இந்தியாவுக்கு அய்.நா. கண்டனம்

"மனிதர்கள் அனைவருமே சமமாக முடியாது; பிறப்பிலேயே கடவுள் உருவாக்கியிருக்கிறார். இந்தப் பாகுபாடுகளை ஏற்றுக்கொண்டு வாழப் பழக வேண்டும் இந்த வாழ்க்கை தர்மம் தான் நமது சனாதனம்" இதுதான் சனாதன நெறிமுறை என்கிறது பார்ப்பனியம்.the hindu editorialவேற்றுமையில் ஒற்றுமை என்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத். வேற்றுமை என்பது இவர்கள் பூசி மெழுகி ஏமாற்றும் சொல். 'பிராமண' அர்ச்சகர்களையும் தூய்மைப் பணியாளர்களையும் வேற்றுமை என்ற அடையாளத்திற்குள் கொண்டுவர முடியுமா? நிச்சயமாக முடியாது. இதற்குப் பெயர் பாகுபாடு (Discrimination).

வெள்ளையர்கள் கருப்பர்களை ஒதுக்கி வைத்தது பாகுபாடு. 'பிராமணர்'கள் உயர் பிறவிகள்; 'சூத்திர, பஞ்சமர்'கள் இழி பிறவிகள் என்பது பாகுபாடு.

மனிதர்களுக்குள் திணிக்கப்படும் பாகுபாடுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச சட்டம். இனப் பாகுபாடுகளை ஒழிக்கும் அமைப்பு (Committee on the Elimination of Racial Discrimination-CERD) 1968-ல் அய்.நாவில் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு நாட்டையும் கண்காணித்து வருகிறது. இந்த சர்வதேச உடன்பாட்டில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது.

இனப் பாகுபாடு ஒழிப்பு செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையை அய்.நா-வுக்கு அனுப்ப வேண்டியது உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள அனைத்து நாடுகளின் கடமை. இதைத் தொடர்ந்து 2007-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவில் நிலவும் இனப்பாகுபாடுகளை அய்.நா இப்போது முதன்முதலாக ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் கடுமையான குற்றச்சாட்டுகளை இந்தியாவின் மீது சுமத்தியுள்ளது. ஆய்வு அறிக்கைகளை அனுப்ப இந்தியா அலட்சியம் காட்டுவதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

கழிவு நீர் குழிகளுக்குள் சென்று மனிதர்கள் சுத்தம் செய்வது, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு, அவர்களின் மோசமான வாழ்க்கை நிலை, குடியுரிமை திருத்தச் சட்டம், வாக்காளர் பெயர் பட்டியலில் பெருமளவு பெயர் நீக்கம், குடிமக்கள் உரிமைகளைப் பறிக்கும் UPA, FCRA, FSPA, and PMLA போன்ற சட்டங்கள் தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் கலந்து ஆலோசிக்கும் ஜனநாயக நெறிமுறைக்கு எதிராக தன்னிச்சையாக அமலாக்கப்படுவதை அய்.நா. சுட்டிகாட்டி விமர்சித்துள்ளது. அய்.நா வகுத்துள்ள பாகுபாடுகள் என்ற வரையறைக்குள் இந்தச் செயல்பாடுகள் வருகின்றன என்று அய்.நாவின் அறிக்கை கூறுகிறது.

ஜாதித் தீண்டாமை அடிப்படையிலான பாகுபாடுகளை அய்.நா.வின் இனப் பாகுபாடு கருத்துக்குள் கொண்டுவர முடியாது என்று இந்திய பார்ப்பனிய ஆட்சி முன்வைத்த வாதங்களை அய்.நா-வின் பாகுபாடு ஒழிப்புக் கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது.

பிறப்பின் அடிப்படையில் மரபு வழியாக பின்பற்றப்பட்டு சமூக ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்தும் ஜாதி என்ற அமைப்பு இனப் பாகுபாடு தான் என்று அய்.நா திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது. அதே போல் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நோக்கத்தை சிதைத்து அதை காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருப்பதையும் அய்.நா சுட்டிக்காட்டி இருக்கிறது.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் சுதந்திரத்தை மீட்டெடுக்க வேண்டும்; வெறுப்புப் பேச்சைத் திரித்தலுக்கு இடம் தராமல் தெளிவான குற்றமாக்க வேண்டும்; பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவான உறுதியான நடவடிக்கைகளை (affirmative action) மேற்கொள்ள வேண்டும்; சமூகங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்களை முறையாகச் சேகரித்து வெளியிட வேண்டும்; வாக்காளர் பட்டியல் திருத்தங்களின் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்த வேண்டும்; மேலும், ஒட்டுமொத்தமாக சட்ட அமலாக்கத்தின் திறனையும் பொறுப்புக்கூறலையும் வலுப்படுத்த வேண்டும்.

ஆனால், சுமார் 20 கோடி தலித் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ‘உள்நாட்டு விவகாரம்’ என்ற பொருத்தமற்ற காரணத்தைக் கூறி சர்வதேசப் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க அரசு முயல்கிறது; சர்வதேச அமைப்பின் இந்த உண்மையான கவலைகளை அரசியல் நோக்கம் கொண்டவை என்று நிராகரிக்கிறது. இந்தியாவின் இந்த அலட்சியம் தொடருமானால், இதனால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகப்போவது இந்திய குடிமக்கள்தான் என்று அய்.நாவின் அறிக்கை கூறுகிறது.

 (ஆதாரம்: ஆகஸ்ட் 31,2026 இந்து ஆங்கில நாளேட்டின் தலையங்கம்)

விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.