வெறுமையாய் உள்ள மேடையில் நால்வர் குழு ஒன்று நுழைகிறது. முழக்கமிட்ட படியே மேடையை வலம் வருகிறது.

முழக்கம் : போடுங்கம்மா ஓட்டு, இந்த சின்னத்தப் பார்து, இந்த சின்னத்தப் பார்த்து, போடுங்கம்மா ஓட்டு

முழக்கத்தை முடித்து ஓர் ஓரமாய் நிற்கிறது.

இதற்கடுத்து இதேபோல் ஒரு குழு மேடைக்கு வந்து இதேபோல முழக்கமிட்டு மேடையின் மறு ஓரமாய் நிற்கிறது.

தற்போது இரண்டு குழுக்களும் மேடையின் இரு புறத்திலும் நிற்கின்றன.

குழு 1 : அன்பான பொது மக்களே,

குழு 2 : வணக்கத்திற்குரிய வாக்காளப் பெருமக்களே,

குழு 1 : உங்கள் பொன்னான வாக்குகளை

குழு 2 : உங்கள் மேலான வாக்குகள்

- இந்திச் சின்னத்திலே முத்திரையிட்டு ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

குழு 1 : மறந்து விடாதீர்கள்.

குழு 2 : மறந்தும் இருந்து விடாதீர்கள்.

குழு 1 : நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம்

குழு 2 : நீங்கள் முத்திரையிட வேண்டிய சின்னம்

இந்தச் சின்னம்

இந்தச் சின்னம்

இரண்டு குழுக்களும் போட்டி மனப்பான்மையோடு ஒன்றையன்று பார்த்து முறைத்தும், உணர்ச்சி உத்வேகத்தோடும் கோரி முடிக்கின்றன.

குழு 1 இல் ஒரு தொண்டர் குழுத் தலைவரைப் பார்த்து பேசுகிறார்.

தொண்டர் : தலைவா, நாம்ப சும்மா வெறும் வாயால ஓட்டு மட்டும் கேட்டுக்னு இருந்தா கத நடக்காது.

தலைவர் : அத தேர்தல் அன்னிக்கு மொத நாள் செய்வம். இப்ப என்ன செய்யறது.

தொண்டர் : நாம்ப ஜெயிச்சி வந்தா மக்களுக்கு எத்தன்னா செய்வம்னு நம்ப தேர்தல் அறிக்கையில மக்களுக்கு சொல்லணும்.

தலை : (சற்று யோசித்து) அதான, பாத்துக்க. அன்பான பொது மக்களே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் வறிய நிலையில் வாழும் மக்களுக்கு, நபர் ஒன்றுக்கு நாலு இட்டிலி ஒரு மெது வடை அல்லது மசால் வடை, எவருக்கு எது பிடிக்குமோ, அதைப் பொட்டலமாகக் கட்டி இல்லம் தோறும் இலவசமாக வழங்குவோம். குழந்தைகளுக்கு இரண்டு இட்டிலி பாதிவடை.

குழுவினர் : ஆஹா, அருமையான திட்டம். அருமையான திட்டம்.

இவற்றை உன்னிப்போடு கவனித்து எதிர்வினை புரிந்து வரும் இரண்டாவது குழுவினர்.

தொண்டர் : தலைவா, அவங்க தேர்தல் அறிக்கையப் பாத்தீங்களா... இதப் பாத்து மக்கள் அவங்க பக்கம் போயிடப் போறாங்க. பதிலுக்கு நம்பளும் எதாவது அறிவிக்கணும்.

தலைவர் : (சற்று யோசித்து), இப்ப பார், வணக்கத்திற்குரிய வாக்காளப் பெருமக்களே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மக்களுக்கும் அவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழேயோ மேலேயோ பக்கவாட்டிலோ எங்கே இருந்தாலும், அவங்களுக்கு நாள்தோறும் ஒவ்வொரு நபருக்கும் பெரியவர் சிறியவர் என்று வித்தியாசம் பாராமல் பூரி செட் மெது வடையோ, பொங்கல் மசால் வடையோ எவருக்கு எது பிடிக்குமோ அதை இலவசமாக வழங்குவோம்.

