தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்களைப் பற்றிப் பல நூல்களும் ஆய்வுகளும் வெளிவந்திருக்கின்றன. சித்தர்கள் யார், அவர்களுடைய காலம் எது, பாடுபொருள் யாது, அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அன்றைய மக்களிடையே அவர்களது தாக்கம் எப்டியிருந்தது என்பன போன்ற வெவ்வேறு கண்ணோட்டங்களில் இவை அமைந்திருக்கின்றன. சித்தர்களின் தத்துவ போக்குகள் குறித்த சில தனி ஆய்வுகள் வந்ருப்பினும், அவற்றுக்குப் பின்புலமாக அமைந்த சமூக\பொருளிய\பண்பாட்டு\அரசியல் சூழல்களையும் ஒன்றினைத்த ஆய்வாக ஈரோடு தி.தங்கவேல் எழுதிய சித்தர்களின் தத்துவ மரபு என்னும் நூல் அமைந்திருக்கிறது.
இந்த வகையிலான முயற்சிகள் இதுவரை முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என்ற நிலையில், இந்நூல் முதன்மை நூலாகத் தனிச் சிறப்பு பெறுகிறது என்றே கூறமுடியும்.
பண்டைய சாங்கியம், பொருளியம், பவுத்தம், சமணம் என்று தொடங்கி, சைவக்கொள்கைகள் எழுந்த காரணிகளையும், அடுத்து ஆதிசங்கரரின் அத்வைதமும் இன்ன பிற தத்துவ நிலைப்பாடுகளும் தோன்றிய பின்னணிகளையும், சைவம் ஒரு சித்தாந்தமாக உருவெடுத்த வரலாற்றினையும் இந்நூல் இயைபுடன் எடுத்துக் கூறுகிறது. தத்துவ நிலைப்பாடுகள் குறித்த விவரங்களை முடிந்தவரை எளிமையாகவும் புரியுமாறும் ஆசிரியர் விளக்கியுள்ளார்.
சைவக் கொள்கைகளுக்குள் ஆரிய வேத முறைமைகள் ஊடுறுவியதையும், இதனால் சித்தர் பாடல்களில், வேதமறுப்பும் ஏற்பும் முரண்பட்டு ஒலிக்கின்ற போக்குகளையும் இந்நூல் தெளிவாகவே காட்டுகிறது. இருப்பினும், சித்தர் குறித்த மதிப்பீடுகளில், முற்போக்காளர், சாதி எதிர்ப்பாளர், ஏழை எளியோரின் சார்பாளர், சடங்கு மறுப்பாளர், வாழ்க்கை வெறுப்பாளர் என்று பல நிலைகளிலான வரையறுப்புகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், இந்தப் பாடல்களில், கீழ்த்தட்டு மக்களின் உணர்வுகளும் அவர்களைப் பற்றிய- நிகழ்வுகளும் பதிவுசெய்யப்படவில்லை என்பதையும், சித்தரது முனைப்புகள் எளிய மக்களின் எல்லைகளிலிருந்து எட்டியிருந்தன என்பதையும் நூலாசிரியர் தெளிவுபடுத்தியுருப்பது பொருத்தமானதாகும். சாதி மறுப்பு, சடங்கு எதிர்ப்பு என்று பாடியிருந்தாலும், சித்தர்கள் ஓரணியில் இருக்கவில்லை என்ற ஆசிரியரின் முடிவு ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவே அமைந்திருக்கிறது. ஏனெனில், இவற்றில் முரணான கருத்தோட்டங்களையே சித்தர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
சித்தர்களின் தத்துவ மரபு குறித்த ஆய்வில், ஓர் அடிப்படைப் புரிதலுடன் தரவுகளை மேலெடுத்துச் செல்லவேடிண்யுள்ளது. சித்தர்களின் வெளிப்பாடுகளுக்கான பின்னணி, சைவத் தத்துவப் போக்கில் ஏற்பட்ட மாறுதல்களா, அல்லது அன்றாட வாழ்வில் எதிர்நோக்கவேண்டியிருந்த நடைமுறைச் சிக்கல்களா என்பதும் ஆய்வுக்குரியதாகும். அதாவது, தத்துவ எதிராடல்கள் சித்தர்களின் பாடல்களில் எதிரொலித்தனவா, அல்லது சமூக பொருளிய பண்பாட்டு அளவிலான தாக்கங்கள் அவர்களைக் குரல் எழுப்பத் தூண்டியனவா என்பதையும் பார்க்கவேண்டியிருக்கும். இந்த இரு வகையிலான போக்குகளினூடே இழையோடிச் செல்லும் இவைகளையும் மறந்துவிடக்கூடாது.
