‘கலைஞன் பதிப்பகம்’ மாசிலாமணி 19-12-2010 அன்று அமரராகி விட்டார். மிக அமைதியாக, எந்த விதப் பரபரப்பும் இன்றி, தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருக்கிறது. நோய் வேதனைகள் இல்லை; ஆம்புலன்ஸ் சைரன் ஒலிக்கவில்லை. உற்றார் - உறவினர்கள், பெற்ற பிள்ளைகள், நண்பர்கள், பிரமுகர்கள் - யாரும் மருத்துவமனைக்குச் சென்று பார்க்கவும், உடனிருக்கவும் வாய்ப்புத் தரவில்லை. ஒரு பூ இயல்பாக உதிர்வதைப் போல நேர்ந்திருக்கிறது அவரின் மறைவு.

தமிழ்ப் புத்தகப் பதிப்புத் துறையில் 55 ஆண்டு காலம் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்திருக்கும் வெகு சிலருள் முதல்வரிசைக்காரர் இவர் எனலாம். ‘இறுதி மூச்சு விடும் வரை’ புத்தகங்கள் பதிப்பித்தவர், அதை விட முக்கியம் இறுதிவரை புத்தகங்களை வாசித்துக் கொண்டே இருந்தவர். இவ்வாறு அவரைப் பற்றிக் குறிப்பிடுவது எவ்விதத்திலும் மிகையான கூற்று அல்ல. அவருடன் ஒரு முறை பரிச்சயப்பட்டவர்களுக்குக் கூட, அவர் தன் கையில் படித்துக் கொண்டிருக்கும் ஏதாவது ஒரு புத்தக வரிகளில் இருந்து தன் பார்வையை உயர்த்தியபடியே ‘வாங்க... உக்காருங்க...’ என்று முறுவலிக்கும் காட்சிதான் நினைவிற் பதிந்திருக்கும்.

மரபார்ந்த தமிழ் இலக்கியங்களில் எந்த அளவிற்குத் தோய்ந்திருந்தாரோ அதே அளவிற்கு சமகால நவீன இலக்கியக் கட்டுரைகள், படைப்பிலக்கியங்களிலும் ஆழமான வாசிப்பைக் கொண்டிருந்தவர் மாசிலாமணி. சமகாலத்தில் புதிதாக எழுத வந்திருக்கும் இளைஞர்களின் படைப்புகளில் அவரது கவனம் குறிப்பிடத்தக்க அளவு விரிந்தது.

பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை ‘கலைஞன்’ மூலம் வெளிக் கொணர்ந்தவர், அசோகமித்ரன், ஜெயகாந்தன் சா. கந்தசாமி, லா.ச. ராமாமிர்தம், வெங்கட்சாமிநாதன் ச. தமிழ்ச் செல்வன், உதயசங்கர் இன்னபிற முக்கியமான தமிழ் எழுத்துலக ஆளுமைகளின் புத்தகங்களை வெளிக்கொணர்ந்தவர்.

மூத்த பல தமிழறிஞர்கள், பண்டைத் தமிழிலக்கியச் சொல்லாடல்கள், நவீன இலக்கியப் படைப்புகள், சிற்றிதழ்களின் போக்குகள், விமரிசன ஆய்வுப் பார்வைகள் இப்படியான பன்முகப்பட்ட பொருண்மைகள் சார்ந்து தனக்கென்று திட்டவட்டமான கருத்துக்களைக் கொண்டிருந்தவர் அவர். இவை குறித்த சிந்தனைப் பொறிகள் அவருடனான உரையாடல்களின் போது மிக இயல்பாகத் தெறித்து விழுந்து கொண்டே இருக்கும். அதிராமல், ஆர்ப்பாட்டமில்லாமல் இயல்பான நகைச்சுவை உணர்வுடன் பூத்தொடுப்பதைப் போல் சொற்களைத் தேர்ந்து கொண்டு சன்னமான குரலில் உரையாடுவார் அவர்.

மெய்ப்புத் திருத்துதல், கருத்துப் பிழையோ - அச்சுப் பிழையோ வரவே கூடாது என்பதில் அவர் காட்டி வந்த கண்டிப்புடன் கூடிய கவனம் ஆகியவை இன்று பதிப்புலகில் செயல்படும் பலநூறு இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவையாகும். ஒரு புத்தகத்தில் இடம் பெற்றிருந்த ஓர் இலக்கியப் பாடல் வரியின் சரியான பொருள் என்ன என்ற ஐயம் எழுந்த ஒரு சந்தர்ப்பத்தில், அதைத் தெரிந்து கொள்வதற்காக சென்னை - தஞ்சை என்று பல ஊர்களில் இருக்கும் தனது சக நண்பர்களான தமிழறிஞர்களுடன் தொலைபேசித் தொடர்பு கொண்டு சலிக்காமல் உரையாடி அப்பொருளை அறிந்து கொண்ட பிறகே அவர் வேறு விஷயங்களில் கருத்துச் செலுத்தினார்.

கலைஞன் பதிப்பகம் தமிழுக்குப் பல புதிய அம்சங் களை அறிமுகம் செய்து வரும் புத்தக நிறுவனம். கி. ராஜநாராயணன், லா.ச.ரா. அசோகமித்திரன் போன்று பல முன்னோடிப் படைப்பாளிகளின் எழுத்துக்களும், அவர்களின் படைப்புகள் குறித்த செறிவான மதிப்பீடுகளும் அடங்கிய ‘ரீடர்’ என்னும் தொகுப்புகள் அத்தகையவையே.

மாசிலாமாணியின் 55 ஆண்டு காலப் பதிப்புப் பயணத்தில் கடந்த பல ஆண்டுகளாக அவரது புதல்வர் மா. நந்தன் மிகப் பாந்தமான முறையில் தோள் கொடுத்து வந்திருப்பவர். இப்போது மொத்தச் சுமையும் அவர் தோளில்! தீபம், சரஸ்வதி, மணிக்கொடி, சுதேசமித்திரன், 22 ஆண்டு காலம் நடைபெற்று நின்று போன ‘கண்ணன்’ சிறுவர்கள் - இளைஞர் இதழின் கதைகள் தொகுப்பையும் உருவாக்கித் தமிழுக்குத் தந்த பெரும் பொறுப்பை மாசிலாமணியும் நந்தனுமே நிறைவேற்றியிருக்கிறார்கள்.

நிறை வாழ்க்கை; அப்படியே மரணத்திலும் நிறைவான வகையில் தனது நெடும் பயணத்தை முடித்துக் கொண்டு விட்டார் ‘கலைஞர்’ மாசிலாமாணி. அவர் காட்டிச் சென்ற சீரிய பல முன்னுதாரணங் களை இயன்றவரை பின்பற்றி செயல்படுவதற்கு உறுதி ஏற்பதே இந்த அஞ்சலிக் குறிப்பின் நோக்கம்.

Pin It