்லாமல் இருக்கிறார்கள்.

வேதாரண்யம் விபத்தை ஏற் படுத்திய ஓட்டுநர் டிராக்டர் ஓட்டியவர். அவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை. மகேந்திரா வேனுக்கு பர்மிட் கூட இல்லை என்று பத்திரிக்கை செய்தி கூறுகிறது.

போக்குவரத்து துறையினரோ, முறையாக பராமரிப்பு இல்லாத வண்டி களுக்கும், காலாவதியான வண்டிகளுக்கும் கையூட்டு வாங்கிக் கொண்டு சான்றிதழ அளித்து வருகிறார்கள்.

கல்வித்துறை அதிகாரிகளின் கண்ணோட்டமோ வேறுமாதிரியாக இருக்கிறது. அவர்கள் பள்ளிகளை பார்வையிடவும். பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா? என்பதை பார்வையிடவும் தான் கல்விச் சட்டத்தில் இடம் உள்ளதே தவிர இந்தப் பாதுகாப்பு பற்றியெல்லாம் இல்லை எனத் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள்.

இவர்கள் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பாக இயக்கப்படுகிறதா? ஓட்டுநர் பொறுப்புடன் செயல்படு கிறாரா? ஓட்டுநர் மீது புகார் வருகிறதா? வாகனங்கள் முறையாக பராமரிக்கப் படுகிறதா? என்றக் கோணத்தில் கண் காணித்து தொடர்புடைய துறையிடம் குறைந்தபட்சம் புகராவது கொடுக்கலாமில்லையா? 

பொதுவாக, பொதுமக்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் மீது சமூக அக்கறை யுள்ளவர்கள் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுப்பது போல் கல்வித்துறைச் சார்ந்த பிரச்சனை மீதும் கவனம் செலுத்தலாமில்லையா?

போக்குவரத்து அதிகாரிகளைப் பற்றி சொல்ல தேவையில்லை. இவர்கள் சட்டங்களையும், விதிமுறைகளையும் செயல்படுத்தி மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கு மாறாக அவற்றைப் பணமாக்குவதிலேயே குறியாகிறார்கள். பிச்சைக்காரனை விடக் கேவலமாக கை நீட்டுவதை தினசரி பத்திரிக்கைகளில் படம் பிடித்துக் காட்டி அம்பலப் படுத்தியப் பிறகும் இவர்கள் திருந்துவதற்கு தயராக இல்லை.

இத்துறை நிர்வாகம் அடிமட்டத்தி லிருந்து மேல்மட்டம் வரை இலஞ்சத்தில் ஊறிக் கிடக்கிறது. பெற்றோர்களும் குழந்தைகளை, அதிகாலையில் எழுப்பி பள்ளிக்கு அனுப்பி விட்டு, வேலைக்கு போக வேண்டிய அவசரத்தில் இருக் கிறார்கள்.

இதனால் இவர்கள் பள்ளி வாகனத் தில் குழந்தைகளை வெற்றிலையை அடுக்குவதைப் போல் அடுக்கியோ அல்லது புளியை மூட்டையில் அடைப் பதுபோல் அடைத்தோ பள்ளிக்கு அழைத்து செல்வதைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதுமில்லை.

மேற்கண்ட மூன்று துறைகளையும் கண்காணித்து அதில் எங்கெல்லாம் சிக்கல்கள் ஏற்படுகிறதோ, அவற்றை கண்டறிந்து ஆய்வுக்கு உட்படுத்தி பிரச்சனைகளை களைய, துரித நடவடிக்கை களை அரசு எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட கோர விபத்துகள் ஏற்படும் போதெல்லாம் நிர்வாகங்களுக்கு சில நெருக்கடிகள் ஏற்படுகின்றன.

அப்போது மட்டும் அரசும் போக்கு வரத்து அதிகாரிகளும் கெடுபிடியான சில நடவடிக்கைகளில் இறங்கி விடுகிறார்கள். படிப்படியாக கால அவகாசம் கொடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை, ஒரே அடியாகவும் ஒட்டு மொத்தமாகவும் ஆய்வு என்ற பெயரில் கிடுக்கிப் பிடி போட்டு பள்ளி வானங்களை தடைச் செய்கிறார்கள். இதனால் வாகன உரிமையாளர்கள் வண்டிகளை இயக்க மறுக்கிறார்கள். போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.

இதுவரை, வழக்கமாக ஓடிக் கொண்டிருந்த வண்டிகள் திடீர் என நிறுத்தப்படுவதால், மாற்று ஏற்பாடு இல்லாமல் போக்குவரத்து வசதியின்றி பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட நெருக்கடியான நாட்களில் பெற்றோர்கள் தாங்களே பிற வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி கொண்டு போய்ப் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க வேண்டிய கட் டயாத்திற்கு ஆளாகிறார்கள்.

இதனால் நொந்து போன பெற் றோர்களும் வண்டிகள் ஓடினால் போதும் என்ற மன நிலைக்கு வந்து விடுகிறார்கள். அதாவது நடக்கும் அநியாயங்களை கண்டு ஆவேசப்படாமல் அதற்கு மௌன சாட்சியாகிறார்கள்.

குடிசைப்பாளையம் கோர விபத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாத அரசும், கல்வித் துறை அதிகாரிகளும் தனியார் பள்ளி நிர்வாகிகளும், கும்ப கோணத்தில் 90க்கும் அதிகமான குழந்தை களை உயிரோடு எரித்த தீ விபத்தி லிருந்தும் பாடம் கற்றதாகத் தெரிய வில்லை. இதனால்தான் அது வேதா ரண்யம் வரை தொடர்கிறது.

