தி.மு.க. ஆட்சியில் கலைஞர் செய்த மகத்தான பண்பாட்டுப் புரட்சியாகக் குறிப்பிட வேண்டும் என்றால் அது தை முதல் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்ததுதான். இதனால் திருவள்ளுவர் ஆண்டு தமிழ் ஆண்டுக்கணக்காக மாற்றப்பட்டது. ஒரு வார காலம் இந்தத் தமிழ்ப் புத்தாண்டை அரசு அலுவலகங்களில் விழாவாகக் கொண்டாட அரசாணை பிறப்பித்தார்.

ஜெயலலிதா முதல்வரான பிறகு இதை அகற்றி மீண்டும் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்து, ‘சமஸ்கிருதப் பண்பாட்டுக்கு’ உயிர் கொடுத்தார். இந்த நிலையில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்க முடியாது என்று இந்துத்துவம் பேசுவோர் கூறுகிறார்கள்.

பா.ஜ.க. அண்மையில்  கொண்டாடிய பொங்கல் விழாவில்கூட ‘தமிழ்ப் புத்தாண்டை’ கொண்டாடவில்லை. பா.ஜ.க.வைச் சார்ந்த எச்.ராஜா, தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில், “உலகம் முழுதும் வாழும் இந்துக்களுக்கு மகா ஷங்கராந்தியில் உத்ராயண வாழ்த்து” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதே குரலில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரம், “தை மாதம் முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்க முடியாது. பருவகால அடிப்படையில் பார்த்தால் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது. இதற்காக எந்த விவாதத்துக்கும் தயார்” என்று சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் பேசியிருக்கிறார். இது சரியான கருத்து அல்ல; இது குறித்த சில வரலாறு மற்றும் பண்பாட்டு செய்திகளை மீண்டும் நினைவுகூர வேண்டியிருக்கிறது.

பழந்தமிழர்கள் தங்களது அறிவுக்கு உகந்தவாறு காலங்களைக் கணித்தார்கள். மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை இவை மாறி மாறிப் பருவ காலங்களில் இயற்கை மனிதனை ஆண்டு வந்ததால் தமிழர்கள் ஒரு வருடத்தை ‘ஆண்டு’ என்று குறிப்பிட்டனர். அவ்வாறே தன்னை ஆள்பவனையும், வணங்கும் கடவுளையும் ஆண்டவன் என்று குறிப்பிட்டனர். ஒரு ஆண்டை தமிழன் ஆறு பருவ காலமாகப் பிரித்தான்.

இளவேனில் (தை மாசி), முதுவேனில் (பங்குனி, சித்திரை), கார் (வைகாசி, ஆனி), கூதிர் (ஆடி, ஆவணி), முன்பனி (புரட்டாசி, அய்ப்பசி), பின் பனி (கார்த்திகை மார்கழி). தமிழன் தன் வாழ்வை இளவேனிற் காலத்தில் தொடங்கினான்.

இதையே ஆண்டின் துவக்கமாகக் கொண்டான். எனவே தை மாத முதல் நாளே ஆண்டின் துவக்கமாகக் கொண்டான். இவை தை முதல் நாளே தமிழர்களுக்கான புத்தாண்டு என்பதற்கான வாழ்வியல் காரணங்கள்.

தமிழர்களின் காலக் கணக்கீட்டைக் கொண்டும், இந்தக் கருத்தை நியாயப்படுத்த முடியும். காலக் கணக்கீட்டிற்கு அடிப்படையாக இருப்பது சூரியன்தான். பகல், இரவு, நாள், கிழமை, பருவம், ஆண்டு எல்லாமே சூரியன் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்படுகின்றன. சூரியனைச் சுற்றி பூமியும், மற்ற கோள்களும் சுற்றினாலும், பூமியில் உள்ளவர்கள் பார்வையில் சூரியன் காலையில் எழுகிறது.

மாலையில் மறைகிறது. சந்திரன் தேய்கிறது, வளர்கிறது. நட்சத்திரங்களின் இருப்பிடங்கள், கோள்களின் நிலைகள்... மனிதர்களின் பார்வையில் மாறுகின்றன. இந்தப் பார்வையில் தெற்கே சென்ற சூரியன், வடக்கு நோக்கித் திரும்புகிற நாள் தை முதல் நாளாக, புத்தாண்டின் துவக்கமாகத் தமிழர்களால் ஏந்தப்பட்டது.

