நூல் விமர்சனம் : சோசலிசமும் மத பீடங்களும்- ரோஸா லக்ஸம்பர்க், தமிழில்: ராமச்சந்திர வைத்தியநாத், பாரதி புத்தகாலயம், பக்: 40 | ரூ. 10

மதபீடங்கள் எந்த மதத்தின் அதிகார அமைப்பாக இருப்பினும் யாருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள் என்பதை இன்றளவும் பல்வேறுநாடுகளில் நாம் உணர முடிகிறது. இவற்றைப்பற்றிய வரலாற்றுப் புரிதல் வேண்டுவோர் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற மார்க்சியரான ரோஸா லக்ஸம்பர்க் எழுதியுள்ள நூலினை தமிழில் அற்புதமாகக் கொண்டு வந்துள்ளார் ராமச்சந்திர வைத்தியநாத்.

தேவாலயம் என்பது வறுமைச் சுழலில் இருப்போருக்கு ஆதரவுக்கரம் நீட்டும் என்கிற நப்பாசையில் செயல்படுகின்ற உழைப்பாளி வர்க்கத்தைச் சார்ந்த பெரும்பகுதியினர் மதபீடங்களின் செல்வச் செழிப்புக்கு காரணம் என்ன என்பதை உணருமாறு இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

தனது நலனுக்காகப் போராடும் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக மதபீடங்கள், இருப்பதுகண்டு தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்நூலில் ஆசிரியர் உணர்த்தியுள்ளார்.

மதகுருமார்கள் என்கிற புதிய வர்க்கம் ஏழை, எளிய மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி வறுமையைப் போக்கும் மந்திரமாக உபதேசங்கள் மட்டும் செய்யும் பிரிவாக விரைவான வளர்ச்சியை அடைந்தது. மேலும் மதகுருமார்கள் தங்களின் கைக்கு வந்து சேரும் சொத்துக்களை பாகங்களாக்கி, மதகுருமார்க்கும் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கும் என பிரித்துக் கொடுத்த அணுகுமுறை மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது.

மதகுருமார்கள், அவர்களின் ஆசி பெற்ற வேலையாட்கள் கத்தோலிக்க திருச்சபை ஆகியவற்றிடையே உள்ள முரண்பாடுகளால் கலகங்கள் ஏற்பட்டன கிருஸ்துவம் என்பது போராடும் தன்மையுள்ள ஒரு அமைப்பாய் உருவம்பெற்று நாளடைவில் சொத்துகளை பரிபாலினம் செய்யும் நிர்வாக அமைப்பாய் மாறிய பின்னணிகள் அனைத்தும் எளிமையாகச் சொல்லப்பட்டுள்ளன.

“சுரண்டல் பேர்வழிகளுக்கு ஆதரவாகவும், தற்போதைய பாதிப்புகள் மிகுந்த ஆட்சிக்கு விசுவாசமானவனாக எவன் உதவி செய்கிறானோ அவன் பாதிரி அங்கிக்குள் இருப்பினும்! போலீஸ் உடையில் இருப்பினும் தொழிலாளி வர்க்கத்திற்கு அவன் எதிரி’’ என்கிற கருத்து இந்நூலின் முத்தாய்ப்பான முடிவாகும்.

பால்கி
Pin It