ஒருபுறம் சித்தர்களது தத்துவ நோக்குகளையும் மறுபுறம் அவர்களது எண்ணவோட்டங்கள் சிலவற்றையும் ஒருங்கிணைத்து மதிப்பிட இந்நூல் முயற்சியினை மேற்கொண்டுள்ளது. ஆனால், இவற்றை அன்றைய சமூக பொருளிய பண்பாட்டு அரசியல் இடைவெளிகளும் ஏற்பட்டிருக்கின்றன. இதனை, பின்புலத்தில் விளக்க முற்படும் போது சில தடைகளும் நூலாசிரியரின் குறை என்று கூறிவிடமுடியாது.
சங்க காலம் தொடங்கி, இடைக்காலத்தினூடாகப் பதினாறாம் நூற்றாண்டு வரையிலான தமிழ்நாட்டின் சமூக\பொருளிய \பண்பாட்டுஅரசில் நிலைமைகளைத் தெரிந்துகொள்வதில் உள்ள வரலாற்றுப் புரிதலின்மையே இந்தத் தடைகளையும் இடைவெளிகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன. மார்க்சிய அடிப்படையிலான அண்மைக் கால ஆய்வுகள் சில இருண்ட பக்கங்களுக்கு ஒளி பாய்ச்சியுள்ளன என்றாலும், அவை இன்னும் செழுமைப்படவில்லை என்றே கூறவேண்டும். பெற்ற புரிதல்களும்கூட உரிய பகுதியினரை முழுமையாக எட்டவில்லை.
நானூறு ஆண்டுகள் அரசின் சமயமாக சமணம் வீற்றிருந்தது. பக்தி இயக்கப் பெருவெள்ளம் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பரவிப் பாய்ந்திருந்தது, வேளாளர் தலைவர் ஆட்சியில் இருக்கப் பார்ப்பனர் கட்டளையிடும் நிலையில் இருந்தனர், மக்களின் மனங்களை வெல்லக்கூடிய தத்துவமாகச் சைவம் அமைந்திருந்தது என்பன போன்ற பல கருதுகோள்கள், மார்க்சியக் கண்ணோட்டத்தில் எப்போதோ மறுக்கப்பட்டுவிட்டபோதிலும், இன்னும் அவற்றைப் பிடித்துக் கொண்டிருப்பது தொடர்கிறது.
சைவமும் வைணவமும் நிலவுடைமைப் பிரிவினரின் சமயங்களாக நீடித்திருந்தனவேயன்றி, உடைமைகளற்ற பிரிவினரைச் சென்றடையவில்லை. சைவ நாயன் மார்களிலும் வைணவ ஆழ்வார்களிலும் உடைமை இருந்தாலும், அவர்கள் விலக்காகவே சைவ\வைணவக் கடவுளர்களை வழிபாடுவோராக இருந்தனர். அத்தகைய சிலர் தனியராக சைவ\வைணவ வழிபாடுகளையும் நம்பிக்கைகளையும் ஏற்றுக் கொண்டிந்தனரேயன்றி, அவர்கள் சார்ந்த இனத்தினர் எவரும் பின்பற்றியதாகத் தெரியவில்லை. உடைமைகளற்ற பிரிவினர், உடைமையாளர்களின் கோயில்களுக்குள் நுழையவும் வழிபடவும் ஏற்பளிக்கப்படவில்லை என்பதையும் புறக்கணித்துவிட முடியாது. அதனால்தான், உடமைகளற்ற பிரிவினர் தொடர்ந்து நாட்டார் கடவுளர்களையே வழிபட்டு வந்தனர்.
