எந்த விடுதலை இயக்கமும் மரணங்களை, தியாகங்களை, அர்ப்பணிப்புகளை, இழப்புகளை எதிர் கொள்ளாமல் தனது இலட்சியத்தை அடைய முடியாது. தமிழீழ விடுதலை இயக்கம் உலகில் உள்ள எந்த விடுதலை இயக்கத்திற்கு சளைத்ததல்ல என்று வரலாற்றில் நிரூபித்து இருந்தது. இருப்பினும் இன்று பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது.

முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு, கடந்து போன மூன்றாண்டுகளை மீள்பார்வை செய்தால் சிற்சில அசைவுகளைத் தவிர பெரும் மாற்றங்கள் ஏதும் மூன்று ஆண்டுகளில் நடைபெற வில்லை என்பது கண் கூடாக‌த் தெரிகின்றது.

இந்தியா, சீனா, பாக்கிஸ்தான் அரசுகளின் உதவியுடன் சிங்கள பாசிச அரசு ஈழத்தின் மீது ஈவு இரக்கமற்ற போரை நடத்தி முடித்தது. விடுதலைப் புலிகளின் தலைமையையும், அவர்களின் இராணுவ, சமூக, அரசியல் கட்டமைப்புகளையும் சிதைத்து அழித்து, ஈழத்தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்து, பல இலட்சம் மக்களை முள்வேலி முகாம்களில் சிறைபிடித்து சித்ரவதை செய்து இரத்த வெள்ளத்தில் ஈழம் மூழ்கடிக்கப்பட்டது.

இந்தப் போரில் உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களும், அனாதையாக்கப்பட்ட பல்லாயிரம் குழந்தைகளும், விதவையாக்கப்பட்ட ஒரு லட்சம் பெண்களும் தொடர்ந்து படும் அவலங்களும், துயர்களும் ஈரமுள்ளவர்களின் நெஞ்சு குலைகளைப் பதற வைப்பதாக இன்றும் உள்ளது.

சிறைப்பிடிக்கப்பட்டு, சித்ரவதை முகாமிகளில் உள்ள போர்க்கைதிகள் கதி என்ன ஆயிற்று? அவர்களில் எத்துணை பேர் காணாமல் போனவர்கள் பட்டியலுக்குள் கொண்டு சேர்க்கப்பட்டனர்? சர்வதேசச் சட்டங்களும், மனித உரிமைகளும் போர்க்கைதிகள் விசயத்தில் கடைபிடிக்கப்பட்டதா என்று எவரும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை.

சனநாக, கம்யூனிச மூகமுடிகள் அணிந்த இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா என அனைத்து அரசுகளும் தங்களுக்குள்ள முரண்பாடுகளை தள்ளி வைத்து விட்டு ஐ.நா. மனித உரிமை சபையில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு, மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை முதலில் முறியடித்தன. சென்ற ஆண்டு, அமெரிக்கா- சீனா முரண்பாட்டினால் மீண்டும் ஐ.நா. மனித உரிமை சபையில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஏற்கப்பட்டுள்ளது.

தற்பொழுது, ராசபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க எழுந்த தமிழக மக்களின் போராட்டங்கள் படிப்படியாக வடிந்து வருகின்றது.

மூவர் தூக்கு தண்டணை ரத்து செய்ய எழுந்த எழுச்சியும் தற்காலிக ஒத்திவைப்பிற்குப் பின் தணிந்து உள்ளது.

மூன்றாண்டுகள் முடிந்த பின்பும் எந்த சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் முள்ளிவாய்க்காலுக்குள் சென்று உண்மை நிலையை அறிய முடியவில்லை என்பது யதார்த்த உண்மை. முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது என்று முழுமையான தகவல்கள் இவ்வளவு தகவல் தொடர்பு வசதிகள் நிறைந்த உலகில் வெளிவராமல் ஆழமாய்ப் புதைக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பல காரணங்கள் இருப்பினும், அடிப்படையான முதன்மை காரணம் தமிழீழப் போராட்டத்தின் நட்பு சக்திகளுக்கு இடையிலான ஒற்றுமை இல்லாதது மட்டுமே!

தமிழீழ விடுதலை இயக்கம் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள், விடுதலைப்புலி எதிர்ப்பாளர்கள் என்று ஒற்றை அடையாளமாக சுருங்கி இணைய தளங்களிலும் நாளேடுகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஒருவரை ஒருவர் கடித்துக் குதறாத குறையாக‌ தடித்த வார்த்தைகளால் குதறிக் கொண்டு இருக்கிறார்கள். உலக முழுவதும் விடுதலைக்காகப் போராடும் எல்லா இயக்கங்களுக்கும் நட்பு சக்திகள் என்ற பரந்துபட்ட வளையம் இருந்தன; இருக்கின்றன. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மட்டும்தான் அத்தகைய பரந்துபட்ட நட்பு முகாம், வளையம் இல்லை என்பது யதார்த்தம். அப்படி இல்லாது போனதற்கான‌ புறநிலை, அகநிலைக் காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
 
பரந்துப்பட்ட பார்வையில் ஈழ விடுதலையில் இரண்டு முகாம்கள் உள்ளன. மனிதகுல விடுதலைக்கான சனநாயகத்திற்கான, மனித உரிமைகளுக்கான, சமத்துவத்திற்கான வரலாற்று சக்கரங்களை முன்னோக்கி உந்தித் தள்ளும் முகாம். இவற்றையெல்லாம் வெறுமனே வார்த்தை ஜாலங்களாக்கிக் கொண்டு நிலவுகின்ற ஒடுக்குமுறையைத் தக்க வைக்க அநீதியான போர்களை நடத்தும் எதிர் முகாம்.

