கடற்கரை அழகாக இருக்கிறது. எழும்பி விழும் அலைகளிடையே பக்தர்கள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். கடல் தாய்க்குக் காணிக்கையாகச் சிலர் கடலில் காசுகளை வீசி எறிகிறார்கள். அந்தக் காசுகளைப் பொறுக்க மீனவச் சிறுவர்களுக்குள் போட்டா போட்டி நடக்கிறது.

இன்று நேற்றல்ல, காலங்காலமாக மண்டைக்காட்டையட்டி கடற்கரை நெடுகிலும் காணக்கிடைக்கும் காட்சி. ஆனால் இடையில்தான் என்னென்ன நடந்து விட்டது?

சில புத்தகங்கள் நம்மைத் தூங்க விடாது. மீண்டும் மீண்டும் நம் நினைவைக் குடைந்து கொண்டே இருக்கும். அப்படி சமீபத்தில் என் தூக்கத்தைக் கெடுத்த நாவல் பொன்னீலன் எழுதிய மறுபக்கம். அதிலிருந்து ஒரு பத்தியைத்தான் முதலில் தந்துள்ளேன்.

நாஞ்சில்நாட்டு இருநூறு ஆண்டுகால வரலாற்றையும் அதன் மரபுத் தொடர்ச்சியாக இன்றைய கால சமூக-பண்பாட்டுச் சூழலையும் பின்னணியாகக்கொண்டு ஒரு மாபெரும் திரைச்சிலையில் தனது வண்ணங்கள் அனைத்தையும் பயன்படுத்தி பொன்னீலன் வரைந்துள்ள மாபெரும் சமூகச்சித்திரம் இது. இத்தகைய ஒரு பெரும்படைப்பின் சாராம்சத்தைச் சுருக்கமாக முன்வைத்து அறிமுகப்படுத்துவது மிகவும் கடினமானது என்று எஸ். பாலச்சந்திரன் கூறுவது மெய்யே.

இந்த நாவலைப் படித்த பின் அசை போடும் போது என் ஞாபகவெளிகளில் சிறுவயதில் என் அம்மா, பாட்டி, வாத்தியார் என பலர் சொன்ன தொன்மக்கதைகள் வந்து போகின்றன. அதுமட்டுமா? நான் எட்டாவது அல்லது ஒன்பதாவது வகுப்புப் படிக்கும் போது என்று நினைக்கிறேன், எங்கள் ஊர் சுசீந்திரம் கோவில் திருவிழாவின் போது ஒரு நாள் சாமி உலா வரும்போது சன்னதித்தெருவில் சாமி சப்பரத்தை அப்படியே தெருவில் வைத்து விட்டார்கள். நள்ளிரவு வரை எடுக்கவில்லை. ஊர் முழுக்க பதட்டம். போலீஸ் குவிக்கப்பட்டது. தெருக்களில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நானும் என் போன்ற பிள்ளைகளும் வலுக்கட்டாயமாக வீடுகளுக்குள் வைத்துப் பூட்டப்பட்டோம். கன்னியாகுமரியில் விவேகானந்தர் சிலை அமைப்பதைத் தடுத்து கிறித்தவர்கள் நொறுக்குவதாகவும், அதனை எதிர்த்தே இந்தப் போராட்டம் என்றும் பிறகு மண்டபத்தில் பெரிசுகள் பேசிக் கொண்டதைக் கேட்டிருக்கிறேன்.

தற்போது சுசீந்திரம் ரயில் நிலையம் இருக்கும் இடத்தில் ஆர். எஸ். எஸ். பயிற்சி தொடங்கப்பட்டது. அதற்கு ஒரு சாமியார் வந்ததும் என் வயதொத்த சிலர் அதில் பங்கேற்றதும் நான் வேடிக்கை பார்க்கப் போனதும் நினைவு இருக்கிறது. இது நடந்தது 1966, அல்லது 67வது ஆண்டாக இருக்கக்கூடும். 1982 இல் குமரி மாவட்டத்தில் வெடித்து தேசத்தையே குலுக்கிய மண்டைக்காடு கலவரத்தின் விதை ஒன்று போடப்படுவதை அறியாமலே வேடிக்கை பார்த்த வயது அது.

அந்த மண்ணின் வரலாற்றை மிக நுட்பமாகக் கிரகித்து மண்டைக்காட்டுக் கலவரத்தை மையப்படுத்தி ஒரு சமூக வரலாற்று நாவலாக மறுபக்கம் பின்னப்பட்டுள்ளது. பழையாற்றின் வெள்ளம் போல குருத்தோலை மணத்தோடும், நுரை பொங்கும் கள்ளின் காரத்தோடும், மீனின் சுவையோடும் ஒரு நாவல் என சி. சொக்கலிங்கம் கூறுவது மிகைக் கூற்று அல்ல. மண்டைக்காடு கலவரம் ஏதோ விவேகானந்தர் மண்டபம் அமைப்பதை யட்டி வந்தது என்று குறுக்கிப் பார்ப்பதை இந்நூல் தவிடு பொடியாக்கி அதன் வேரைத் தேடிச் சொல்கிறது.