தங்களை ஏற்காத கோயில்களில் உள்ள கடவுளர்களிடத்தும் அத்தகைய கடவுளருக்கான வழிபாட்டு முறைகளிலும் எளியோருக்கு நம்பிக்கையும் இருக்கவில்லை. இந்தக் கோயில்களைக் காரணியாக்கியே உழைக்கும் மக்களின் நிலங்களும் பறிக்கப்பட்டன. இத்தகைய சூழ்நிலைகளில், உடமைகளற்ற பிரிவினருக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்த சமயங்கள் அந்த மக்களிடம் பரவியிருந்தன என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் அவர்களை அடக்கவும் பயன்பட்டு வந்த நம்பிக்கைகள் வழியாக அவர்களது மனங்களை வென்றிருக்கவும் இயலாது.
எந்தக் கடவுளர் முன் இணையாக நின்று வழிபடக்கூட முடியாதோ, அந்த நம்பிக்கைகளே இணை உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பது ஏற்கக்கூடியதாக இல்லை. இதனால்தான், உடமைகளற்ற பிரிவினரைப் பக்தி இயக்கம் எந்த அளவிலும் ஈர்க்கவில்லை.
அங்கம்எலாம் குறைந்தழுகு தொழுநோயராய்/ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்/கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்/அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவுளரே
என்று கூறி, உடைமையாளர்களோடு, உழைக்கும் மக்களை இணக்கம் காணச்செய்ய நாவுக்கரசர் முயற்சிகளை மேற்கொண்டார். ஆயினும், நாவுக்கரசரின் இந்த அழைப்பினை, உழைக்கும் மக்கள் புறக்கணித்துவிட்டதாகவே தெரிகிறது. ஏனெனில், இந்த அழைப்பு, உழைக்கும் மக்களுக்கு உடைமையாளர்களிடமிருந்து எத்தகைய துயர்தீர்வையும் விட்டுக் கொடுத்தலையும் முன்மொழியவில்லை.
மேலும் அன்றைய கட்டத்தில், சாதி இறுக்கத்தைப் போலவே, உடைமை இறுக்கமும் முதன்மை பெற்றிருந்தது. இன்னும் சொல்லுவதென்றால், உடைமை இறுக்கமே வலிமை பெற்றிருந்தது. எதிர்பாராது, உழைப்பு முயற்சிகளால், கீழ்நிலை மக்கள் நில உடைமை பெறும் வாய்ப்பு நேர்ந்தால், அவர்கள் அடுத்த நிலையில் வேளாளராகவே ஏற்கப்பட்டனர். அதே போன்று, வோளாளர் ஒருவர் நிலத்தை இழந்தால், வேளாளர் என்ற நிலையிலிருந்து கீழிறக்கப்பட்டார். இத்தகைய சமூக நகர்வுகளும் இருந்த காலம் அது என்பதைக் கொண்டு இப்பாடலைப் புரிந்து கொள்ளவேண்டும்.
உடைமைகளற்ற பிரிவினரான உழைக்கும் மக்கள், சைவத்தையும், வைணவத்தையும் அவை சார்ந்த அடக்குமுறைகளையும் முழு அளவில் எதிர்க்கவில்லை என்பதும் உண்மைதான். எதிர்க்கக்கூடிய நிலையில் அன்று அவர்கள் இருக்கவுமில்லை. இருப்பினும், வேளாளருக்கும் பார்ப்பனருக்கும் எதிராக உழைக்கும் மக்கள் தங்கள் உணர்வுகளை வரி எதிர்ப்பு, உற்பத்திப் பங்கு (குத்தகை) அளவு எதிர்ப்பு, உற்பத்தி மறுப்பு, ஊரைவிட்டு நீங்குதல் என்பன போன்ற பல்வேறு எளிய போராட்ட வடிவங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.