*விடுதலைப் புலிகள்

*விடுதலைப் புலிகளை எந்த விமர்சனமுமின்றி முழுமையாக ஆதரிக்கும் சக்திகள், பல்வகைப்பட்ட தமிழ்த் தேசிய இயக்கங்கள், குழுக்கள், தனிநபர்கள்.

*குறைந்த அளவிற்கு புலிகளை விமர்சனம் செய்யும் சக்திகள், இயக்கங்கள், குழுக்கள், தனிநபர்கள்

*கடுமையான விமர்சனத்துடன் புலிகளை, ஈழவிடுதலையை ஆதரிக்கும் சக்திகள், குழுக்கள், தனிநபர்கள்

*புலிகளைப் புறந்தள்ளி விட்டு, ஈழவிடுதலையை ஆதரிக்கும், முன்னெடுக்கும் சக்திகள், குழுக்கள்

*மனித உரிமைகள், குடியுரிமை ஆர்வலர்கள், இயக்கங்கள்

இந்த சக்திகளின் பின்னுள்ள பரந்துபட்ட, பல்வகையான, பின்புலங்களை, அணிச்சேர்கைகளைக் கொண்ட மக்கள் திரள்கள்.

தமிழக, இந்திய, இலங்கை உலக அளவில் உள்ள இவைகளின் அணிச்சேர்க்கைதான் ஈழ விடுதலைக்கான நட்பு முகாம்.


*பாசிச சிங்கள அரசும், சிங்கள இனவெறி குழுக்கள்.

*இதன் பிரதான பங்காளியான இந்திய அரசும், ஆளும் கட்சிகளும்.

*சீன, பாக்கிஸ்தான், அமெரிக்க, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட உலகின் பல்வேறு வல்லரசுகளும், அதன் அடிவருடியான அரசுகளும்.,

*இவைகள் பின்னுள்ள ஆளும் கட்சிகள், அதிகார வர்க்கம், அதன் பின்னுள்ள மக்கள் கூட்டம்

*ஈழவிடுதலைக்கும் நட்பாய் இருப்பதாக நடித்துக்கொண்டு உண்மையில் துரோகம் செய்யும் அரசியல் கட்சிகள், சக்திகள்.

*தனிநபர் வன்முறையை ஊதிப்பெருக்கி அரசு பயங்கரவாதத்தை அதன் கீழாக தணிந்த குரலில் பேசும் மனித உரிமை ஆர்வலர்கள்.

இவைகள் தமிழக, இந்திய, உலக அளவில் உள்ள இவைகளின் அணிசேர்க்கைத்தான் ஈழவிடுதலைக்கான பகை முகாம்.

இன்றைய உலகமாயமாக்கப்பட்ட சர்வதேசிய அரசியல்- பொருளியல் சூழலில் பல்வகை வர்க்கங்களாக, குழுக்களாக மேலும் மேலும் பகுக்கப்பட்டு இருக்கும் மக்கள் திரள்களின் பிளவுகளை உள்வாங்கி புரிந்து கொண்டால்தான், அவைகள் இருந்தலுக்கான நியாயங்களை உணர்ந்தால்தான், ஈழவிடுதலையின் நட்பு, பகை முகாம்களின் புறவயப்பட்ட இருத்தல்களைப் புரிந்து கொள்ள முடியும். அப்படி புரிந்து கொண்டால்தான் நாம் அடுத்த நகர்விற்கு செல்ல முடியும்

இன்றும் ஈழவிடுதலைக்கான பகை முகாமைச் சேர்ந்தவர்கள் ஒன்றுபட்டுதான் காய்களை நகர்த்தி வருகின்றனர். ஆனால் நட்பு முகாமில் உள்ளவர்கள் பற்றி நாம் சொல்லத் தேவையில்லை.

தலைவர் வருகிறார்.. தலைவர் வருகிறார்.... என்ற அல்லோலியா பஜனை அல்ல!! துரோகி கருணாநிதி 'ஈழ ஆதரவு' என்ற முழக்கத்தில், மக்களின் மறதி ஆற்றில் படகு ஒட்டப் பார்ப்பதும் அல்ல!

விடுதலைப் புலிகளின், ஈழப்போராட்டத்தின் வளமான செழுமையான அனுபவங்களை விமர்சன- சுயவிமர்சன ரீதியாக உட்கிரகித்துக் கொண்ட புதிய பரந்துபட்ட மக்கள்திரளின் ஐக்கிய முன்னணியும், அதனை வழிநடத்தும் நேர்மையான, புதிய தலைமையும், அமைப்பும் தான் இன்றைய தேவை!