இதைப் பார்த்த குழு 1இல் கசகசப்பு.

தொண்டர் : தலைவா என்னா இப்படி அறிவிக்கிறீங்க. நாம்ப இட்டிலின்னா அவன் பூரி பொங்கல் மசால் வடன்றான். நாம்ப அதத் தாண்டி எதாவது அறிவிக்கலாம்.

இரண்டு குழுவும் இவ்வாறு எதிர்வினை புரிந்து உரிய முக பாவங்களுடன், மெய்ப்பாடுகளுடன் கீழ்க்கண்டுள்ளவாறு மாற்றி மாற்றி அறிவிக்கின்றன.

‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆப்பம் அல்லது இடியாப்பம் வடைகறி தருவோம்’

‘நாங்கள் குழாய் புட்டு தேங்காய்ப்பால், வாழைப்பழம் தருவோம்.’

‘நாங்கள் பரோட்டா ஆட்டுக்கால் பாயா தருவோம்’

‘நாங்கள் சப்பாத்தி சிக்கன் குருமா தருவோம்’

தலைவா இப்படியே போனா சரிப்படாது, ரூட்ட மாத்துங்க.

- என்னா செய்யலாம்

- வேறா எதாவது ஒண்ணு அறிவிக்கலாம்.

நாங்கள் இல்லந்தோறும் அதிகாலை வீடு தேடி வந்து அனைவருக்கும் இலவசத் தேநீர் வழங்குவோம்.

தேநீரா

ஆமா

தலைவா, நம்ப இப்படி தேநீர் வழங்கினா, டீக்கடைக்காரங்கல்லாம் அவங்க பொழப்பு போச்சின்ன நமக்கு எதிரா போயிடப் போறாங்க தலைவா.

-அப்படியெல்லாம் ஒண்ணும் போவாது. அவங்க பொழப்பு போவாமா அவங்க மூலமாவே ஒவ்வொரு குடும்பத்துக்கும் பிரிச்சி குடுத்துடுவம்.

-அதத் தெளிவாச் சொல்லுங்க தலைவா.

-ஊர்தோறும் உள்ள மொத்தக் குடும்பங்களைக் கணக்கிட்டு, 100 குடும்பங்களுக்கு ஒரு கடை வீதம் டீக்கடைக் காரர்கள் மூலமாகவே வழங்குவோம். இதற்கான டெண்டர்களை எங்கள் ஒன்றிய நகரச் செயலாளர்களுக்கு விடுவோம்.

-ஐயோ, டீய மட்டும் சொல்லுங்க. டெண்டர்லலாம் ஏன் சொல்லிக்னு.

- நம்ப கட்சிக்காரங்களுக்கு தெம்பு வரணுமில்ல.

அடுத்த அணி இதைப் பார்த்து.

-நாங்கள் வீடுதோறும் தேடி வந்து இல்லத்திருப்பவர்களுக்கு இசைப் பாடல் போட்டு எழுப்பியோ, திருப்பள்ளி எழுச்சி பாடியோ அனைவருக்கும் பெட்காபி கொடுப்போம். இதற்காக மக்கள் விருப்பம் அறிய பில்டர் காபி, இன்ஸ்டண்ட் காபி தேவைப்படுவோர் குறித்த கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் அவரவர் விருப்பத்தையும் நிறைவு செய்வோம்.

இதைப்பார்த்து முதல் குழு எதிர் வினை புரிய இரண்டு குழுக்களும் மீண்டும் மீண்டும் போட்டி அறிவிப்புகளாகச் செய்கிறார்கள்.

-நாங்கள் ஆட்சிக்கு வந்தால், யார் எதைக் குடிப்பதானாலும் குடிப்பதற்கு முன் பல்தேய்க்க அவங்களுக்கு பேஸ்ட் பிரஷ் கொடுப்போம்.

- நாங்கள் சோப்பு கொடுப்போம்.

- நாங்கள் தலைக்கு தேங்காய் எண்ணெய் கொடுப்போம்.

