தவ்ஹீத் ஜமா அறார்த் என்ற முஸ்லிம் அமைப்பு, பில்லி, சூன்யம், பேய், பிசாசு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அவை இஸ்லாமுக்கு எதிரானது என்று பரப்புரை செய்து, பில்லி சூன்யக்காரர்களுக்கு சவால் விட்டு வருகிறது. திருச்சியைச் சேர்ந்த அகோரி மணிகண்டன் என்ற ‘மந்திரவாதி’ சவாலையேற்று, ‘தவ்ஹீத்’ அமைப்பின் தலைவர் பி.ஜே.வுடன் ஒப்பந்தம் போட்டார்.

48 நாட்களில் தன்னால் சூன்யம் வைக்கப்பட்ட அவரது உடல்நலம் படிப்படியாக பாதிக்கத் தொடங்கி விடும் என்று ‘சூன்யவாதி’ ரூ.50 லட்சம் பந்தயமும் கட்டினார். 24 நாட்கள் முடிந்த பிறகும், ‘சூன்யம்’ எந்த வேலையும் செய்யாத நிலையில், திருச்சியில் மேற்குறிப்பிட்ட இஸ்லாமிய அமைப்பு 23.8.2014 அன்று சூன்ய ஒழிப்புப் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தி அதன் மோசடிகளை அம்பலப்படுத்தியது. கொட்டும் மழையிலும் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். மூடநம்பிக்கை களுக்கு எதிராக களமிறங்கி செயல்படும் தவ்ஹீத் அமைப்பை பாராட்ட வேண்டும்.

இதேபோல், இந்து மதத்தின் ஆர்வலர்களாக புறப்பட்டிருப்பவர்கள் மக்களிடம் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யாதது ஏன்? பகுத்தறிவு பிரச்சாரம் செய்யும் பெரியார் இயக்கத்தினரையும் இந்து விரோதிகள் என்றும், பகுத்தறிவு பிரச்சாரத்துக்கு தடை போட வேண்டும் என்றும் அலறுவது ஏன்? மக்களை எப்போதும் மூடநம்பிக்கையிலேயே மூழ்கடித்திருக்க வேண்டும் என்பதால் தானா?

ஆடம்பர திருமண எதிர்ப்புகள்

பெரும் பொருட் செலவில் நடத்தப்படும் ஆடம்பரத் திருமணங்களுக்கு கடிவாளம் போடக் கூடிய சட்டத்தை கருநாடக அரசைப் பின்பற்றி தமிழக அரசும் கொண்டு வரவேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் அதன் செயலவையில் தீர்மானம் நிறைவேற்றியது. 5 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிடப்படும் திருமணங்களுக்கு வரி விதித்து, அந்தப் பணத்தை ஏழை மக்களின் திருமணங்களுக்கு உதவிடுவதே கர்நாடக அரசின் சட்டம். சுயமரியாதை திருமணங்களின் நோக்கங் களில், ஆடம்பரமற்ற சிக்கன திருமண முறையும் அடங்கும். இந்தக் கருத்தின் நியாயம் இப்போது மக்களால் வரவேற்கப் படுகிறது என்பதற்கு சான்றாக இராஜஸ்தானிலிருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது.

ஆடம்பரத் திருமணங்களை செய்வதை வழக்கமாகக் கொண்ட மார்வாடி கள், இப்போது அத்தகைய திருமணங்களுக்கு சமூகத் தடைகளை விதித்துள்ளார்கள். குறைந்தது 100 கோடி ரூபாயை மார்வாடிகள் ஒரு திருமணத்துக்கு செலவிடுவார்களாம். வசதியற்ற மார்வாடிகள், அந்த அளவுக்கு தங்கள் பெண்களை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் திணறு கிறார்கள்.

எனவே, திருமணத்துக்கு செலவிடுவது வீண்விரயம் என்று கூறி, இராஜஸ்தானில் தக்கட்கார், பாலி, சத்ரி மாவட்டங்களைச் சார்ந்த மார்வாடி சமூகத்தினர் ஆடம்பரத் திருமணங்களுக்கு சமூகத் தடை விதித்துள்ளனர். தடையை மீறி திருமணம் நடத்தும் மார்வாடிகள் வீட்டுத் திருமணங்களை புறக்கணிப்பதோடு, ரூ.50,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அந்த சமூகத்தின் மூத்த தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

குறிப்பாக, மாப்பிள்ளை ஊர்வலம், ஆடம்பர விருந்துகளுக்கு செலவிடப்படுவதை குறைப்பதோடு நகரங்களில் நடத்துவதைத் தவிர்த்து சொந்த கிராமங் களிலேயே நடத்தலாம், இரவு நேர வரவேற்புகளை நிறுத்தலாம் என்று மார்வாடிகள் அமைப்பு ஆலோசனை கூறியுள்ளதோடு, மிக ஆடம்பர திருமணங்களை நடத்துவோர் அதில் பங்கேற்போர் குடும்பத்து விழாக்களை 3 ஆண்டுகள் புறக்கணிக்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஜாதி சங்கம் நடத்தும் தலைவர்கள் ஜாதி வெறியை உசுப்பி விடுவதற்கு பதிலாக இதுபோன்ற சமூக சீர்திருத்தங்களையாவது சமூகத்துக்குள் கொண்டு வர முயற்சிக்கக் கூடாதா?

கர்நாடக சங்கீதமும் பார்ப்பனர்களும்

‘கர்நாடக சங்கீதம்’ பார்ப்பனர்களுக்கான இசையாகவே இருக்கிறது. எனவே, கருநாடக இசை பார்ப்பனர்களிடம் மட்டுமே தங்கிவிடாமல் அனைத்து ஜாதியினருக்கான இசையாக விரிவுபடுத்த வேண்டும் என்று கருநாடக இசைப் பாடகரான டி.எம். கிருஷ்ணன் என்பவர், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் (ஆக. 22) ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

இதற்கு பார்ப்பனர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கோவிந்தராஜன் பார்த்தசாரதி என்பவர், “மேற்கத்திய இசையைப் போன்றது அல்ல கருநாடக இசை. மேற்கத்திய இசையை மதச் சார்பின்மை உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்த முடியும். ஆனால், கருநாடக இசை ‘ஆன்மிக’த்துக்கு மட்டுமே உரியது. கருநாடக இசை “பிரம்மத்தை” அடையும் ஒரு வழியாக உபநிஷத்துகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

‘தேவகானம்’ என்று அழைக்கப்படும கருநாடக இசையின் நோக்கம், பக்தி மார்க்கம் ஒன்றுதான்” என்று எழுதி, பார்ப்பனர்களின் இசையாகவே இது இருப்பதை நியாயப்படுத்தியிருக்கிறார். “இசையைப் பற்றிய பெரிய அறிவு இருக்கிறது; ஆற்றல் இருக்கிறது என்பது முக்கியமல்ல. இசையுடன் உள்ள ஆன்மிகத் தொடர்பே முக்கியம்” என்று தியாகய்யரே கூறியிருப்பதாகவும் அந்தப் பார்ப்பனர் கூறுகிறார்.

பார்ப்பன ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் கலைகளை பார்ப்பனர்கள் இன்று வரை அப்படியே தக்க வைத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.