இரட்டை தம்ளர், இரட்டை சுடுகாடு என்ற சாதித் தீண்டாமை வடிவங்களை எதிர்த்து பரப்புரை நடத்திய பெரியார் திராவிடர் கழகம், அம்பேத்கர் பிறந்த நாளில் பரமக்குடியிலிருந்து ‘ஊர்-சேரி’ என்ற இரட்டை வாழ்வுரிமை அவலங்களை எதிர்த்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது.

‘சுதந்திரம்’ பெற்று விட்டதாக கூறப்படும் ஒரு நாட்டில், ஊரின் கடைக் கோடியில் சாதியால் ஒதுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் தனியாகக் குடியமர்த்தப்பட்டுக் கிடக்கிறார்கள். ஒவ்வொரு கிராமமும், ‘ஊர்-சேரி’ என்று பிரிந்து கிடக்கிறது. இப்படி ஒரு இழிவானதலைகுனியத்தக்க பிரிவினை அமைப்பு நீடித்து வருகிறதே என்ற சிந்தனைகூட வற்றிப் போய், தமிழர் சமூகம் கிடக்கிறது என்பதுதான் வேதனை.

“மனிதனை மனிதன் தொடக் கூடாது; கண்ணில் படக்கூடாது; கோயிலுக்குள் போகக் கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கின்றவை போன்ற கொள்கை தாண்டவமாடும். ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் மூழ்கச் செய்யாமலோ பூமிப் பிளவில் அழியச் செய்யாமலோ, சண்ட மாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும்கூட, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்ன வென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இம்மாதிரி கொடுமைப் படுத்தித் தாழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும் சாந்தத்தோடும் அகிம்சா தர்மத்தோடும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” - என்று பெரியார் 1920 ஆம் ஆண்டிலேயே திருச்செங்கோட்டிலே கேட்டார்.

கேரள மாநிலம் வைக்கத்திலே, ‘தெருத் தீண்டாமை’யை எதிர்த்து வீதிகளில் நடக்கும் உரிமை கோரி போராடி சிறை சென்றார். அருவிக்குத்தி தீவுச் சிறையில் ஒரு மாதம் அடைக்கப்பட்டு விடுதலையானவுடன் மீண்டும் களம் புகுந்த பெரியாரை திருவாங்கூர் சிறையில் கடுங்காவல் கைதியாக 6 மாதத் தண்டனை விதித்து அடைத்தார்கள்.

திருவாங்கூர் சிறையில் பெரியார் எப்படி அடைக்கப்பட்டிருந்தார்?

“கால்களில் விலங்குச் சங்கிலி தலையிலே கைதிகள் அணியும் குல்லாய். முழங்கால் களுக்குக் கீழே தொங்குகின்ற ஒரு வேஷ்டி. கழுத்தில் கைதி எண் குறிக்கப்பட்ட ஒரு மரப்பட்டை. இவற்றோடு ஈ.வெ.ராமசாமி கொலைகாரர்களோடும் கொள்ளைக்காரர் களோடும் வேலை செய்து கொண்டு இருக்கிறார். தண்டனை அடைந்த ஒரு சாதாரண கைதி எவ்வளவு வேலை ஒரு நாளைக்குச் செய்வானோ அதுபோல இரு மடங்கு வேலை செய்கிறார்” என்று வைக்கம் போராட்டத்தைத் தொடங்கிய கேசவ மேனன் எழுதியுள்ளார்.

பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் முதன்மையான இலக்கே சாதி ஒழிப்புதான். தீண்டாமைக்கு மூலம், சாதி யமைப்புதான். சாதியமைப்பை முன்னிறுத்தியே பெரியார் பார்ப்பன எதிர்ப்பு, மத எதிர்ப்பு, கடவுள் எதிhப்பு என்ற எல்லை வரை கொள்கைப் பரப்பை விரிவாக்கினார். பெரியார் இறுதி வரை வலியுறுத்திய ‘தனித் தமிழ்நாடு’ கோரிக்கையும் முதன்மையாக ‘சூத்திர இழிவு’ ஒழிப்புக்காகத்தான்.

