காப்பீட்டுக்கழக முகவர் ஒருவர் ஆயிரம் ருபாய்க்கு ஒரு பாலிசி எடுத்துக்கொள்ள வலியுறுத்துகிறார்.

‘‘இப்போது எனக்கு 19 வயதாகிறது. இன்னும்

36 வருடம் சென்று இது கிடைக்கும் போது இந்த நாடு சோசலிச நாடாக இருக்கும். இந்தப் பணம் எதற்கு?’’ என்று ஒருவர் உறுதியுடன் மறுக்கிறார்

இது நடந்த ஆண்டு 1951. மறுத்தவர் ஜி. வீரய்யன்.

செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம் என்ற அவரின் சுயசரிதை அவரது 17 வயது பருவத்திலிருந்து 78 வயது வரையிலான சில முக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ள ஆவணமாக வெளிவந்துள்ளது.

அனுபவங்கள் போராட்டமேகங்கள் கருத்து அடர்ந்திருந்த பழம் தலைமுறைத்தலைவர்கள் பலர் நம்மிடம் இல்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய அந்தத் தலைமுறையின் மிச்ச சொச்சமான சில பிரதிநிதிகளை மட்டுமே இந்தத் தலைமுறைக்குப் பார்க்க வாய்ப்பு கிடைத்தள்ளது.

எர்னஸ்ட் சேகுவாரா, பிடல் காஸ்ட்ரோ, ஜுலியஸ் பூசிக் போன்றோரின் சரிதைகளை வாங்கிப் பயின்று நரம்புகள் முறுக்கேற அலையும் இளைஞர் களைப்பார்க்கிறோம்.

இதோ ஜி. வீரய்யனின் சில பதிவுகள்.

1. ஆண்டு 1961; ஜி.வீ.திருச்சி மத்திய சிறையில் கைதி ஆக இருக்கிறார். அவரின் தலையை மரத்துப்போக வைக்க ஐஸ் கட்டி வைக்கப்படுகிறது. அவரை கட்டிப்போட்டு வைத்துள்ளனர். பிறகு மத்திய சிறைக்கு வெளியில் வெளிப்புறச் சிறையில் தனி அறையில் 24 மணிநேரம் லாக்கப்பில் வைக்கப் படுகிறார். தோட்ட வேலை, சுவர்களுக்கு வெள்ளையடித்தல், தண்ணீர் வண்டி இழுத்தல், என்று ஓய்வில்லா வேலைகள் கொடுக்கப்படுகின்றன. மூட்டைப்பூச்சி என்று அழைக்கப்படும் கெடுபிடியான ஒரு ஜெயிலர் இவ்வளவு வேலை வாங்கிவிட்டு காலை கஞ்சியில் உப்பில்லாமல் கொடுக்கச் செய்கிறார். வெளிக்கட்சி தொடர்பு அறுந்து கிடக்கிறது. அவர் எந்தச்சிறையில் இருக்கிறார் என்று கட்சிக்கும் தெரியாது. எல்லாச் சிறையிலும் நேர்காணலுக்கு மனுப்போடுவது என்று கட்சி முடிவெடுக்கிறது.

திருச்சி சிறையில் தோழர் அனந்த நம்பியார் மனுப்போட்டு பார்க்க வந்துவிட்டார். சிறை உள்ளே நடப்பதை கைதிகள் வெளியில் கூறக்கூடாது என்பது விதி. ஜி.வீ. எல்லாவற்றையும் நம்பியாரிடம் கூறிவிட்டார். வேறு சிறை அதிகாரிகளும் உடன் இருந்தனர். 1 மணி நேர நேர்காணலுக்குப் பிறகு நம்பியார் புறப்படுகிறார். அவர் நேர்காணலில் உடன் இருந்த அதிகாரிகளிடம் கூறுகிறார்.

‘எல்லாவற்றையும் நீங்கள் கேட்டுக்கொண்டு இருந்தீர்கள். இரவு வீரையனை உள்ளே கொண்டுபோய் வைத்து அடிக்கப்போகிறீர்கள். நீங்கள் உள்ளே அடித்தால் நாங்கள் வெளியில் அடிப்போம். உள்ளே அடிப்பது எப்படி தெரியப்போகிறது என்று நினைக் காதீர்கள். நான் இந்தச் சிறையை சுற்றிவந்தால் உள்ளே என்ன நடக்கிறத்து என்று இந்தச் சுவர் முழுவதும் என்னிடம் பேசும்’ பிறகு என்ன நடந்தது?அடி உதை அல்ல. ஜி.வீ. மரியாதையுடன் அறையில் கொண்டுபோய் வைக்கப்படுகிறார்.

