மொழியாக்கம் என்பது மூல நூலின் கலாச்சாரத்தை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்று பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘நல்லி - திசை எட்டும்’ மொழியாக்க செம்மை விருதுகள் வழங்கும் விழாவில் மொழியாக்க அறிஞர்கள் குறிப்பிட்டனர்.

மொழியாக்கம் என்பது மனித குலத்தை முன் எடுத்து செல்லக்கூடிய சிந்தனைகளை ஒரு சமூகத்தில் இருந்து மற்றொரு சமூகத்திற்கு கொண்டு செல்லும் பணியை செய்கிறது. ஒரு சிற்பி எவ்வாறு கையில் கிடைக்கும் ஒரு கல்லை தனது எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப சிலையாக வடிக்கிறானோ அதே போல் வேறோரு மொழியில் இருக்கக்கூடிய கருத்துக்களை அதன் மூலம் மாறாமல் தனது மொழிக்கு கொண்டு வருவதே சிறந்த மொழியாக்கம் ஆகும் என்று எழுத்தாளர் விஜயக்குமார் குனிசேரி தனது முன்னுரையுடன் தலைமையுரையை ஆற்றினார்.

இந்தியாவிற்கு என்று ஒரு கலாசாரம் பண்பாடு இருக்கிறது என்றாலும் அதிலும் உட்கூறுகள் ஏராளமாக இருக்கிறது. அது ஒவ்வொன்றும் அதன் மொழி கலாசாரத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. வேறுபட்ட பண்பாடு என்று சொல்லும் போது வேறுபாடு இருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. உதாராணமாக மலையாளம், தமிழ் இணைந்த பண்பாடு மற்றும் ஒன்றின் ஒன்று வாரிசாக இருந்தாலும் கூட அதிலும் மாறுபடுகிறது. கேரள நம்பூதிரிகளின் வழக்கத்தை எடுத்துக் கொண்டால் அதில் ஏராளமான கூறுகள் இருக்கிறது. அச்சன் நம்பூதிரி என்பவன் குடும்பத்தில் மூத்தவனாக இருப்பவன். அவ்வன் நம்பூதிரி என்பவன் தம்பியாக இருப்பவன். இது அவர்களின் குடும்பத்தினர் மட்டும் வழக்கத்தில் கொண்டிருக்கும் சொல். இதற்கு மலையாள அகராதியைப் பார்த்தால் அர்த்தம் இருக்காது. அந்தர்ஜனம் என்றால் நம்பூதிரி இல்லத்துப் பெண்கள், வைசியம் என்றால் இல்லத்தார் நித்தம் செய்ய வேண்டிய ஓமம், தர்ப்பணம் ஆகியவைகளை குறிப்பதாகும். அப்படி மொழிபெயர்ப்பு என்பது வார்த்தைகளை வைத்து அப்படியே மொழிபெயர்ப்பு செய்திட முடியாது. அவர்களின் கலாசாரத்தோடு ஊடுருவிச் சென்று பார்த்தால்தான் அதனை சரியாக புரிந்து கொள்ள முடியும் என மொழியாக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி மாணவர்களுடன் மொழிபெயர்ப்பாளர்களின் கலந்துரையாடலை சிற்பி பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

மொழிபெயர்ப்பு என்பது ஒரு மூலநூல் போல இருக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த மூலநூலைப் போலவும் இருக்க வேண்டும். அதுதான் மொழிபெயர்ப்புக்கு உண்மையான விளக்கம். வரலாறு என்பது மிகவும் முக்கியம். இந்தியாவில் 1947 க்கும் பின் வரலாறே கிடையாது என்பது போலத்தான் அரசும் நினைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய வரலாறை ஒவ்வொருவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது படிக்க வைக்க வேண்டும் என தனது கோரிக்கையையும் மன்றத்தின் முன் வைத்து உரையை நிறைவு செய்தார்.

ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்க நல்ல அகராதி இல்லை. பல வார்த்தைகளை இன்னும் தவறான புரிதலிலேயே கையாண்டு வருகிறோம். உதாராணமாக ஆங்கிலத்தில் இருக்கும் vice chancellor  என்பதற்கு துணைவேந்தர் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது சரிதானா? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். நீதி மன்றத்தில் நீதிபதிக்கு முன்பு ஒரு வேலி போன்று அடைக்கப்பட்டிருக்கும். ஏனென்றால் யாரும் மிக அருகில் நெருங்கிச் செல்லக்கூடாது என்றிருந்தது. அதற்கு அதையும் மீறி யாரும் சென்று விடக்கூடாது என்பதற்கு ஒருவரை நியமித்திருப்பர். அவருக்கு பெயர் chance er. அதாவது காவலாளி என்பதுதான் அதன் பொருளாகும். அப்படி chance er என்பதில் இருந்து chancellor என வந்தது. இதில் வேறு வேந்தர், துணைவேந்தர், இணைவேந்தர் என பதவிகள் . இது எப்படி சரியான அர்த்தத்தை கொடுக்கும். அது பிரிட்டிஷார் அவர்களின் வசதிக்காக வைத்துக் கொண்டது. அதை ஏன் நாம் இன்றும் தூக்கி சுமக்க வேண்டும். செம்மொழித் தமிழில் நல்ல வார்த்தைகளே கிடைக்கவில்லையா?. இது போன்று பல ஆங்கில வார்த்தைகளுக்கு குருட்டுத் தனமான பொருள் இருந்து வருகிறது. இதனை மாற்றிட மொழிபெயர்ப் பாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் இணைந்து ஒரு நல்ல தமிழ் அகராதியை உருவாக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை அரங்கத்தின் முன் வைத்து உரையை நிறைவு செய்தார் அமெரிக்க கவிதைகளை மொழியெர்த்து வரும் இரா. கணபதி.

