ஐரோப்பாவின் அந்தப்புரம் தாய்லாந்து - 3

ஒரு நாட்டில் முன்னேறிய சுற்றுலாத் துறை எப்படி இருக்கும் என் பதற்கு நல்லதொரு உதாரணம் தாய் லாந்து. தலைநகர் பாங்காங் விமான நிலையத்திலிருந்து உடன் வந்த அண் ணனுடன் காரில் போய்க் கொண் டிருந்தேன். தாய்லாந்தில் பெரும் பான்மையினரைப் போலவே, கார் ஓட்டுநருக்கு எங்களது ஆங்கிலம் புரியவில்லை.

வண்டி சென்று கொண்டிருக் கும்போதே சுற்றுலா சேவை மையத் தைத் தொடர்பு கொள்கிறார் ஓட்டுநர். பின் அலைபேசியில் கனிவான பெண் குரல் ஒன்று எங்களிடம் விவரம் கேட்டு அதை ஓட்டுநரிடம் தாய் மொழியில் கூறுகிறது. போகு மிடம் பற்றிய எங்கள் சிக்கல் தீர்ந் தது. என்றாலும் பிரச்சினை வேறு வடிவத்தில் வருகிறது. நாங்கள் குறிப்பிட்ட தங்குமிடத்தைத் தவிர்த்து, வேறு விடுதிக்கு அழைத்துச் செல்ல முடியுமா? என முயல்கிறார் ஓட்டுநர்.

அவரது கையில் கத்தை கத்தையாக விளம்பரக் கையேடுகள். ஆடம்பர உணவு விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை மையங்கள், இரவு நடன அரங்குகள், பாலியல் தொழிலை வீட்டிலேயே வைத்துச் செய்யும் பெண்களின் புகைப்படங்கள், தொடர்பு எண்கள் அடங்கிய அட்டைகள் என ஒவ்வொன்றாய் எடுத்துக் காட்டியபடியே வருகிறார். தாய்மொழி எங்களுக்குப் புரியாது என்றாலும் எங்களை இணங்க வைக்க பெரிதும் முயற்சித்துக் கொண்டேயிருந்தார்.

தாய்லாந்தில் எந்த சுற்றுலா வாகனத்தில் ஏறினாலும் எல்லாப் பக்கமும், இரவு நடன அரங்குகள், பாலியல் தொழில் செய்யும் பெண்களின் புகைப்படங்கள், தொடர்பு எண்களுடன் கூடிய விளம்பரங்களே ஒட்டப்பட்டிருக்கின்றன. எப்படியோ ஓட்டுநரை சமாளித்து, தென்னிந்தியா முழுக்க கிளை பரப்பி பாங்காங்கிலும் பல்லாண்டுகளாய் செயல்பட்டு வரும் எங்கள் தங்குமிடம் போய்ச் சேர்ந் தோம்.

*

ஒரு தேசத்தின் சமூகம் எந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கிறது என்பதற்கு சமூகவியலாளர்கள் அதன் சாலைப் போக்குவரத்தைத்தான் உதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்.

சாலை விதிகளை மக்கள் கடை பிடிக்கும் விதத்திலேயே பலவற்றை நாம் அறிந்துகொள்ள முடியும். பரந்து விரிந்த நகரச் சாலைகள் பளிச்சென்று இருக்கின்றன. குண்டு குழிகளோ குப்பைக் கூளங்களோ தென்படவில்லை.

இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைகவசம் அணிந்துள்ளனர். தெருமுனை வரை தான் சென்று திரும்ப வேண்டும் என்றாலும் காரோட்டிகள் சீட் பெல்ட்டை அணிந்து செல்கிறார்கள்.

பாங்காக்கிக் முதன்மைச் சாலைகளில் மணிக்கு 80 கி.மீ. வரை வேகம் அனுமதிக்கப்படுகிறது இதை வைத்து, சாலையின் தரத்தையும் போக்குவரத்து விதிகள் ஒழுங்கையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

ஒருமுறை நகரச் சாலையின் நடை பாதையில் சென்று கொண்டிருந்தோம். சாலையின் இரண்டு பக்கமும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த வாகனமும் இல்லை. ஒற்றையாய் சென்று கொண்டிருந்த காரொன்று சிவப்பு விளக்கு சிக்னலில் நின்றது. அருகில் கடப்பதற்கு வாகனங்களோ மக்களோ யாருமில்லை. எனினும் சாலை விதிகளைப் பின்பற்றுவதில் அவர்களது உறுதி கண்டு மலைத்துப் போனோம்.

இன்னொரு முறை, சாலையில் நடைபெறும் புயல்வேக போக்குவரத்தைச் சரியாக புரிந்து கொள்ளாமல், கடக்கக் கூடாத ஒரு இடத்தில் ஒரு அயல்நாட்டு சுற்றுலாப் பயணி சாலையைக் கடக்க முயல, விரைந்து வந்த காரொன்று அவர் மீது மோதி சாலை தடுப்பிற்கப்பால் வீசி விட்டுச் சென்றது.

