கொங்குநாடு பற்றிய ஆய்வுகளை மயிலை சீனிவேங்கடசாமி, கோவை கிழார், புலவர் குழந்தை, மாணிக்கம் போன்ற ஆய்வாளர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் கொங்குநாட்டின் பண்பாடு, அரசியல், சமயம், வாழ்க்கை முறை, இலக்கிய இலக்கணங்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கிய பன்முகப் பார்வையோடு, களப்பணியிலும், இலக்கியங்களிலும் கிடைத்த சான்றுகளோடு கொங்குநாட்டு வரலாற்றை எழுதியிருப்பவர் கல்வெட்டாய்வாளர் புலவர் செ. இராசு அவர்கள்.

இவரது ஆய்வுகள் “ கொங்குவேளாளர் சாதியச் சார்பு நிலை கொண்டவைகளாகும்” எனும் விமர்சனம் ஒரு பக்கம் நிலவுகிறது.ஆனால் இவரது பணிகள் மொத்தத்தையும் பார்க்கும் போது இந்த விமர்சனம் மேலோட்டமானது என்பது தெளிவாகிறது.

‘புதிய புத்தகம் பேசுது’ இதழுக்காக கண்ட நேர்காணலின் சில பகுதிகள்:-

சந்திப்பு: ஓடை பொ. துரை அரசன், ஈரோடு தி. தங்கவேல், பேரா. மணி.

பெரும்பான்மையான தமிழாசிரியர்கள் ஆய்வு மனப்பான்மையோடு இருப்பதில்லை. நீங்கள் தமிழாசிரியரானதற்கும் ஆய்வாளரானதற்கும் ஏதேனும் காரணங்கள் உள்ளனவா?

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நான் பள்ளி இறுதி வகுப்பை 1955- இல் முடித்தேன். சிக்கய்யநாய்க்கர் கல்லூரி 1954ல் தொடங்கப்பட்டது. கல்லூரியில் சேர்ந்து படிக்க வசதியில்லை “ கையில் காசில்லை” கடன் கொடுப்பார் யாருமில்லை” என்ற நிலை. காசி திருப்பனந்தாள் சைவமடத்தில் தமிழ்படிக்க உதவுகிறார்கள் எனக் கேள்விப்பட்டுச் சென்று தமிழ் படிக்கத் தொடங்கினேன்.புதிய புத்தகம் பேசுது | ஆகஸ்ட் 2010 27

நீங்கள் கல்வெட்டாய்வைத் தொடங்கியகாலம், உங்களது வழிகாட்டிகள் குறித்துச் சொல்லுங்கள்

ஓலைச் சுவடிகளைப்படித்துப் படியெடுப்பதில் புலவர் தெய்வசிகாமணிக்கவுண்டரும், கல்வெட்டுக் களைப் படிப்பது தொடர்பான பயிற்சிகளில் ரி.ஷி. வெங்கட்ராமையாவும் எனக்கு வழிகாட்டிகள். இரா. நாகசாமியைக் கூடச் சொல்லலாம்.

கல்வெட்டாய்வாளர் என உங்கள் பணியைத் தொடங்கிய காலம், பின்னணி பற்றிச் சொல்லுங்கள்.

நான் படித்த பள்ளியிலே 1958- ல் தமிழாசிரியாகிறேன். தலைமையாசிரியர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் “ வேப்ப மரத்தடியில் உள்ள கல்லில் ஏதோ எழுதப்பட்டிருக்கிறது - பார்” என்றார். “யுக வருசம் கார்த்திகை மாதம்” ... என்று தொடங்கும் அந்தக் கல்வெட்டைப்படித்துச் சொன்னேன் அந்தக்கல்வெட்டுத் தொடர்பான செய்தி “ கங்கைக்கரையில் காராம் பசுவைக் கொன்றபாவம், கல்வெட்டில் சாபம்...” புலவர் ராசு கண்டுபிடிப்பு என நாளிதழ்களில் வெளியானது - இது எனக்குப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கமாட்டேன். ஊர்ஊராக, கோயில் கோயிலாக அலைவேன். இப்படித்தான் 1960-ல் அறச்சலூர் கல்வெட்டைக் கண்டுபிடித்தேன்.

1965-ல் கல்வெட்டு தொடர்பான முதல் கருத்தரங்கு ராஜாஜி ஹாலில் நடந்தது. சா. கணேசன் போன்றவர்கள் கலந்து கொண்டார்கள். “கொங்குநாட்டு வரலாறு” குறித்து நான் வாசித்த ஆய்வுக்கட்டுரை பெரும் பாராட்டைப்பெற்றது.

1979-80- ல் கொடுமணல் அகழ்வாராய்ச்சியைத் தொடங்குகிறோம். தென்னிந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய அகழ்வாராய்ச்சி இதுவாகத்தான் இருக்கும். பின்னர் இதுபற்றி மதுரையில் நாய்க்கர் மகாலில் நடந்த ஆய்வரங்கில் கட்டுரை வாசித்தேன். இம்மாதிரியான கல்வியாளரர்கள் ஆய்வரங்கு தவிர உள்ளூர் வரலாறுகள், கோயில் வரலாறுகள் என எனது பணி இப்படியே தொடர்கிறது.

