‘‘பெரிய வயலில் நிறைந்து விளைகிற அய்யா’’

 

‘பூட்டுப்பாம்படம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு, ‘நிலம் மறுகும் நாடோடி’ எனும் நாவல் மூலம் ஏற்கனவே நவீனத் தமிழிலக்கியததில் அறிடியப்பட்டிருக்கிற எம்.எஸ். சண்முகம் அவர்களின் மூன்றாவது நூலாகணீ ‘பெரியவயல்’ என்ற நாவல் வந்திருக்கிறது.

 

தன் வரலாறு நாவலா, இனவரைவியல் நாவலா என்ற இருவகை மதிப்பீட்டுக்கும் இடம் தருகிற சமூக வரலாற்று நாவலாக விரிவடைகிறது, ‘பெரியவயல்’.

 

எம்.எஸ். சண்முகம் அவர்களுக்கு எண்பதுக்கு மேல் வயதாகிறது. இவரது இளம்பிராயத்திலேயே, பதினாறு வயதுக்கு முன்பே இவரது மரபுக் கவிதைகள் அக்காலத்து இதழ்களில் பிரசுரமாகியிருக்கிறது.

 

ஆப்ப நாட்டுப்பகுதி (முதுகுளத்தூர்பகுதி)யில் கிழவன் சேதுபதி என்ற அரசரின் போர் மறவர்களாக திகழ்ந்த வீரமிக்க கொண்டையன் கோட்டை வகையறாக்கள், பிழைப்பு நாடி மேற்கு நோக்கி நகர்கின்றனர்.

 

நெற்றி மட்டத்துக்கம்பும், ஆயுதங்களும், வீர நெஞ்சுமாக இயங்கிய அவர்களின் திசைக்காவல், ஊர்க்காவல், கொண்டிக்காவல் என்று பல்வேறு பகுதிகளின் காவல் தொழில்கள் நடக்கின்றன.

 

அதில் ஒருவரான மொட்டையாண்டித் தேவரிலிருந்து வரலாறும் நாவலும் துவங்குகிறது. அந்த வம்சத்தைச் சேர்ந்த சுப்பையாத் தேவர் கலிங்கல் மேட்டுப்பட்டியில் ஊர்க்காவல் செய்கிற போது, கலெக்டர் துரையால் ஊர்த்தலையாரி என்ற அரசு ஊழியராகிறார். வெறும் ஏழரைரூபாய் மாதச்சம்பளம்.

நாயக்கமார், குடும்பமார், மற்றும் பலவித ஜாதிகள் நிறைந்த அந்த மேட்டுப்பட்டியில் ஒற்றை வீட்டுத் தேவர் குடும்பமாக சுப்பையாத் தேவர். காவல்காரத் தேவர் என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறார்.

 

வெறும் கூரை வீடும், ஏழரைரூபாய் தலையாரி உத்தியோகமுமாய் இருக்கிற தேவருக்கு வாழ்க்கைப் பட்டு வருகிற ஆதக்காளால் வருகிறது. ஏறுகால். வீடு பூராவும் தான்யமும், தவசமுமாகிறது. தொழுநிறைய மாடுகள். தெருமணக்கிற தயிர், வெண்ணெய், பால், மோர்.

 

கலிங்கல் மேட்டுப்பட்டி கண்மாய் இருபோகம் விளையவைக்கிற நீர்ப்பெருக்கு. அதில் பாசனமாய் அமைகிறது கருவாட்டுப் பேச்சியாச்சியிடம் வாங்கிய நிலங்கள். பெரிய வயலாக அமைகிற மற்றொரு நிலம். குறைந்த விலைக்கு வருகிற மானாவாரிப் புஞ்சைகளை விலைக்கு வாங்கி.... இடையில் இருந்த புஞ்சைக்காரர்களுடன் பேசிப்பழகி, கள்ளுக்கடைக்காரரிடமும் பேசி... வாய்க்கால் இழுத்து அதையும் நெல் விளைகிற வயலாக்குகிறார். மண்ணும், நெல்லும், விவசாயமும், புலம் பெயர்வும் அவரை வார்த்தெடுத்து வேறொரு வகை மனிதராக பரிணாமிக்கச் செய்கிறது.

 

ஒற்றை வீட்டுத் தேவர், காவக்காரத் தேவராக சகலராலும் மதித்து போற்றிக் கொண்டாடப்படுகிறார். அவரை ஏளனமாக பேசிவிட்டுப் போய்விட்ட அயலூர்க்காரனை கீழத்தெரு பூரா திரண்டுபோய், அரிவாள் கம்புடன் மறித்து நின்று பஞ்சாயத்து வைக்கிறனர், தலித் மக்கள்.