பொதுவாக வரலாற்று ஆவணங்களை மொழிபெயர்ப்பு செய்யும்போது அடிக்குறிப்புப் போடுவது மிகவும் முக்கியம். அப்போதுதான் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். சில பெயர்ச்சொற்களை அப்படியே மொழிபெயர்க்கலாம். தேவைக்கு ஏற்ப அடிக்குறிப்பும் போட்டுக் கொள்ளலாம். பஸ்சை பேருந்து என்கிறோம், மினி பஸ்சை சிற்றுந்து என்கிறோம். ஆனால் காரை மகிழ்வுந்து என்கிறோம். ஆனால் அதே காரில் இழவு வீட்டிற்கு செல்லும் போது எப்படிக் கூறுவோம். இழவுந்து என்று சொல்ல முடியுமா? என என்னிடம் பலர் கேள்வி எழுப்பினர். அதுவும் சரிதான். ஆகவே பெயர்ச் சொற்களை அப்படியே மொழிபெயர்ப்பதில் தவறில்லை என தனது கருத்தை பல உதாரணங்களுடன் பதிவு செய்தார் அசோகன் முத்துச்சாமி.  

ஷாபி என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் எனக்கு சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது. என்னவென்றால் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து எனக்கு விருது வழங்கியோருக்கு நன்றி என முடித்துக் கொண்டார். அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை.

ஆனால் நிறைவாகப் பேசிய திசைகள் எட்டும் ஆசிரியர் குறிஞ்சி வேலன் “தினம் தோறும் கட்டுமானப் பணியில் கொத்தனார் வேலை செய்து கொண்டு தனக்கு கிடைக்கும் சிறிது ஓய்வு நேரத்திலும் தோப்பில் முகமது மீரானின் நூல்களை தமிழில் இருந்து மலையாளத்திற்கு மொழிபெயர்ப்பு செய்து வருபவர் ஷாபி’’ என குறிப்பிட்டார். அப்போது அனைவரின் பார்வையும் ஷாபி மீது திரும்பியதோடு மட்டுமல்லாமல் அனைத்து கைகளும் அனிச்சை செயல்போன்று ஒன்றிணைந்து ஓசை எழுப்பியது. அந்த ஒலி அவருக்கான அங்கீகார மொழியாக அமைந்தது.

வகுப்பறையில் கற்றுத்தராத பலவற்றை மாணவர் களுக்கு கற்றுக்கொடுக்கும். மாணவர்கள் புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதை விட்டு விடக்கூடாது. அப்படி விட்டால் ஒரு கலாசாரமே பாதிக்கப்படும் என்று இந்த விருது வழங்கும் விழாவில் மாணவர்களிடம் தனது வேண்டுகோளை முன் வைத்தார் எம்.ஜி.எம். கல்லூரியின் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்.

விழாவில் விருது பெற்ற புத்தகங்களை பதிப்பித்த பதிப்பக உரிமையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை நல்லி குப்புச்சாமி செட்டியார் வழங்கினார். நிறைவாக திசை எட்டும் காலாண்டிதழின் ஆசிரியர் குறிஞ்சி வேலன் அனைவருக்கும் நன்றி நல்கினார். விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அமெரிக்கா பற்றிய எண்ணங்களை மாற்றிய புத்தகம்

விருது பெற வந்திருந்த புத்தகங்களில் ஒன்றை மட்டும் நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். அசோகன் முத்துச்சாமி மொழிபெயர்த்த அமெரிக்க பேரரசின் ரகசிய வரலாறு என்ற புத்தகம். அது ஒரு அற்புதமான நூல். அதை சொல்ல வார்த்தைகளே இல்லை. அமெரிக்காவைப் பற்றி நான் இதுவரை வைத்திருந்த அத்தனை எண்ணங்களும் அப்படியே மாறிப்போனது. அதைப் படித்த உடனே ரொம்ப அருமையான நூல் என்று உணர்ந்தேன். இரண்டாவது அந்த புத்தகத்தை வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் தோன்றியது. இதுவரை நான் இரண்டு மூன்று புத்தகங்களைத் தான் அப்படி பார்த்திருக்கிறேன். அதில் ஒன்றுதான் இந்தப் புத்தகம். ஒரு பதிப்பகத்தாரின் வேலை என்பது ஒரு நூலை அச்சுப்பிழையில்லாமல் வெளியிடுவதுதான். நான் படிக்கும் போது பிழையிருந்தால் குறித்துக்கொண்டே வருவேன். அப்படி ஒரு இடத்தில் கூட இந்தப் புத்தகத்தில் குறிக்கவில்லை. எல்லாப் பதிப்பகத்தாரும் இது போன்று அச்சுப்பிழையில்லாமல் வெளியிட வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள் என விருது வழங்கும் விழாவில் முத்தாய்ப்பாக நல்லி குப்புச்சாமி செட்டியார் குறிப்பிட்டார். 

Pin It