அலைவரிசைகளில், சோதிடமும், கிரிக்கெட்டும்தான் ஓடுகிறது
சாட்டையடி தருகிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி


பத்திரிகைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் செயல்படும் விதம் குறித்து முன்னாள் நீதிபதியும் தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள கருத்துக்கள் ஊடகங்கள் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.என்.என்.  - ஐ.பி.என். அலைவரிசையில் கரன் தாப்பர் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கட்ஜு கூறியவை சர்வதேச அளவில் பத்திரிகையாளர்களின் கடும் விமர்சனத்துக்கு இலக்காகியுள்ளது. அந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியின் முக்கியமான பகுதிகள்.

கரன் தாப்பர் : சமீபத்தில் சில பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஆசிரியர்களை சந்தித்தபோது, ‘ஊடகங்கள், தொலைக்காட்சி, பத்திரிகைகள் பொறுப்பில்லாமல் செயல்படுகிறது’ என்று வருத்தப்பட்டீர்கள். ஊடகங்களின் செயல்பாடு உங்களுக்கு ஏமாற்றம் தருகிறதா?

மார்க்கண்டேயர் கட்ஜு : ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது.

கரன் தாப்பர்: உங்களுக்கு ஊடகங்கள் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லையா?

மார்க்கண்டேயர் கட்ஜு: நிச்சயமாக இல்லை.

கரன் தாப்பர்: உண்மையாகவா சொல்கிறீர்கள்?

மார்க்கண்டேயர் கட்ஜு : உண்மையாகவே எனக்கு ஊடகங்கள் பற்றி நல்ல அபிப்பிராயம் இலலை. மக்கள் நலனுக்காக ஊடகங்கள் பணியாற்ற வேண்டும். ஆனால், அவர்கள் அப்படி இல்லை. சில நேரங்களில் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதையும் பார்க்கிறேன்.

கரன் தாப்பர்: உண்மையான தகவல்களை பாரபட்சம் இல்லாத முறையில் வழங்குவது ஊடகங்களின் கடமை என்று அந்தச் சந்திப்பில் குறிப்பிட்டீர்கள். ஊடகங்கள் நேர்மையாகச் செயல்படவில்லையா, அல்லது அது போதுமானதாக இல்லையா?

மார்க்கண்டேயர் கட்ஜு : ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாற்றம் நேர்ந்து கொண்டிருக்கிறது.  நில பிரபுத்துவ சமூகமாக இருந்த இந்தியா இன்றைக்கு நவீன தொழில்சார் சமுதாயமாக மாறும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இது வலிகள் மிகுந்த காலகட்டம். முன்பு ஐரோப்பா இதே மாற்றத்தைச் சந்தித்த நேரத்தில், மக்களுக்கு அந்த வலியைக் குறைக்கும் வகையில் அங்குள்ள ஊடகங்கள் செயல்பட்டன.

கரன் தாப்பர் :இந்தியாவில் அப்படி நடக்கவில்லை என்கிறீர்களா?

மார்க்கண்டேயர் கட்ஜு : இங்கே அதற்கு தலைகீழாக நடக்கிறது. ஐரோப்பாவில் ரூசோ, தாமஸ் பய்ன், திதரோ மாதிரி எழுத்தாளர்கள் மக்களை மாற்றத்துக்கு தயார் செய்தார்கள். “இந்த நாட்டிலுள்ள கடைசி சாமியாரின் குடலை உருவி அதை கடைசி மன்னனின் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கவிடும் வரையில் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காது” என்று முழங்கினான் பிரஞ்சு சிந்தனையாளன் திதரோ.

கரன் தாப்பர் : அவர்களோடு ஒப்பிட்டால் இந்தியாவின் வரலாற்று மாற்றத்துக்கு நமது ஊடகங்களின் பங்களிப்பு எப்படி?