 

காவக்கார அப்பச்சியின் மானத்தைக் காக்க அத்தனை தலித்களும் ஆயுதம் தூக்கிப் போய் நிற்கிற காட்சி, மனசை சிலிர்க்க வைக்கிறது. அப்பேற்பட்ட தலித் மக்களுக்கும், ஒருதேவர் குடும்பத்துக்கும் வழக்கு வர, சாட்சி சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தலையாரித்தேவர். சுயசாதிப் பகையா... விசுவாச தலித்களின் பகையா என்ற கட்டத்தில் இவரது அரைவட்டான தலையசைப்பு மௌனத்தில் தேவர் தப்பித்துக் கொள்ள கீழத்தெரு மக்கள் அனைவரும் கூடி, அவரை ‘‘ஒதுக்கி’’ வைக்கின்றனர். ஊர்விலக்கம் செய்கின்றனர். அந்த நேரத்திலும் அப்பச்சி குடும்பத்தின் மீது பாசத்தைப் பொழிகிற லட்சுமியை மறக்க முடியாது.

 

தலையாரித் தேவருக்குள்ளும் தாள முடியாத மன உளைச்சல். தாயாய் பிள்ளையாய் பழகி உசுரைக் குடுக்குற கீழத்தெரு தலித் மக்களின் வெறுப்புக்கும், விலக்கத்துக்கும் ஆளாகிவிட்டோமே என்ற கவலை. மன உளைச்சல்.

 

மேட்டுப்பட்டியிலேயே எழுதப் படிக்கத் தெரிந்தவர், இவர் தான். காயிதம் எழுத... காயிதம் வாசிக்க... பத்திரங்கள் எழுதித் தர... மனுக்கள் எழுத... கீழத்தெரு கோவில் திருவிழா கணக்கு வழக்குகள் முழுமையையும் பராமரிக்க... எல்லாமே தலையாரிதான்.

 

கீழத் தெருவில் வருகிற கோவில் திருவிழா. வரவு, செலவு, தலைக்கட்டுவரி, மற்றும் விழா ஏற்பாடு, விழாச் செலவு கணக்குகள் பூராவும் தலையாரிதான் எழுத வேண்டும்.. அவரில்லாமல் எப்படிச் செய்ய?

 

‘‘பாவம், ஒத்தை வீட்டுக்காரரு. இனத்தைப் பகைச்சுக்கிட்டு அவராலே எப்படி இருக்க முடியும்? புள்ளைகளை வளர்க்கணும், மாடு கண்ணு பராமரிக்கணும்... ஏவாரம் செய்யணும். எல்லாத்துக்கும் எல்லாரும் வேணும்லே? இனத்தைப் பகைச்சுக்கிடமுடியுமா?’’ என்று அவர் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்லி முணுமுணுக்கிற லட்சுமி போன்ற ஒரு சிலரின் பாசக்குரல், கருணைக்குரல், பலகுரல்களாக பெருகின்றன. எல்லோருக்கும் அவர் மீது பாசம் இருக்கிறது.

 

கீழ்த்தெருப் பெரியாட்களே தலையாரித் தேவர் வீடு சென்று, ராசி செய்து கொள்கின்றனர். மீண்டும் அவர்களது, பாசம், உதவிகள், மரியாதைகள்.

இந்த மறு உறவை உருவாக்கித் தந்த எழுத்தறிவு. அதனால் தான் இருமகன்களையும் உயர்படிப்பு படிக்க வைப்பதற்கு அத்தனை அரும்பாடுபடுகிறார்.

களவே தொழிலாகக் கொண்டிருக்கிற பக்கத்து ஊரு குருசாமித்தேவரின் பகையை சமாளிப்பதில் இவரது பாரம்பரியக்குணம் பயன்படவில்லை. விவசாயத்தால் ஏற்பட்ட புதிய குணமாற்றமே பயன்படுகிறது.

 

சண்முகத்தின் விவரிப்பாக கதை நிகழ்ந்தாலும், சண்முகம் இல்லாத இடத்து நிகழ்வுகளும் சித்திரிக்கப்படுகின்றன. அது ஒன்றும் உறுத்தலாக தோன்றவில்லை. காரணம், அய்யாவே நாவலின் முழுநிறை நாயகர். பெரிய வயலை உயிரினும் மேலாக நேசிக்கிற தலையாரித்தேவர்தான் அய்யா. அய்யா வரலாறாகவே நாவல் நீள்கிறது. பயணம் கொள்கிறது. வாசகமனசு அய்யாவைத் தேடியே பின்பற்றி ஓடுகிற மாதிரியான காட்சியடுக்குள் வருவதால் நாவல் முழுக்க அய்யாவின் விசுவரூபம்.

