குழந்தை பெறுவதற்கான தடைகளை மருத்துவ விஞ்ஞானம் தகர்த்து விட்டது. கருத்தரிக்கும் சக்தி இல்லாமல் போவோருக்கு, நன்கொடை மூலம் குருதிக் கொடை பெறுவதுபோல், விந்துக் கொடை பெறும் முறைகளும் வந்து விட்டன. இதற்காக குருதிகளை சேகரிப்பதுபோல், ‘விந்து’களை கொடையாகப் பெற்று, சேகரிக்கும் மய்யங்கள் செயல்படுகின்றன. இந்த மய்யங்களிலிருந்து விந்துக்களைப் பெற்று, ஊசி மூலம் உடலில் செலுத்தி, கருவை வயிற்றில் வளர்த்து பெறப்படும் விஞ்ஞானக் குழந்தைகள் ஏராளமாக பிறந்து வளர்ந்து வருகின்றனர்.

குருதிக்கு, சாதி-மத வேறுபாடுகள் கிடையாது. விஞ்ஞானம், ரத்தத்தின் பிரிவுகளை பட்டியலிட்டுள்ளது. சாதிகளைக் கடந்து, ஒவ்வொரு தனி மனிதருக்கும் ரத்தத்தின் பிரிவுகளை கண்டறிந்து, தேவைப்படும்போது அந்தப் பிரிவு ரத்தம் மட்டுமே ஏற்றப்படுகிறது. அதை மட்டுமே உடலும் ஏற்கும்.

இதேபோல், சாதி மத அடையாளங்களைக் கடந்து பெறப்படும் விந்துகளும், பெண்களின் கருப்பையில் செலுத்தப்படுகின்றன. ஆனாலும்கூட மருந்துவ விஞ்ஞானம் மகத்தான சாதனைகளை செய்து, மனித குலத்தை உய்விக்க வந்தாலும்கூட, ‘மனுதர்ம’ சிந்தனை மட்டும் மாறவே இல்லை.

கடந்த மே 13 ஆம் தேதி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் வெளிவந்த செய்தி இது:

விந்துக்கள் சேமிப்பு வங்கிக்கு வந்து, பணம் கொடுத்து, விந்துக்களை வாங்கி, கருவுற விரும்பும் இணையர்களில் பெரும்பாலோர் ஒரு கேள்வியை கேட்கிறார்கள். “இந்த விந்தைத் தந்தவர் எநத சாதி?” என்பதாகும். பீகாரைச் சேர்ந்த பிரபல குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கவுரவ குமார், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டி, நாட்டில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. விந்துக்களை வாங்க விரும்பும் இணையர், தங்களுக்கு குறிப்பிட்ட சாதிக்காரர்களின் விந்து மட்டுமே வேண்டும் என்று வற்புறுத்துவதாக அவர் பேட்டியில் கூறியிருந்தார்.

இது, பீகார் போன்ற சாதிவெறிப் பிடித்த மாநிலங்களில் மட்டுமல்ல, டில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இதே ‘மனுதர்ம’ சிந்தனைதான் நிலவுகிறது.

மும்பையில், ‘டிரிவெக்டர்’ என்ற விந்து வங்கி நடத்தும் திலிப்பட்டீல், மற்றொரு தகவலைக் கூறியுள்ளார். ‘பிராமணர்’ விந்து வேண்டும், எவ்வளவு பணம் தரவும் தயார் என்று கேட்பவர்களே அதிகமாக இருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார். முஸ்லீம்கள்கூட ‘சன்னி’ விந்து, ‘சீயா’ விந்து என்று குறிப்பிட்டுக் கேட்கிறார்கள் என்று கூறும் அவர், மருத்துவ ஆய்வு வழிகாட்டுதலின்படி ‘விந்து’ தந்தவர் சாதியை வெளிப்படுத்துவது குற்றம். ஆனால், மதத்தை வெளிப்படுத்தலாம் என்றார், அவர். சிவப்பு நிறமுள்ள அடர்த்தியான கூந்தல் உள்ள, கூர்மையான பார்வைக் கொண்டவர்களிடமிருந்து பெறக்கூடிய ‘விந்து’வை கருவில் சுமக்க விரும்புகிறார்கள். அதிலும், தான் சார்ந்திருக்கிற ‘சாதி’க்கே அவர்கள் முன்னுரிமை தருகிறார்கள். எல்லாவற்றையும்விட “பிராமணர்” விந்துக்கு சந்தையில் கடும் போட்டி!

