வீடுகள், சிறு வணிக-தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் மின் கட்டணத்தை அடுத்த மாதம் முதல் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகக் கூட்ட அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 20 வருடங்களில் அரசுக்கு சொந்தமாக புதிய மின் நிலையங்களை உருவாக்குவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு உற்பத்தி சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டது. மின்சார உற்பத்தி தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டது. தனியார் மின் நிலையங்களில் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. நம் மின்சாரத் துறை கடுமையான நட்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

விரிவாகச் சொல்வதானால் 1994-95 இல் தமிழக அரசின் உற்பத்தி, மொத்த தமிழகத் தேவையில் 65% ஆக இருந்தது. மத்திய அரசு தொகுப்பிலிருந்து மீதமுள்ள 34.5% பெறப்பட்டது. தனியாரிடம் இருந்து வெறும் 0.5% மின்சாரம் வாங்கப்பட்டது. இந்த காலங்களில் வருவாய் மின்சார வாரியத்திற்கு அதிகமாகவும், உபரியாகவும் இருந்தது. இதைக் கொண்டு புதிய மின் உற்பத்தி திட்டங்களைக் கொண்டு வர இயன்றது. மேலும் விவசாயம், குடிசைகள், நலிவடைந்த தொழில்களுக்கு சலுகை யாக அளிக்கவும் முடிந்தது. 1994 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அந்த சமயத்தில் மத்தியில் இருந்த காங்கிரசின் மன்மோகன் சிங், மாண்டெக் சிங்கின் புதிய பொருளாதாரக் கொள்கையால் தமிழ்நாடு மின்சார வாரியம் (அனைத்து மாநிலங்களுக்கும் இதே கதி தான்) சுயமாக மின் உற்பத்திச் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. மாறாக தனியாரிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இதன் அடிப்படையில் 1994 இல் 3858 கோடி ரூபாய் இலாபம் ஈட்டிய மின்சார வாரியம், 2001 இல் 4851 கோடி நட்டத்தை சந்தித்தது. மேலும் மின்சாரத் தேவை 1994 இல் (29075 மில்லியன் யூனிட்) இருந்ததை விட 2007 இல் தேவை 100% (66.815 மில்லியன் யூனிட்) உயர்ந்தது (இருமடங்காகியது). மாநில அரசு சுயமாக மின் உற்பத்திச் செய்யப்படுவதை தடுத்த மத்திய அரசு, தான் பங்களிக்கும் மின்சாரத்தை வெறும் 50% மட்டுமே உயர்த்தியது. 1994 இல் வெறும் 0.5% மின்சாரம் (122 மில்லியன் யூனிட்) உற்பத்திச் செய்த தனியார் நிறுவனங்கள், 2007 இல் 50% ஆக (23,924 மில்லியன் யூனிட்) மின் உற்பத்தியை செய்ய ஆரம்பித்தன.

இதன் மூலம் மாநில மின்சார வாரியம் தனியார் உற்பத்தியைச் சார்ந்து நிற்க மறைமுகமாக கட்டாயப்படுத்தியது. மேலும் மத்திய அரசு தனது கடமையை கைகழுவி, மின் பகிர்மானம் - உற்பத்திக் கட்டுப்பாட்டை தன் கையில் கொண்டு வந்தது. அதாவது மாநில அரசு தனது இறையாண்மையை இழந்தது. இதனடிப்படையிலேயே நாம் கூடங்குளம் - கல்பாக்கம் அணுமின் உற்பத்தியையும் பார்க்க முடியும். இது மத்திய அரசின் உற்பத்தி திட்டம். இதன் மூலம் மத்திய அரசு மேற்குலக நாடுகளுக்கு ஒப்பந்தமிட்டு தனியாரை ஊக்குவிக்கிறது. மேலும் அணு ஒப்பந்தத்தில் பெரும் பணத்தை  இலஞ்சமாக பெறவும் வழிவகை செய்கிறது. ஆனால் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகத்திற்கோ, அதன் மக்களுக்கோ அளிக்கப்பட போவதில்லை. இது தனியார் நிறுவனங்களுக்கும், பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படப் போகிறது.