சோழர் காலத்தில், வேளாளர், பார்ப்பனர் போன்றோரின் நிலவுடைமைக்குச் சார்பான வல்லமையினை எதிர்த்து சமூக\பொருளியப் போராட்டங்களை உழைக்கும் மக்கள் நடத்தியுள்ளனர். மாறாக, அடுத்தக் கட்டத்தில், பண்பாட்டு\சமய நிலைகளில் பார்ப்பனருக்கு எதிரான குரல்களை மட்டுமே சித்தர்கள் தங்கள் பாடல்வழி ஒலித்துக் கொண்டிருந்தார்கள். போராட்டத்துக்கான அடிப்படையும் குறுகிவிட்டது; போராட்ட வடிவமும் சிதைந்துவிட்டது.
இதைப் போன்று, பலரும் நினைப்பது போல, பார்ப்பனருக்குக் கொடையாக நிலம் வழங்குவது சங்க காலத்திலேயே தொடங்கிவிட்டது என்பதும் உண்மையன்று. இன்னும் சொல்லப் போனால், சங்க இலக்கியங்களில் நிலக்கொடை குறித்துக் கூறும் பாடல்களே இல்லை. வளமான உற்பத்தி நிலங்களைக் கைப்பற்றுவதற்காக நடந்த போர்களில், பங்கெடுத்துக் கொண்டோர், வெற்றி பெற்ற நிலங்களைப் பங்கிட்டுக் கொண்டதுதான் இருந்தது.
விசயநகர ஆட்சி வரை, வேளாளருக்கு அடங்கியோராகவே பார்ப்பனர் காணப்படுகின்றனர். பார்ப்பன ஊர்களின் உள்ளாட்சிகளை வேளாள அலுவலர்களைக் கொண்டு மேற்பார்வை செய்யும் நடைமுறையைச் சோழர் காலக் கல்வெட்டுக்கள் பதிந்திருக்கின்றன. எனவே, மன்னர் உள்ளிட்டோருக்குக் கட்டளையிடும் நிலையில் பார்ப்பனர் இருக்கவில்லை. அறிவுத்துறை, அரசு அலுவல், படை எனப் பல துறைகளில் பார்ப்பனரின் பங்களிப்புக் குறைவாகவே இருந்துள்ளது. பார்ப்பனருக்கு வழங்கப்பட்ட நிலங்கள் முழு உரிமையுடன் வழங்கப்பெறாது, உற்பத்தி வருவாயில் பங்கு தருவதாகவே அமைந்திருந்தன. முதலாம் ராசேந்திர சோழனுடைய கரந்தைச் செப்பேடுகளில், வேதம் ஓதுதற்காக 1084 பார்ப்பனருக்கும் தொடர்புடைய வேறு சிலருக்குமான கொடை கூறப்படுகின்றது. பார்ப்பனரின் பெயர்கள் யாவும் பதியப்பட்டிருப்பினும், நிலங்கள் வரையறுக்கப்படவில்லை. கொடை நிலங்களில் இருந்து பெறப்படும் உற்பத்தியில் பங்கு மட்டுமே குறிக்கப் பெறுகின்றன. ஆட்சி அலுவல், படை போன்றவற்றில் குறைந்த அளவிலேயே பார்ப்பனர் பணியாற்றியதை நொபுரு கரஷிமா தனது ஆய்வுகளில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அர்த்த சாத்திரம் நூலிலிருந்து ஆர்.எஸ். சர்மா காட்டியது போன்று, மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்தி மக்களைப் பிழிந்து பணம் பெற்றது தமிழ்நாட்டுக்குப் பொருந்துவதாக இல்லை. முழுமையாக ஆரியவயப்படாமல், உற்பத்தி மேம்பாட்டுக்கான முயற்சிகளும் தொடர்ந்து கொண்டிருந்த அன்றைய கட்டத்தில் அத்தகைய நடைமுறை தமிழகத்தில் இருக்கவில்லை.
