badri narayanan 400(முரசொலி பாசறைப் பக்கத்தில் ஊடகவியலாளர் பிரகாசு எழுதி வரும் பெரியார் மண் தொடரில், ராயப்பேட்டையை இலட்சியக் கோட்டையாக்கிய கழக செயல் வீரர் மறைந்த பத்ரி நாராயணனின் குறித்து எழுதப்பட்ட கட்டுரை இது)

ஒரு தனிமனிதன் வீழ்த்தப்பட்டால் அவர்களின் உடல் இயக்கம் மட்டும்தான் நின்று போகுமே தவிர, அவர்களின் சித்தாந்தம் வீழ்ந்துவிடாது. சிந்தனையாளர்களுக்கு அவர்களின் இறப்பு என்பது ஒருகாலும் மறைவாகாது’ என்பதற்கு திராவிட இயக்கத்தில் நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உள்ளன. அதில் தலைநகர் சென்னையின் ஓர் உதாரணம் `பத்ரி நாராயணன்’. 2004-ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருந்தது. `மதமாற்றத் தடைச்சட்டம்’, 'ஆடு - கோழி பலியிட தடை’ என ஆர்.எஸ்.எஸ். அரசாகவே மாறியிருந்த அ.தி.மு.க.வைத் தோற்கடிக்க ஓரணியில் திரண்டிருந்தன தமிழ்நாட்டின் முற்போக்கு சக்திகள்.

சென்னையில் ஏப்ரல் 26-ஆம் தேதியில் இருந்து, தி.மு.க. கூட்டணியை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தது பெரியார் திராவிடர் கழகம். ஏப்ரல் 30-ஆம் நாள் காலையில் வட சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுவிட்டு, வீடு திரும்பிய பத்ரி நாராயணன் மாலையில், வி.எம்.தெருவைச் சேர்ந்த பெரியாரிய தொண்டர் சு.பிரகாஷ்- சுமதி இணையரின் திருமண நிகழ்ச்சிக்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அடுத்த தெருவான ஸ்ரீராம் நகருக்குள் நுழைந்தபோது, ஆள் நடமாட்டம் இல்லாத அந்தப் பகுதியில் வைத்து, பத்ரி நாராயணனை வெட்டிப் படுகொலை செய்தது ஒரு கும்பல். அரசியல் பிரமுகர்கள் மட்டுமில்லாமல், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க பத்ரி நாராயணனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள வி.எம்.தெரு என்றால் பெரியார் சிலையும், அங்கு குடியிருக்கும் நூற்றுக்கணக்கான கருப்பு சட்டைக்காரர்களும்தான் இன்றைய அடையாளம். ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு வி.எம்.தெரு என்றாலே ரவுடியிசமும், சமூக விரோதச் செயல்களும்தான் எல்லோர் நினைவுக்கும் வரும். கல்வியில் ஈடுபாடில்லாமல், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தங்கள் வாழ்வை சீரழித்துக் கொண்டிருந்தனர். அவர்களை நல்வழிப்படுத்தி, அப்பகுதி மக்களுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஆனால், அப்பணியைச் செய்ததோ பத்ரி நாராயணன் என்ற ஓர் இயக்கம். ஆம், பத்ரி நாராயணன் தனிமனிதராக அல்ல, திராவிட இயக்க சீர்திருத்தச் சிந்தனையின் இயக்கமாகத்தான் இருந்தார்.

அந்த இயக்கத்தின் மூச்சு நின்றுவிட்டதே என்ற அதிர்ச்சிதான் ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்த காரணமாக இருந்தது. மூச்சு நிற்கும், இயக்கம் நிற்குமா? கசங்கிய லுங்கி, கருப்புச் சட்டை, தாடி மறைத்த முகம் என்ற பத்ரி நாராயணனின் அடையாளம் அவர் மறைந்து 21 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், வி.எம்.தெரு மக்களுக்கு இன்னமும் அப்படியே நினைவில் நிற்கிறது. மயிலாப்பூர் இடுகாட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏப்ரல் 30-ஆம் நாள், கருப்புச் சட்டை சகிதமாக இன்னமும் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கானோர் திரண்டு அவரை எண்ணி கண்ணீர் வடிக்கின்றனர். பாகுபாடு இல்லாமல் எல்லா கட்சியினரும் இப்போதும் அஞ்சலி செலுத்த வருகிறார்கள் என்பதும் கூடுதல் ஆச்சரியம்.

- ர.பிரகாசு

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.