தொடர்புடைய படைப்புகள்

இடிப்போம்‌ ஜாதிச் சுவரை! உடைப்போம் இந்த பழைய பூட்டை! ஒரே குரலில் முழங்குவோம்! "நாமெல்லாம் ஒன்று"

 இப்படி நாம் கூறினால் எதிர்ப்பு வருகிறது. நீ வேறு; நான் வேறு; எப்படி சமமாக முடியும்? இப்படித்தான் நமது சமூகம் கேட்கிறது. 3,000 ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத கணக்கு இது . இந்தத் தடை உடைய வேண்டாமா? இந்தக் கேள்வியுடன் தான் நாங்கள் உங்களிடம் வருகிறோம். கல்வியும் கால மாற்றமும் இளையோருக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ள வேலை வாய்ப்பு, சம வாய்ப்பு, சந்திப்பு காதலை நோக்கி நகர்த்துகிறது. ஆனால் ஜாதி அதற்குத் தடை போடுகிறது. வாழ வேண்டிய இளையோர் வாழ்க்கையையே தடுக்கிறது; இல்லையேல் ஆணவக் கொலை என்று வாழ்க்கையே முடிக்கிறது.dvk against caste

  • ஜாதி பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒவ்வொரு இந்து மீதும் பிரிக்க முடியாமல் ஒட்டப்படும் ஸ்டிக்கர்.
  • ஜாதி விலை கொடுத்து பத்திரம் எழுதி வாங்கிய சொத்தா?
  • பல்கலைக்கழகத்தில் படித்து வாங்கிய பட்டமா? இல்லை இல்லை; இது திணிக்கப்பட்ட அடையாளம். சொல்லப்போனால் விலையில்லாமல் கிடைக்கும் இலவசம். கேட்காமலே ஒட்டிக் கொள்ளும் ஜாதி எப்படி வந்தது தெரியுமா?

 இதோ ஒரு சிறு விளக்கம்: பார்ப்பனர்கள் உருவாக்கிய மாபெரும் சதி! சமூகத்தை பிறப்பின் அடிப்படையில் கூறு போட விரும்பியவர்கள் ஒரு கதையை உருவாக்கினார்கள். கதையின் ஹீரோ பிரம்மா எனும் கடவுள்; அந்த கடவுள் தனது தலையில் இருந்து பிராமணர்களையும், அதற்குக் கீழே தோளிலிருந்து சத்திரியர்களையும், அதற்குக் கீழே தொடையிலிருந்து வைசியர்களையும், எல்லோருக்கும் கீழே காலில் இருந்து அடிமைக் கூட்டமாக சூத்திரர்களையும் படைத்ததாக ஒரு கதையை எழுதினார்கள். 'ரிக்' வேதத்தின் புருஷ சூக்தம் 16-வது பிரிவிலும், சுக்ல, யஜுர் வேதத்தில் 22- ஆவது பிரிவிலும், அதர்வண வேதத்தில் 16-வது பிரிவிலும் இருக்கிறது இந்த புருஷ சூக்தம் என்ற இழிவு. இந்த வேதத்திற்கு விளக்கம் கூற அரச கட்டளைகளைப் போல் வந்தது‌ மனு சாஸ்திரம் என்ற கொடூரமான சட்டம். 'பிராமணன்' எந்த குற்றம் செய்தாலும் தண்டிக்கப்படக் கூடாது; வணங்க வேண்டும்; கடவுளே அவனது வேத மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர் என்று கூறியது அந்த சாஸ்திரம். சூத்திரனுக்கு எந்த உரிமையும் இல்லை; அவன் அடிமை, பிராமணர்களின் உல்லாசக் காதலிகளான வைப்பாட்டிகளுக்குப் பிறந்தவர்கள் என்று சூத்திரர்களை அது இழிவு செய்தது.