இத்தகைய சமூக\பொருளிய\பண்பாட்டு\அரசியல் பின்புலத்தில் சித்தர்களின் பாடல்களை ஆய்வு செய்தால், மேலும் பல தெளிவுகளைப் பெற முடியலாம். பக்தி இயக்க காலத்திய போக்குகளுக்கும், சோழர் கால நிலைமைகளுக்கும், சோழர் கால வீழ்ச்சிக்குப் பின்னைய சிக்கல்களுக்கும், விசயநகர ஆட்சியின் விளைவுகளுக்கும் ஏற்பச் சமயங்களிலும் நம்பிக்கை முறைமைகளிலும் ஏற்பட்டு வந்த மாற்றங்களைப் புறக்கணித்து விடக்கூடாது.
பக்தி இயக்கம் வீறுடன் இருந்தபோதே, ‘நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்’ என்று தமிழுடன் இணைத்து அழைக்கப்பட்ட போதிலும், வேதம் நான்கினும் மெய்பொருளாவது/நாதன் நாமம் நமச்சி வாயவே/என்று வேதத்துக்குள் சைவத்தை முடக்க முற்பட்டிருக்கிறார் சம்பந்தர். ஆயினும், பார்ப்பனரல்லாத திருநாவுக்கரசர், வேதம் ஓதில்என் வேள்விகள் செய்யில்என்/நீதி நூல் பல நித்தம் பயிற்றில்என்/ ஓதி அங்கம் ஓர் ஆறும் உணரில்என் ஈசனை உல்குவார்க்கு ஆறும் இல்லையே/என்று சம்பந்தரின் சதியை முறியடிக்க, சைவத்தை வேதத்தினின்றும் வேறுபடுத்தியே நிறுத்துகிறார். சோழர் கால வேளாளரது மேம்பட்ட எழுச்சிக் கட்டத்தில், பண்பாட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தத் தயங்கிக் கிடந்த ஆரியச் சார்பினர், சோழரது வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் தலையெடுக்க முயன்றனர். இருப்பினும், வேதநூல் வைச நூல் என்றிரண்டே நூல்கள்/வேறுரைக்கு நூல்இவற்றின் விரித்த நூல்கள்/என, வேதத்தையும் சைவத்தையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கும் மரபிலிருந்து சைவ சித்தாந்தம் விலகிச் சென்றுவிடவில்லை.
அத்வைதம் போன்ற புதிய விளக்கங்கள் கிடைத்திருந்தாலும், சைவமும் ஆரியமும் தனித்தனியாகவே தங்கள் விழிகளில் பயணித்துக்கொண்டிருந்தன. விசயநகர காலத்தில் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, பார்ப்பனர்கள் சைவத்தை முழுமையான ஆரியமாக்க முயற்சித்தனர். சடங்கு முறைமைகளில் தங்கள் எண்ணங்கள் சிலவற்றையும் ஈடேற்றிக்கொண்டனர். இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடி, ஓரளவு காப்பாற்றியதில் சித்தர்களில் பெரும்பாலானோருக்குப் பங்கு உண்டு.