ஒரு சில நிமிடங்களில் சாலை யின் இரண்டு பக்கமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாய்ந்து வரும் அம்புகளைப் போல, பத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் சம்பவ இடத்தை முற்றுகையிட்டன. இதில் ஒரு ஆம்புலன்சும் அடக்கம். படுகாயமடைந்தவரை எடுத்துக் கொண்டு ஆம்புலன்ஸ் மருத்துவ மனைக்கு விரைய ஐந்து நிமிடங்களுக்குள் ஆய்வுகள் விசாரணைகள் முடிக்கப்பட்டு, மீண்டும் சாலையில் போக்குவரத்து இயக்கப்பட்டது.

இதில் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த குறுகிய நேரத் திற்குள்ளாக விபத்தை ஏற்படுத்திய கார் ரோந்து வாகனத்தால் மடக்கப்பட்டு, ஓட்டுநர் பிடிக்கப்பட்டு, அவரும் சம்பவ இடத்திற்குக் கொண்டு வரப்பட்டு, அவரது முன்னிலையிலேயே விசாரணையும் நடைபெற்றதுதான்.

நமது நகரச் சாலைகளில் விபத் துகளில் அடிபட்டவரை ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு போவதற்கே அரை நாளாகும் அவலத்தைப் பார்த்து வந்தவனுக்கு இது ஒரு வியப்பூட்டும் அனுபவம்.

*

ஒரு தேசம் சமூக பொருளாதார கலாச்சார ரீதியாக எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது என்பதற்கு ஓர் ஊரின் நகரத்தின் கடைத் தெருக்களே சாட்சி என்பதும் சமூகவியலாளர் களின் கோட்பாடு.

தூய்மையான நகரவீதிகள், நடை பாதைகளில் பெரும் மண் ஜாடிகளில் நீர் நிரப்பி தாமரையை வளர்க்கிறார்கள். சாலையெங்கும் அவை சிறுசிறு இலைகளுக்கு நடுவே மொட்டு விட்டு மலர்ந்திருப்பது மனதிற்கு இதமாக இருக்கிறது.

கடைகள், விற்பனைக் கூடங்கள் யாவிலும் வாழ்க்கை வசதிப் பொருட்களும் அதி நவீன நுகர்வுப் பொருட்களுமே காணப்படுகின்றன. தாய் லாந்தியர்களின் ஆடை கலாச்சாரம் தனித்துவமானது. எங்கிருந்தாலும் அவர்களை வேறுபடுத்திக் காட்டக் கூடியது. அடர் வண்ணங்கள் இல்லாமல் மெலிதான வண்ண ஆடைகளை பயன்படுத்தும் தாய்லாந்தியர்களின் பெரும்பகுதி ஆடம்பர ஆடை வகைகளை விரும்பி அணிகிறார்கள்.

நவநாகரிக ஆடைகளை அணிந்து வரும் தாய் பெண்களைப் பார்க்கும்போது நமது புராணங்களில் வரும் தேவதைகளைப் போலத் தெரிகிறார்கள்.

தாய் பெண்களின் அழகு பற்றி உலகு முழுக்கப் பல கதைகள் உண்டு. பெயர் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஒருவர் உலகில் நான் பார்த்த பெண்களிலேயே நளினமும் அழகும் நிரம்பப் பெற்றவர்கள் தாய்லாந்து பெண்கள் தான் என்று ஒரு முறை எழுதினார்.

இந்த தாய் அழகைத்தான் இன்று ஐரோப்பியர்கள் விலை பேசுகிறார்கள். உடலை விற்று உயிர்வாழ வேண்டிய ஒரு தேசத்தில், ஐரோப்பியர்களின் சதைப் பசிக்கான ‘இரை’ மிக எளிதாகவே கிடைக்கிறது.

பாலியல் இணைதளங்களில் தாய்லாந்துதான் தாராளம். இவ்வகையில் ஆயிரக்கணக்கான இணைய தளங்களும் ஐரோப்பியர்களுக்கு கடை விரிக்கிறது.

தாய்லாந்தில், 7 வயது சிறுமி முதல் 70 வயது பாட்டி வரை பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பது சற்று விசித்திரமான செய்தியாய்த் தோன்றினாலும் தாய்லாந்தில் பாலியல் செயற்பாடுகளிலேயே சில நோய்களையும் பெண்கள் குணப்படுத்துகிறார்கள் என்பது புதிதாய் இருந்தது.