மார்க்கண்டேயர் கட்ஜு : இந்திய ஊடகங்கள் பெரும்பாலான நேரங்களில் மக்களுக்கு எதிரான நிலை எடுப்பதைப் பார்க்கிறேன். மூன்று உதாரணம் காட்டலாம். முதலாவது, பற்றி எரியும் உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை ஊடகங்கள் திசை திருப்புகிறது. இங்கே பிரச்னைகள் எல்லாமே பொருளாதார அடிப்படையிலானவை. நம் மக்களில் இன்னமும் 80 சதவீதம் பேர் வறுமை, வேலையின்மை, விலைவாசி, நோய்களால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். அந்தப் பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து தீர்வு காணத் தூண்டாமல், பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புகிறது ஊடகங்கள். சினிமா நட்சத்திரங்கள், அழகிப் போட்டி, கிரிக்கெட் மாதிரியான சமாச்சாரங்களை பெரிதுபடுத்தி நாட்டுக்கு அத்தியாவசியமானது, அந்த விஷயங்கள்தான் என்பதுபோல் ஒரு பிரமையை உண்டாக்குகிறது.

கரன் தாப்பர் : ஃபேஷன், சினிமா, கிரிக்கெட் ஆகியவற்றை மக்களுக்கு போதையேற்ற ஊடகங்கள் பயன்படுத்துகிறது என்கிறீர்களா?

மார்க்கண்டேயர் கட்ஜு : ஆமாம். கிரிக்கெட் நமது மக்களுக்கு ஒரு போதைப் பொருள். ஒப்பியம் மாதிரி. ரோமாபுரி பேரரசன் சொல்வானாம், ‘மக்களுக்கு ரொட்டி கொடுக்க வழியில்லை என்றால் சர்க்கஸ் பார்க்க ஏற்பாடு செய்’ என்று. இந்தியாவில் மக்களுக்குத் தேவையானதைக் கொடுக்க முடியாவிட்டால் அவர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கிறோம். நிறைய ஊடகங்களில் இரவு பகல் எந்த நேரமும் ஏதாவது கிரிக்கெட் மேட்ச் ஓடிக் கொண்டே இருக்கிறது, அதுதான் நாட்டின் ஒரே பிரச்சினை மாதிரி.

கரன் தாப்பர் : மக்கள் விரோதமாக ஊடகங்கள் செயல்படு வதைக் காட்டும் இன்னும் இரண்டு பிரச்சினைகள் என்னென்ன?

மார்க்கண்டேயர் கட்ஜு : இரண்டாவது அநேக நேரங்களில் மக்களை பிளவுபடுத்துகிறது ஊடகங்கள். இங்கே பல தரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ முடியும். ஆனால் என்ன நடக்கிறது? ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் குண்டு வைத்தது நாங்கள் தான் என்ற இந்தியன் முஜாஹிதின் கூறுகிறது அல்லது ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல்ஜிஹாத் அமைப்பு கூறுகிறது என்று ஏதோ ஒரு முஸ்லீம் பெயரை சேனல்கள் சொல்கின்றன. அதற்குள் எப்படித் தெரியும் என்றால் எஸ்.எம்.எஸ்.  வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள். எஸ்.எம்.எஸ், இ.மெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக தொலைக் காட்சிகளில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது? முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டு மொத்த கொடூரகாரர்களாக மாதிரி சித்தரிக்கிறது ஊடகங்கள். எந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.

கரன் தாப்பர் : ஊடகங்கள் இந்த விஷயத்தில் அலட்சியமாக நடக்கிறது. தகவல் உண்மையா என்பதை சரி பார்க்காமல் செய்தி வெளியிடுகிறது என்கிறீர்களா அல்லது வேண்டுமென்றே அப்படிச் செய்வதாக நினைக்கிறீர்களா?

மார்க்கண்டேயர் கட்ஜு : மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த ஊடகம் வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.

கரன் தாப்பர் : ஊடகங்கள் வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்?

மார்க்கண்டேயர் கட்ஜு : குண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்.எம்.எஸ். வந்தது என்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக ஊடகங்கள் சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்?