தமிழர்களின் ஒற்றுமையை சிதைத்து, ஒருமித்த கூட்டு உளவியலை தகர்த்ததில் சாதிக்கு பெரும் பங்கு உண்டு. சாதி - மனித நேயத்தை - ஜனநாயக பண்பை - கூட்டுச் செயல்பாட்டை - சமூக மயமாக்கலைத் தடுத்து நிறுத்தியதோடு, வெறுப்புகளுக்கு உரமேற்றி மனித மாண்புகளை குழி தோண்டிப் புதைத்து விட்டது. தமிழனாக ஒன்று சேரவிடாமல் தடுத்து நிறுத்தும் சாதி; சாதியால் மட்டும் குழுக்களை ஒன்று திரட்டுகிறது என்றால், தமிழினம் எப்படி வலிமை பெற்று தனது உரிமைக்குப் போராட முடியும்?

அனைவருக்கும் சம உரிமை என்ற உண்மையான ஜனநாயகப் பண்புகளை சாதி மறுக்கிறது. அனைவரும் சமமாக முடியாது என்ற பார்ப்பனியமே - சாதியமாக உருத்திரட்சி  பெற்று திகழ்கிறது. ஜனநாயகப் பண்புக்கு எதிரான இதே சாதி தான் இந்த நாட்டில் ‘ஜனநாயக’ தேர்தலில் சக்தியோடு பங்காற்றுகிறது என்பதுதான் விதித்திரமான நகை முரண்! ஆக, தேர்தல் ஜனநாயகத்திற்குள்ளும் சாதி தலைநீட்டுவதற்கான வாய்ப்புகள் வருகிறது என்றால், ஜனநாயகத்தின் உயிரோட்டம், கொலை செய்யப்படுகிறது என்பது தானே!

தமிழனின் ஜனநாயகத்தை - தமிழனின் வாழ்க்கை முறையை - தமிழனின் உறவு முறையை - தமிழனின் பண்பாட்டுக் கூறுகளை -  தமிழனின் மொழி தீர்மானிக்காமல், சாதியக் கூறுகளே மேலாதிக்கம் செலுத்தி நிற்கிறது. இவை எல்லா வற்றையும்விட தமிழன் உருவாக்கும் கட்சிகளுக்கே கூட சாதியமே அடித்தளமாகும் அவலநிலை அதிகரித்து வருகிறது; மொழி வழித் தமிழனை தேட வேண்டியிருக்கிறதே!

அரசியல் - பண்பாடு - சமூகங்களில் சாதியைப் பேணிக் கொண்டிருப்பதை எதிர்க்காமல், கண்டும் காணாமல், ஒதுங்கிக் கொண்டு, தமிழின அரசியலை நோக்கி அறைகூவல் விடுப்பது எப்படி தமிழின அரசியலுக்கு வலிமை சேர்க்கும்?

சாதி எதிர்ப்புக் களம் நோக்கிய தொடர்ச்சியான பயணத்தின் வழியாகவே சாதிய ஒடுக்குமுறையின் இறுக்கத்தை தகர்த்து பலவீனமாக்க முடியும். அந்தப் பாதைகளில் பயணப்பட்டுக் கொண்டேதான் தமிழின ஒர்மைக்கு வழியமைக்க முடியும் என்பதே பெரியாரியம் தந்துள்ள கொள்கை வெளிச்சம். சாதித் தமிழனை தமிழனாக்குவோம் என்ற நோக்கோடு பெரியார் திராவிடர் கழகம் சாதிய பிரிவினைகளுக்கு சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பரப்புரை இயக்கத்தை மீண்டும் தொடங்குகிறது.

மனிதனுக்கு மனிதன் இழைக்கும் இந்த ‘அவமானங்களை’ இழிவுகளை எதிர்த்து நாம் புறப்படும்போது பெரியாரை இழித்துப் பழித்துப் பேசிக் கொண்டு, ஒரு சிறு கும்பல் புறப்பட்டிருக் கிறது. இப்படி எத்தனையோ ‘வசை’களை துரோகங்களை சந்தித்தே பெரியாரியத்தின் பயணம் தொடருகிறது.

சாதி எதிர்ப்பு - பார்ப்பன எதிர்ப்பு - இந்துத்துவ எதிர்ப்புகளைவிட பெரியார் எதிர்ப்பே எங்களது முதன்மைப் பணி என்று பேசுகிற கூட்டங்கள், எவ்வளவு வேண்டுமானாலும் கூச்சல் போடட்டும்; அது பற்றி நமக்குக் கவலை இல்லை.