துவக்கநிலை பித்து, மன அழுத்தம், மனச்சோர்வு, ஆண்மைக் கோளாறு, தூக்கமின்மை என பல நோய்கள் இதில் குணப்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இவ் வாறான பாலியல் சிகிச்சைகளின் போது சில மூலிமைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

எந்தவகையான நோய்க்கு எத்தகைய பாலியல் சிகிச்சை அளிக்கப்படும் என்பதற்கான விவரங்கள் அடங்கிய குறுந்தகடுகளும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

தாய்லாந்தியர்களின் அழகிற்கும் வனப்பிற்கும் நிறத்திற்கும் அவர்களது உணவு முறையும் ஒரு காரணம். கொஞ்சம் அரிசிச் சோறு, வேக வைத்த கீரைகள், அதிகம் கடல் உணவுகள் எல்லா வேளைகளிலும் தாய்லாந்தியர்கள் இதையே விரும்பி உண்கிறார்கள். தானிய - இறைச்சி வகை சூப்களும் அவர்களது உணவு முறைகளில் அதிகம் இடம் பெறுகிறது.

தாய்மொழியும் கேட்க அவ்வளவு இனிமையானதாக இருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையின் முடிவையும் மெலிதாக நீட்டி முடிக்கிறார்கள். பேச்சு என்பதே ஒரு இசை மொழியாக இருப்பதை இங்குதான் பார்த்தேன். நடை உடை பாவனைகளில் மட்டுமல்ல, பேச்சிலும் பணிவும் கனிவும் தாய்லாந்தியர்களிடம் மிகுதியாய் இருக்கிறது.

சிறு, நடுத்தர, செல்வந்தர் என்றில்லாமல் குடும்பம் குடும்பமாக தாய்லாந்தியர்கள் இரவு உணவகங்களுக்குச் செல்கிறார்கள்.

அவ்வாறான ஒரு முன்னிரவு வேளையில், ஒரு ஆடம்பர உணவு விடுதியின் பூங்கா போன்ற வெளி வளாகத்தில், நானும் உடன் வந்த அண்ணனும் தாய்லாந்தியர்களோடு சேர்ந்து உணவு உட்கொண்டது அற்புத அனுபவம்.

பாரம்பரிய உடையணிந்த தாய் மகளிர் இனிய குரலில் பாடிக் கொண்டிருக்க, அருகருகாக பாரம்பரிய தாய் இசைக் கருவிகளும் இசைத்தபடி இருந் தன. மொழி ஒரு தடையாக இருந்தாலும் எங்களது உடல் மொழியைக் கொண்டே (நாற்காலியை நகர்த்த வேண்டுமா? குடிக்கத் தண்ணீர் வேண்டுமா... இன் னும் சிறிது உணவு?) தாய் பெண்கள் பணிவிடை செய்வது மறக்க முடியாத அனுபவம்.

மற்றொரு நாள் வித்தியாசமான நெருக்கடியான அனுபவம் ஒன்றும் எங்களுக்கு நேரிட்டது. அவர்கள் இறுக்கமாகப் பின்பற்றும் விதிகள் உடன் வந்த அண்ணனை அதிகம் பதம் பார்த்துவிட்டது.

விஷயம் இதுதான். நகரின் மத்தியில் இருந்த புகழ்பெற்ற வணிக வளாகம் ஒன்றிற்கு சென்றிருந்தோம். அதன் 65வது மாடியில் ஓர் சுழலும் உணவகம் இருக்கிறது. இந்தியாவில் இன்னும் சில இடங்களில் கோட்-சூட் அணிந்திருந்தால்தான் அனுமதி என்ற பிரிட்டீஷ் கலாச்சாரத்தைப் போலவே, அந்த சுழலும் உணவகத்திற்குச் செல்வதற்கு பேண்ட் - சட்டையோடு காலில் ஷ¨வும் அணிந்திருக்க வேண்டுமாம்.

செருப்பு அணிந்திருந்த அண்ணனை மிகமிக பணிவாக அணுகி விதியை எடுத்துக்கூறி, அனுமதிக்க மறுத்தாள் ஒரு தாய் மங்கை.

“ஷ¨ போட்டாதான் உள்ள போய் சோறு சாப்பிட முடியும்னா அந்த சோறே வேணாம்” என்று வெளியேறிவிட்டார் அண்ணன்.

65வது மாடியில் இருந்த பாங்காக் நகரை இரவு வெளிச்சத்தில் பார்ப்பது அவ்வளவு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அதைவிட ஏழ்மை நிரம்பிய நாட்டில் வளர்ந் திருக்கிற அறிவியல் தொழில் நுட்பமும், கட்டுமான விஞ்ஞானமும் என்னை மலைக்க வைத்தது. எனது தலைக்குமேலே வானத்தில் நட்சத் திரங்கள் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பது போல இருந்தது. ஆனால் தாய்லாந்து மக்களின் வாழ்க்கை....

- அடுத்த இதழில்

Pin It