சேதுமாதவன் எனும் இந்துத்துவப் பிடிப்புள்ள இளைஞன்-பள்ளி ஆசிரியர் மண்டைக்காடு சம்பவத்தை ஆய்வு செய்ய வருகிறார். பனைவிளை கிராமத்தில் வெங்கடேசன் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் உதவியோடு, முத்து என்கிற பெண் வீட்டில் தங்கி குமரி மாவட்டம் முழுவதும் சுற்றிச் சுற்றி ஆராய்ச்சி செய்கிறார்.

மறுபக்கம் பொன்னீலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை - 98

பக்: 752 | ரூ. 375புதிய புத்தகம் பேசுது | ஆகஸ்ட் 2010 12

சேதுமாதவன் என்ற ஆராய்ச்சி மாணவனை கைப்பிடித்து பொன்னீலன் அழைத்துச் செல்வது எதற்கு என்பது விளங்குகிறது. அது நல்ல உத்தி; கதை சொல்ல, உரையாடல் நடத்த, பேட்டி எடுக்க, பிரசங்கம் செய்ய, கேட்க, துண்டுப் பிரசுரம் படிக்க, வரலாற்றைப் புரட்ட, கவிதை படிக்க, சுவரொட்டி வாசிக்க, அந்த மாவட்ட வரலாறு நெடுக சுதந்திரமாகச் சுற்றிச் சுழல எல்லையற்ற வாய்ப்பை நாவலாசிரியருக்கு உருவாக்கிக் கொடுத்து விட்டது. நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

வரலாற்று ரீதியாக சாணார்கள் ஒடுக்கப்பட்ட கதை, முக்குவர்கள் வாழ்க்கை, ஆதி அம்மை வழிபாடு, கிறிஸ்துவத்தின் வருகையால் கிடைத்த நன்மைகள், அதன் எதிர்விளைவுகள், கிறிஸ்துவத்தைப் பரப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் எதிர் வினைகள், அய்யா வழி எனப்படும் வைகுண்டசாமிகள் வழிவந்தோர், ஆர்.எஸ்.எஸ் திணிக்க முயன்ற ஒற்றைப் பண்பாட்டு முயற்சி, தோள்சீலைப் போராட்டம், அக்கினிக் காவடிப் போராட்டம், அடிமை வியாபாரம், பனை, சார்ந்த கடல் சார்ந்த வாழ்க்கைப்பாடுகள், அது சார்ந்த பழக்க வழக்கங்கள், தொன்மங்கள், நம்பிக்கைகள் என குமரி மாவட்ட வரலாற்றுச் சுவடுகளூடே மண்டைக்காட்டுக் கலவரம் உரையாடலாகவும், சம்பவ சித்தரிப்புகளாகவும் நகர்கிறது. இந்து முன்னணி கொளுத்திய தீ எப்படிப் பற்றிப் பரவியது; மறுபக்கம் கிறிஸ்துவ மதவெறியர் கொளுத்திப் போட்ட வெடிகளும் எப்படிக் காரணமாயின என விஸ்தாரமாக வேμ கோபால் கமிஷன் விசாரணை ஆதாரங்களோடு நகர்கிறது.

எப்படி சில கிறிஸ்துவ அமைப்புகள் இந்து மதக்கடவுள் களையும் வழிபாடுகளையும் வரம்பற்ற முறையில் கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்தது என்பதையும்; இந்து சங்கங்கள் கிறிஸ்துவ மதத்தையும் நம்பிக்கைகளையும் இழித்தும் பழித்தும் பேசி காசுக்கு மதம்மாறியவர்கள் என வரலாற்று உண்மைக்குப் புறம்பேசியதும் பகை நெருப்பைப் பற்ற வைத்தது. ஹைவந்த சங்கம், ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி போன்ற அமைப்புகள் ஒருபுறமும், கிறிஸ்துவ அமைப்புகள் மறுபுறமும் திரண்டு ஊதி ஊதி பெரு நெருப்பாகப், பற்றி எரியவிட்ட கதையைப் படிக்கிற யாருக்கும் நெஞ்சு கொதிக்கவே செய்யும்.

கதாநாயகன் சேது மாதவன் ஆராய்ச்சியோடு நிற்காமல்; தற்கொலை செய்து கொண்ட தன் அன்னையின் மூலத்தையும் தேடுகிறான். மதங்களுக்குள்ளும், மதங்களை மீறியும் எங்கும் சாதியம் புரையோடி இருப்பதை இந்நாவல் ஆணி அடித்தாற் போல் பதிவு செய்கிறது. சங்கரன், வெங்கடேசன், மாதவன், அலெக்சு என ஒவ்வொருவர் பார்வையும் வெவ்வேறு விதமாகப் பதிவாகி உள்ளது. வெறுப்பு அரசியல் வேலைத்திட்டம் அமலான செய்தி நுட்பமாக, ஆனால் வலுவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருவனின் சாதி தெரிந்து விட்டால் அவன் வார்த்தைகளை மதிப்பிட எளிதாக இருக்கும் என சேதுமாதவன் சிந்திப்பதும்; சாதிய உணர்வு மக்களை எப்படிப் பாடுபடுத்துகிறது என்பதையும் படிக்கும் போது நாம் தலைகுனிய வேண்டி உள்ளது.

