மனித குல வரலாற்றில் பொதி சுமந்து தொண்டாற்றிய கழுதை இனம் மறைந்து வருகிறது. நாடு முழுதும் 70 விழுக்காட்டிற்கு மேற்பட்ட கழுதைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டன என்றும், மத்திய பிரதேச மாநிலத்தில் 94 விழுக்காடு கழுதைகள் காணவில்லை என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ம.பியில் 7 மாவட்டங்களில் ஒரு கழுதை கூட இல்லை. சீனாவில் முகப்பொலிவுக்கும், உடல் தோலுக்கும் கிரீம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கழுதைகள் கொல்லப்பட்டு ஏற்றுமதியாவதும் காரணம் என்று கூறப்படுகிறது. பசுமாட்டுக்குத் தான் இந்த நாட்டில் மதம் கண்ணீர் வடிக்கும். கழுதை பற்றி கவலைப்படாதது காரணம் பசு ’பிராமணர்’ பிரிவிலும் கழுதை ’சூத்திர’ பிரிவிலும் வைக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு கோயில்கள்; விளக்கம் கேட்கிறது உயர்நீதிமன்றம்

பொது இடங்களிலும், சாலைகளிலும் (சட்ட) அனுமதி பெறாமல், கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் அதேபோன்று மத நிறுவனங்களால் கட்டப்பட்ட அமைப்புகள் எவையும் இல்லை என்பதை உறுதி செய்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து அரசிடம் விளக்கம் கேட்டு இருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் சிறீவத்சவா, ஜஸ்டிஸ் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அந்த அமர்வு இப்படி ஒரு முக்கிய வழக்கைத் தாங்களே பதிவு செய்துள்ளது.

31.1.2018 அன்று தந்த ஒரு நீதிமன்றத் தீர்ப்பில், ஆக்கிரமிப்பு கோயில்கள் அகற்றிடவேண்டும் என்று தீர்ப்பு தந்தும், ஆக்கிரமிப்புக் கோவில்கள் அமைப்புகள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் பாயாமல், மறைமுகமாக அதனை ஊக்குவிக்கும் வகையில், காவல்துறையும், அரசும் கண்டும் காணாததுபோல அலட்சியப்படுத்தி வருவதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கண்களை பறித்த தீபாவளி

ம.பி மாநிலத்தில் தீபாவளிக்காக கார்பைடு துப்பாக்கி பட்டாசு கடைகளில் விற்பனையானது. கடும் ஆபத்துகளை உருவாக்கும் ரசாயனம் கலந்த இந்த துப்பாக்கி தடை ஏதும் இல்லாமல் கடைகளில் விற்கப்பட்டன. இந்த துப்பாக்கியை வெடித்த 23 பேர் மோசமாக கண்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் குழந்தைகள்.

தோட்டங்களில் குரங்குகளை விரட்டுவதற்கு பயன்படுத்தும் ரசாயனம் இந்த துப்பாக்கியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் இந்த துப்பாக்கியின் சிறப்பை விளம்பரம் செய்து விற்பனைகளை தூண்டிவிட்டன. சிகிச்சை பெறும் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும், பார்வை இழக்கும் நிலையில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.