குழந்தைப் பெற வாய்ப்பற்றவர்களுக்கு விஞ்ஞானம் தனது ஆராய்ச்சியில் கண்டறிந்த மகத்தான கண்டுபிடிப்புகளிலும் ‘மனுதர்மமே’ ஆட்டிப் படைக்கிறது என்றால், இது நாகரிகமான நாடு தானா? இதைப் போன்ற வெட்கக்கேட்டை தலைகுனிவை வேறு எங்கும் பார்க்க முடியுமா?

விந்துக் கொடையிலும் பார்ப்பனியமே ‘வீரியமானது’ என்ற மனு தர்ம சிந்தனையை மரணப்படுகுழியில் ஆழக் குழித் தோண்டி புதைக்க வேண்டாமா?

Comments

1 comment

1
இராமியா
இஸ்லாமியர்கள் சன்னி அல்லது சீயா பிரிவைச் சேர்ந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட விந்து வேண்டும் என்று கேட்கையில் பார்ப்பனர்கள் மட்டும் பார்ப்பனர்களிடம் இருந்து பெறப்பட்ட விந்து வேண்டும் என்று கேட்பதில் என்ன பெரிய குற்றம் கண்டு பிடிக்க முடியும்? இது போன்ற பிரச்சினைகளைப் பேசி, பார்ப்பனர்கள் தங்கள் பக்கம் நியாயம் இருப்பதாக வாதம் செய்ய இடம் அளிப்பது அவ்வளவு சரியாகத் தோன்றவில்லை. மனித இனம் எத்தனை வகைகளில் பிரிந்து இருந்தாலும் அத்தனைப் பிரிவுகளிலும் அறிவுத் திறன் மிகுந்தவர்கள் முதல் மிகக் குறைந்த அறிவுத் திறன் கொண்டவர்கள் வரை அவர்களுள் இருக்கிறார்கள். சாதிப் பிரிவுகளும் இதற்கு விதி விலக்கல்ல. உலகில் உள்ள எல்லா விதமான பிரிவுகளிலும் அவரவர்களின் அறிவுத் திறனுக்கு ஏற்ப அனைத்து நிலைகளிலும் வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சாதிப் பிரிவுகள் அப்படி இல்லை. பார்ப்பனராகப் பிறந்து விட்ட ஒரே காரணத்திற்காக மிக மிகக் குறைந்த அறிவுத் திறன் கொண்டவர்களும் அறிவுத் திறன் மிகுந்தவர்கள் அடையக் கூடிய (அதிகாரம் உள்ள, வருமானம் மிகுந்த, உடலுழைப்பு இல்லாத) சொகுசான வேலைகளைப் பெற முடிகிறது. அவ்வாறு திறமைக் குறைவான பார்ப்பனர்கள் உயர்நிலை வேலைகளைப் பெறும் போது அவர்களை அங்கேயே வைத்து அரவணைக்கும் (அதாவது திறமை இல்லாமல் நிர்வாக வேலை செய்வதால் நாட்டிற்கு ஏற்படும் இழப்பைப் பற்றிக் கவலைப் படாமல் இருக்கும்) தேசத் துரோகப் பார்ப்பனர்கள் செய்யும் தேசத் துரோகத்தைப் பற்றிய பேச்சே எழாதபடி செய்யப்பட்டு இருக்கும் அயோக்கியத்தனமான ஏற்பாடு சாதிப் பிரிவில் உள்ளது. இந்த ஏற்பாட்டிற்கு எதிராக மக்களைத் திரட்டுவதும் அதற்கான விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதும் தான் சரியான வழி என்று நான் நினைக்கிறேன். பார்ப்பனர்கள் விடையளிக்கக் கூடிய, குழப்பக் கூடிய பிரச்சினைகளில் நமது ஆற்றலை வீணடிக்க வேண்டாமே?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.