50-ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் ஜனவரி 31 அன்று தமிழ்நாட்டில் முதல் முறையாக கலைஞர் தலைமையில் நடந்த திமுக ஆட்சி ஒன்றிய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அப்போது அவசர நிலை அமுலில் இருந்த காலம். அதாவது மக்களின் அடிப்படை உரிமைகள் நிறுத்தி வைக்கப்பட்டு பேச்சுரிமை, எழுத்துரிமை அரசியல் உரிமைகள் அத்தனையும் பறிக்கப்பட்டிருந்தது.

இந்த அடக்குமுறை சர்வாதிகாரத்தை எதிர்த்து துணிவோடு குரல் கொடுத்தார் கலைஞர். சென்னை கடற்கரையில் பல லட்சம் மக்களை திரட்டி அவசர நிலைக்கு எதிராக உறுதிமொழியை எடுக்க வைத்தவர் கலைஞர். இந்தியாவிலேயே தமிழ்நாடு மற்றும் ஜனதா கட்சி ஆட்சி செய்த குஜராத் மாநிலம் தான் அவசர நிலையை எதிர்த்தது. இதுகுறித்த வரலாற்றுக் குறிப்புகளை இன்றைய 'இந்து 'ஆங்கில நாளேடு வெளியிட்டு இருக்கிறது. அதிமுகவை தொடங்கியிருந்த எம்.ஜி.ஆர் இந்த அவசரநிலை பிரகடனத்தை வரவேற்றார்’ சர்வாதிகாரியாக மாறிய இந்திரா காந்தி ஆட்சியின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்று அறிக்கை வெளியிட்டார்.

அப்போது ஆளுநராக இருந்தவர் கே.கே.ஷா ஆளுநர் ஆட்சியின் கீழ் தமிழ்நாடு கொண்டுவரப்பட்டது. ஆளுநருக்கு ஆலோசகராக மத்திய அமைச்சக அதிகாரிகளான இரண்டு பார்ப்பனர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஒருவர் பெயர் தவே; மற்றொருவர் பெயர் ஆர்.வி.சுப்பிரமணியம் ; இவர் தமிழ்நாட்டு பார்ப்பனர். அரசியல் கட்சி நடவடிக்கைகளை முற்றாக முடக்கி எழுத்துரிமை, பேச்சுரிமை இல்லாத அந்த காலகட்டத்தை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு அமைப்பை பார்ப்பனமயமாக்க இந்த அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டனர். அதிலும் குறிப்பாக ஆர்.வி. சுப்பிரமணியம் தமிழ்நாட்டின் முழு அதிகாரத்தையும் கையில் எடுத்துக் கொண்டார். ஆளுநரின் ஆலோசகராக வந்தவர் அடிக்கடி காஞ்சிமடம் சென்று சங்கராச்சாரியின் ஆலோசனைகளை பெற்று நிர்வாகத்தை நடத்தினார். கலைஞர் ஆட்சியில் நிர்வாக அதிகாரிகளாக இருந்தவர்கள் பந்தாடப்பட்டனர். 14-அரசுத்துறை செயலாளர்களில் 12-பேர் பார்ப்பனர்களாக நியமிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர்களில் 80 சதவீதம் பேர் பார்ப்பனர்களாக பதவியேற்றனர்.

இப்போது மோடி ஆட்சியின் மாநில உரிமை பறிப்புகளுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் எப்படி உரத்தகுரல் கொடுக்கிறாரோ அதேபோல் அன்றைக்கு கடுமையான ஒடுக்குமுறை தலை விரித்தாடிய காலத்தில் கலைஞர் அவசர நிலைக்கு எதிராக மாநில உரிமைக்கு குரல் கொடுத்தார் அதற்காகவே ஆட்சியை இழந்தார். அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட பிறகு 7-மாதங்கள் நடந்த கலைஞர் ஆட்சி அவசரநிலை அறிவிப்புக்கு எதிராக செயல்படுவதாகவும் பிரிவினை சக்திகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் ஆளுநரின் அறிக்கை கூறியது. தமிழ்நாடு பார்ப்பனமயமாகி வருகிறது என்ற அதிருப்தி காங்கிரஸ் வட்டாரங்களிலேயே எழுந்தது குறிப்பாக மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த முராஹரி பலமுறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பார்ப்பன ஆட்சியை நேரில்கண்டு கொதிப்படைந்து இருக்கிறார். இதை அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் வெளிப்படுத்தினார். 2013-ல் அம்பலத்துக்கு வந்த அமெரிக்காவின் 'விக்கிலீக்' ரகசிய ஆவணங்களில் இந்த தகவல்கள் பதிவாகி இருப்பதை இந்து ஏடு சுட்டிக் காட்டி இருக்கிறது.

அன்றைய காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த டி.கே.பரூவாவும் உள்துறை இணை அமைச்சராக இருந்த ஓம்.மேத்தா-வும் இதற்கு அதிருப்தி தெரிவித்தனர் என்றும், இந்த பார்ப்பன அதிகாரிகளை நியமித்து தவறு செய்து விட்டோம் என்றும், ஒப்புக் கொண்டுள்ளனர் என்ற செய்தியையும் விக்கிலீக்கை மேற்கோள் காட்டி 'இந்து'ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அதிகாரத்தின் உச்சியில் பவனி வந்தது. காங்கிரஸ் கட்சிக்குள் மூப்பனார் அணி ஒன்றாகவும், பழ.நெடுமாறன் அணி ஒன்றாகவும் இரு துருவங்களாக செயல்பட்டன. பழ நெடுமாறன் அவசர நிலையை தீவிரமாக ஆதரித்தாலும் ஆர்.வி சுப்பிரமணியத்தின் பார்ப்பனமயமாக்கலை எதிர்த்து அவரிடமே புகார் செய்தார் என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்த செய்தியை அப்போதே 'விடுதலை' நாளேட்டில் பதிவு செய்திருக்கிறோம். அவசரநிலை காலம் என்றாலும் அமித் ஷா ஆட்சிக் காலம் என்றாலும் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்துக்கே பயன்படுத்துவார்கள் இதுதான் வரலாறு. கடப்பாரை தூக்கும் கழிசடைகளுக்கு இது புரியாது!

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.