பாஜக ஆட்சியில் 2014-இல் 139-ஆக இருந்த கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் 2024-இல் 934-ஆக அதாவது 5 மடங்கு அதிகரித்துள்ளன. இது வெறும் புள்ளி விவரமல்ல; இந்தியாவின் மதச் சார்பற்ற அடித்தளம் இடிக்கப்பட்டு வருவதற்கான சான்று.
பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், சிறு பான்மையினர் மீதான தாக்குதல்கள் திட்ட மிட்ட முறையில் நடைபெற்று வருகின்றன. 'மத மாற்றம்' என்ற பொய்யான கூச்சல் இதற்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உண்மையில் நடப்பது வேறு. சொந்த நம்பிக்கையைத் தேர்ந்தெடுத்த பழங்குடி கிறிஸ்தவர்கள் 'கர்வாப்சி' என்ற பெயரில் வலுக்கட்டாயமாக இந்து மதத்திற்கு மாறுமாறு தாக்கப்படுகிறார்கள்.
கர்ப்பிணியான கானிகா காஷ்யப் மீது நடந்த வன்முறை, ஜாம்ஷெட்பூரில் சாதாரண இரவு விருந்தை மதமாற்றம் என்று குற்றம்சாட்டிய கும்பல் தாக்குதல், இவை அனைத்தும் திட்ட மிட்ட துன்புறுத்தலின் வெளிப்பாடுகள். சமூகப் புறக்கணிப்பு, வயல்கள் அழிப்பு, வீடுகள் எரிப்பு. கால்நடைகள் பறிப்பு, வேலை வாய்ப்புகள் மறுப்பு என திட்டமிட்ட புறக்கணிப்பு தொடர்கிறது. இறந்தவர்களை அடக்கம் செய்யக் கூட அனுமதிப்பதில்லை
உச்ச நீதிமன்றம் தலையிட்டு கடுமையாக எச்சரித்தும் இந்த தாக்குதல்கள் குறையவில்லை. 2025-இல் முதல் ஒன்பது மாதங்களில் 579 வழக்குகளில் வெறும் 39 சம்பவங்களில் மட்டுமே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டுள்ளது. இதில் 71 மிரட்டல் வழக்குகள், 51 இடங்களில் வழிபாட்டிற்கு தடை, உடல் ரீதியான வன்முறைகள், சொத்துக்களை சேதப்படுத்துதல் அடக்கம் ஆனால் நீதி கிடைக்கவில்லை.
உத்தரப்பிரதேசம் 316 விழுக்காடு சம்பவங்களுடன் முதலிடத்தில் உள்ளது. பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர். அசாம் உள்பட ஐந்து மாநிலங்களில் 76 விழுக்காடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இது தனி நபர் வன்முறையல்ல அரசு இயந்திரத்தின் ஆத ரவுடன் நடக்கும் திட்டமிட்ட அடக்குமுறை.
அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கும் மத சுதந்திரம் மட்டுமல்ல, வர்க்க அடிப்படையி லான சுரண்டலும் இங்கு நடைபெறுகிறது. பழங்குடியினர் ஏழைகள் அரசியல் அதிகாரமற்ற வர்கள் எனவே அவர்கள் எளிதான இலக்காக உள்ளனர். 70 லட்சம் பழங்குடி கிறிஸ்தவர்கள் நாட்டின் மிக தொலைதூரப் பகுதிகளில் வாழ்கிறார்கள். கார்ப்பரேட் நலன்களுக்கு வழிவிட அவர்களின் நிலங்களை காலி செய்வதன் ஒரு பகுதியாக இந்த வன்முறை ஏவிவிடப்படுகிறது.
2016-2020 இடையே குறைந்தது 21 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் ஒருவர் வேண்டுமென்றே மின்சாரத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவை வெறும் தனிமனித சம்பவங்கள்' என்று ஒதுக்கிவிட முடியாது. சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்காவிடில், ஜனநாயகம் என்பது வெற்று வார்த்தையே!
- விடுதலை இராசேந்திரன்