- நாங்கள் நண்பகல் ஒருவேளை வடை பாயாசத்துடன் சோறு போடுவோம்.

- நாங்கள் நாள்தோறும் பிரியாணிப் பொட்டலம் வழங்குவோம்.

- நாங்கள் மாலை நேரங்களில் இலவச போண்டா, பஜ்ஜி வழங்குவோம்.

- நாங்கள் சத்தான கடலை சுண்டல் வழங்குவோம்.

இப்படியே இது நீள அறிவிக்க ஏதுமில்லாததுபோல் திகைக்க ஒரு குழுவில் தொண்டர்,

-தலைவா வெறும் சாப்பாடு அயிட்டமாகவே இல்லாத வேற எதுணா மாத்தணும் தலைவா.

என்ன மாத்தலாம், (யோசிக்கிறார்). ம்... இப்ப பாரு... நாங்கள் ஆட்சிக்கு வந்தால், திருமணமாகாத ஏழை இளைஞர்களுக்கும் பருவப் பெண்களுக்கும் இலவசத் திருமணம் செய்து வைப்போம். இதற்காக பெண் பார்க்கும் படலத்திலிருந்து முதலிரவு வரை ஆகும் செலவு வரை அனைத்தையும் அரசே ஏற்கும்...

இதற்கு கைதட்டல் அமோகமாக வர, இரண்டாவது குழு அதிர்கிறது.

- என்னா, தலைவா, இப்படி அறிவிச்சாட்டாங்க.

- நாம்ப எதாவது அறிவிக்கலாமே.

- என்னா அறிவிக்கலாம்.

- கலியாணம் ஆவாதவங்களுக்கு இலவசத் திருமணம்ன்னா.. ஏற்கெனவே ஆனவங்களுக்கு...

- அதான, அதுக்கு எதாவது அறிவிக்கலாமில்ல. என்ன செய்யலாம்.

- நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏற்கெனவே திருமணமாகி இருப்பவர்களுக்கும், அவரவர் விருப்பத்திற்கேற்ப தேவைப்படும் விதத்தில் ‘செட்அப்’ செய்து தருவோம். இதற்கான மொத்த செலவையும் அரசே ஏற்கும்.

இதற்கும் பலத்த கைதட்டல் வரவேற்பு விசில். மக்கள் குழுவினர் எழுந்து நின்று ஆட்டம் போட்டு தலைவர் வாழ்க, மக்கள் தலைவர் வாழ்க, மக்கள் விருப்பங்களை ஈடேற்றும் மகத்தான தலைவர் வாழ்க.

இந்தக் கூத்தைப் பார்த்து பார்வையாளர் தரப்பிலிருந்து ஒருவர் எழுந்து வருகிறார்.

-யோவ் நிறுத்துங்கய்யா... மக்கள் மானத்தோட வாழ எதாவது வழி சொல்லுவீங்க, எதாவது திட்டம் தீட்டுவீங்கன்னு பார்த்தா.. மக்கள இப்படிப் பிச்சைக்காரனா மாத்தறதுக்கு சதி பண்றீங்க..

இதுதான் தன்மானம் சுயமரியாதையா...

இதுதான் பகுத்தறிவா...

இதுதான் சீர்திருத்தமா...

இதுதான் புரட்சிக் கொள்கைகளா..

தற்போது இதுவரை போட்டியாய் முழக்கமிட்ட இரு அணிகளும் ஒன்றுசேர்ந்து பார்வையாளர்களுக்கு எதிராகத் திரும்புகின்றன.

குழு இரண்டு மாற்றி மாற்றி.

- எங்களுக்கு மக்கள் இப்படித்தான் இருக்கணும்.

- இலவசத்துக்கு ஏங்கணும்.

- ஒழைக்காம சொகமா இருக்க பாக்கணும்.

- விழிப்படையாம அறியாமையில இருக்கணும்.

- அவங்களுக்கு எந்த சூடு சொரணையும் இருக்கக்கூடாது.