மற்றொரு முரணையும் இங்கு நோக்க வேண்டியுள்ளது. சைவமோ வைணவமோ வாழ்க்கை மறுப்பு, பெண்மை வெறுப்பு என்ற நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. பொருள் இருப்பு நிலைப்பாட்டின் தளத்தில் நின்று, ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என்பதே தமிழரது வாழ்க்கைத் தத்துவ மரபின் அடிப்படையாகும். இது பவுத்தம், சமணம், ஆரியம் ஆகிய அனைத்துக்கும் மாறானதாகும். ஆனால், சித்தர் பலர், வாழ்க்கை மறுப்பையும் பெண்மை வெறுப்பபையும் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
“சித்தர்கள், பார்ப்பனர்களாலும் உயர் அதிகாரம் படைத்தோராலும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்’’ என்றும், “சமூக அவலங்களிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியாகவும் யோகம் பயன்பட்டுள்ளது’’ என்றும் இந்நூலாசிரியர் பொருத்தமாகவே கூறியிருக்கிறார். ஆயினும், இத்தகைய சிக்கல்களை எதிர்கொண்டோராக உழைக்கும் மக்கள் இருந்திருக்க முடியாது. சோழர் காலத்தில், உடைமையாளர்களின் வல்லாண்மைக்கு எப்படி அடங்கிக்கிடந்தார்களோ, அதே, போன்றுதான் சித்தர் காலத்தில், பார்ப்பனர்களாலும் விசயநகர அரசு அலுவலர்களாலும் உழைக்கும் மக்கள் அழுத்தப்பட்டுந்தார்கள். வல்லாண்மை செய்தேர்களாக மாறியிருந்தனர். ஆகையால், மாறிய நிலைமைகளில், புதிய சிக்கல்களுக்குள் சிக்கிக்கொண்ட உழைக்கும் மக்கள் அல்லாத பிரிவினராகவே சித்தர்களைப் பார்க்கவேண்டும்.அத்துடன், சித்தர் பல கருத்தோட்டங்களில் முரண்பட்டுக் கிடந்தாலும், வேளாளர் எதிர்ப்பை மட்டும் மேற்கொள்ளவில்லை என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். இதனால்தான், சித்தர்கள் உடைமைப் பிரிவினரிடமிருந்து வந்தோரா, உடைமையற்ற பகுதியினரிடமிருந்து தோன்றியோரா என்ற வினா எழுகிறது. இதற்கான விளக்கங்களிலிருந்துதான், சித்தர்களது தத்துவ மரபுகளை வரையறுக்கவேண்டும்.
இந்த இடத்தில் வேறொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. சித்தர் மரபில் வள்ளலாரையும் பாரதியையும் சேர்த்துக்கொண்டது இயல்பாகத் தெரியவில்லை. தங்களைச் சித்தர்களாகக் கூறிக்கொண்டாலும், வள்ளலாரும் பாரதியும் வாழ்ந்த சமூக பொருளியக் காலகட்டங்கள் வேறுவேறு பாடுபொருளும் வேறுவேறு, இந்த நூல் மதிப்பீட்டில், தமிழ்நாட்டின் சமூக\பொருளிய\பண்பாட்டு\அரசியல் நிலைமைகளை முழுமையாகத் தந்துவிட முடியாது என்பதைப் போலவே, சித்தர் குறித்த பல வகையான எதிராடல்களையும் உள்ளடக்கிவிட இயலாது. சில குறிப்புகள் மட்டுமே தரப்பட்டுள்ளன. அடுத்து, நூலாக்கம் குறித்து, 72 பக்கங்கள் கொண்ட நூலில், 3 முதல் 72 ஆம் பக்கம் வரை பல கருத்துகள் அடுத்தடுத்து விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இயல்கள் பிரிக்கப்படவில்லை; துணைத்தலைப்புகளும் மிகுதியாக இல்லை. பொருளடிப்படையில், இந்நூலினைச் சில இயல்களாகத் தலைப்பிட்டுப் பிரித்திருந்தால், பயன்படுத்த எளிதாக இருந்திருக்கும்.
மேலும், பக்கம்தோறும் பரவியுள்ள எழுத்துப் பிழைகளை அடுத்த பதிப்பில் சீர்படுத்துவது நல்லது. அப்படியே, உரிய இடங்களில் ஒற்றுக்களைச் சேர்த்தால் நூல் மேலும் சிறப்புப்பெறும்.
தமிழ்நாட்டின் சமூக\பொருளிய\பண்பாட்டு\அரசியல் புரிதல்களோடு சித்தர் குறித்த ஆய்வுகள் மேலும் முன்னோடியாக சித்தர்களின் சிந்தனை மரபு என்னும் இந்நூல் அமைந்திருக்கிறது என்று கூறலாம்.