பெரியாரின் கொள்கை வழி நிற்கும் சாதி எதிர்ப்பாளர்களாகிய நாம், நமது கொள்கைப் பயணத்தைத் தொடருவோம்!

பயணம் வெற்றிப் பெற தோழர்களே, அணியமாவீர்!

அணி திரட்ட முடியுமா?

பொருளாதாரப் புரட்சி ஒன்றை ஏற்படுத்த, பாட்டாளிகளைத் தட்டி எழுப்ப அவர்களிடம் மார்க்° கூறினார்: “அடிமை விலங்குகளைத் தவிர இழப்பதற்கு வேறு எதுவும் உங்களிடம் இல்லை” என்று.

ஆனால், சமுதாய மற்றும் மதவியல் உரிமைகளை சில சாதிகளுக்கு அதிகமாகவும், சில சாதிகளுக்கு குறைவாகவும் பல்வேறு சாதிகளுக்கு இடையே மிக வஞ்சகமாகவும் பகிர்ந்து அளிக்கப் பட்டுள்ள நிலையில், சாதியமைப்புக்கு எதிராக இந்துக்களைத் தட்டி எழுப்ப, காரல்மார்க்சின் முழக்கம் சிறிதும் பயன் அளிக்காது. சாதிகள் உயர்ந்தவை தாழ்ந்தவை என்ற வரிசைப்படி தரம் பிரிக்கப்பட்டுள்ளன. தங்கள் அந்த°தை சாதிகள் மிகவும் அக்கறையோடு காப்பாற்றி வர எண்ணு கின்றன. சாதிய அமைப்பு ஒழிக்கப்பட்டால், சில சாதிகள் மற்ற சாதிகளைவிட அதிகமாக தங்கள் தனியுரிமைகளையும், அதிகாரங்களையும் இழக்க வேண்டியிருக்கும் என்பது எல்லாரும் அறிந்த உண்மை.

எனவே, சாதி அமைப்பு என்னும் கோட்டையைத் தகர்க்க, இந்துக்களை பொதுவான ஓர் அணியாக ஒன்று திரட்ட உங்களால் முடியாது.

- புரட்சியாளர் அம்பேத்கர்

Comments

6 comments

6
யாழினி முனுசாமி
சாதியை ஒழிக்காமல் தமிழர்களை ஒன்றிணைக்க முடியாது என்பதை பெரியாரின்வழி விளக்கியிருப்பது பெரியாரின் சாதியொழிப்புச் சிந்தனையை இளந்தலைமுறைக்கு எடுத்துச்சொல்வதாக அமைந்திருக்கிறது. சாதி ஒழியாமல் தமிழர்களாக மட்டுமன்று...உழைக்கும் வர்க்கமாகவும் ஒன்றிணைய முடியாது! பெரியார் திராவிடர்கழகத் தோழர்களின் சாதியொழிப்புப் பணி தொடரட்டும். நாமும் கைகொடுப்போம்.
“ சாதி அமைப்பு என்னும் கோட்டையைத் தகர்க்க, இந்துக்களை பொதுவான ஓர் அணியாக ஒன்று திரட்ட உங்களால் முடியாது” என்று அம்பேத்கரின் மேற்கோளை எடுத்துப் போட்டிருக்கிறார். சாதியொழிப்புக்கான அம்பேத்கரின் சிந்தனைகளையும் மேற்கோள் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்!
கடலூர் சித்தன்.ஆர்
இரட்டைக் குவளை முறை நீடிப்பது வேதனை அளிக்கிறது: எம்.ஒய். இக்பால்

பார்ப்பன சாதியை சேராதவர்கள் கருவறையில் உள்ள சிலையைத் தீண்டினால், சிலை தீட்டுப்பட்டுவிடும் என அர்ச்சகர் பயிற்சி பெற்ற பிற சாதியினரை ஆலயத்தில் பூஜை செய்ய -மதுரையைச் சேர்ந்த பார்ப்பன பட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர்.பிரசாத லட்டு கூட பிராமணர்கள் தான் பிடிக்கணும் உயர்நீதிமன்ற தீர்ப்பு !