Comments

9 comments

9
ram
நேர்மையான சுய விமர்சனம் தேவை என்று தலைப்பு. ஆனால் எந்த சுயவிமர்சனத்துக்கும் தான் தயாரில்லை என்பது கட்டுரை. நட்பு சக்திகள் எவை எதிரிகள் யார் என்று தெரிவு செய்வதில் தவறு நடந்தது என்று ஒரு இடத்தில் அங்கலாய்ப்பு. அதே தவற்றை நாங்கள் தொடர்ந்தும் செய்யப்போகிறோம் என்பதை அறிவிக்கும் விதமான பின்வரும் சொற்றொடர். "துரோகி கருணாநிதி" என்று எழுதும் இந்த நடராசனுக்கு ஒரு கேள்வி. இந்த ஒட்டுமொத்த கட்டுரையில் ராஜபக்ஷேவுக்கு கூட எந்த அடைமொழியும் இல்லை. வேறு எந்த தலைவருக்கும் பாராட்டும் இல்லை. பழியும் இல்லை. கருணாநிதிக்கு மட்டும் மறக்காமல் "துரோகி" பட்டம். உங்களைப்போன்றவர்களின் கருணநிதி எதிர்ப்பு உண்மையிலேயே புல்லரிக்க வைக்கிறது. இப்படியே "துரோகி"களை தொடர்ந்து கண்டுபிடியுங்கள். உங்கள் நோக்கம் ஈழ விடுதலைக்கு ஆதரவை வளர்ப்பதல்ல. அதைவைத்து கருணாநிதிக்கு உங்களைப்போன்ற அரசியல் அரைவேக்காடுகள் கொடுக்க நினைக்கும் "தமிழின துரோகி" பட்டத்தை தொட்ர்ந்து பிரச்சாரப்படுத்துவது. உங்களைப்போன்ற விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தான் அந்த அமைப்பை முள்ளிவாய்க்காலில் முடித்ததற்கும், ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களையும் அரசியல் முட்டுச்சந்தில் கொண்டுபோய் நிறுத்தியிருப்பதற்கும் முக்கிய காரணம். இத்தனைக்கும் நீங்கள் திருந்தவில்லை திருந்த மாட்டீர்கள் என்பதற்கு இந்த கட்டுரையே சிறந்த உதாரணம். நல்லது உங்களைப்போன்ற "நட்பு சக்திகள்" இருக்கும் வரை, இலங்கை தமிழர்களுக்கு தனியான எதிரிகள் தேவையில்லை. தொடரட்டும் உங்கள் தொண்டு. அழிப்பதற்கு இன்னமுல் இலங்கையில் தமிழர்கள் பாக்கியிருக்கிறார்கள்.
கி.நடராசன்
நண்பரே! முள்ளிவாய்கால் படுகொலைகளுக்கு இந்திய அரசிற்கு எந்த அளவிற்கு பங்கு உள்ளதோ அதற்கு குறைவில்லாத பங்கு அப்பொழுது தமிழக ஆட்சி கட்டிலில் இருந்த முதல்வர் கருணாநிதிக்கும் அவரை சுற்றி இருந்த கும்பல்களுக்கும் உண்டு அந்த கடைசி நிமிடம் வரை விடுதலை புலிகள் இந்திய அரசையும், இங்குள்ள திமுக உள்ளிட்ட சில ஒட்டு கட்சி பிரமுகர்களையும் நம்பினாங்க. அதுதான் அவர்களின் பிரதான தவறு. அதற்கு வரலாற்றில் மிகப் பெரிய இழப்பை அவர்கள் சந்தித்து விட்டார்கள். இவை தெளிவாக உண்மைகள். ஈழவிடுதலைக்கான பகை முகாமில் பிரதான பங்காளியான இந்திய அரசும், ஆளும் கட்சிகளும் என்பதில் திமுக, அதிமுக கட்சிகளையும் சேர்த்துதான். இன்னமும் சொல்லப் போனால் விடுதலைபுலி ஆதரவாளர்கள் இப்பொழுதும் இந்திய அரசை, இங்குள்ள ஆளும் கட்சிகளை நம்புவதை அம்பலபடுத்துவதும்தான் இந்த கட்டுரையின் நோக்கம் ஆகும்.
கி.நடராசன்
நண்பரே! முள்ளிவாய்கால் படுகொலைக்கும் அப்பொழுது ஆட்சியில் இருந்த கருணாநிதியை கூறாமல் யாரை சொல்வது.
ram
என்னை நண்பர் என்று அழைத்து உங்கள் பதிலை துவங்கியிருக்கிறீர்கள். அதுவரை நன்றி. “துரோகி” கருணாநிதியின் ஆதரவாளனான என்னையும் “துரோகி” என்று துவங்கி அழைக்காமல் விட்டதற்கு கூடுதல் நன்றி. (திராவிட இயக்க ஆதரவாளனான நான் திமுக ஆதரவாளன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு எந்த கூச்சமும் இல்லை).

ஆனால் “தற்கொலை தமிழ்தேசியர்களுக்கே” உரிய இலக்கணப்படி, என் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் தவிர்த்திருக்கிறீர்கள் அல்லது பதில் சொல்வதாக போக்கு காட்டியிருக்கிறீர்கள். ஆனால் உண்மையில் பதில் சொல்லவில்லை.

என் கேள்வி என்ன?

