அ.ஜெகநாதன் எழுதிய “இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும்” கட்டுரை படித்தேன். 1932 பூனா ஒப்பந்தம் தலித்துகளுக்கு எதிரானது, காந்திஜி தலித்துகளின் விரோதி, பிற்காலத்தில் அம்பேத்கர் மீண்டும் இரட்டை வாக்குரிமை கோரிக்கையை வலியுறுத்தினார் - இந்த மூன்று விசயங்களை முன்னிறுத்துவதே கட்டுரையின் ஒரே நோக்கமாக உள்ளது. இந்த மூன்றும் உண்மையல்ல என்பதுதான் எனது கருத்தாகும். “காந்திஜி - அம்பேத்கர் - மோதலும் சமரசமும்” என்கிற எனது நூலில் இது பற்றி விரிவாகப் பேசியுள்ளேன்.
இந்த கட்டுரையில்கூட கட்டுரையாளரின் சில அழுத்தமான சிந்தனைகள் வெளிப்பட்டிருக்கும் அளவிற்கு அவற்றுக்கான ஆதாரங்கள் தரப்படவில்லை.
“காந்திஜியின் இந்த தலித் படுகொலை பூனா ஒப்பந்தம் எனும் பெயரில் இன்றும் வரலாற்றில் ரத்த வாடையோடு ஒட்டியிருக்கிறது” என்று தனது கோப ஆவேசத்தை காட்டியிருக்கிறார். பூனா ஒப்பந்தத்திற்கு முன்பு தலித்துகளை பொறுத்தவரை இருந்த நிலைமை என்ன, பிரிட்டீஷ் ஏகாதிபத்திய அரசு தரமுன்வந்தது என்ன, பூனா ஒப்பந்தத்தில் கிடைத்தது என்ன - என்று சகலத்தையும் சேர்த்து வைத்துப் பார்க்கிற எதார்த்தப்பூர்வமான கண்ணோட்டம் கட்டுரையாளருக்கு இல்லை.
“ரத்த வாடை அடிக்கும் ஒப்பந்தம்” என்றால் அதில் கையெழுத்திட்ட காங்கிரஸ் தலைவர்களோடு சேர்த்து அம்பேத்கர், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா ஆகிய தலித் தலைவர்களையும் அவமதிக்கிறோம் என்கிற உணர்வுகூட இல்லை. “அம்பேத்கரால் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை” என்று அவரை மிகப் பலவீனமானவராக சித்தரிக்கிறார். உண்மை முற்றிலும் மாறானது. காந்திஜியின் உண்ணாவிரதத்தின்போது மிகுந்த உறுதிப்பாட்டைக் காண்பித்தவர் அவர். தலித் மக்களுக்காக எவ்வளவு உரிமைகளை பெற முடியுமோ அவ்வளவையும் பெற முயற்சித்தார். அதே நேரத்தில் அன்றைய சூழலைப் புரிந்து கொண்டு கிடைப்பதையும் இழக்க அவர் தயாராக இல்லை. கட்டுரையாளர் காட்டும் முரட்டு ஆவேசம் அவரிடம் இல்லை. அவரின் சாதுரியத்திற்கு கிடைத்த வெற்றி பூனா ஒப்பந்தம். அதற்குப் பிறகுதான் மாகாண, மத்திய சட்டசபைகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பெருமளவு பிரதிநிதித்துவம் கிடைத்தது என்பது வரலாறாகும்.
1950 வரை இந்த ஒப்பந்தமே நடைமுறையில் இருந்தது என்பதும் அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும். காந்திஜியை மிக மோசமானவராக சித்தரித்துக் கொண்டே போகிறார் கட்டுரையாளர். “காந்தியம்” எனப்படும் அவரின் சித்தாந்த நிலைப்பாட்டை ஒப்புக் கொண்டவனல்ல நான். ஆனால் அவரது காலத்தில் காங்கிரசில் அவரே அரசியல் விவகாரங்களோடு சமூக விசயத்திலும் ஆழ்ந்த அக்கறை காட்டினார் என்பது மறுக்க முடியாத மெய்ப் பொருளாகும். பூனா ஒப்பந்தத்திற்குப் பிறகே “அரிசன இயக்கம்” எனப்பட்டதை காங்கிரஸ் என்கிற அரசியல் கட்சி நடத்தியது.
1930களில் நடைபெற்ற அந்த இயக்கத்தை இன்றைய புதுவிழிப்புணர்வு கொண்டு கணிக்கக்கூடாது அதற்கு முன்பிருந்த வெட்ட வெளியை மனதில் கொண்டே அதை அணுகவேண்டும். நானோ, இந்த கட்டுரையாளரோ அன்றைக்குப் பிறந்திருக்கக்கூட மாட்டோம். தமிழகத்தின் மதுரை மீனாட்சி கோவிலும் சிதம்பரம் நடராஜர் கோவிலும்கூட அன்றைக்கு தலித்துகளுக்கு திறந்து விடப்படவில்லை என்பதை மனதில் கொள்ளாமல் காந்திஜியைப் பற்றி மதிப்பீடு செய்ய முயன்றால், அப்படி முயலுகிறவரின் அறியாமையே வெளிப்படும். எந்தப் பூனாவில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டதோ அதே நகரில் 1934ல் காந்திஜியைக் கொல்ல வருணாசிரமவாதிகள் முயன்றார்கள், அதில் ஏழுபேர் காயமடைந்தனர். நல்லவேளையாக காந்திஜி உயிர் தப்பியதை கட்டுரையாளரின் பார்வைக்கு சமர்ப்பிப்போம். ஆர்.எஸ்.எஸ்- இந்துமகாசபையைச் சார்ந்த கோட்சேயே அவரின் உயிரைப் பறித்தான் என்பதைக்கூட மறந்துபோன கட்டுரையாளர் இதைக் கவனத்தில் கொள்வாரோ என்னவோ? கட்டுரையாளரை விட இந்துத்துவவாதிகள் காந்திஜியை சரியாகவே கணித்திருந்தார்கள் - தங்களது எதிரியாகவே பாவித்திருந்தார்கள் என்பதைக் காலம் மெய்ப்பித்தது.