 ஆனால் இந்த வர்ணாசிரம பாகுபாடுகளையும் தாண்டி சமூகத்திலேயே உறவுகள் நிகழ்ந்தன; குழந்தைகளும் பிறந்தன; அந்த குழந்தைகளை மீண்டும் எந்த வர்ணத்திலும் சேர்க்க முடியாது என்பதால் ஜாதிகளை உருவாக்கினார்கள் பார்ப்பனர்கள்; அதற்குத் தொழிலையும் வரையறுத்தார்கள். பெரியார் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் போராட்டத்தால் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகள் வந்தன. ஜாதித் தொழில் கட்டமைப்பு கலகலக்கத் தொடங்கியது. ஆனால் ஜாதியின் கோரத்தாண்டவம் தொடர்கிறது.

  • ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனி ஜாதி அடையாளங்கள் இருக்கிறதா? இல்லை; ஆனால் செயற்கையாக இந்து தர்மம் பூணூலையும், விபூதி, நாமத்தையும் போட வைத்து இருக்கிறது.
  • உறுப்பு மாற்று மருத்துவம் வந்துவிட்டது; ஒரு ஜாதிக்காரரின் உறுப்பு வேறு ஒரு ஜாதிக்காரருக்கு பொருத்தி உயிர் காப்பாற்றப்படுகிறது. அந்த நேரத்தில் வேறு ஜாதிக்காரர் உறுப்பை எனது ஜாதிக்கு பொருத்த வேண்டாம் என்று கூறுவார்களா? நிச்சயம் கூற மாட்டார்கள்!‌
  • தனது ஜாதிக்குள் தான் திருமணம் செய்வேன் என்று அடம் பிடிக்கும் வணிகர்களும், தொழில் முனைவோரும், மருத்துவரும்,பொறியாளரும், தங்கள் ஜாதிக்காரர்களுக்கு மட்டுமே வணிகம் செய்வோம் என்று கூறுவார்களா?

மதத்தில் பார்ப்பனியம்

  • " நாம் அனைவரும் இந்துக்கள்; அதுவே நமக்கு அடையாளம்; அதுவே நமக்கான நாடு" என்ற மதவெறி இப்போது பரப்பப்படுகிறது. இதில் உண்மை இருக்கிறதா?
  • இந்து என்ற ஒரே அடையாளத்துடன் தான் நாம் வாழ்கிறோமா?
  • இந்து என்பதைவிட ஜாதி தான் இப்போது முதன்மையான அடையாளம்.இந்து ஒற்றுமை பேசுகிறவர்கள் ஜாதி வேண்டாம் என்று பேசுகிறார்களா?
  • வெவ்வேறு ஜாதி இந்துக்களுக்குள் நடக்கும் திருமணத்தை ஏன் இவர்கள் ஆதரிப்பதில்லை? அது இந்துக்களுக்கு இடையே நடக்கும் திருமணம் தானே!
  • இந்துக்களுக்குள்ளேயே நடக்கும் ஆணவப் படுகொலைகளை ஏன் கண்டிப்பதில்லை?
  • பெரும்பான்மையான இந்துக்கள் அசைவ உணவையே உண்கிறார்கள். ஆனால் இந்து மதம் இந்த உணவு முறையை புனிதமற்றது என்று ஏற்க மறுக்கிறது. உழைக்கும் இந்துக்களின் மாட்டுக்கறி உணவை தண்டிப்பதோடு அவர்களை கொலை செய்யவும் தயங்குவதில்லை!
  • பெரும்பான்மை இந்துக்கள் பேசும் தமிழ் மொழியை கடவுளின் மொழியாக ஏற்க ஏன் மறுக்க வேண்டும்?
  • சமஸ்கிருதம் தான் கடவுள் மொழி என்று ஏன் திணிக்க வேண்டும்?
  • அனைத்து இந்துக்களும் அர்ச்சகராக முடியாது; பிராமண இந்துக்கள் மட்டுமே கடவுளிடம் நெருங்க முடியும் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடுவது ஏன்?
  • இந்து மதச் சடங்குகளை செய்யும் அனைத்து உரிமைகளும் பார்ப்பன இந்துக்களுக்கு மட்டும்தானா? பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு ஏன் மறுக்க வேண்டும்?
  • குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற உயர் அதிகாரம் படைத்தவர்கள் கூட சட்டை போடாமல் பூணூல் மேனியுடன் காட்சி அளிக்கும் "பிராமண" இந்துக்களிடம் தான் ஆசி பெற வேண்டுமா?
  • இந்துக்களையும்- இந்து மதத்தையும்- மொழியில், உணவில்,வழிபாடுகளில், பண்பாடுகளில் பார்ப்பனியமே ஆட்டிப் படைக்கிறது! எத்தனை ஆண்டு காலம் பெரும்பான்மை இந்துக்கள் இதை அனுமதிக்கப் போகிறார்கள்? சுயமரியாதையுடன் போராட வேண்டாமா?