முள்ளிவாய்க்காலில் முடிந்த ஈழத்தமிழரின் ஆயுத போராட்டம் குறித்து சுயபரிசோதனை தேவை என்று தலைப்பில் துவங்கி நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரையில் எனக்கு பல மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் அதையெல்லம் எழுதப்புகுந்தால் அது தனிக்கட்டுரையாகிவிடும் என்பதால் அதற்குள் செல்லாமல் நான் சுட்டிக்காட்டிய ஒரே ஒரு விமர்சனம் கருணாநிதியை மட்டும் “துரோகி” என்கிற அடைமொழியுடன் இந்த கட்டுரையில் எழுதும் உங்களின் நோக்கம் என்ன?

ஈழத்தமிழர் விவகாரத்தில் சுயவிமர்சனம் தேவை என்கிறீர்கள். ஆனால் கருணாநிதிக்கு மட்டும் “துரோகி” பட்டத்தை தொடர்ந்தும் சூட்டுகிறீர்களே அது தான் சுயவிமர்சனமா?

இது தான் என் கேள்வி.

அதற்கு உங்களின் முதல் பதில்

“நண்பரே! முள்ளிவாய்கால் படுகொலைக்கும் அப்பொழுது ஆட்சியில் இருந்த கருணாநிதியை கூறாமல் யாரை சொல்வது?”

திடீரென உங்களின் இந்த ஒரு வரி பதிலில் இருக்கும் அரசியல் அரைவேக்காட்டுத்தனம் உங்களுக்கே உறைத்ததன் விளைவு இரண்டாவதாக எழுதிய பதிலில் “ஆளும் கட்சிகளும் என்பதில் திமுக, அதிமுக கட்சிகளையும் சேர்த்துதான்” சொல்வதாக மழுப்பியிருக்கிறீர்கள். ஆனால் உங்களின் கட்டுரையில் அதிமுக என்ற சொல்லோ அல்லது அதன் தலைவி (உங்களின் சக இயக்கங்களின் வார்த்தைகளில் சொல்வதானால் ஈழத்தாய்) ஜெயலலிதா என்கிற பெயரோ எங்கேயும் இடம்பெறவில்லை. ஆனால் கருணாநிதியை மட்டும் மறக்காமல் குறிப்பிட்டு அவருக்கு பெயருக்கு முன்னர் “துரோகி” பட்டத்தை சூட்டுவதில் நீங்கள் உங்களின் கருணாநிதி வெறுப்பை வழக்கம் போல கக்கியிருக்கிறீர்கள்.

அதைத்தான் நான் கேள்விக்குள்ளாக்கினேன். அதற்கான உங்களின் பதிலில் இப்படி எழுதியிருக்கிறீர்கள்.

“முள்ளிவாய்கால் படுகொலைகளுக்கு இந்திய அரசிற்கு எந்த அளவிற்கு பங்கு உள்ளதோ அதற்கு குறைவில்லாத பங்கு அப்பொழுது தமிழக ஆட்சி கட்டிலில் இருந்த முதல்வர் கருணாநிதிக்கும் அவரை சுற்றி இருந்த கும்பல்களுக்கும் உண்டு”

இதன் மூலம் முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் கருணாநிதிக்கு பெரும்பங்குண்டு என்பது உங்கள் வாதம்.

இதில் முள்ளிவாய்க்கால் படுகொலை என்கிற ஒற்றைச்சொல்லில் இரண்டு வகையான படுகொலைகள் புதைந்திருக்கின்றன.

ஒன்று விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமை, அவரது குடும்பம் உள்ளிட்ட அந்த அமைப்பின் ஆயுததாரிகள் கொல்லப்பட்டது.

இரண்டாவது விடுதலைப்புலிகள் அமைப்பை சேராத அப்பாவி பொதுமக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டது.

இதில் விடுதலைப்புலிகளின் தலைமையும் அவர் தம் குடும்பமும் மற்ற உறுப்பினர்களும் கொல்லப்பட்டதற்கு கருணாநிதி எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது. காரணம் விடுதலைப்புலிகள் அமைப்போ அதன் தலைமையோ கருணாநிதியை கேட்டுக்கொண்டு தங்களின் ஆயுதப்போரை நடத்தவில்லை. இன்னும் சரியாக சொல்வதானால், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு நாளும் திமுக தலைவர் மு கருணாநிதியை நம்பியது கிடயாது. அதுமட்டுமல்ல பல்வேறு பேட்டிகளிலும் செயல்களின் மூலமும் அவர் தனது கருணாநிதி எதிர்ப்பை, திமுக வெறுப்பை தொடர்ந்து பதிவு செய்திருக்கிறார். அப்படியிருக்கும் போது இறுதிப்போரின்போது அவரும், அவரது குடும்பமும் இயக்கத்தின் ஆயுத போராளிகளும் கொல்லப்பட்டதற்கு முழு பொறுப்பும் வெலுப்பிள்ளை பிரபாகரனையே சாருமே தவிர அவர்கள் ஒருநாளும் நம்பாத கருணாநிதியை சாராது.