- தன்மானம் இருக்கக்கூடாது

- பகுத்தறிவு இருக்கக்கூடாது

- மொழி உணர்வு, இன உணர்வு இருக்கக்கூடாது.

-தமிழன்ற அடையாளம் பத்தித் தெரியக்கூடாது.

- குடுத்ததைத் தின்னு, சொன்னதைச் செய்து, எங்க விருப்பம் எப்படியோ அப்படி வாழ்ந்து மடியணும்.

- அப்பதான் நாங்க வாழ முடியும்.

- அப்பதான் நாங்க பொழப்ப நடத்தமுடியும்.

பார்வை : (மக்கள் பக்கமாக திரும்பி) பாத்தீங்களா, இவ்வளோ நேரம், அதிகாரத்துப் போட்டில எதிரும் புதிருமான நின்னு சண்டை போட்டுக்னு இருந்த இவங்க உண்மையான ....... இவங்க ரெண்டு பேருமே ஒண்ணுதான். இவங்க ரெண்டுபேருமே மக்களின் எதிரிதான். அதனால இவங்க யார் ஜெயிச்சு வந்தாலும் மக்களுக்கு ஒண்ணும் நல்லது நடக்கப் போறதில்ல. இவங்களுக்கு யாருக்கு போட்டாலும் எந்த மாற்றமும் வந்துடப் போறதில்ல. அதனால இவங்களுக்கு மாற்றா வேற ஒரு அணிய, மூணாவது அணிய உருவாக்கலாம். மக்களுக்காக, மக்கள் பிரச்சினைகளை எடுத்துப் போராடற அணியா அத வளர்த்தெடுக்கணும். அதுதான் இதுக்கு மாற்றே தவிர இவங்க ரெண்டு பேருக்கும் மாத்தி மாத்தி ஓட்டுப் போட்டுக்குனு இருக்கறதனால எந்தப் பயனும் ஏற்படப் போறதில்ல.

பார்வை : சரிங்க நீங்க சொல்றதெல்லாம் சரிதான். இப்ப போய் திடீர்னு மூணாவது அணிக்கு எங்க போறது. எதுவும் இல்லியே. இவ்வளோ நாளா அத உருவாக்கி இருக்கணம். இல்லியே... அதுக்காக இந்தத் தேர்தல்ல யாருக்குமே ஓட்டுப் போடாம உட்டுடலாம்ன்றிங்களா..

- நான் அப்படி சொல்லல. மூன்றாவது அணின்றது தொலை நோக்குத் திட்டம். அதுக்கான முயற்சிய அது பாட்டுக்கு தொடர்வம். ஆனா இந்தத் தேர்தல்ல நமக்கு ஒரு இலக்கு இருக்குது. அது யார ஜெயிக்க வக்யறதுன்றது இல்ல. யாரத் தோக்கடிக்கிறதுன்றதுதான் அது.

பக்கத்து நாட்டுல இனவெறி அரசுக்குத் துணைபோய் நம் சகோதர மக்கள், தொப்புள் கொடி உறவுகள், போராளிகள கொன்னு குவிச்சவங்க யார், அவங்களுக்குத் துணை போனவங்க யார்ன்றது நமக்குத் தெரியும். அதனால் அவங்களப் பழி தீர்க்க அவர்கள் இந்தத் தேர்தல்ல மண்ண கவ்வ வக்யணும். அவங்க தமிழ்நாட்டு ஒரு தொகுதியிலகூட ஜெயிக்க முடியாதுன்ற நெலய ஏற்படுத்தணும். அதுதான் இந்தத் தேர்தல்ல நம்ப உடனடி இலக்கு. என்ன செய்யலாங்களா...

மக்கள் எழுச்சியோடு முழக்கமிடுகின்றனர்.

- இன எதிரி

- ஒழிக

- இனத் துரோகி

- ஒழிக

- வீழ்த்துவோம் வீழ்த்துவோம்

- இன எதிரியை வீழ்த்துவோம்

- வீழ்த்துவோம் வீழ்த்துவோம்

- இனத் துரோகியை வீழ்த்துவோம்.

Pin It