இப்படிப்பட்ட பொறுப்பற்ற சமூக சூழ்நிலையிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள மக்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும், இயங்க வேண்டும். அதாவது, தேவையை ஒட்டி ஒவ்வொரு பகுதி களிலும் போக்குவரத்து அதிகாரி காவல்துறை, கல்வித்துறை அதிகாரி, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஒருவர், பெற்றோர்களின் சார்பில் ஒருவர் என ஒரு கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

இக்குழு தொடர்புடைய பள்ளி களுக்கு சென்று, பள்ளிக்காக இயக்கப்படும் வாகனங்களை வாகன ஓட்டிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். வாகனம் நல்ல முறையில் இயங்க தகுதி யுடையவைதானா என்பதையும் உறுதிச் செய்ய வேண்டும். வாகனங்களை இயக்க கூடிய ஓட்டுநர்கள் பொறுப்பான நபர்தானா? அவருக்கு ஓட்டுநர் உரிமம் உள்ளதா? தொடர்ந்து உரிமத்தைப் புதுப்பித்து வருகிறதா? தொடர்ந்து வண்டியை இயக்கி வருபவர்தானா? என்பன போன்ற விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், அடுத்து பெட்டிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளவாறு உச்சநீதி மன்றம் பள்ளி வாகனங்களுக்கு இட்ட கட்டளைகளை கடைப்பிடிக்கப்படு கின்றனவா? என்பதையும் இக்குழு கண்காணித்து வர வேண்டும்.

இத்துடன் அல்லாமல் இப்படிப் பட்ட வாகன வசதி இல்லாது, இலவசப் பயணச் சலுகை பெற்று அரசு பேருந்தை நம்பி வாழும் பள்ளிப் பிள்ளைகள், காலை மற்றும் மாலை நேர நெரிசல்களில், குறிப்பாக மாநகர நெரிசல்களில் சிக்கித் தவித்து, உயிரோடு விளையாடுவதைத் தவிர்க்க அந் நேரங்களில் மட்டுமேனும் மாணவர்களுக்கு மட்டுமேயான சில சிறப்புப் பேருந்துகளை இயக்கலாம். கள ஆய்வு செய்து தேவைப்படும் இடங்களில் மட்டும் அதைச் செயலாக்கலாம்.

இப்படியெல்லாம் அரசு உரிய நட வடிக்கை எடுத்து, இக்குறைபாடு களைக் களைந்தால்தான் பள்ளிக்குச் சென்று திரும்பும் மாணவர்களின் பாதுகாப்புக்கு உரிய உத்திரவாதம் இருக்கும்.

அல்லாமல் ஏதாவது விபத்து நேரும்போது மட்டும், விழித்தெழுந்து ஆர்ப்பாட்டம் செய்வது, இல்லாவிட்டால் குறட்டை விட்டோ, கையூட்டு வாங் கியோ காலத்தைக் கழிப்பது என்கிற நிலைத் தொடர்ந்தால் இதுபோன்ற விபத்துகளும் அவ்வப்போது மேலும் தொடரவே செய்யும். 

நீதிமன்ற நிபந்தனைகள்

கடந்த 2007ஆம் ஆண்டு டெல்லியில் பள்ளி வாகனம் ஒன்று விபத்துள்ளாகி 45 குழந்தைகள் பலியாகின. இந்த நிகழ்வை தன் னிச்சையாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் பள்ளி வாகனம் குறிப்பிட்ட நிறத்தில் இருக்க வேண்டும். பள்ளி வாகனம் எனத் தெரியும் படி முன்புறமும், பின்புறமும் எழுதி இருக்க வேண்டும். ஏற - இறங்க இரண்டு வழிகள் வசதியாக இருக்க வேண்டும். அதற்கு கதவு போட்டு தாழ்ப்பாள்கள் இருக்க வேண்டும். ஒரு முதலுதவி பெட்டியும் தீயணைப்பு கருவியும் உள்ளே இருத்தல் வேண்டும். கண்ணாடி யாலான சன்னல்கள் இருக்க கூடாது. சன்னல்களில் குழந்தைகள் தலை, கைகளை வெளியே நீட்டாதவாறு கிரில் அமைத்து இருக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளது. ஆனால் இவை எதுபற்றியும் யாரும் அக்கறை எடுத்துக் கொண்டதாகத் தெரிய வில்லை. 

வீதியில் ஓடும் விதி மீறிய வண்டிகள்

சென்னையில் மட்டும் 2000 பள்ளி வாகனங்கள் இயக்கப்படு கின்றன. தமிழ்நாடு முழுவதும் 10,000க்கும் அதிகமான வாகனங்கள் இயக்கப் படுகின்றன. கல்வி நிறுவனங் களுக்கு வண்டி ஓட்டுவது ஒரு இலாபமான பெரும் தொழிலாக மாறிவிட்ட நிலையில், பெரிய பெரிய “டிராவல்ஸ்” நிறுவனங்களும் இதில் ஈடுபட்டு வருகின்றன.

இதில் சுமார் 60 விழுக்காட்டிற்கு அதிகமான வாகனங்கள் போக்குவரத்து அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, அப்பட்டமாக விதிமுறைகளை மீறி இயக்கப்பட்டு வருகின்றன என்று கூறப்படுகிறது.

- பொன்.மாயவன்

Pin It