அதைவிட முக்கியமாக “துரோகம்” என்கிற தமிழ் வார்த்தைக்கு பொருள் என்ன? எனக்குத்தெரிந்தவரை, நம்பியவரை கைவிடுவது தான் துரோகம். விடுதலைப்புலிகள் அமைப்போ அதன் தலைமையோ அல்லது அவர்களின் தமிழ்நாட்டு ஒட்டுமொத்த குத்தகைதாரர்களான நெடுமாறனோ வைகோவோ திமுகவையோ அதன் தலைமையையோ நம்பியிருந்தால் அல்லவா கருணாநிதி துரோகம் செய்ததாக சொல்ல முடியும். கருணாநிதியை திட்டுவதே ஒற்றை அரசியல் கொள்கையாக கொண்டவர்கள், தங்களின் நெருக்கடியின் போது தாங்கள் விரும்பியபடி கருணாநிதி உதவ வில்லை என்பது எப்படி துரோகம் என்கிற சொல்லுக்குள் வரும்? தமிழாய்ந்த தமிழறிஞர்கள் இதை விளக்கினால் ஏற்றுக்கொள்கிறேன்.

அடுத்த்தாக விடுதலைப்புலிகள் அமைப்பின் ஒட்டுமொத்த அழிவை தடுப்பதற்கு பிரபாகரனுக்கு இரண்டு சந்தர்ப்பங்கள் கிடைத்தன. சரியாக சொல்வதானால் அவருக்கு அளிக்கப்பட்டன.

இறுதிப்போரில் அதிகபட்ச உயிர்ச்சேதம் ஏற்படாத 2008 ஆம் ஆண்டின் இறுதி மற்றும் 2009 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நோர்வே உதவியுடன் ரகசிய முன்முயற்சி ஒன்று எடுக்கப்பட்டது. அதன்படி விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தால் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகிய இருவரின் மீது மட்டும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மற்றவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்கிற இந்த திட்டத்திற்கு பிரபாகரன் இணங்கவில்லை. எனவே அது நின்றுபோனது.

அதன் அடுத்த கட்டமாக அன்றைய இந்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் மற்றும் அன்றைய தமிழக முதல்வராக இருந்த மு கருணாநிதி உள்ளிட்டவர்களின் மறைமுக ஒப்புதுலுடன் புலிகள் “ஆயுதங்களை களைவதற்கான” இரண்டாவது முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அதையும் விடுதலைப்புலிகள் ஏற்கக்கூடாது என்று பழ நெடுமாறனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா பாண்டியன் மற்றும் சி மகேந்திரனும், வைகோவும் பெரும் அழுத்தம் கொடுத்தனர்.
அவர்கள் அதற்கு சொன்ன காரணம், 2009 நடக்க இருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரஸ் தோற்று பாரதிய ஜனதா அல்லது மூன்றாவது அணி ஒன்று தில்லியில் ஆட்சியை பிடிக்கும்; அப்படி நடந்தால் இந்திய அரசின் அணுகுமுறையில் மாற்றம் இருக்கும்; அதுவரை தம் கட்டி போராடுங்கள் என்பது இவர்கள் புலிகளுக்கு சொன்ன யோசனை.

(இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்பீர்களானால், இவர்கள் விடுதலைப்புலிகள் தலைவர்களிடம், குறிப்பாக நடேசன் மற்றும் புலித்தேவனிடம், பேசிய உரையாடல்களின் ஒலிப்பதிவுகள் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் இருந்தன. அவற்றை காதால் கேட்டவர்கள் இன்னமும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அந்த ஒலிநாடாக்கள் ஏதோ ஒரு நாள் கண்டிப்பாக வெளியில் வரும் என்றே நான் நம்புகிறேன்)

நெடுமாறன், மகேந்திரன் மற்றும் வைகோ போன்றவர்களின் யோசனையை பிரபாகரன் நம்பினாரா இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் அவர் கடைசிவரை போரை நடத்தினார் என்பது மட்டும் உண்மை. அதன் விளைவாக தன் உயிரும், தமது குடும்ப உறுப்பினர்களின் உயிரும், தமது இயக்க ஆயுத தாரிகளின் உயிரும் போவதற்கான முதன்மையான பொறுப்பு பிரபாகரனுக்கே சேரும். இதில் மற்றவர்களை பொறுப்பாக்க முடியாது.

ஒருவேளை மற்றவர்களை பொறுப்பேற்கச்செய்ய வேண்டும் என்று நீங்கள் பெரிதும் விரும்பினார் பழ நெடுமாறன், சி மகேந்திரன் மற்றும் வைகோ ஆகிய மூவரையும் தான் நீங்கள் பொறுப்பேற்க வைக்கமுடியும். அவர்கள் தான் இந்திய நாடாளுமன்ற தேர்தலை காட்டி புலிகளை தொடர்ந்து போரை முன்னெடுக்கச்சொன்னார்கள். மற்றபடி இதற்கும் கருணாநிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இரண்டாவதாக விடுதலைப்புலிகள் அமைப்பை சாராத பொதுமக்கள் கொத்துக்கொத்தாக சாக யார் காரணம்?

இந்த கேள்விக்கு கொஞ்சம் உணர்சிவசப்படாமல் நம் சமகாலத்தில் நடந்த சம்பவங்களை பொறுமையாக மீண்டும் ஒருமுறை வரிசைப்படுத்திப் பார்த்தால் ஒரு கசப்பான உண்மை நம்மை உறுத்தும். பெரும்பாலனவர்களை கொன்றது இலங்கை அரசின் குண்டுகள் தான். அதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன.