ஏம்பா, நீ கல்யாணம் செய்யிற தெல்லாம் சரிதான். ஆனா கல்யாணத்துக்கு பிறகு நீ நம்ம கோயிலுக்கு வான்னு அவளக் கூப்பிடக்கூடாதுன்னு மகனுக்கு புத்தி சொல்லும் அம்மா புஷ்பம்.

என்னலே வேறுபாடு? வெட்டுப் பட்டுச் செத்த மாடன் நம்ம சாமி, சிலுவையில் செத்த மாடன் அவன் சாமி, என்னலே வித்தியாசம்? எனக் கேட்கும் பெரியய்யா.

ஒரு பையன் இந்து, ஒருவன் பெந்த கேஸ்து, ஒருவன் கத்தோலிக்கன், ஒருவன் முஸ்லிம் என தன் குடும்பத்தில் நாலு மதமும் இருப்பதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு என்னய்யா மதம்? எனக் கேட்கும் ஈவரபாக்கியம் என்கிற ஈசாக்.

அட அடா.. குமரி மாவட்ட ஒவ்வொரு வீட்டிலும் மதம் கலந்து நிற்பதும் ஆனால் அங்கேதான் மதக் கலவரம் வெடித்தது என்பதும் முரண்செய்திகள். ஆனால் அதுதான் குமரிமாவட்ட வாழ்க்கையிலும், வரலாற்றிலும் பொதிந்துள்ள உண்மை. இதை இந்நாவல் நன்றாகவே சொல்கிறது.

தோள் சீலைப் போராட்டமானாலும், அக்னிக் காவடிப் போராட்டமானாலும், சாதியத்திற்கு எதிராகக் கிளர்ந்த மாபெரும் எழுச்சிகள். இதை நாவல் வலுவாகவே பதிவு செய்துள்ளது. மனிதருக்கிடையே சாதி, மதம், ஆண்-பெண் எந்த ஏற்றத்தாழ்வுமில்லையென்று துணிஞ்சு நின்ன பாப்பாத்திடா! தன் விதவைக் கோலத்தை அவமறுத்திட்டா. அந்த துணிச்சலுக்காகவே அவள சாதி பிரஷ்டம் பண்ணினான் நம்மவன் என ஆவுடையக்காளை அறிமுகம் செய்கிறார். இதுபோலப் பல சித்தர்களைக் கைகுலுக்க வைக்கிறார் பொன்னீலன்.

முத்து என்கிற பெண்ணின் வாழ்க்கையினூடே உழைக்கும் மக்களின் பெண்ணியம் கன்னத்தில் அறைகிற மாதிரிப் பதிகிறது.

நாவல் முடிந்தது என்று கூற முடியாது. இந்நூல் விவாதிக்கிற அரசியல் பண்பாட்டுப் பிரச்சனைகள் தொடர்கின்றன. அதனால்தானோ என்னவோ நாவலும் அதுபோல் முடிந்தும் முடியாமல் நிற்கிறது. இதுவும் நல்ல உத்திதான்...

இந்நாவல் மதவெறி, சாதி வெறிக்கு எதிரான நாவல். பண்பாட்டுத் தேடலுக்கான நாவல். முக்கியமாக மதவெறி எதிர்ப்புப் போரில் இது ஓர் ஆயுதமாகவே திகழும் . அதே சமயம் நூல் வெளியீட்டு விழாவில் ஆர். நல்லகண்μ விதைத்த ஒரு சிந்தனையைப் புறந்தள்ளக் கூடாது என்று நாவலைப் படித்தபின் தோன்றுகிறது.

அவர் கூறினார்... இந்துத்துவ ஒற்றைக் கலாசாரத் திணிப்பிற்கு எதிரான போராட்டத்தில்- சனாதனத்திற்கு எதிரான போராட்டத்தில் சிறு தெய்வங்கள் எனப்படும் நாட்டார் வழிபாடு மற்றும் பழக்க வழக்கங்களை ஆதரிப்பது ஒரு ஜனநாயகக் கடமை.அதைத் தொடர்ந்து செய்திட வேண்டும். ஆயினும் அகமணமுறை சாதியைக் கெட்டிப்படுத்துவது போல சிறுதெய்வ (அ) நாட்டார் தெய்வ வழிபாடுகள் சாதிய பண்பாட்டைக் கெட்டிப் படுத்துகின்றனவா என்பதையும் நாம் கவனமாகப் பரிசீலித்தாக வேண்டும்.
Pin It