“1942லிருந்து 1956வரை அம்பேத்கர் இரட்டை வாக்குரிமை கோரிக்கையை மீண்டும் மீண்டும் எழுப்பிக் கொண்டே இருந்திருக்கிறார்” என்று முத்தாய்ப்பாக எழுதியிருக்கிறார் கட்டுரையாளர். இந்த முடிந்த முடிபான கருத்துக்கு இவர் கொடுத்திருக்கிற ஆதாரங்கள் என்று பார்த்தால் துண்டு துக்காளியான சில வாக்கியங்களே, வார்த்தைகளே. 1942க்கு பிறகு மீண்டும் அம்பேத்கர் இரட்டை வாக்குரிமையை விரும்பினார் என்றால், பூனா ஒப்பந்தத்தை நிராகரித்திருந்தார் என்றால், அதே காந்திஜி பரிந்துரையின் பேரில் அவர் மத்திய அரசில் சட்ட மந்திரியாக ஆனது ஏன்? அரசியல் சாசனத்தின் வரைவுக்குழுத் தலைவராக ஆனது ஏன்? அதில் இரட்டை வாக்குரிமையைச் சேர்க்காதது ஏன்? - இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தேட முயலவில்லை கட்டுரையாளர். 1950களிலும் இரட்டை வாக்குரிமைக்காக பெரிய இயக்கம் எதையும் அம்பேத்கர் நடத்தியதில்லை என்கிற இமயம் போன்ற உண்மையை எந்த சல்லாத் துணியாலும் மறைக்க முடியாது.
இப்போது வேண்டும் இரட்டை வாக்குரிமை என்கிற வாதத்திற்கு பழைய காலத்திற்குள் சென்று சாட்சியம் சேகரிப்பதை விட, தற்கால வாழ்வில் அதற்கு தேவை இருக்கிறது என நிருபிக்கப் பார்க்கலாமே எனத் தோன்றும். கட்டுரையாளர் அதற்குள் செல்லவில்லை. அதற்குள் சென்றாலும் நிரூபிப்பது கடினம் என்பதே எனது கருத்து. வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை இல்லாத காலத்தில் எழுப்பப்பட்ட அந்த கோரிக்கை இப்போது காலாவதியாகிப் போனது. ஒற்றை வாக்குரிமையை உருப்படியாக பயன்படுத்துவது எப்படி என யோசிக்க வேண்டிய காலத்தில் இரட்டை வாக்குரிமை என்பது காரிய சாத்தியமானதாகவும் இருக்காது, தலித் மக்களுக்கு மெய்யான விடுதலைத் திறவுகோலாகவும் இருக்காது.
தலித் அல்லாதவோரில் உள்ள முற்போக்கு நெஞ்சங்களை தலித் பிரச்சினைபால் ஈர்க்க வேண்டும் என்கிற கண்ணோட்டம் இல்லாதவர்களுக்கே, தலித் மக்களை ஜனநாயக நீரோட்டத்திலிருந்து பிரித்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களுக்கே இது கவர்ச்சிகரமான கோஷமாக இருக்கும். கட்டுரையாளருக்கும் அத்தகைய சிந்தனை உண்டு என்பதை வலதுசாரிகளோடு சேர்த்து “இடது, தமிழ்த் தேசிய, ஜனநாயக, பெண்ணிய சக்திகள்” எனச் சகலரையும் தாக்குவதில் காணலாம். தலித் மக்களின் தற்காலத்திய மெய்யான கோரிக்கைகள் வேறு. பஞ்சமி நில மீட்பிலிருந்து தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு என்பது வரை அது விரிந்து கிடக்கிறது. அதற்குள் நுழையாமல் இருப்பவர்களுக்கும் இது ஒரு நொண்டிக் காரணமாக அமையக் கூடும்.
எனது நூலில் கீழ்வரும் வேண்டுகோள் உண்டு. அதையே இங்கு முன் வைக்கிறேன் – “தீவிரத் தன்மையான கோஷங்களுக்கு எப்போதுமே ஒரு கவர்ச்சி இருக்கும். ஆனால், அதில் பயணப்பட்டு பாதி வழியில் அதன் வெறுமைத் தன்மை தெரிய வரும்போது விரக்தியே மிஞ்சும். அத்தகைய பாதையில் நடை போடவேண்டாம் என்று தலித் தலைவர்களை உரிமையோடு கேட்டுக் கொள்வோம்.”