சூரியன் வடக்கு நோக்கித் திரும்புவது தான் தமிழர்கள் வாழும் பகுதியில் நிகழ்வதால் தமிழர்கள், தங்களின் வானியல் கணிதப்படி அதுவும் தை மாதத்தில் நிகழ்வதால் தமிழ் மக்கள் தை முதல் நாளை தமிழர் புத்தாண்டாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.

தமிழர்கள் வகுத்துக் கொண்ட வானியல் கணிப்பின்படி, தை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக இருந்திருக்கிறது. ஆனால் அறிவியல் கண்ணோட்டத்தில் சூரியன் உதயமாவதும் இல்லை, மறைவதும் இல்லை. அது என்றும் ஒளிர்கிறது. பூமி, தற்சுழற்சியாக சூரியனை சுற்றி வரும்போது 24 மணி நேரத்தில் சூரிய ஒளிபடுகிற இடமெல்லாம் பகலாகவும், மறுபகுதி இரவாகவும் அமைகிறது.

தமிழர் கொண்டாடியதை புத்தாண்டு, சித்திரைக்கு மாறியது எப்படி? குப்தர் வம்சத்தில் வந்த இரண்டாம் சந்திர குப்தன் தனது பெயரை விக்கிரமாதித்தன் என்று மாற்றிக் கொண்டு - தனது பெயரால் ‘விக்கிரம சகம்’ என்ற ஆண்டு முறையை உருவாக்கிக் கொண்டான். வானவியலை அறிவியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்த ஆரியபட்டருக்கு எதிராக வானவியலில் - சாதகம், சோதிடத்தைப் புகுத்தும் முயற்சிகள் அவனது காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.

எனவே வானியல் சிந்தனையாளர் ஆரியபட்டர் புறக்கணிக்கப்பட்டு, பழமையில் ஊறியவரான மிகிரர் உயர்த்திப் பிடிக்கப்பட்டார். அப்படி விக்கிரமாதித்தன் உருவாக்கிய ‘விக்கிரமசகம்’ எனும் ஆண்டு முறையில் சித்திரை முதல் நாளே ஆண்டின் முதல் நாளாக்கப்பட்டது. ‘விக்கிரம சகம்’ 60 ஆண்டுகளை வரையறுத்தது.

‘பிரபவ’ ஆண்டில் தொடங்கி ‘அட்சய’ ஆண்டில் முடியும். இவைகளில் ஒரு பெயர்கூட தமிழ் இல்லை. 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர்கள்தான். ஆனால், தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை - வேதனை.

இந்த 60 ஆண்டுகளையும் கடவுளோடு தொடர்புபடுத்தி, ஆபாசம் வழியும் கதைகளையும் உருவாக்கி விட்டார்கள். நாரதரும், கிருஷ்ணனும் உறவு கொண்டு (இருவரும் ஆண்கள்) பெற்ற குழந்தைகளே ‘பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’ என்று தமிழ்க் கலை களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ கூறுகிறது.

இதற்கு புராண ஆதாரங்கள் வேறு உள்ளன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61வது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் ‘பிரபவத்திலிருந்து தான் தொடங்க வேண்டும்’ நடைமுறைக்கும் அறிவுக்கும் ஒவ்வாத குழப்பங்களும், மூடநம்பிக்கைகளும் இதில் அடங்கிக் கிடக்கின்றன.

இந்த நிலையில் தான் - தமிழ் அறிஞர்கள் 1921-ம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆராய்ந்தார்கள். மூன்று முக்கிய முடிவுகளை அவர்கள் அப்போது எடுத்தார்கள்.

  1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டாகப் பின்பற்றுவது.
  2. அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது.
  3. திருவள்ளுவர் காலம் கி.மு. 31 (வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு)

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை என்று முடிவெடுத்தார்கள். இப்படி முடிவெடுத்தவர்கள் தமிழகத்தின் மூத்த தமிழ் அறிஞர்கள் மறைமலை அடிகள், திரு.வி.க., சுப்பிரமணியப் பிள்ளை, சச்சிதானந்தப் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவ நாதம் ஆகியோர் ஆவர்.

அதன் பிறகு 1939 ஆம் ஆண்டு திருச்சியில் ‘அகில இந்திய தமிழர் மாநாடு’ சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில் பெரியார், கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியம், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க., மறைமலையடிகளார், பி.டி.இராஜன், ஆற்காடு இராமசாமி முதலியார், புரட்சி கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி உட்படப் பலரும் பங்கேற்றனர். அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் பறைசாற்றியது.