ஒரு நிலபுரபுத்துவ சமூகம் - நவீன சமூகமாக மாறுகிற காலகட்டத்தில் அந்த மக்களும் நாடும் முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு அறிவியல் சிந்தனை பரவ வேண்டும். அதற்கு ஊடகங்கள் உதவ வேண்டும். ஐரோப்பாவில் நடந்ததை சொன்னேன். இங்கே என்ன நடக்கிறது? அறிவியல் சிந்தனையை தூண்டுவதற்கு பதில் ஜோசியம், மூட நம்பிக்கை போன்ற அறிவியலுக்கு எதிரான விஷயங்களை பரப்புகிறது ஊடகங்கள். ஏற்கனவே நமது நாட்டில் 80 சதவீத மக்கள் சாதி, மதம், மூடநம்பிக்கை போன்ற விஷயங்களில் சிக்கி மனரீதியாக பின் தங்கி நிற்கிறார்கள். அவர்களை அந்த மாயைகளில் இருந்து விடுவித்து ஒரு மேம்பட்ட சிந்தனை வட்டத்துக்குக் கொண்டுவர, முற்போக்கான எண்ணங்கள் உருவாக ஊடகங்கள் தூண்டுதலாக இருக்க வேண்டுமா, வேண்டாமா?  ஆனால், மக்களை இன்னும் மடையர்களாக்கும் வேலையை நமது மீடியா செய்கிறது. பல அலைவரிசைகளில் பெரும்பாலான நேரம் சோதிடம் ஓடுகிறது. இன்றைக்கு நீங்கள் இந்த கல் மோதிரம் போட வேண்டும், இன்ன கலர் சட்டை அணிந்தால் நீங்கள் இறங்கும் காரியம் வெற்றி என்றெல்லாம் அபத்தமாக சொல்லி மக்களின் மூளையை மழுங்கடிக்கிறார்கள். என்ன பேத்தல் இது!

கரன் தாப்பர் : ஆக, ஊடகங்கள் என்ன செய்ய வேண்டும் என சமுதாயம் எதிர்பார்க்கிறதோ அதை செய்யவில்லை என்கிறீர்கள். தன்னை நம்பிய இந்தியாவை ஊடகங்கள் கைவிட்டுவிட்டதாக எடுத்துக் கொள்ளலாமா?

மார்க்கண்டேயர் கட்ஜு : ஒரு பெரிய சமுதாய மாற்றத்தில் ஊடகங்களின் பங்களிப்பு அபாரமானதாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஊடகம் என்பது ஏதோ சாமான் உற்பத்தி செய்து சந்தையில் விற்கும் சாதாரணமான வியாபாரம் கிடையாது. அறிவு சம்பந்தப்பட்டது. சிந்தனை சம்பந்தப்பட்டது. மக்களுக்கு அறிவியல் அடிப்படையிலான புதிய சிந்தனைகள் உருவாக தூண்டுகோலாக செயல்படும் புனிதமான பணி ஊடகங்களுக்கு தரப்பட்டிருக்கிறது. அந்தப் பொறுப்பை அது செய்ய தவறினால் நாஙட்டை மக்களை கைவிட்டுவிட்டதாகத்தானே அர்த்தம்?

கரன் தாப்பர் : இந்தியாவை இன்னும் மோசமாக்குகிறது ஊடகங்கள் என்றா சொல்கிறீர்கள்?

மார்க்கண்டேயர் கட்ஜு : அதுதான் என் மதிப்பீடு. ஒரு சோதிடர் உட்கார்ந்துகொண்டு, ‘இது அந்த ராசி, அது அணிந்தால் உங்களுக்கு ராசி’ என கதை அளந்து கொண்டிருப்பதை எத்தனை அலைவரிசைகளில் பார்க்கிறோம்.

கரன் தாப்பர் : ‘செய்தியை சரியாக சொல்வதில்லை; உண்மைகளை இஷ்டத்துக்கு திரித்துக் கூறுகிறது; கருத்தையும் வார்த்தைகளையும் வெட்டி ஒட்டி வேறு அர்த்தம் கொடுக்கிறது’ என்பது ஊடகங்கள் பற்றிய மக்களின் எண்ணம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மார்க்கண்டேயர் கட்ஜு : அதேதான் என் கருத்தும். 2009 தேர்தலில் பார்த்தோம். முன்பெல்லாம் செய்தியாளர்கள் வேட்பாளரைப் பார்த்து, ‘எனக்கு பத்தாயிரம் கொடு; உனக்கு சாதகமாக செய்தி போடுகிறோம்’ என்று பேரம் பேசினார்கள். அதைப் பார்த்து பத்திரிகை உரிமையாளர்களுக்கு வேறு சிந்தனை உதித்தது. ‘நாம்தான் சம்பளம் கொடுக்கிறோமே, செய்தி யாளர்கள் இப்படியும் சம்பாதிக்க ஏன் இடமளிக்க வேண்டும்? நாமே சம்பாதிக்கலாமே?’ என்று முடிவு செய்து ‘ஒரு கோடி கொடுங்கள், நான் ஒரு பேக்கேஜ் தருகிறேன்’ என்று ஒப்பந்தம்  போடுகிறார்கள். ஒரு பத்திரிகையில் “வேட்பாளர் ‘ஏ’ அமோக வெற்றி பெறுவார்” என்ற செய்தி மேலே; “அவருக்கு டெபாசிட் போய்விடும், ‘பி’தான் வெற்றி பெறுவார்!” என்று கீழே முதல் பக்கத்திலேயே பிரசுரமான விசித்திரத்தைப் பார்த்தோம். கண்ணை விற்று சித்திரம் வாங்கும் வேலை.