தாங்கள் அடிமைகளாக நடத்தப் படுகிறோம் என்பதைக்கூட அறியா வண்ணம் மக்களின் மூளை மழுங்கடிக்கப் பட்டுள்ளது.பெற்றவளுக்கு பிள்ளை தீட்டா ??? அல்லது உருவாக்கியவனுக்கு உண்டாக்கியன் தீட்டா???"

தெய்வத்தொண்டு செய்ய அவன் கட்டிய கோவிலிலே ,
அவனை அனுமதி மறுக்கும் பரமாத்மாக்கள் -வெட்கப்படவேண்டும் சுதந்திரம் அடைந்து
64 ஆண்டுகள் ஆன பின்பும் இந்நிலை தொடர்வதற்கு.//

ஒவ்வொரு இந்து சாதிமக்களும் தனக்கு மேலே எந்த சாதியும் இருக்கக் கூடாது; ஆனால் அதே சமயம் தனக்கு கீழே அடிமைகள்/ சாதிகள் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். ஏன் நீதியை காக்காதவர்களையும்/மக்களையும் சுனாமி கொண்டுபோகக் கூடாது.
கடலூர் சித்தன்.ஆர்
ஊர் பொது காரியங்கள்/ பிரச்சினைகள் பற்றி பேசிட மக்கள் அனைவரும் பொது இடத்தில் கூடுகின்றனர்.

அம்பி நீங்களெல்லாம் நாற்காலியில் உட்காரப்படாது.

ஏன் சாமி? நிறைய பிராமனாள் சாமியெல்லாம் நாற்காலிகளில் உட்கார்ந்து இருக்கிறார்களே? நாங்கள் ஏன் உட்காரக் கூடாது?

அவாள் எல்லாம் ஆண்டவனை நேரிடையாக தொடர்பு கொள்ளும் வரம் பெற்றவர்கள். அந்தத் தகுதியை இந்து மதம் உங்களுக்கு கொடுக்க வில்லைஎன்று நோக்குதெரியாதோ?

படவா ராஸ்கல்ஸ் – ஐயர் சாமி கிட்டே வாக்குவாதம் பண்ணிகொண்டா இருக்கிறாய். நாம கீழே தான் இருக்கணும். அல்லது சாமி குத்தம் ஆயிடும்.சின்ன பசங்க பேசறதை எடுத்துக்காதீங்க சாமி.

நீங்க பஜனையை/பிரசங்கத்தை ஆரம்பிங்க சாமி.
கி.பிரபா
கல்விக்கூடங்களில் தானே என்ன சாதிஎனக் கேட்கிறார்கள். கட்டாயப்படுத்துகின்றனர் சில பள்ளிகளில். இதைத்தானே தடுக்கவேண்டும் அல்லது முற்றிலும் ஒழிக்கவேண்டும்.கலப்புத் திருமணம் செய்தாலும் இருவரில் ஒருவரின் சாதியைத் தானே குறிப்பிடச் சொல்லுகின்றனர். அல்லது அரசியலில் மூன்றாவது அணி உருவாக்கப்போகிறோம் என மிரட்டுவதைப் போல் மூன்றாவதாக மற்றோர் சாதி எனில் மேலும் குழப்பமும் கோட்டித்தனமும் தானே உருவாகும். கொளத்தூர் மணி போன்றவர்கள் சாதியை முற்றிலும் ஒழிக்க ஏதும் திட்டம், செயல் வைத்துள்ளாரா?
கடலூர் சித்தன்.ஆர்
கி.பிரபா.....அவர்களே! இனிமேலும் ஏமாற மக்கள் தயாராக இல்லை. திசை திருப்ப /குழப்ப முயற்சிக்க வேண்டாம்..
கடலூர் சித்தன்.ஆர்
"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்"
திரு மோடி அவர்களின் கழிவறை குறித்த கருத்து- நாட்டின் / மக்களின் மிகவும் அத்தியாவசியத் தேவை பற்றியது தானே??? இதில் நல்லவர்கள் யாரும் குற்றம் காண மாட்டார்கள்.
http://dinamani.com/latest_news/2013/10/03/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/article1816687.ece

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.