2. ஆண்டு 1974.... லெட்சுமாங்குடி காவல் சரகத்தை சேர்ந்த பாலகுறிச்சி கிராமம் சாகுபடி கால கூலிப் போராட்டம். அப்போதைய நாகை மாவட்டக் காவல்துறை எஸ்.பி. வெளிப்படையாக நிலச்சுவான்தார் களுக்கும் மிராசுதாரர்களுக்கும் ஆதரவாக இருக்கிறார் போராட்டம் பின்னடைவு போல் தெரிகிறது. கிராமத்திற்கே வந்து வெண்ணாற்று வலது கரையில் எஸ்.பி. மிராசுதாரர்களின் நாற்காலிகளில் அமர்ந்து ஆதரவு தெரிவித்துக் கொண்டுள்ளார். இரவு நேரம். எஸ்.பி.யுடன் பேசி விட்டு மிராசுதார் விடைபெற்று வருகிறார். நேர் எதிரில் வெண்ணாற்றின் தென்கரையில் தாக்கப்படுகிறார். மண்டை உடைகிறது. எஸ்.பி.க்கு கடுங்கோபம்.

3. ஆண்டு 1972 ....குடவாசல் பகுதி உத்திரங்குடியில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை. அதிகாரி மஞ்சக்குடி வழியாக உத்திரங்குடி போக வேண்டும். அவர் எந்த வாகனத்தில் வந்தாலும் மஞ்சக்குடியில் அவரைத் தடுக்க வேண்டும். அவர் உத்திரங்குடி போகக்கூடாது என்பது கட்சி முடிவு.

அதிகாரி வரவே இல்லை.

ஜி.வீ. கூறுவதுபோல் 1943 முதல் 1952 வரையான 10 ஆண்டுகள் கீழத்தஞ்சையைப் புரட்டிப்போட்ட அந்த ஆண்டுகளை பி. சீனிவாசராவோ மணலி கந்தசாமியோ எழுதி இருந்தால் கேரளத்தின் கையூர், மராட்டியத்தின் வார்லி, பி. சுந்தரய்யாவின் வீரத்தெலுங்கானா போன்ற வரலாற்று ஆவணங்கள் கிடைத்திருக்கலாம். எனினும் இந்த நூலாவது கிடைத்துள்ளதே என்று சமாதானம் கொள்ள வேண்டியுள்ளது.

ஜி.வீ. 1959ல் ஒன்றாக இருந்த சி.பி.ஐ. மாகாண கட்சியின் உறுப்பினர். 1964ல் கட்சி பிளவுபட்டபோது குடந்தை கூட்டத்தில் வெளிநடப்புச் செய்த 29 உறுப்பினர்களில் அவரும் ஒருவர். இது நெடிய அனுபவம் ஆகும்.

எட்டு வாய்க்கால்களாலும் இரண்டு நதிகளாலும் சூழப்பட்ட கிராமம் சித்தாடி. பிள்ளையை உயிராய் நேசித்த பெற்றோர்கள், கூட்டுக்குடும்ப வாழ்க்கை, இடைவிடாத உழைப்பாளி, நடுத்தரக் குடும்பம். இதுவே அவரது குடும்பப்பின்னணி ஆகும்.

ஆரம்ப காலத்தில் அரசியல் கட்சிசார்பற்று அவர் வாழ்க்கை துவங்குகிறது. கிராம முன்னேற்றசங்கத்தில் ஈடுபாடு. அதன் மூலம் கிராமத்தில் கேணி கட்டித்தர பள்ளிக்கூடம் கட்டப் பாடுபடல் என்று அவர் பொதுவாழ்க்கை பயணிக்கிறது.

ஜி.வீ.யைக் கட்சியில் சேர்க்கப்போராடிய எல்.குப்புச்சாமி. எடுத்த முடிவில் உறுதியாக நிற்கும் மாவிலங்கு இடும்பையன் போன்ற பல ஊழியர்களை ஜி.வீ. சித்தரிக்கிறார். இக்காலத்தில் அவர் பயின்ற எமிலி பேர்ன்ஸின் பணம் தத்துவத்தின் வறுமை. லெனினிஸத்தின் அடிப்படை அம்சங்கள் ஆகிய நூல்களை மீண்டும் நம்மைப்படிக்கத் தூண்டும் வகையில் குறிப்பிடுகிறார்.

எனினும் ஜி.வீ. அவர்களின் இந்த நூல் இன்னும் எழுதப்பட வேண்டிய ஒரு சரித்திரத்தின் முன்னுரையாகவே அமைகிறது.

இந்த நூலின் ஒன்பதாவது பகுதியில் மட்டும் ஆறு தியாகிகள் பற்றிய விவரங்கள் உள்ளன. மேலும் பக்கங்கள் 73, 233 களில் சில தியாகிகளைப்பற்றிய குறிப்புகள். பக்கம் 77-ல் சிறையில் மாண்டுபோன ஏழு தியாகிகள் என போதிய வெளிச்சத்திற்கு வாராத பல நிகழ்வுகள் நூலெங்கும் விரவிக்கிடக்கின்றன.

இதே போல் மிட்னாப்புர், மீரட், கான்பூர் சதிவழக்குகள் போல் நாணலூர் சதிவழக்கு, நெடும் பலம் சதிவழக்கு, சருக்கை சதிவழக்கு, அச்சுதமங்கலம் வழக்கு, மேலப்பாலையூர் கொலை வழக்கு போன்ற பல சதி வழக்குகளை கீழத்தஞ்சை என்ற ஒரு சிறிய மாவட்டம் சந்தித்துள்ளது.