நீங்கள் தொகுக்கிற உள்ளூர் வரலாறுகள், - கோயில் வரலாறுகள், பெரும்பான்மையாக வேளாள சமூகத்தின் உட்பிரிவுகளை மையமாகக் கொண்ட சாதிய மேலாண்மையைக் காட்டுகிற வகையில் அமைந்துள்ளதாகப் பேசப்படுவதைப் பற்றி உங்களுக்குத்தெரியுமா?

பாட்டாளி மக்கள் கட்சியைத் தலைவர் ராமதாஸ் கூட “எங்களை வன்னியர் என்பதால் தானே புறக்கணிக்கிறீர்கள்” என கேட்டார். எனக்குச் சாதி, மதம், அரசியல் இல்லை. எதையும் ஆய்வு நோக்கில் மட்டுமே பார்க்கிறேன். எங்களது மூத்த மகனுக்குக் கூட ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த பெண்னைத்தான் மணம் செய்திருக்கிறோம். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே “குத்திப்பார்த்தால் இரத்தம் ஒன்றே குத்தாமல் பார்ப்பின் உயிர் ஒன்றே” எனக் கவிதை எழுதியவன். என்னை இவ்வாறு சொல்வது ஆச்சரியமாக உள்ளது.

கொங்கு நாட்டு வரலாறு, - மயிலை சீனிவேங்கடசாமி, கோவை கிழார், புலவர் குழந்தை போன்றவர்களால் எழுதப்பட்டுள்ளதை அறிவீர்கள். இதில் நீங்கள் எவ்வாறு மாறுபடுகிறீர்கள்?

எனது வரலாறு விரிவானது. குறிப்பாகக் கொங்குநாட்டில் சமணம் பற்றிய எனது ஆய்வைக் குறிப்பிடலாம். தமிழுக்குச் சைவம், வைணவம் ஆகிய சமயத்தவர்களைவிடச் சமணர்களின் பங்களிப்பு பல மடங்கதிகம். இது குறித்தெல்லாம் இன்னும் விரிவான ஆய்வுகள் வெளிவரவேண்டும்.

பல்கலைக் கழகங்களில் கல்வெட்டியல் தொல்லியல் போன்ற துறைகள் செயல்படுகின்றன.....

குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதும் இல்லை. வரலாற்றுத் துறையே முறையாக இல்லை. தமிழ்வளர்ச்சித் துறை என்று ஒன்றுள்ளது. ஆனால் அது தமிழ்வளர்ச் சித்துறை அல்ல அது தமிழ் தளர்ச்சித்துறை.

மதநல்லிணக்கத்திற்கு கட்டியம் கூறும் கல்வெட்டு ஆவணங்கள் கொங்கு மண்டலத்தில் கிடைக்கப் பெற்றுள்ளதா?

நிறையக் கிடைத்துள்ளன. புத்தகமாகத் தொகுக்கும் அளவு ஆவணங்கள் உள்ளன. திப்புசுல்தான் குன்னத்தூர் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு நிலக் கொடை பட்டயம் எழுதிக் கொடுத்துள்ளார். காங்கயம் காடையூரில் கொங்கு வேளாள சமூகத்தைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்ற பெண் மனமொத்த திருமணம் செய்து கொண்டார். இதனை அப்பெண்ணின் பெற்றோர் ஏற்றுக் கொள்வதில்லை. பெற்றோர் இறந்தவுடன் குழந்தையுடன் வாழ்ந்த அப்பெண்னையும் அவளது கணவரையும் அழைத்துச்சென்று துன்புறுத்தி, அவளது கணவனைக் கொலை செய்து விடுகின்றனர். அப்பெண்ணுக்குக் கால்காணி நிலம் கூட தர மறுக்கின்றனர். திப்புவின் படைத்தளபதி இதனைக் கேள்விப்பட்டு, அப்பெண்ணை அதே ஊருக்கு அழைத்து வந்து குடியமர்த்தி முழு காணி நிலம் பெற்றுத் தருகின்றார். இந்தக் கூட்டத்தாரிடையே நடைபெறும் முழுக்காத கல்யாணம், பிறை தொழுதல் ஆகியவை மத நல்லிணக்கத்திற்கு நல்ல சான்று.

ஈரோடு லக்காபுரத்தில் இன்றும் வேளார்களும் இஸ்லாமியர்களும் மாமன் மைத்துனர் உறவு முறைவைத்து அழைக்கின்றனர். பழைய கோட்டை பட்டக்காரர் குடும்பத்தில், விஜயதசமி அன்று இஸ்லாமியக் குடும்பத்தை அழைத்து கௌரவிக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உண்டு. பவானி, கொடுமுடி. நத்தக்காடையூர் உள்ளிட்ட பல இடங்களில் ஒரே கோயிலில் சிவனும் பெருமாளும் உள்ளனர். காஞ்சிக் கோயில், காகம் ஆகிய ஊர்களில் வாழும் கன்ன குல வேளார்களுக்கு குலதெய்வமே ராவுத்தர் சாமி. இவற்றுக்கெல்லாம் மேலாக, கொங்கு வேளார்கள் பிராமணர்களை வைத்து திருமணம் செய்வதே தற்காலத்தில் ஏற்பட்டதுதான். கொங்கு வேளார் திருமண முறையே பிராமணீயத்திற்கு எதிரானதுதான்.

தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நீங்கள் ஆற்றிய பணிகள் பற்றிச்சொல்லுங்கள்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நான் சேர்ந்த பின்னர்தான் பதிப்புத்துறையையே தொடங்குகிறார்கள் நான் பதிப்பித்தவைகளில் கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்கள், தஞ்சை மராட்டியரின் செப்பேடுகள், பட்டையங்கள் முக்கியமானவை. இன்னும் இஸ்லாமியர், புதிய புத்தகம் பேசுது | ஆகஸ்ட் 2010 28

வேட்டுவர், பாளையக்காரர் ஆகியோர் பற்றிய வரலாற்று ஆவணங்கள் பதிப்பிக்கப்படவேண்டும்.

கல்வெட்டுகளில் புனைவுகள் உள்ளனவா? எந்தவகையில் கல்வெட்டுகளின் சிறப்புகள் உள்ளன?

மெய்க்கீர்த்தி போன்றவைகளில் புனைவுகள் இருக்கும் ஆனால் கல்லில் எழுத்து என்பது ஓர் அழியாத ஆவணம் பாடல்களில் கூடக் கல்வெட்டுள்ளது. கி.பி.10ம் நூற்றாண்டுக்கல்வெட்டு ஒன்று

“வாய்ந்த புகழ் மங்கலத்து

வந்து எதிர்த்த மாற்றாரை”

என்று பாடல்களில் உள்ளது.

உள்ளாட்சி முறையை, நீதி நியதிகளைக் கூறும் கல்வெட்டுக்களும் உண்டு.

“உயிருள்ள மரத்தை வெட்டாதிருப்பாயாக”

“அநியாயம் அழிபறி செய்தானை

வெட்டுதல் குத்துதல் உண்டாக்கினால்

அவருக்குத் தண்டம் தலைவிலை இல்லையாவதா”

பாருங்கள் அப்போதே அவர்கள் தெளிவாக இருப்பதை. மேலும் சேர, சோழர் செப்பேடு பட்டையங் களில் மனுவைக் குறிக்காதவை இல்லை. ஆனால் கொங்கு நாட்டுப்பாளையக்காரர்கள் பட்டையங்களில் தான் “ வள்ளுவர் வகுத்த முப்பால் படியே” எனக் குறிப்பிடப்படுகிறது.

நீங்கள் குறிப்பிடும் கல்வெட்டுக்கள் எந்தக்காலத்தைச்சேர்ந்தவை? எத்தனை கல்வெட்டுகள்?

கி.பி.2ம் நூற்றாண்டில் இருந்து விக்டோரியா மகாராணி காலம் வரை இருக்கும். சுமார் 1000 கல்வெட்டுகள் இருக்கலாம்.

ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் இருநூறை முதல் தொகுதியில் பதிப்பித்திருக்கிறேன். அதில் இன்னும் பாக்கியுள்ளது. பெருந்துறை வட்டத்தில் 206ம், தாராபுரம் காங்கயம் வட்டங்களில் 200ம் பதிப்பிக்க வேண்டும். இந்தக் கல்வெட்டுகளில் மூன்றில் ஒரு பாகம் என்னுடைய கண்டுபிடிப்புகள்.

நிறைவாக நீங்கள் சொல்ல விரும்புவது....

1. ஊருக்கு ஓர் அருங்காட்சியகம் இருக்க வேண்டும் ஈரோட்டில் கலைமகள், அரசு, வெள்ளாளர் என மூன்று அருங்காட்சியகம் உள்ளன.

2. பாடத்தில் உள்ளூர் வரலாறு நிச்சயம் சேர்க்கப்படவேண்டும்.

3. தமிழர் வரலாறு, பண்பாடு கலைபற்றிச் சிறிய அளவிலாவது எல்லா மாணவர்களுக்கும் மருத்துவம்-பொறியல் போன்ற தொழிற்கல்வி பயிலுவோர்க்கும் கூட கற்பிக்க வேண்டும்.

4. கொங்குநாட்டு வரலாறு ‘ஊரும் பேரும்’ என்றில்லாமல் ‘ஊரும் சீரும்’ என திருத்தி எழுதப்படவேண்டும்.

5. வரலாற்றாசியர்களுக்குத் தமிழும், தமிழாசியர்களுக்கு வரலாறும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.

6. பல்கலைக் கழகங்களில் வரலாற்றுத்துறை அவசியம் இருக்க வேண்டும்.

7. ஆய்வாளர்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அரசு தேவையான உதவிகளைத் தாராளமாக வழங்க வேண்டும்.

8. அரசு சார்பான ஆணைகள் அனைத்தும் அது எந்தத் துறைசார்ந்ததாக இருந்தாலும் தமிழில்தான் இருக்க வேண்டும்.

Pin It