வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். கழகத் தோழர் பத்ரி நாரயாணன் பற்றிய கடந்த இதழின் தொடர்ச்சி…

 எண் 61, வெங்கடாசலம் தெரு, ராயப்பேட்டை என்ற முகவரி கொண்ட ஒற்றைக் குடித்தன வாடகை வீடு, ஒரு உடைந்த நாற்காலி, ஓலைப்பாய், மர பீரோ... பத்ரி நாராயணனுக்கு வசதிகளும் வாய்ப்புகளும் அதற்குமேல் இல்லை. ஆனால், அவருடைய கண்ணசைவுக்கே கட்டுப்படும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை 1990-இல் உருவாக்கி வைத்திருந்தார் அவர். 1980-களில் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, பத்தாண்டுகளிலேயே பலமான கோட்டையாக ராயப்பேட்டையை மாற்றிய செயல் வீரர்.

ராஜீவ் காந்தி படுகொலையில் கைதாகி, 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த எழுவரை, விடுவிக்கக் கோரி அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி, உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டது இன்றைய திராவிட மாடல் அரசு. ஆனால், படுகொலை நடந்த காலகட்டம் என்பது மிகவும் கொந்தளிப்பானது. பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் முதலில் 26 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கியது. அந்த கொந்தளிப்பான காலகட்டத்திலேயே மரண தண்டனைக்கு எதிராக இயக்கம், ராயப்பேட்டையில் மரண தண்டனை எதிர்ப்பு மாநாடு, ஒரு லட்சம் ரூபாய் வழக்கு நிதி வசூல், டெல்லிவரை சென்று சட்டப் போராட்டம் என துணிச்சலுடன் செயல்பட்டவர் பத்ரி. அதன் விளைவாக, 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

கிளைக்கழகங்கள் உருவாக்குவது, பெயர்ப்பலகை திறப்பது, பிரச்சாரங்களில் ஈடுபடுவது என எப்போதும் பரபரப்பாக காணப்பட்ட பத்ரி, 1993-ஆம் ஆண்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியை அழைத்து வந்து, வி.எம்.தெருவில் பெரியார் சிலை ஒன்றை நிறுவினார். அந்த பெரியார் சிலைதான் கருப்புச்சட்டைகள் கூடுமிடம். பெரியார் சிலைக்கு அருகிலேயே பிரபலமான நாகாத்தம்மன் கோயிலும் இருக்கிறது. ஆனால் பொதுமக்கள் பிரச்னை என்றால் கோயிலுக்குச் செல்வதை விட, பெரியார் சிலைக்கு அருகே இருக்கும் பத்ரி நாராயணனிடம் செல்வதுதான் வழக்கமாக இருந்தது. பெரியார் சிலையால் பக்தியும் பாதிக்கப்பட்டதில்லை, கோயிலால் பகுத்தறிவுப் பிரச்சாரமும் தடைபட்டதில்லை.

திராவிடர் கழக இளைஞர் அணியின் சார்பில் பனகல் பூங்காவில், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பங்கேற்ற மாநாட்டின் பின்னணியில் இருந்து கடுமையாக உழைத்ததுடன், பெரும் எண்ணிக்கையில் இளைஞர்களைப் பங்கேற்கச் செய்தார். 1996-இல் பத்ரி நாராயணன் திராவிடர் கழகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்களுடன் விலகி, விடுதலை இராசேந்திரனோடு இணைந்து பெரியார் திராவிடர் கழகமாகச் செயல்பட தொடங்கினார். பத்ரி நாராயணனின் வாடகை வீடுதான் பெரியார் திராவிடர் கழகத்தின் முதல் தலைமையகம்.சென்னை ஐ.ஐ.டி-யின் தலித் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து பெரும் இயக்கத்தை முன்னெடுத்தார். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இப்பிரச்னையில் தலையிடும் அளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது அந்தப் போராட்டம். 2001-இல் பேராசிரியர் மு.இராமசாமியின் கலகக்காரர் பெரியார் நாடகத்தை, காமராசர் அரங்கு நிரம்ப நடத்தினார். வள்ளுவர் கோட்டத்தில் சாதி ஒழிப்பு மாநாட்டை நடத்தினார். சுயசாதி எதிர்ப்பு, சாதி மறுப்பு- சுயமரியாதைத் திருமணங்களை முன் நின்று நடத்தி வைத்தல், மத நல்லிணக்கம் என தீவிரமாகச் செயல்படலானார் பத்ரி.

ர.பிரகாசு

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.