மறியலின் போது சிறைச்சாலைகளில், போராட்டங் களில் கட்சியின் ஒரே வானக் கூரையின் கீழ் வாழ்ந்தவர்கள் பிரியும் போது எப்படி இருக்கும்? எம். காத்தமுத்து அவர்கள் காட்டிய உருக்கம் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏ. பாலசுப்பிரமணியம் தஞ்சையில் ஒரு குக்கிராமத்தில் நடத்திய ரகசியக் கூட்டம்.

பி. ராமமுர்த்தி ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள குடவாசல் காவல் நிலையத்திற்கே நேரில் சென்றது பற்றிய வெப்பமான குறிப்புகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

விடுதலை இந்தியாவில் காங்கிரஸ் கட்சி களப்பால் குப்புவைக் காவு கொண்டதையும் எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் உருவாக்கிய தி.மு.க. ஆட்சிக்கு வந்த வேகத்தில் பூந்தாழங்குடி பக்கிரியைக் களப்பலி யாக்கியதும் சுடச்சுடச் சொல்லப்படுகின்றன.

இந்நூல் பலகேள்விகளையும் எழுப்புகிறது.

கீழத்தஞ்சையில் செங்கொடியின் போராட்டத்தால் ஆறு இலட்சம் விவசாயத் தொழிலாளிகளுக்கு நியாயக் கூலிச்சட்டம் கிடைத்துள்ளது. இலட்சக்கணக் கான மக்களுக்கு குடிமனைப்பட்டா கிடைத்துள்ளது. ஆவணங்கள் இல்லாமல் வாய்சாட்சியம் முலமாகவே குத்தகைபதிவு செய்யமுடிகிறது. செங்கொடியின் வீறு கொண்ட போராட்டத்தால் தான் அடிப்படை மனித உரிமைகளே நிலை நாட்டப்பட்டுள்ளன.

வடபாதிமங்கலத்தில் நான்காயிரத்திற்கும் அதிகமான கூலிக் குடும்பங்கள் நிலச்சொந்தக்காரர் களாக மாறியுள்ளனர். தமிழகத்தின் வரைபடத்தில் ஒரு குறும்பகுதி மக்களின் கிளர்ச்சியைச் சந்திக்க முடியாமல் தடுமாறி விவசாயிகளுக்கென்று தனி காவல்துறை (கிசான் போலீஸ்) கேரளத்திலிருந்து மலபார் போலீஸ் ஆகியவற்றை தமிழக அரசு வரவழைத்துள்ளது.

அந்த மக்கள் திரளின் எழுச்சி வடிந்து போய் விட்டதா என்ற ஆத்மபரிசோதனை தேவைப்படுகிறது.

ஜி.வீ. அவர்களின் வாழ்வில் சில முக்கியமான பகுதிகள் சொல்லப்படாமல் விடுபட்டுள்ளன. உதாரணமாக அடக்குமுறை காலத்தில் அவர் தலைமறைவாக இருந்து அரசியல் நடத்தியுள்ளார். ஓர் ஆண்டு தலைமறைவு வாழ்க்கை என்பது 10 ஆண்டு சிறைவாழ்க்கைக்குச் சமம். இவர் தலைமறை வாக இருந்த நேரத்தில் இவருடைய மனைவியும் உடன்பிறந்தோரும் தாயாரும் பிள்ளைகளும் காவல் துறையால் அவமானப்படுத்தப்பட்டதும் வேட்டையாடப்பட்டதும் பற்றிய போதுமான குறிப்புகள் இதில் இல்லை. அவையும் சொல்லப்பட வேண்டும்.

இது போலவே தஞ்சை தியாகி என். வெங்கடாசலத்தின் படுகொலைக்குப் பிறகு அங்கு ஏற்பட்ட எதிர்வினைகள் அப்போது மாவட்டச் செயலாளராக இருந்த ஜி.வீ. அதை எதிர் கொண்டது பற்றிய மேம்போக்கான சில குறிப்புகள் கூட நூலில் இல்லை.

அரசியல் வாழ்க்கை முழுவதும் ஒரு சிறுகரும்புள்ளி கூட இல்லாமல் தனிமனித ஒழுக்கத்திலும் அப்பட்டமான மார்க்சிய வார்ப்பாக ஜி.வீ அவர்களின் வாழ்க்கை அமைந்துள்ளது. சமகாலத்தில் வாழும் ஒரு மனிதன் என்ற முறையில் அவரது வாழ்வில் விடுபட்டுப்போன சில செய்திகள் நமக்குத் தெரிந்து இருக்கலாம். எதிர்காலத்தலைமுறையும் அவற்றை அறிந்த கொள்ள வேண்டும். இந்த நூலின் அடுத்த பாகத்தை இன்னும் அவர் அழுத்தமாக எழுத வேண்டும். வெண்மணியின் நெருப்புக்கங்குகளில் நேரில் நின்று குமுறிய அன்றைய தலைவர்களில் ஒருவரான ஜி.வீ அவர்கள் அந்தப் பணியை அவசியம் செய்யவேண்டும்.

Pin It