இந்த மக்கள் விரோத தனியார் - மின்வாரிய ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த உயர்நீதிமன்றத் தின் வழியாக மக்களோ, ஆர்வலர்களோ, இயக்கங் களோ தலையிடாமல் இருக்க மின்சாரத்திற்கென ஒரு நீதிமன்றம் பாணியிலான (பஞ்சாயத்து) ஒரு மன்றம், “ஒழுங்குமுறை ஆணையம்” என்கிற பெயரில், புதிதாக அமைக்கப்பட்டது. “மின்சார ஒழுங்கு சட்டம்” இயற்றப்பட்டது. இவை அனைத்தும் தனியாரிடம் உற்பத்தியை அளிப்பதும், மாநில அரசுகள் மின் உற்பத்தி செய்வதை தடுத்து, மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை தனியாரின் நலனுக் கேற்ப அளிக்கச் செய்வதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டவையாகும். உலகமயமாக்கலை இந்தியாவில் நடைமுறைக்குக் கொண்டு வந்த காங்கிரஸ் - மன் மோகன் மேற்குலக அரசின் திட்டத்தின்படி இதை செய்தார்கள். இதன் மூலம் மாநில அரசின் கட்டுப் பாட்டில் மின் உற்பத்தியும், மின்சார கொள்முதல் விலை நிர்ணயமும் இருக்காமல் வழிவகை செய்தது மத்திய அரசு. இதனால் மாநில அரசுகள் சலுகை விலையில் மின்சாரம் விவசாயம் - குடிசை போன்றவற்றுக்கு அளிப்பதை தடுக்க இயலும்.

மேலே சொன்ன அனைத்து நட்டத்தையும் சாத்தியப்படுத்துவதற்காக கடமையாற்றியது மின்சார ஒழுங்குமுறை ஆணையம். இந்த ஆணையம் தனியாருக்கும் - மின்சார வாரியத்திற்கும் உண்டான வழக்குகளில் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு பெரும் தொகையை பெறுவதற்கு ஏதுவாக தீர்ப்பளித்தது. இதன் மூலம் வருடத்தில் 330 நாட்களும் இயங்காமல் செயல்பட்ட தனியார் நிறுவனங்கள்கூட ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் பணத்தை மின்சார வாரியத்திட மிருந்து பெற முடிந்தது. தனியார் காற்றாலைகளுக்கு ஏதுவாக வருடந்தோறும் 600 கோடி ரூபாய் நட்டத்தை மின்சார வாரியத்திற்கு உருவாக்கியது இந்த ஒழுங்குமுறை வாரியம். சாஃப்டுவேர் நிறு வனங்கள் கேட்காதபோதும்கூட, இந்த நிறுவனங் களுக்கு கட்டணச் சலுகையும் அறிவித்தது. இதை விட உச்சகட்டமாக 189 கோடி ரூபாய் கேட்டு மின்சார வாரியத்தின் மீது வழக்கு தொடர்ந்த பி.பி.என். என்கிற நிறுவனத்திற்கு கிட்டதட்ட 1050 கோடி ரூபாய் நட்ட ஈட்டை வழங்கச் சொல்லி உத்தரவிட்டது இந்த ஆணையம். இவ்வாறு இதுவரை கிட்டதட்ட 53,298 கோடி ரூபாய் நட்டத்தை உருவாக்கி இருக்கிறது.

முன்னர் இதேபோல தனியார் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு கம்பெனிகளுக்கும், சாஃப்டுவேர் நிறுவனங்களுக்கும் சலுகை விலையில் மற்றும் முன்பிருந்த விலையிலிருந்து குறைத்து மின்சாரத் தைக் கொடுத்த காரணத்தால் நம் மின்சாரத் துறைக் குக் கடுமையான கடன் சுமை ஏற்படுத்தப்பட்டது.

பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு மின்சார விலையில் அளித்த சலுகையின் காரணமாகக் கிட்டத்தட்ட ரூ.50 ஆயிரத்து 512 கோடியை நம் மின்சார வாரியம் இழந்துள்ளது அந்த இழப்பினைப் பொது மக்களான நம்மிடம் இருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தவணையாக ரூ.9741 கோடி ரூபாயை வசூலிக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதன்படி நமது மின்சார கட்டணம் இரண்டு மடங்காக உயரப் போகிறது.

மின்வாரியத்தின் மொத்த இழப்பீட்டில் வெறும் ரூ.9741 கோடி ரூபாயை வசூலிக்கவே நம் மின் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தப் போகிறார்கள். மீதமுள்ள ரூ.40,771 ஆயிரம் கோடியை வரும் ஐந்து ஆண்டுகளில்  வசூலிக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். அப்போது, அடுத்து வரும் ஆண்டுகளில் நம் மின் கட்டணம் எத்தனை மடங்கு அதிகரிக்கப் போகிறார்கள் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இவ்வளவுக்கும் காரணம் யார்?

(அடுத்த இதழில்)

Comments

1 comment

1
sabarinathan
நன் படிது தெரிந்ததை நீங்கலும் தெரிந்து கொல்லுங்கல்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.