ஆனால் இலங்கை அரசின் குண்டுகளுக்கு அவர்களை இலக்காக நிறுத்தியது யார்? அதுவும் அவர்களின் சொந்த விருப்பத்தை மீறி அப்பாவி பொதுமக்களை மனித கேடயமாக நிறுத்தியது யார்? விடுதலைப்புலிகள் அமைப்பா அல்லது “துரோகி” கருணாநிதியா?.
அந்த பொதுமக்களே விரும்பி விடுதலைப்புலிகளுடன் சென்றார்கள் என்கிற பொய்யை இன்னமும் எத்தனை நாளைக்கு நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கப்போகிறீர்கள்?

இலங்கைப்போரின் இறுதிகட்டத்தில் நாற்பதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐநா மன்ற அறிக்கை கூறுவதாக உங்களைப்போன்றவர்கள் மேடைக்கு மேடை பேசுகிறீர்களே, அந்த ஐநா மன்ற அறிக்கையின் முழுமையும் நீங்கள் படித்திருக்கிறீர்களா? அதில் அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பும் அதன் தலைமையும்தான் பொதுமக்களை அவர்களின் விருப்பத்துக்கு மாறாக பிடித்து வைத்து மனித கேடயமாக பயன்படுத்தினார்கள் என்று கூறுவது மட்டுமல்ல, அவர்களின் குழந்தைகளை பலவந்தமாக பிடித்துச்சென்று களப்பளியாக்கினார்கள் என்றும் விவரமாக பட்டியலிட்டிருக்கிறார்கள்.
இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச அறிக்கைகள் என்று தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ்தேசிய சக்திகள் மேடைக்கு மேடை உதாரணமாக காட்டும் அறிக்கைகள் அனைத்துமே விடுதலைப்புலிகள் அமைப்பு தான் அப்பாவி பொதுமக்களை பலவந்தப்படுத்தி மனித கேடயமாக பயன்படுத்தினார்கள் என்று விலாவாரியாக பட்டியலிடுகின்றன.
உங்களைப்போன்றவர்கள் அந்த அறிக்கையில் இலங்கை அரசுக்கு எதிரான பகுதிகளை மட்டும் மொழிபெயர்த்து தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டு போகிறீர்களே தவிர, விடுதலைப்புலிகள் அமைப்பு குறித்த பகுதிகளை வசதியாக மறந்துவிடுகிறீர்கள். உங்களுக்கு தேவையானால் அந்த அறிக்கைகளையும், அதில் இருக்கும் புலிகளின் அட்டூழியங்கள் மற்றும் அதற்கான ஆதாரங்களையும் நான் தனியாக அனுப்பிவைக்கிறேன். தேவையா என்பதை மறுமொழியில் சொல்லுங்கள்
இத்தனைக்குப்பிறகும் அந்த பொதுமக்கள் அவர்களாக விரும்பிதான் “போர்க்களத்தில் நின்று களப்பலியானார்கள்” என்கிற பொய்யை நீங்கள் முன்வைத்தீர்களானால் என்னைப்போன்றவர்கள் எங்களின் இயல்புக்கு மாறாக ஒரு குரூரமான எதிர்கேள்வியை எழுப்ப வேண்டிவரும்.
அவ்வளவு தூரம் “கொள்கைப்பிடிப்பும் சுயவிருப்புமாக”த்தான் அந்த பொதுமக்கள் போர்க்களத்துக்கு போனார்கள் என்பது உண்மையானால், மே 17 ஆம் தேதிக்குப்பிறகு ஒரே நாளில் இடுப்பளவு தண்ணீரில் உயிர்போனால் கூட பரவாயில்லை என்று இலங்கை ராணுவத்தை நோக்கி ஓடிவந்தார்களே அந்த மூன்று லட்சம் பொதுமக்கள். அவர்கள் ஏன் தங்களை கொன்ற இலங்கை ராணுவத்தை நோக்கி வந்தார்கள்? அப்படி வந்தவர்கள் என்ன சொன்னார்கள் என்பதும் தங்களின் கடைசி நாட்கள் குறித்து இன்னமும் அவர்கள் என்ன சொல்லிவருகிறாகள் என்பதும் உங்களுக்கு தெரியுமா?
எனவே, நண்பரே, முள்ளிவாய்க்கால் மனித பேரவலம் என்று நீங்கள் குறிப்பிடும் ஆயிரக்கணக்கான மனித உயிரிழப்புக்கும் அதையொட்டி எழுந்த மனிதப்பேரவலத்திற்கும் முதன்மை பொறுப்பு நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விடுதலைப்புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் தான் என்பதே எனது கருத்து. எனவே சுயவிமர்சனம் என்று வந்தால் அங்கிருந்து தான் துவங்கவேண்டும். அதற்கான பொறுப்பேற்றல் என்றாலும் அங்கிருந்து தான் துவங்கவேண்டும்.
அதைவிட்டுவிட்டு திமுகவுக்கும் அதன் தலைமைக்கும் “துரோகி” பட்டம் கொடுப்பதன் மூலம் எல்லா பழியையும் தூக்கி கருணாநிதி மீது போட்டுவிட்டு உங்களைப்போன்றவர்கள் நைசாக தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைப்பது எப்படியிருக்கிறது என்றால் தான் திருடிய இடத்தில் மாட்டிக்கொண்டவன் தப்பித்து ஓடும்போது “அதோ திருடன் போறான் புடிங்க புடிங்க” என்று தனக்கு முன்னாடி கை காட்டிக்கொண்டு ஓடுவதைப்போல இருக்கிறதே தவிர உண்மையான சுய விமர்சனமாக இருக்காது.
கடைசியாக ஒரு வேண்டுகோள்.
சுய விமர்சனம் எப்படி இருக்கவேண்டும்?
சுயவிமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஒரு கட்டுரையை உங்களுக்கும் உங்கள் மூலம் உங்களைப்போன்ற “தற்கொலை தமிழ்தேசியவாதிகளுக்கும்” அனுப்பலாம் என்று நினைக்கிறேன். பிபிசியின் கொழும்பு செய்தியாளராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பிரான்ஸிஸ் ஹாரிசன் என்பவர் இலங்கை போரை மேற்குலக ஊடகவியலாளர்கள் கைவிட்டதைப்பற்றி ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். அதற்கான இணைப்பை கீழே கொடுத்திருக்கிறேன். படியுங்கள். அதில் தன்னை ஒத்த மேற்குலக ஊடகவியலாளர்களின் இரட்டை அளவுகோலை அவர் விமர்சித்திருக்கும் விதத்தை பாருங்கள். அதற்கு பெயர் தான் சுயவிமர்சனம். அதில் உங்களுக்கு பயனுள்ள வேறு பல தகவல்களும் இருக்கின்றன. விடுதலைப்புலிகள் அமைப்பின் அதிகபட்ச நம்பிக்கை பெற்றவர் இவர் என்பதும், அதனாலேயே, போரின் கடைசி கட்டத்தில் நடேசனும் புலித்தேவனும் சரணடைவது குறித்து இவரிடம் பேசினார்கள் என்பதும் உங்களுக்கு தெரியவேண்டிய கூடுதல் தகவல்கள்.
தயவு செய்து கட்டுரையை படியுங்கள்.
இணைப்பு இதோ