இந்த மாதிரி பிரச்சினைகளுக்கு தீர்வு காண நீதிபதி வர்மா தலைமையில் செய்தி பரப்புவோர் சங்கம் அமைத்து சுயமாக சில கட்டுப்பாடுகளை கொண்டு வர முயற்சி செய்தார்கள்....

அதில் எந்த பலனும் ஏற்பட்டதாக தெரிய வில்லையே. நீங்கள் தொழில் நடத்துவது ஏழைகள் வாழும் நாட்டில்; அதனால் அவர்களுடைய பிரச்னை களுக்கு முன்னுரிமை கொடுத்தாக வேண்டும்; அதை விடுத்து ‘லேடி காகா வந்து விட்டார்... கரீனா கபூர் தனது மெழுகு சிலையை மிகவும் சிலாகித்தார்...’ இதெல்லாமா முக்கிய செய்தி ஆவது?

கரன் தாப்பர் : ஊடகங்கள் ஏன் மாறவில்லை என்று நினைக்கிறீர்கள்?

மார்க்கண்டேயர் கட்ஜு : அவர்களுக்கு எந்த பயமும்இல்லை. அது ஒரு காரணம். கொஞ்சமாவது பயம் இருக்க வேண்டும். தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற பயம்.

கரன் தாப்பர் : அதற்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?

மார்க்கண்டேயர் கட்ஜு : பத்திரிகைகளை மட்டும் தான் பிரஸ் கவுன்சில் இப்போது கேள்வி கேட்க முடியும். பிரஸ் கவுன்சில் பெயரை ஊடகங்கள் கவுன்சில் என மாற்றி தொலைக்காட்சி அலைவரிசைகளையும் அதன் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். சொல்லித் திருந்தாத ஊடக நிறுவனத்துக்கு அரசு விளம்பரங்களை நிறுத்துவது; உரிமங்களை குறிப்பிட்ட காலத்துக்கு முடக்கி வைப்பது போன்ற தண்டனை அளிக்க அந்த கவுன்சிலுக்கு அதிகாரம் வேண்டும். பிரதமருக்கு எழுதியிருக்கிறேன்.

கரன் தாப்பர் : அது பத்திரிகை சுதந்திரத்தை பாதிக்கும் என்பார்களே?

மார்க்கண்டேயர் கட்ஜு : ஜனநாயகத்தில் எல்லோரும் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். எந்த சுதந்திரமும் எல்லையில்லாதது அல்ல. சில கட்டுப்பாடுகள் இருந்தாக வேண்டும். ஊடகங்கள் இதை உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நல்லது.

கரன் தாப்பர் : ஊடகங்களை உங்களுக்கு சுத்தமாக பிடிக்காது போலிருக்கிறதே?

மார்க்கண்டேயர் கட்ஜு : நான் ரொம்பவும் மதிக்கிற சில ஊடகங்களும் இருக்கின்றன. உதாரணமாக சாய்நாத்தை சொல்லலாம். அவர் மேல் எனக்கு ரொம்ப மரியாதை உண்டு. விவசாயிகள் தற்கொலை பற்றி நிறைய எழுதியிருக்கிறார். ஆனால், அப்படிப்பட்ட ஆட்கள் குறைவு. பெரும்பாலான செய்தியாளர்கள் அரைகுறையாகத்தான் இருக்கிறார்கள். பொருளாதாரக் கொள்கை, அரசியல் விஞ்ஞானம், இலக்கியம், தத்துவம் போன்றவற்றில் ஆழ்ந்த அறிவு இல்லாதவர்கள்.