 

அவரது சகோதரத்துவம் மட்டுமல்ல... அவரது ஈரமனசும் பெரியது. தஞ்சம் என்று வந்தவருக்கு வீடு கொடுத்து, வாழ்வு கொடுத்து, ஒரு பாதுகாப்பும் தருகிறார். அந்தச் செட்டியார் குடும்பம் மனசைத் தொட்டு நகர்கிறது.

 

ஆப்ப நாட்டிலிருந்து பஞ்சம் என்று வந்தவருக்கு அன்னம் தருகிறாள் ஆதக்கா, ஐம்பத்தாறு நெல் மூட்டைகளுக்கு ஏற்பாடு செய்கிறார் அய்யா.

சண்முகத்தின் பள்ளிவாழ்க்கை, உயர்கல்விப் பள்ளி வாழ்க்கை, உத்தியோக வாழ்க்கை, கல்யாண வாழ்க்கை என்று படர்ந்து விரிகிறது. உத்தியோக வாழ்க்கையின் நடுவே வருகிற அவித்த முட்டைகளின் காதல் வாசமும், ராமன் வழக்குப் பஞ்சாயத்தும் மனசை என்னவோ செய்கின்றன.

வாழ்க்கைப்பட்ட அக்காமார்களின் கதைகளும் காட்சியாகின்றன. பெரிய வயலை நம்பித்தான் அத்தனையும் நிகழ்கின்றன. முதுமையும், வாழ்வின் சரிவுகளும், விதவைகளாக திரும்பி வருகிற மகள்களின் குடும்பங்களும் அவரைச் சாய்க்க... பெரிய வயலையும், குடும்ப உறவுகளையும் பிரிய முடியாமல் தத்தளிக்கிற அய்யாவை, மரணம் அள்ளிக் கொண்டோடுகிறது.

 

அந்தந்த காலத்தின் பின்புலமும், சூழல் வர்ணணைகளும், நில விவகார விவரிப்புகளும், விலைவாசிபற்றிய தகவல்களும் துல்லியமான யதார்த்தத்துடன் பதிவாகியிருக்கின்றன.

 

சாதிய பேதங்களும், பேதப்பட்ட சாதிகளுக்குள் முரண்களும்,. உரசல்களும் நிகழ்கிற நிஜத்தை பதிவு செய்திருக்கிற நாவலின் பொதுக்குரலாக இருப்பது, சாதிய சகோதரத்துவம். சமூக வரலாற்று நாவலுக்குரிய அத்தனை லட்சணங்களும் பொருந்தியிருக்கின்றன. மரபுக்கவிதை எழுதுகிற திறனும் இயல்பும் கொண்ட நாவலாசிரியரின் நாவல் மொழி நடையே... மரபுக்கவிதையும், யதார்த்த வாத வட்டார மொழியும் கலந்த ஒரு கலவைதான். இந்த மொழிக் கலவையின் ஒருமையில் கிடைக்கிற மொழி நடையே நாவலின் ஒட்டு மொத்த கம்பீரத்துக்கும் காரணமாகிறது. நாவலுக்குள் நுழைக்கிற வாசகனுக்கு தன்னுலக மர்மங்களையெல்லாம் திறந்து காட்டுகிறது. வாசகனை வேறொரு பயணியாக்கி உள்ளிழுத்துச் செல்கிறது, தன் வயப்படுத்தி விடுகிறது.

 

நாவலை வாசித்து முடித்த பின்பும், பலநாட்களுக்கு அதனிடமிருந்து மனசையோ நினைவையோ மீட்க முடியாத தத்தளிப்பு தவிர்க்க முடியாததாகிறது. நாவலின் அடர்த்தியான வாழ்வியல் உள்ளடக்கமும், மொழிநடைப்பேரழகும், நாவலின் மனித நேயக்குரலும் நாவலின் மிகப் பெரிய வலிமையாகிறது.

 

சுப்பையாத்தேவர் என்கிற அய்யாவையும், ஆதக்காளையும் மறக்க முடியாது. மனச்சிற்பங்களாக நிலைக்கின்றனர். இந்த நூலை எழுதிய எம்.எஸ். சண்முகத்தை எத்தனை பாராட்டினாலும் தகும். அழகான நேர்த்தியோடு அச்சிட்டிருக்கிற பாரதி புத்தகாலயத்தையும் நிச்சயமாக பாராட்டலாம்.


-மேலாண்மை பொன்னுச்சாமி

Pin It