http://www.journalism.co.uk/news-commentary/frances-harrison-sri-lanka-journalists-failed-to-tell-the-story-of-war-crimes/s6/a549285/
நன்றி,
ராம்
கி.நடராசன்
இந்த கட்டுரை எழுதப்பட்டதன் அடிப்படை ஈழத்தின் எதிரிகள் தங்கள் வேறுபாடுகளுக்கு இடையில் ஒற்றுமையாக இருந்து ஈழ விடுதலை முன் கொண்டு சென்ற விடுதலை புலிகளை, அப்பாவி ஈழ மக்களை கொன்று விட்டு, அதை சர்வ தேச சமூகத்திடம் இருந்து மூடி மறைக்கிறார்கள் என்பதும்; ஈழத்தின் நண்பர்களிடம் அத்தகைய ஒற்றுமை ( எவ்வளவு முரண்கள் இருப்பினும்) இல்லை- அதை வளர்த்தெடுக்கப் படவேண்டும்- தங்களுக்கு இடையிலான முரண்களை நட்புரீதியில் தீர்த்துகொள்ள வேண்டும் என்ற ஒன்று மட்டும்தான். மேலும், நான் மார்க்சிய-லெனினிய ஆதரவாளன். மானுடம் அனைத்தும் சுரண்டல்களிடம் இருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பவன். ஒடுக்கப்பட்ட மக்களின், இனங்களின், தேசங்களின், நாடுகளின், அவைகளின் போராட்டங்களின் ஆதரவாளன். இந்த அடிப்படையில் கருணாநிதியை, திமுகவை இந்திய ஆளும்வர்க்கங்களின் பகுதியாக பார்க்கிறேன். அது எப்படி என்று இங்கு விவாதிப்பது சாத்தியம் இல்லை. நீங்கள் விடுதலை புலிகளை குற்றம் சாட்டுகிறீர்கள். நான் நட்புரீதியில் விமர்சனம் செய்கிறேன். முள்ளிவாய்கால் படுகொலைகளைப் பற்றி உங்கள் பல கேள்விகளை, குற்றசாட்டுகளை . பின்னேட்டத்தில் விளக்குவது சாத்தியமா என எனக்கு தெரியவில்லை.
ram
நண்பர் நடராஜனுக்கு,
உங்களின் மூன்றாவது பதில் என்னை திக்குமுக்காடச்செய்துவிட்டது. எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. அதனாலேயே சிறிது தாமதமாக பதில் எழுதுகிறேன்.
உங்கள் கட்டுரை என்னை கோபப்படவைத்ததனாலேயே நான் எதிர்வினையாற்றினேன். என் எதிர்வினைக்கு நீங்கள் கொடுத்த பதில்கள் என்னை கோபப்படவைக்கவில்லை. மாறாக வேதனைப்படவைத்திருக்கின்றன. உண்மையாகவே.
காரணத்தை விளக்குகிறேன் கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்.
என்னுடைய முதல் கேள்வி எளிமையானது. நேரடியானது. முள்ளிவாய்க்கால் விவகாரத்தில் நேர்மையான சுயவிமர்சனம் தேவை என்கிற உங்கள் கட்டுரையில் கருணாநிதியை மட்டும் ஏன் துரோகி என்கிற அடைமொழியிட்டு அழைத்தீர்கள் என்பது தான் என் ஒரே கேள்வி. அதற்கு நீங்கள் அளித்த விளக்கத்தில் ஆளும் கட்சிகள் என்கிற வார்த்தைக்குள் அதிமுகவை ஒளித்து வைத்திருப்பதாக ஒரு புதிர் போட்டிருந்தீர்கள். அந்த புதிர் புரியவில்லை என்று நான் கொடுத்த விரிவான பதிலுக்கு நீங்கள் அளித்திருக்கும் மூன்றாவது பதிலில் மார்க்சையும் லெனினையும் துணைக்கு அழைக்கிறீர்கள்.