1971-ல் அன்றைய கலைஞர் ஆட்சி, திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. இம்முறையையோ 1971 முதல் அரசு நாட்குறிப்பிலும், 1972 முதல் அரசிதழிலும், 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வருகிறது. 1

969ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாளை திருவள்ளுவர் நாள் என்று ஏற்று அரசு விடுமுறை அளித்து ஆணை பிறப்பித்தது. எனவே தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆகும். இடையில் வந்து புகுந்த சித்திரை - தமிழர் மீது புகுத்தப்பட்ட பண்பாட்டுத் திணிப்பாகும்.

- விடுதலை இராசேந்திரன்

Comments

6 comments

6
குமரன்
https://youtu.be/qlVgEoZDjok
அயன சலனம் ( பாதையில் குழப்பம் = axial precession)
அயன சலனம் காரணமாக 1500 வருடங்களுக்கு முன் வட செலவு (உத்தராயணம்) தை மாதப்பிறப்பு டன் (மகர சங்கராந்தி) ஒன்றாக இருந்தது ஆனால் தற்காலத்தில் வட செலவு ஆரம்பித்து 24 நாட்கள் கழித்துத்தான் தை மாதம் பிறக்கிறது எனவே கிட்டத்தட்ட இரண்டாயிரம்(~25700÷12) ஆண்டுகளுக்கு ஒரு முறை வட செலவு ஒரு மாதம் முன்னகர்கிறது அப்படியென்றால் இன்றிலிருந்து 7500 ஆண்டுகளுக்கு முதல் வட செலவு ஆரம்பமும் சித்திரை மாதப் பிறப்பு ஒன்றாக இருக்க வாய்ப்பு உள்ளது அன்று இந்திர விழா என்ற பெயரில் அறுவடைத் திருநாள் நடைபெற்றது எனவே நான் நினைக்கிறேன் 1500 ஆண்டுகளுக்கு முன் தை பொங்கல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டு இருக்கலாம் இன்னும் 500 ஆண்டுகளுக்குப் பிறகு மார்கழி பிறப்பு தான் முக்கியமான நாளாக இருக்கும்
குமரன்
https://lvnaga.wordpress.com/2012/04/12/tamilindian-solar-calendar/
குமரன்
மழைக்கடவுளான இந்திரனுக்கே கோகுலத்தில் வசித்த ஆயர்கள் ஆண்டு தோறும் பூசை செய்து வழிபட்டனர். ஒருமுறை இந்திர வழிபாட்டை, கிருட்டிணன் தடுத்து அருகில் உள்ள மலைக்கு பூசை செய்ய வைத்தார்.
இதனால் கோபம் கொண்ட மழைக் கடவுளான இந்திரன், கோகுலத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் மழை பொழியச் செய்தார். இடி மின்னலுடன் கூடிய தொடர் மழையைக் கண்டு பயந்த கோகுலத்து ஆயர்களையும் ஆவினங்களையும் காக்க கிருட்டிணன், அருகில் இருந்த ஒரு மலையைத் தன் ஒரு விரலால் குடை போல் தூக்கினார். குடை போல் காட்சி அளித்த அம்மலைக்கடியில் நுழைந்த ஆயர்களும், ஆவினங்களும் மழையிலிருந்து காக்கப்பட்டனர்.
கிருஷ்ணரின் இச்செயலைக் கண்டு வியந்த இந்திரன், கிருஷ்ணரை சரணடைந்து மன்னிப்பு கேட்டான். 
குமரன்
தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருப்பது கலியுகம் 5122 சுழல் (இயற்கை) ஆண்டு முறை{ கலியுகம் நான்காவது இறுதியுமான யுகம்} கிபி 2021 தொடராண்டு முறை {வளர்ச்சியடையாத முறை} 1500 வருடங்களுக்கு முன் தை மாதப் பிறப்பும் சூரியனின் வடக்கு செல்கையும் ஒன்றாகப் பொருந்தியிருந்தது கிட்டத்தட்ட ஒவ்வொரு இரண்டாயிரம்[ பூமியின் அச்சு சுழற்சிக் காலம் ~26000÷12] ஆண்டுகளுக்கும் ஒரு முறை இந்த மேற்பொருந்துதல் ஒரு மாதம் முன்னகர்கிறது எனவே 7500 ஆண்டுகளுக்கு முதல் சித்திரை மேட ராசி( அந்தப் பகுதியில் உள்ள பிரகாசமான நட்சத்திரங்களை கோடுகளால் இணைத்தால் அது ஒரு ஆடு போல் தோன்றும்) மாதப் பிறப்பு சூரியனின் வடக்கு செல்கையும் ஒன்றாக பொருந்தியிருக்கும் எனவே பங்குனி மாதப் பிறப்பும் சூரியனின் வடக்கு செல் கையும் 5500 வருடங்களுக்கு முன் ஒன்றாக பொருந்தியிருக்கும் கண்ணன் (கார்மேக வண்ணன்= தமிழன் ) வாழ்ந்தது மூன்றாவது யுகத்தின் இறுதிப்பகுதியில் எனவே அவர் சித்திரையில் கொண்டாடப்பட்ட அறுவடை திருவிழாவான இந்திர விழாவை பங்குனி மாத பிறப்பிற்கு மாற்றம் செய்து இருக்கலாம் (இந்திரன் மருதநில தலைவன் ,இந்திர வழிபாடு =தனிமனித வழிபாடு .கண்ணன் மாற்றம் செய்தது கோவர்த்தன மலை வழிபாடு= இயற்கை வழிபாடு. தைப்பொங்கல் வழிபாடு =சூரியன் வழிபாடு= இயற்கை வழிபாடு) மாசி மாதப் பிறப்பும் சூரியனின் வடக்கு செல் கையும் 3500 ஆண்டுகளுக்கு முதல் பொருந்தியிருக்கும் அந்தக் காலத்தில் தமிழர்கள் சங்கம் அமைத்து தங்களுடைய பிரச்சினைகளை புலவர்கள் ஒன்றுகூடி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம் அது அரசாணையாக நிறைவேற்றப்பட்டு இருக்கலாம் இதுபோலவே தை மாதப் பிறப்பும் என நான் நினைக்கின்றேன்
குமரன்
விடுதலை அரசுஇந்திரனின் பிழையான தகவல்கள