வாழ்வியலில் மூடநம்பிக்கை

  • சனாதனம் விதித்த தடைகளை எதிர்த்து தான் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கும், இந்துப் பெண்களுக்கும் கல்வி முன்னேற்றமே வந்தது. கிடைத்த கல்வி குடும்பத்தில் பெண்கள் உரிமையைக் கொண்டு வந்து விடவில்லை; மூடநம்பிக்கைகளையும் ஒழித்து விடவில்லை.
  • சாமியாரிடம் போய் பெண்கள் நகைகளைப் பறி கொடுப்பதும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதும் அன்றாட செய்திகளாகிவிட்டன. இதுவரை எந்த ஒரு சாமியாரும் அற்புதங்களை நிகழ்த்தவில்லை! இயற்பியல் விதிகளுக்கு மாறாக எந்த ஒரு அற்புதமும் நடக்காது என்பதுதான் அறிவியல். கடவுளே வந்தாலும் அவர் இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டு தான் வாழ வேண்டும். அனைத்து சாமியார்களுமே போலி சாமியார்கள் தான்; நல்ல சாமியார் என்று எவரும் இல்லை!
  • அறிவியலுக்கு எதிரானது வாஸ்து; வாஸ்து பார்த்து கட்டப்படும் வீட்டில் வாழும் குடும்பங்களில் பிரச்சனைகளே இல்லையா? பெரும் வெள்ளம் வரும் போதும் நிலநடுக்கம் வரும்போதும் வாஸ்து பார்த்து கட்டப்பட்ட வீடுகள் சிதைந்து விடாமல் தப்பி விடுகின்றனவா? இல்லையே!
  • விவாகரத்து வழக்குகளில் ஜோதிடப் பொருத்தம் பார்த்து நடத்தப்படும் திருமணங்கள் பெரும்பான்மையாக இருப்பது ஏன்?
  • இறந்து போன உறவினர்களின் ஆன்மா வானத்தில் உலவுகிறது என்ற மூடநம்பிக்கையில் பார்ப்பனர்களை அழைத்து திதி கொடுப்பது ஏன்? கிரகங்களுக்கு விண்வெளிப் பயணம் போகிற விஞ்ஞானிகள் யாராவது அங்கே ஆன்மாக்கள் உலவுகின்றன என்று இதுவரை கூறியதே இல்லையே! சொர்க்கம் நரகம் என்ற கிரகங்கள் இல்லையே; சமஸ்கிருத மந்திரத்தின் சக்தி பொருட்களை `மோட்சத்தில்' கொண்டு சேர்க்கிறது என்று இந்த அறிவியல் யுகத்திலும் நம்ப முடியுமா?

- இப்படி எத்தனையோ மூடநம்பிக்கைகள் சமூகத்தை ஆட்டிப் படைக்கின்றன.

ஒன்றைத் தெளிவாக புரிந்து கொள்வோம்!

சமுதாயத்தில் மக்களிடம் ஏற்படும் மாற்றங்கள் தான் முன்னேற்றத்திற்கான கதவுகளைத் திறந்து வைக்கும்.

ஆட்சிகள் மாறலாம்;சட்டங்கள் வரலாம்; ஆனால் சமுதாய மாற்றம் வரும் போது தான் சட்டங்களே வெற்றி பெறும்.‌ இந்த மாற்றத்துக்கான சிந்தனைகளைப் பரப்புவதே இந்தப் பயணத்தின் நோக்கம்!

தடைகளைத் தகர்ப்போம்! சமத்துவ வாழ்வியலை முன்னெடுப்போம்!

- திராவிடர் விடுதலைக் கழகம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.