.... இப்படியாக 25 வது இதழை எட்டியிருக்கிறது புதுவிசை. ஒரு காலாண்டிதழ் தொடங்கப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகளில் 25 இதழ் மட்டுமே வெளியாகியிருப்பது கொண்டாட்டத்திற்குரிய விசயமல்ல. என்றாலும் தமிழக கருத்தியல் தளத்தில் புதுவிசையும் சிறு பங்களிப்பைச் செய்து வருகிறது என்கிற நம்பிக்கை தரும் மகிழ்ச்சியை யாவருடனும் பகிர்ந்து கொள்கிறோம்.

எழுத்தாளர்கள், ஓவியர்கள், வாசகர்கள், விற்பனையாளர்கள்,  ஜோல்னாப் பையில் சுமந்து சிறுகச்சிறுக விற்று சேர்ந்தாற்போல் தொகையனுப்புகிற பிரியத்திற்குரிய தோழர்கள், விளம்பரதாரர்கள், கொண்டு சேர்க்கும் கூரியர் நிறுவனத்தார்  என இவ்வளவுபேரின் அக்கறைகளையும் கூட்டுழைப்பையும் மிகுந்த கவனத்துடன் நினைவிற் கொண்டுள்ளது புதுவிசை.

இந்த 25 இதழ்களின் வழியாக புதுவிசையின் முகம் என்னவாக வடிவு பெற்றிருக்கிறது என்று மதிப்பீடு செய்ய இன்னும் சற்று காலம் தேவைப் படலாம்தான். ஆனால் முதல் இதழின் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்த நோக்கங்களின் மையத்திலிருந்து விலகாமல்- சமூக அசைவியக்கத்தை ஒரு முன்னேற்றகரமான பாதையில் கொண்டு செலுத்த விரும்பும் சக்திகளுக்கு புதுவிசை எப்பொழுதும் துணை நிற்கிறது. நாகரீக சமூகத்தை கட்டியெழுப்ப முன்னெழுந்துப் பாயும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் தீர்மானகரமான சார்பு நிலை எடுத்து செயல்படுவதில் தனக்குள்ள விருப்பார்வத்தை இத்தருணத்தில் புதுவிசை மறுவுறுதி செய்கிறது.

வாழும் காலத்தின் நெருக்கடிகளையும் கொண்டாட்டங்களையும் தத்தமது சொந்தக்குரலிலும் மொழியிலும் தம்முயிர் பிசைந்த வண்ணத்திலும் வெளிப் படுத்திடும் எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் களச் செயற்பாட்டாளர்களுக்கும் பண்பாட்டு ஊழியர்களுக்கும் இயங்குதளமாக  செயல்பட வேண்டிய வரலாற்றுப் பாத்திரத்தை அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் வகிக்க வேண்டியிருக்கிறது. எனவே உள்ளடக்கத்திலும் வடிவத்திலும் பெரும்பாய்ச்சல் கொண்ட இன்னும் நூறுநூறு பத்திரிகைகள் தேவைப்படும் இத்தருணத்தில் இவ்விடம் நின்று புதுவிசை தன் பொறுப்பை முன்னிலும் கூடுதலாய் உணர்கிறது.

புதுவிசை காட்டுகிற திசையில்தான் பொழுது விடியும் என்கிற அசாத்திய நம்பிக்கையேதும் எமக்கில்லாவிடினும், விடிவதையும் அமர்வதையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதற்காக புதுவிசை வந்து கொண்டிருக்கவில்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்..

- ஆசிரியர் குழு 

Pin It