எனக்கு ஒரே பயமாக இருக்கிறது. உங்கள் ஒருவரை சமாளிக்கவே என்னால் முடியாதபோது உங்களைவிட பெரிய ஆட்கள் இரண்டு பேரோடு நான் எப்படி மோதமுடியும்? அதுவும் “மானுடம் அனைத்தும் சுரண்டல்களிடம் இருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பவன். ஒடுக்கப்பட்ட மக்களின், இனங்களின், தேசங்களின், நாடுகளின், அவைகளின் போராட்டங்களின் ஆதரவாளன்” என்கிற உங்களின் நீண்ட சுய பிரகடனத்துக்குப் பிறகு நான் பேச என்ன இருக்கிறது? பேசத்தான் முடியுமா?
ஆனாலும் கருணாநிதி எப்படி துரோகியானார் என்கிற என் கேள்விக்குத்தான் பதில் கிடைக்கவில்லை. பரவாயில்லை. யாராவது எனக்கேத்த ஆள் கிடைக்காமலா போய்விடுவார்கள் அவர்களிடம் கேட்டுக்கறேன். நீங்கபாட்டுக்கு உலக மானுட விடுதலைக்கான உங்களின் பணியை தொடருங்கள்.
ஒரே ஒரு வேண்டுகோள். அடுத்தமுறை கருணாநிதி குறித்து எழுத நேர்ந்தால் துரோகி போன்ற அடைமொழிகளை தவிர்த்துவிடுங்கள். இல்லாவிட்டால் என்னை மாதிரி திராவிட அரைவேக்காடு ஏதாவது கேள்வி கேட்கும். அதுக்கு நீங்க பதில் சொல்லி, அதன்மூலம் உலக மானுட விடுதலைக்கான உங்களின் பணிகள் தடைபடலாம். அப்படியெல்லாம் நடக்க க்கூடாதுங்கற நல்லெண்ணத்துல தான் இப்படி ஒரு வேண்டுகோள். தப்பாம கடைபிடிப்பீங்கண்ணு நினைக்கிறேன்,
நட்புடன்
ராம்
கி.நடராசன்
நண்பர் ராமிற்கு! இந்த கட்டுரையின் நோக்கம் திசை மாறுவதாகவே தெரிகிறது. நீங்கள் திமுக-காரர் அல்லது திராவிட அரைவேக்காடு . நான் மார்க்சிய-லெனினிய ஆதரவாளன் அல்லது உலக மானுட விடுதலைக்காரன். நீங்கள் விரிவான கேள்விகள் எழுப்பியது என்னை நோக்கி அல்ல. விடுதலைப்புலிகள் மற்றும்“தற்கொலை ற்தமிழ்தேசியர்கள்" ஆகியோரை நோக்கிய அதற்கு அவர்கள்தான் பதில்கள் தர வேண்டும். அவர்கள் வாயாக நான் செயல்பட முடியாது. என்னை பொறுத்த வரையில் நான் கூறுபவைகளுக்கு, எழுதுபவைகளுக்கு குறைந்த பட்ச நேர்மையோடு, மனசாட்சியோடு இருக்க வேண்டும் என்று நினைப்பவன். எனது கடந்த காலச் செயல்பாடுகளெ சாட்சியாக உள்ளது என்ரற் நினைகிறேன். அப்படி முடியாத பொழுது மவுனமாகவே இருந்துள்ளேன். இதோடு இந்த விவாதத்தட் முடித்து விடலாம். ஆனால் திமுக -விந் கருணாநிதியின் செயல்பாடுகள் அவர்கள் அற்வித்த கொள்கைகள்- எழுத்துகள் படி உள்ளதா? மன்சாட்சிய்ம்,நேர்மையும் உடன் அணுகும்பொழுது மட்டும் அத்ற்கு விடை கிடைக்கும். எனக்கு கிடைத்த விடையை நான் சொல்லி விட்டேன்.
கி.நடராசன்
கூகுளில்- ந் "துரோகி கருணாநிதி " என்று போட்டு பாருங்கள். நெட்டில் தேடிபாருங்கள். பல நூலகள் வந்துள்ளன 1965 இந்தி ஆதிக்க எதிப்பு போராட்டத்திற்கு துரோகம் முதல் முள்ளிவாய்காள், இன்றைய டேசோ வரையில் உள்ள துரோக வரலாரை எழுத பக்கள் தேவையில்லை. யாதார்த்தமும், நினைவுகளும், மனசாட்சிகளும்தான் தேவை.
கி.நடராசன்
இன்னும் பதில் வேண்டும் எனில்,.. திமுகா விற்கு இன்று நெருக்கமாக உள்ள தோழர் சுப.வி-யிடம் கேளுங்கள். திமுகாவை, கருணாநிதியை இப்படி நான் விமர்சனம் செய்யலாமா என்று

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.