Comments

6 comments

6
jayakumar
100% சரியான விமர்சனம்.கருவாடு விதத காசு நாராது.சரியானதை தப்பு என்ற்ம் தப்பை சரி எனற்ம் எழுதுவது பின்னர் அவர்கள் சொன்னார்கள் என்று எவன் மிது பழி போடுவது கை வந்த கலை.
malavai kani
மிகவும் அருமயான கட்டுரை இது பாரட்டுகுரியது1
Bala
மிகவும் உயர்ந்த கருத்துக்கல், உன்மையாக அடிதட்டு மக்கலை நேசிக்கும் ஒரு நல்ல உல்லம். மிக சிரந்த கட்டுரை.
prabakar
intha maathiri oru sila nallavargal naatil iruppathaal thaan naattil mazhai peigirathu.

"" கரன் தாப்பர் : ஊடகங்களை உங்களுக்கு சுத்தமாக பிடிக்காது போலிருக்கிறதே? ""

yaaravathu mediayavai pattri kurai sonnal avargal othukollvadhillai...!!
oru press council thalaivaraiye intha kelvi ketkuraanunga...!! matravargal kettal avargal gathi avvalavu thaan.........!!
இராமியா
இக்கட்டுரையும் பின்னூட்டங்களும் சரியானவையே. ஆனால் முழுமையானவை அல்ல. மிக மிக....மிக முக்கியமான ஒன்றைத் திரு.மார்கண்டேய கட்ஜு குறிப்பிடவில்லை. பார்ப்பனர்களில் நல்லவர்கள், முற்போக்கானவர்கள் என்று வேஷம் போடுகிறவர்களின் உண்மைத் தன்மையை அறியும் சோதனை தான் அது. பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களும் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி சொகுசான வேலைகளச் செய்யவும், அதன் விளைவாக சூத்திரர்களில் உள்ள திறமைசாலிகள் அவர்களுக்கு உரிய உயர் இடங்களை அடைய முடியாதபடி செய்யவுமான விசை இந்நாட்டில் இருக்கிறது. அதற்கு எதிராக திரு.கட்ஜு மூச்சு கூட விடவில்லை. சொல்லப் போனால் சாதி அமைப்பு தன் வலிமையை இழந்து விட்டது என்று அவர் (வேறு ஒரு இடத்தில்) கூறியிருப்பதன் மூலம் சாதியக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் முனை மழுங்ககிப் போக வேண்டும் என்ற தன் விருப்பத்தைப அவர் பதிவு செய்யத் தவறவில்லை. எவ்விதமான அநியாயங்களுக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும் சரி, அதில் பார்ப்பனர்களைச் சேர்க்காமல் இருப்பது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும். அப்பொழுது பார்ப்பனர்களில் நல்லவர்கள் இருப்பார்களே அவர்களை ஏன் விலக்க வேண்டும் என்ற வினா எழவே செய்யும். அவர்களில் உள்ள நல்லவர்களும், முற்போக்கானவர்களும், அவர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்ப முடியாதபடி செய்வதற்கான வேலைகளை மட்டும் செய்தால் போதும். மற்ற வேலைகளை நாம் பார்த்துக் கொள்ளலாம். விபீஷணன் இராவணன், இந்திரஜித் மற்றும் பிறருடைய வலிமைகளின் இரகசியங்களை ‌வெளியிட்டுத் தான் இராமனிடம் நிலைத்து இருக்க முடிந்ததே ஒழிய, இராமனுக்கு ஏற்கனவே தெரிந்தவற்றை மட்டும் கூறி நிலைத்து இருக்க முடியவில்லை. திரு.மார்கண்டேய கட்ஜுவிற்கு இந்திய சமூகத்தைச் சீரழிவிலிருந்து மீட்க வேண்டும் என்று உண்மையிலேயே அக்கறை இருந்தால் பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்ப முடியாதபடியான வழிவகைகளைக் காணட்டும். அதன் மூலம் சூத்தரர்களில் உள்ள திறமைசாலிகள் உயர்நிலைகளுக்குச் செல்வதில் உள்ள தடைகளை நீக்கட்டும்.மற்ற சீர்கேடுகளைக் களைவதைப் பற்றிப் பார்ப்பனரல்லாத மற்றவர்கள் பார்த்துக் கொள்கிறோம்.
Maran
இதில் இன்னும் கவனிக்க வேன்டியது அரசியல் கட்சிகள் சொந்தகமாக நடத்தும் மீடியாக்க்ள் செய்திகளை திரித்தும் பொய்யுமாக பறப்பவுதும் உடனடியாக நிருத்தப்பட வேன்டும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.