அறிவுக்கனல் மூட்டிய அஞ்சாநெஞ்சன் புரூனோ-பிராங்கா கிலியோட்டி

தமிழாக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத், பாரதி புத்தகாலயம் , சென்னை - 18, பக்: 16  ரூ. 5

அறிவு வளர்ச்சியை உத்திரவாதப் படுத்திட விஞ்ஞானம் தொடர்புடைய பல்வேறு புத்தகங்கள் வெளிவர வேண்டும் என்பது வாசிக்கும் பழக்கம் உடையவர்களின் கனவு. அதனை அற்புதமாக நிறைவேற்றி வருகிறது பாரதி புத்தகாலயம். எளிய தமிழில் (நாம் புரிந்து கொள்ளும் வகையில்) 16 பக்கங்களில் ஒரு விஞ்ஞானியின் போர்க்குணத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

நாம் வாழும் உலகம் பற்றிய சரியான கருத்தை 15ஆம் நூற்றாண்டின் மத்தியில் உருவாக்கியவர் புரூனோ இத்தாலியின் அரசியல் அதிகாரம், இறையியல் மீது ஆட்சியாளர்கள் கொண்டிருந்த மதிப்பு, கத்தோலிக்க மதபீடம் எதிர்க்கருத்துகளை ஒடுக்கிய வரலாறு இவை பற்றிய புதிய கருத்துகள் இந்தப் புத்தகத்தில் வரையப்பட்டுள்ளன. ஒரு விஞ்ஞானியின் போர்க்குணம், கிறிஸ்துவ அரசியல் அதிகாரம் அவரை எரித்துக் கொலைசெய்த கொடூரம். இவை மறக்கப்பட முடியாத வரலாறு ஆகும். அன்றையச் சூழலில் புருனோவின் எதிர்ப்பு மிக்க விஞ்ஞான பூர்வ அணுகுமுறையை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

டார்வின் கொள்கை உள்ளிட்டவற்றில் மதபீடம் தனது கருத்துகளை மாற்றிட முயற்சித்தாலும் புருனோவைப்பற்றிய விவகாரத்தில் சமரசம் செய்யாது அவரை எரித்த விவரத்தைக்கூடத் தெரிவிக்காமல் உள்ளது. கோபர்நிகஸ் தத்துவம், அதற்கு புருனோவின் ஆதரவு, எதையும் சந்தேகிக்க வேண்டும் என்ற விஞ்ஞான ஆராய்ச்சி, பிரபஞ்சம் பற்றிய பார்வை, அற்புதமான நூலான புருனோவும் மறுமலர்ச்சி விஞ்ஞானமும் என்ற நூலின் தகவல்கள் என எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஹெகல் கூட தனது கருத்தாக்கத்தில் புரூனோவை கோடிட்டுக்காட்டியுள்ளது அவருக்கான அங்கீகாரமே. தான்வாழும் காலம் முழுவதும் எரிமலைக்குழம்பாய் குமுறும் தன்மையோடு வாழ்ந்த போராளி புரூனோ; சமத்துவம், விஞ்ஞானம், சமுகம், தத்துவம் ஆகிய துறைகளின் அரசனாகவே வாழ்ந்தார். எரித்தலால் இகழ்ச்சி இல்லை என்பதை உணரும் வகையில் இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது - அனைத்துக்குழந்தைகளின் கைகளிலும் அவசியம் இருக்க வேண்டியநூல். ராமச்சந்திர வைத்தியநாத்தின் தமிழாக்கத்தில் சிறப்பாக வெளிவந்துள்ள நூல்.

 

Pin It