1தெற்கே சென்ற சூரியன், வடக்கு நோக்கித் திரும்புகிற நாள் தை முதல் நாளாக, புத்தாண்டின் துவக்கமாகத் தமிழர்களால் ஏந்தப்பட்டது.
சமகாலத்தில் சூரியன் வடக்கு நோக்கித் திரும்பும் நாள் மார்கழி 7 அல்லது 8

2சூரியன் வடக்கு நோக்கித் திரும்புவது தான் தமிழர்கள் வாழும் பகுதியில் நிகழ்வதால் தமிழர்கள், தங்களின் வானியல் கணிதப்படி அதுவும் தை மாதத்தில் நிகழ்வதால் தமிழ் மக்கள் தை முதல் நாளை தமிழர் புத்தாண்டாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.
சூரியன் வடக்கு நோக்கித் திரும்புவது தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் நிகழ்வதில்லை அது மார்கழி மாதத்திலேயே நிகழ்கிறது

3 சந்திரகுப்தர் ருக்கு காலத்தால் பிற்பட்டவர் தான் ஆரியபட்டர் எனவே ஆரியபட்டர் இன் கால கணிதத்தை விக்ரமாதித்தன் மாற்றம் செய்திருக்க முடியாது

4 அறுபது ஆண்டு சூழல் ஆண்டு முறை என்பது வியாழ ஆண்டு முறை வியாழன் சூரியனை ஒருமுறை சுற்றிவர கிட்டத்தட்ட 12 வருடங்கள் எடுக்கும் (12×5=60)

5ஆங்கில ஆண்டு முறை என்பது தவறு ஐரோப்பியர்கள் ஆண்டு முறை அல்லது கிருத்தவர்கள் ஆண்டு முறை கிரகரி கிருத்துவ பாதிரியார் வகுத்த முறை

6 பெரும் பொழுதுகள் தற்போது உள்ள மாதத்துடன் தொடர்ந்தும் இருக்க முடியாது அது காலத்துடன் மாறக்கூடியவை எனவேதான் மாதங்கள் இருக்கும்போது பெரும் பொழுதுகளும் உருவாக்கப்பட்டன தற்போதைய இளவேனில் தை மாசி என்றால் அது திருவள்ளுவர் காலத்தில் மாசி பங்குனி யாகத்தான் இருந்திருக்கும்
குமரன்
https://youtu.be/rYsLRUYUJtc

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.